Tuesday, August 28, 2012

மாற்று மருத்துவம்


 ஜூலை மாத புதிய ஆசிரியன் இதழில் வந்தது

    முன்பு படித்த துணுக்கு ஒன்று- அந்தக் காலத்திலெல்லாம் இத்தனை அழகழகான வியாதிகளும் அவற்றிற்கான வசீகரமான மருந்துக் குப்பிகளும் கிடையாது. திரேதா யுகத்தில் ஹோட்டலுக்குப் பார்சல் வாங்கச் சென்றால் சாம்பாருக்கு ஒரு பாத்திரம் எடுத்துப் போவது போல் மருத்துவரிடமும் ஒரு பாட்டிலை எடுத்துச் செல்ல வேண்டும்.கம்பவுண்டர் ஒருவர் டாக்டர் என்ன மருந்து எழுதியிருந்தாலும் அவரது மனநிலை,நோயாளியின் ராசியான நிறம் போன்றவற்றைப் பொருத்து மஞ்சள், சிகப்பு பச்சை வண்ணத் திரவங்களைக் கொடுப்பார்.லேபிளில் நோயாளியின் பெயரையும் எழுதுவார்.(இப்பொழுது சாமியார்கள் கூட அருள் வாக்கை ஒரு கேரி பேக்கில் போட்டுத்தான் கொடுக்கிறார்கள்.)

   அப்படி ஒரு முறை ஒரு கம்பவுண்டரிடம் ஒரு அம்மாள் மூச்சிரைக்க ஓடி வந்தாள். ஐய்யய்யோ! என் பேரு ஜெயலக்ஷ்மி! இந்த மருந்து பாட்டில்ல ராமலக்ஷ்மீன்னு போட்டிருக்கே! யாருக்கோ குடுக்க வேண்டிய மருந்தை நான் குடிச்சிட்டேன். ஒரே மயக்கம் படபடப்பா இருக்கு! என்று கதறி மயங்கி விழுந்தார். பின்பு மருத்துவர் வந்து மாற்று மருந்து கொடுத்த பின் தான் அந்த அம்மையாருக்கு உடல்நிலை சரியாயிற்று. மருத்துவர் செய்த மாற்று மருத்துவம் என்ன தெரியுமா? அந்த மருந்து பாட்டிலின் லேபிளைக் கிழித்து ஜெயலக்ஷ்மி என்று எழுதியதுதான்.

   கொஞ்சம் கவனக் குறைவாக இருந்தாலும் விபரீத விளைவுகள் ஏற்படும் என்பதால் மருத்துவத் துறையில் இருப்பவர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். என்றாலும் சிலசமயம் இது போன்ற நகைச்சுவைச் சம்பவங்களுக்கும் குறைவிருக்காது.

   நான் கிளினிக் தொடங்கிய புதிதில் ஒருவர் வந்து பல்வலிக்கு மருந்து வேண்டும் என்றார். வாயைத் திறங்கள்! என்றேன். யசோதைக்குக் கண்ணன் காட்டியது போல் காட்டினார். பல் ஒன்று சொத்தையாக இருக்கிறது. பல் மருத்துவரிடம் காட்டி எடுத்து விடுங்கள்! என்றதற்கு பல்வலி எனக்கில்லை! எங்கம்மாவுக்கு என்றாரே பார்க்கலாம். அவர் ஏன் வாயைத் திறந்தார் என்று இன்று வரை புரியவில்லை.நல்ல வேளை அவரது அம்மாவிற்கு மூல நோய் இல்லை.


     சமீபத்தில் ஒரு மருத்துவ மனையில் ஒரு நோயாளியைப் பார்க்க அழைத்திருந்தனர். அவரை அரை மணிநேரம் பார்த்தபின்பும் அவருக்கு மனநிலை பாதிப்பு ஒன்றும் இருப்பது போல் தெரியவில்லை. பின்புதான் புரிந்தது செவிலியர்கள் 203 ஆம் எண் அறைக்குப் பதிலாக 302 ஆம் எண் அறைக்கு அழைத்துச் சென்று விட்டனர் என்று.இன்னும் பத்து நிமிடங்கள் சென்றிருந்தால் அவருக்கே தன் மனநிலை மீது சந்தேகம் வந்திருக்கும்.

    ஒரு நோயாளி படுக்கையில் இருப்பதால் அவரது இடத்துக்கே வந்து இரத்தப் பரிசோதனை செய்வதற்கான சீட்டை அந்நோயாளியின் உறவினரிடம் கொடுத்தோம். அரை மணி நேரம் கழித்து அவ்வுறவினர் முழங்கையைப் பஞ்சால் தேய்த்துக் கொண்டே வரும் போதுதான் தெரிந்தது அவருக்கே இரத்தம் எடுத்துவிட்டு அனுப்பியிருக்கிறார்கள் என்று."கையை நீட்டச் சொன்னாங்க நீட்டினேன். யாருக்கு ரத்த டெஸ்டுன்னு கேட்கவே இல்லையே" என்றார் அவர். நான் இரத்தம் கொடுத்ததால்தான் நோயாளி பிழைத்தார் என்று பின்னர் அவர் பெருமிதத்துடன் எல்லோரிடமும் கூறியது வேறு விஷயம்.


  அதே போல் ஒருவர் என்னிடம் வந்து ஒரு சுவீட் பாக்ஸைக் கொடுத்து  எங்க அப்பாவின் உயிரைக் காப்பத்திட்டீங்க ! ரொம்பத் தேங்கஸ்! என்றார். ஏதோ தவறாகச் சிகிச்சை அளித்து விட்டோம் என்று நினைத்துக் கொண்டேன்.சொல்லிவிட்டுச் சென்றவர் பத்து நிமிடம் கழித்து வந்து சாரி சார்! நீங்க டாக்டர் ஜானகிராமன் இல்லையா? என்று வழிந்தார் என்னைப் போலவே. ஆனாலும் பெரிய மனதுடன் அந்த சுவீட் பாக்ஸை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள்! என்றார். ஒரு வேளை அதற்குள் நான் அதில் அரை லட்டைச் சாப்பிட்டு விட்டதைக் கண்டு பிடித்திருப்பார் போலும்.

இது போன்ற சம்பவங்கள் பூனைக்கும்  அடி சறுக்கி அடிபடும் என்பதை நினைவில் வைத்து இன்னும் கவனமாக இருக்கக் கோருபவைகள்.

******************************************************************************************************

1 comment:

  1. Again proving yourself as a doctor with great sense of humour!
    Regards,

    ReplyDelete