Tuesday, July 19, 2011

ஆபோகி - .இன்றைக்கும் என்றைக்கும் ஆனந்தமே!

நந்தனார் சரித்திரம் இயற்றிப் புகழ் பெற்றவர் கோபால கிருஷ்ண பாரதி. இவரது ஐயே மெத்தக் கடினம், மாடு வழி மறைக்குதே, சற்றே விலகி இரும் பிள்ளாய் போன்ற கீர்த்தனைகள் மிகப் பிரசித்தி பெற்றவை. உபரி தகவல்: நந்தனார் என்ற திரைப்படத்துக்குத் தான் இந்தியத் திரையுலகில் முதன் முறையாக ஒரு லட்சம் ரூபாய் சம்பளம் வாங்கினார் கே.பி சுந்தராம்பாள். அப்படிப் பட்ட கோபாலகிருஷ்ணபாரதி சங்கீத மும்மூர்த்திகளுள் ஒருவரான தியாகராஜ ஸ்வாமிகளின் இல்லத்திற்குச் சென்றிருந்தார்.அங்கு ஆபோகி ராகத்தில் ஒரு கீர்த்தனையைப் பாடிக் கொண்டிருந்தனர் தியாகய்யரின் சிஷ்யர்கள்.  நீங்கள் இந்த ராகத்தில் ஏதாவது பாடியிருக்கிறீர்களா என்று தியாகய்யர் கோபாலகிருஷ்ண பாரதியைக் கேட்டார். அதுவரை அந்த ராகத்தில் பாடல் புனைந்திராத பாரதி உடனே அங்கேயே ஆபோகி ராகத்தில் ஒரு பாடல் புனைந்தார். 'சபாபதிக்கு வேறு தெய்வம் சமானமாகுமா? " என்ற அந்தப் பாடல் இன்றுவரை மங்காப் புகழ் கொண்டது.



ஆபோகி மிகவும் எளிமையான இனிமையான ராகம். ஸ ரி க ம த ஸ் ஸ் த ம க ரி ஸ என்ற ஸ்வர வரிசையைப் பெற்று வருகிறது. நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சியிலுள்ள லக்ஷ்மி வராஹப் பெருமாள் மீது முத்துஸ்வாமி தீக்ஷிதர் பாடிய ஸ்ரீ லக்ஷ்மி வராஹம் என்ற பாடல் ஆபோகி ராகத்தில் அமைந்துள்ளது. பாபநாசம் சிவன் பாடிய "நெக்குருகி உன்னைப் பணியாக் கல்நெஞ்சன்' என்ற பாடல் கல்நெஞ்சையும் உருக்கும். அருணா சாயிராமின் கணீர்க் குரலில் ஆபோகியின் அழகைக் காணலாம்


திரை இசையில் அவ்வப்போது ஆபோகி தலைதூக்கும் .
'மாலை இட்ட மங்கை' என்ற படத்தில் ஆபோகி ராகத்தில் அற்புதமான பாடலை டி.ஆர். மகாலிங்கம் பாடியிருப்பார்.எப்போதும் உச்சஸ்தாயில் பாடும் அவர் மிக மென்மையாகப் பாடியிருக்கும் இப்பாடல் ஆபோகியின் இனிமையைப் பறைசாற்றுகிறது. இந்தப் படத்தில் உள்ள 'செந்தமிழ் தேன் மொழியாள் ' அளவுக்குப் புகழடையவில்லை இப்பாடல். உடன் பாடியவர் A.P. கோமளா. இசை விஸ்வநாதன் ராமமூர்த்தி. வருடம் 1958.

பாடலைக் கேட்க
பாடலைக் கேட்கக் க்ளிக் செய்யுங்கள்

1964 ஆம் ஆண்டு வந்த கலைக்கோவில் என்ற படத்தைப் பலர் மறந்திருக்கலாம். ஆனால் ஆபோகி ராகத்தில் அமைந்த 'தங்க ரதம் வந்தது' என்ற பாடல் பாலமுரளிக்ருஷ்ணாவின் குரலில் அமரத்துவம் பெற்றது.மெல்லிசை மன்னர்கள் இசையில் கவியரசரின் வரிகளில் 'மாங்கனி கன்னத்தில் தேனூற சிறு மைவிழிக் கிண்ணத்தில் மீனாட' போன்ற வரிகளுடன் அமைந்தது அப்பாடல்.

  



இசை ஞானியிடம் நல்ல மெட்டுக்களை வாங்குவது ஒரு கலை.அதில் ஒரு சில இயக்குனர்களே தேறுவார்கள். ஸ்ரீதர், பாலு மகேந்திரா, மணிரத்னம்,ஃபாசில், மகேந்திரன் என்று சிலரது படங்களுக்கு இளையராஜா விசேஷமான இசையைக் கொடுப்பார். அந்த வரிசையில் ஆர்.சுந்தர்ராஜனும் ஒருவர். இன்று நகைச்சுவை நடிகராக உருமாற்றம் ஆகியுள்ள அவர் ஒரு காலத்தில் மிகவும் வெற்றிகரமான இயக்குனராக வலம் வந்த போது இளையராஜாவுடன் இணைந்து இசையை மையமாக வைத்துப் பல படங்களைத் தந்திருக்கிறார். மிக எளிமையான கிராமத்துக் கதை, கவுண்டமணி செந்திலின் பெட்ரோமாக்ஸ் லைட் காமெடி போன்றவற்றுடன் இனிய பாடல்கள்க்காகவும் நினைவில் நிற்கும் படம் 'வைதேகி காத்திருந்தாள்'.அந்தப் படத்தில் ஆபோகி ராகத்தில் அமைந்துள்ள ஒரு அற்புதப் பாடல் 'இன்றைக்கு ஏனிந்த ஆனந்தமே' . ஜெயச்சந்திரன் என்றவுடன் நினைவுக்கு வரும் இப்பாடலின் ஆரம்ப ஆலாபனையும் இடையில் வாணிஜெயராம் பாடும் ஸ்வரக் கோர்வைகளும் 'தகிட தகிட' என்னும் துள்ளல் நடையில் வரும் தபேலாவும் வீணையும் இணைந்து என்றென்றைக்கும் ஆனந்தம் அளிக்கும் அனுபவத்தைக் கொடுக்கிறது.





அதே சுந்தர்ராஜன், அதே இளையராஜா அதே ஆபோகி. இந்த முறை 'அம்மன் கோவில் கிழக்காலே.'  'காலை நேரப் பூங்குயில் கவிதை பாடி' என்ற பாடல். வயலின் ,குழல் ஷெனாய் என்று எந்த வாத்தியத்தில் வாசித்தாலும் ஆபோகி ராகத்தின் அடையாளத்தையும் இனிமையையும் மாற்றாமல் தந்திருப்பார்.





இளையராஜாவின் பாணியின் ஒரு அம்சம் என்னவென்றால் ஒரு பாடலில் அவர் தேர்வு செய்யும் ராகத்தின் இலக்கணத்தைப் பெரும்பாலும் மீறமாட்டார். எம் எஸ்வி , ஏ ஆர் ரகுமான் போன்றவர்கள் இலக்கணத்தைப் பற்றிக் கவலைப் படாமல் சில விதிமீறல்களை அனுமதிப்பார்கள். அது ஒரு வகை அழகு. அதனாலேயே ராஜாவின்  பாடல்கள்  ராகங்களை அறிவதற்கான ராஜபாட்டையாக இருக்கிறது. கீர்த்தனைகள் கற்றுக் கொள்வதற்கு முன் இது போன்ற பாடல்கள் மூலமாகத்தான் என் போன்றவர்களுக்கெல்லாம் ஏதோ இசையைப் பற்றிப் பேசும் அளவுக்காவது விவரம் தெரிய வருகிறது.

வெகுகாலத்திற்கு ஆபோகி ஏனோ திரை இசையில் தென்படவே இல்லை. ராகங்களை அடிப்படையாகக் கொண்டு இசையமைக்கும் காலம் மலையேறி விட்டாலும் அபூர்வமாகச் சில சமயம் நல்ல கர்நாடக ராகங்களில் பாடல்களைத் தரும் வித்யாசாகரின் இசையில் ஒரு ஆச்சரிய ஆபோகி - 'கொஞ்ச நேரம் கொஞ்ச நேரம் '. கோபாலகிருஷ்ண பாரதி முதல் நயன்தாரா காலம் வரை ஆபோகியின் இளமை மாறவில்லை.


















2 comments:

  1. திரைப் பாடல்களில் இருந்து ராகத்தின் பெயரை ஒரு சுகத்திற்காகக் கேட்டறியும் பழக்கத்தை எந்த வயதில் இருந்து மேற்கொண்டேன் என்று நினைவில் இல்லை. ஆனால், ராகங்களின் மீதான சர்ச்சையை, சுப்புடு கோலோச்சிய காலத்தில் பருவ இதழ்களில் சுவாரசியத்துடன் வாசிப்பதுண்டு. மேடைக் கலைஞர்களை ஒரு பிடி பிடித்துக் கொண்டிருந்தவர் தமது கடைசிக் காலத்தில் உன்னிகிருஷ்ணன் மீதும் பாய்ந்தது மறக்க முடியாதது. அது சினிமா பாடல் ஒன்றின் மீதானது. என்னவளே அடி என்னவளே பாடல், கேதாரம் என்று நான் கேட்டு அறிந்த ஒரு சுப முகூர்த்தத்தில் இந்த மனிதர் அதை சேதாரம் என்று விகடனிலோ எதிலோ எழுதியிருந்தார்.

    இலங்கை வானொலியில் பாடலை ஒலிபரப்பும்போதே ராகத்தின் பெயர் சொல்கிற நிகழ்ச்சி ஒன்று இருந்தது. பாரதியார் பாடல்களைப் படிக்கிற போது, புன்னாகவராளி என்றெல்லாம் ஒவ்வொரு பாடலையும் அதனதன் ராகத்தின் பெயரோடு அவர் எழுதியிருந்ததை சக்தி காரியாலயத்தின் வை கோவிந்தன் அவர்களது பதிப்பில் படித்த போது கிறு கிறுத்த நாட்கள் அற்புதமானவை.

    ஒவ்வொரு ராகமாக நீங்கள் இப்போது எழுதத் தொடங்கி இருப்பது என்னை மாதிரி பாமர ராக வாசகர்களுக்கு மழையாக வருஷிக்கிறது....

    அதுவும் பாடல்களின் இணைப்போடு கேட்கும்போது..

    அதுவும் கேட்க விட்டுப் போன, டி ஆர் மகாலிங்கத்தின் அறியப்படாத பாடலைக் கேட்கும் போது..

    தங்க ரதம் வந்தது மாதிரியே கம்பீரத்தோடு பால முரளி கிருஷ்ணாவும், சிருங்கார ரசத்தின் குழைவை விரசமற்ற குரலில் பி சுசீலாவும் இசைக்கும் போது..
    இளையராஜாவின் இந்தப் பரிமாணத்தை உங்களது பார்வையிலிருந்து அறிகிறபோது...

    இயக்குனர்கள் இசை ரசனையின் பின் புலத்திலிருந்து அறிமுகமாகிறபோது..

    அருமை டாக்டர் ராமானுஜம்..

    உளவியல் வாசித்தீர்களா. இசை இயல் (அல்லது இயல் இசை!) வாசித்தீர்களா..
    அல்லது இசையில் உள இயலை ஆய்வு செய்கிறீர்களா...

    வாழ்த்துக்கள்...

    எஸ் வி வேணுகோபாலன்

    ReplyDelete
  2. ஆழ் கடலில் மூழ்கி முத்தெடுப்பதுபோல் அற்புதமான ராகங்களையும், அவற்றில் அமைந்த இனிய திரை இசைப்பாடல்களையும் தேடிக்கொண்டு வந்து ரசிக்கத் தந்த உங்களுக்கு எனது இதயம் கனிந்த நன்றி! மேலும் தொடருங்கள்...
    ஜெகன் -கனடா

    ReplyDelete