Thursday, April 28, 2011

த்ரிஷாவும் திருக்குறிப்பு நாயனாரும்

 தமிழ் இலக்கிய வட்டாரத்தில் 'வாசிப்பு இன்பம்' என்ற சொல் அடிக்கடி புழங்கும்.எந்த சூழ்நிலையிலும் வாசிக்கத் தக்க ,ஆரம்பத்திலிருந்து இறுதி வரை வாசிப்பைச் சுவாரஸ்யம் ஆக்கும் படைப்புக்களை உருவாக்குவது அருங்கலை.கச்சேரிகளைக் குறிப்பிடும் போது 'களைகட்டி விட்டது என்று கூறுவோம்.அது போல் எப்போதும் சோடை போகாத எழுத்துக்கள் சிலருக்குத்தான் வாய்க்கும். ஆங்கிலத்தில் வுட் ஹௌஸ், ஜெஃப்ரி ஆர்ச்சர் போன்றவர்கள் எழுத்து அவ்வகையானது. தமிழில் கல்கிக்குப் பின் அந்த இடத்தை வெகுகாலம் ஆக்கிரமித்தவர் சுஜாதா என்று தயங்காமல் கூறலாம்.எந்த விஷயத்தையும் அவரது அபார நடைமூலம் சுவாரஸ்யமாகச் சொல்லிவிடுவார்.ஒரு முறை ஜெட் லாக் பற்றிக் குறிப்பிடும் சுஜாதா 'நாளை கிளம்பி நேற்று வந்து சேர்ந்தோம்' என்று குறிப்பிடுகிறார்.அவரது எழுத்துக்கள் கனமானவை அல்ல மேலோட்டமானவை என்ற விமர்சனங்கள் இருக்கின்றன.இருப்பினும் அந்த எழுத்துக்களை வாசிப்பு இன்பத்திற்காக இன்றும் வாசிக்கலாம்.

அது போல் வாசிப்பை ஒரு இனிய அனுபவமாக்குபவை அ.முத்துலிங்கத்தின் எழுத்துக்கள்.எந்த ஒரு சொல்லும் அலுப்பூட்டாமல் இருக்கும் எழுத்து அவருடையது.அவர் பெயரை நான் கவனிக்க ஆரம்பித்தது 2004 வாக்கில் உயிர்மை, தீராநதி போன்ற இதழ்களில் வெளிவந்த அங்கதம் நிறைந்த கட்டுரைகளை வாசித்த பின்புதான்.
ஆனால் நான் அவரது பெயரைக் கவனிக்காமல் இருந்திருக்கிறேன் என்று இன்று தெரிந்து என்னையே நொந்து கொண்டேன்.இன்று வெளிவந்த ஆனந்த விகடனின் 'பொக்கிஷம்' பகுதியில் அவர் 1999 இல் எழுதிய 'எல்லோர்க்கும் பெய்யட்டும் மழை' என்ற கட்டுரை மீண்டும் வந்துள்ளது.அதில் நடிகை த்ரிஷா மிஸ் சென்னையாகத் தேர்வு செய்யப்படக் காரணமாக இருந்த கேள்வியான 'மனிதனுக்குத் தேவையான முக்கிய குணம் என்ன? என்பதற்கு அவர் 'நேர்மை' என்று பதிலளித்த செய்தியிலிருந்து தொடங்குகிறது கட்டுரை.
எல்லோருக்கும் தெரிந்த காக்காய் வடைக் கதையின் நீதி (moral) யையே கேள்விக்குரித்தாக்குகிறார் அ.மு.  ஒரு அமெரிக்கச் சிறுமி 'வாயிலே உணவை வைத்துக் கொண்டு பேசக் கூடாது என்பதே இக்கதையின் நீதி' என்று கூறும் இடம் நல்ல நகைச்சுவை. ஏமாற்றினால் பிழைக்கலாம் என்ற நீதியைப் போதிக்கிறது அக்கதை என்கிறார்.
அதே போல் விறகுவெட்டி கோடாரியைத் தொலைத்த கதையும் நேர்மையாக இருந்தால் செல்வம் சேர்க்கலாம் என்ற கருத்தை வலியுறுத்துகிறது.ஆனால் நேர்மைக்கும் செல்வம் சேர்ப்பதற்கும் ஒருவிதத் தொடர்பும் இல்லை என்கிறார் .வேறு எதற்காகவும் இல்லாமல் நேர்மையாக இருப்பது ஒரு அறம் .அதற்காக நேர்மையாக இருக்க வேண்டும் என்பது அ.மு வின் கருத்து.அறம் என்று ஒரு பிரமாதமான சிறுகதை ஒன்றை ஜெயமோகன் எழுதியிருப்பது நினைவு இங்கு கூரத்தக்கது.
அதன்பின் திருக்குறிப்பு நாயனார் கதை இக்கட்டுரையில் வருகிறது.அடியார்களின் துணிகளைச் சலவை செய்துதரும் பணியில் ஒரு நாள் மழை பெய்து துணியை உணர்த்த முடியாமல் போய்விடுகிறது. அது அவர் பிழை அன்று என்றாலும் மனசாட்சி உறுத்தத் தன் தலையைக் கல்லில் முட்டிக் கொண்டது அவரது நேர்மையைக் காட்டுகிறது.
 பின்னர் அ.மு. விற்கு ஆப்பிரிக்காவில் ஏற்படும் அனுபவத்தைக் கூறுகிறார்.தன்னுடைய இரு குழந்தைகள் இறந்ததும் அவர்களுக்காகக் கொடுக்கப்படும் குழந்தைப் படி இனி வேண்டாம் என்று கூறும் ஒரு படிப்பறிவில்லாத தொழிலாளியின் நேர்மை நெகிழ வைக்கிறது.நம் ஊரிலும் சுனாமியால் இறந்ததாகக் கருதப்பட்ட தன் மகன் உயிருடன் வந்த பின் அவர் இறந்து விட்டதாக எண்ணி வழங்கப் பட்ட நஷ்ட ஈட்டை அரசாங்கத்திடமே திருப்பிக் கொடுத்த தந்தையின் கதை செய்திகளில் வெளிவந்தது.
த்ரிஷா, காக்காய் வடை கதை, திருக்குறிப்பு நாயனார் என்று பலவிதமான சம்பவங்களைத் தொகுத்து சுவாரஸ்யமாகத் தந்திருக்கும் அ.முத்துலிங்கத்தின் எழுத்து அன்று போல் இன்றும் வசீகரமாகவே உள்ளன.
அவரது கதைகள் தன்மை(first person) யிலேயே பெரிதும் எழுதப்படுகின்றன. அதுவே கட்டுரைக்கும் புனைகதைக்கும் உள்ள இடைவெளியை வெகுவாகக் குறைகின்றன.கட்டுரைகள் புனைகதை போல் சுவாரஸ்யமாகவும் கதைகள் வரலாற்று, புவியியல்  தகவல்களோடு கட்டுரை போல் செறிவாகவும் தோன்றும் எழுத்துக்கள் அவருடையது.அவரது ஒரு  நூலின் தலைப்பே 'உண்மை கலந்த நாட்குறிப்புகள்' தான்.
உலக உருண்டையில் பல்வேறு இடங்களில் பணிபுரிந்த அனுபவமும், உலக இலக்கியத்தின் ஆழ்ந்த வாசிப்பும் இவரது எழுத்தில் காணலாம். உலக எழுத்தாளர்களை இவர் பேட்டி கண்டு எழுதிய நூலான 'வியத்தலும் இலமே' நம்மை வியக்க வைக்கும்.
திருநெல்வேலி பகுதியில் 'தன்மையாகப் ' பேசுகிறான் என்றால் இனிமையாகப் பேசுகிறான் என்று பொருள்.அ.மு.தன்மையாக எழுதுகிறார்.
குறிப்பு: என்ன செய்வது !அ.மு வின் பெயரை விட த்ரிஷாவின் பெயரைத் தலைப்பில் வைப்பதுதான் கவர்ச்சிகரமாக இருக்கிறது!த்ரிஷாவின் படத்தைக் கூடப் போட்டிருக்கலாம்.ஆனால் நமக்கும் நேர்மை என்று ஒன்றிருக்கிறதல்லவா?

Wednesday, April 27, 2011

வரையாது சுரக்கும் வள்ளியோய்

             நம் மக்களைப் பதினைந்து மாடிக் கட்டிடத்தின் மேலிருந்து குதிக்கச் சொல்லிங்கள்.தயங்காமல் குதிப்பார்கள்.ஆனால் அடுத்தவரைப் புகழச் சொல்லுங்கள் .மிகவும் தயங்குவார்கள்.ஆனால் ஒரு நல்ல ரசிகன் பாராட்டுவதற்குத் தயங்கவே மாட்டான்.
       அப்படிகொரு நல்ல ரசிகர் எஸ் வி வி என்று அன்புடன் அழைக்கப் படும் எஸ் வி வேணுகோபாலன். சுப்பையா, சேகர், சஹஸ்ரநாமம்.ரங்காராவ் என்ற பெயர்களைக் கொண்டவர்கள் பிரபலமடைந்த அதே எஸ் வி என்ற முதலெழுத்துக்கள்.
       நான் எழுதிய கட்டுரை ஒன்று ஹிந்து நாளிதழில் வந்தது.அதைப் படிக்குமாறு நண்பர்களுக்குக் கொலை மிரட்டல் விடுத்துக் கொண்டிருந்தேன்.அது புதுவருடத்தின் இரண்டாம் நாள்.பல நண்பர்கள் நான் அனுப்பியுள்ள குறுஞ்செய்தியைப் பார்க்காமலேயே 'WISH YOU THE SAME' என்று பதில் அனுப்பியிருந்தனர் .அந்த நேரத்தில் தானே வலிய வந்து என் கட்டுரையைப் படித்து ஹிந்து நாளிதழுக்குப் பாராட்டிக் கடிதம் தீட்டியதுடன் என்னையும் தொடர்பு கொண்டார். அன்று துவங்கிய நட்பு பல் வேறு தளங்களில் தொடர்கின்றது.
     எஸ் வி வி முழுநேர ரசிகர். மனிதர். இந்தியன் வங்கியில் பணி புரிகிறார். தொழிற்சங்க வாதி.இலக்கிய ரசனை மிகுந்தவர். மத்திய வர்க்கத்தின் முன்னுதாரண குடும்பத் தலைவர். எழுத்தாளர்.இவை எல்லாவற்றையும் விட மற்றவர்களைப் பாராட்டுவதில் விசும்பின் கருவி வானம் போல வரையாது சுரக்கும் வள்ளலாய் விளங்குவார்.
        இலக்கிய உலகில் அடுத்தவர்களை வஞ்சகமின்றிப் பாராட்டுவது அரிது. தி.க.சி இன்றும் இலக்கியப் படைப்புக்களைப் பாராட்டிக் கடிதங்கள் போடுகிறார்.அது போல் எஸ் வி வியும் பிறரது படைப்புக்களைப் பாராட்டுவதில் முதல் நபராய் இருப்பார்.
       உமது தமிழோடு விளையாடவே யாம் இங்கு வந்தோம் என்பது போல் தமிழின் வார்த்தைகளோடு விளையாடுவதில் நிபுணர் அவர். சோர்வுற்ற போது அவருடன் அடிக்கடி விளையாடும் வார்த்தை விளையாட்டு அஞ்சால் அலுப்பு மருந்து என அஞ்சாமல் சொல்லலாம்.
அவர் ஏற்கனவே நிறைய எழுதிக் கொண்டிருக்கிறார் என்பதை அறியாமல் நான் அவரிடம் நீங்களும் எழுதலாமே என்று  அவருக்கு எழுதினேன்.அவரும் முயற்சி செய்கிறேன் என்று பதிலளித்திருந்தார்.
      பல நண்பர்களை அறிமுகப்படுத்தும் பாலமாகவும் இருக்கிறார்.ஹிந்து கேஷவ், புதிய ஆசிரியன் ராஜு எனப் பலரது அறிமுகமும் எனக்குக் கிடைத்தது இவர் மூலமே.
தீக்கதிர்,செம்மலர் புதிய ஆசிரியன் என்று பல்வேறு இதழ்களில் இவரது படைப்புகளைக் காணலாம்.
ஹிந்து வாசகர் கடிதம் பகுதியில் திருவனந்த புரம் முகுந்த் ராஜன் ,சென்னை காசிம் சேட் இவர்களுடன் அடிக்கடி எஸ் வி வேணூகோபாலன் பெயரும் இடம் பெறும். N.ராம் அவர்கள் படிப்பதற்கு முன்னாலேயே இணையத்தில் ஹிந்துவைப் படித்து நம் பதிவு வந்திருந்தால் பாராட்டுவார்.
ஒரு நாள் தொழிற்சங்க நடவடிக்கையில் மும்முரமாய் இருப்பார்.மறுநாள் சாகித்ய அகாதமி கூட்டத்தில் இருப்பார்.
குறைந்த பட்ச தேவைகளுடன் வாழ்கிறார். வங்கியில் இருந்தாலும் ATM, Internet Banking போன்ற நவீன நுகர்வு சமாச்சாரங்களுக்கு அப்பாற்பட்டு இருக்கிறார். (அந்த வங்கிக் கேஷியர் பணத்தைக் கையால கூட தொடமாட்டார் என்ற நகைச்சுவை ஞாபகத்திற்கு வருகிறது)
        அவரது நட்புக் கிடைத்தது ஒரு ந்ல்லூழ்.அவரைப் பற்றி நான் எழுதிய ஒரு வெண்பா      
                கதைகள் கடிதங்கள் கட்டுரைகள் தாமென்(று)

                எதையும் எழுதிடுவார் இங்கே-- சிதையாது
                பேணுவார்  மாறாப் பிரியமுடன் நம்நட்பை      
                வேணுகோ பாலன் விழைந்து. 
அவரது மின்னஞ்சல் sv.venu@gmail.com
    

Sunday, April 24, 2011

ரீதி கௌளை- மடை திறந்த ராஜா

ஒரு பாடல் பதிவிற்காகக் கர்நாடக சங்கீத மேதை பாலமுரளிகிருஷ்ணா சென்றார்.இசையமைப்பாளர் இசைஞானி அவரை வரவேற்றுப் பதிவுக் கூடத்திற்குள் அழைத்துச் சென்றார். பாடலைப் பாடிக் காட்டவா என்று இளையராஜா கேட்டு விட்டுப் பாட ஆரம்பிக்கிறார். சினிமாப் பாடல் என்றால் ஒரு மோகனம், ஒரு சிந்துபைரவி இல்லை கல்யாணி ராகத்தில் ஒரு பாடல் போட்டிருப்பார்.அதுவும் இளையராஜா அப்போது முழுதாய் பத்துப் படங்கள் கூட பண்ணியிருக்கவில்லை.இவ்வாறு எண்ணிக் கொண்டிருந்திருந்த பாலமுரளிகிருஷ்ணா மெட்டைக் கேட்டதும்  திகைத்துப் போய் ஒருகணம் வாயடைத்துப் போனார்.
    





  'ஸகரிகமநிநிஸா சின்னக் கண்ணன் அழைக்கிறான்' என்று ராஜா போட்ட மெட்டு அதுவரை திரையில் யாருமே போட்டிராத ராகம்.ரீதிகௌளை என்று பெயர்.அந்த ராகத்தின் ஆரோகணத்தை அப்படியே பாடலின் முதல் அடியாக அமைத்தது அவரது மேதமையைக் காட்டுகிறது.பாடல் கவிக்குயில் படத்தில் இடம் பெற்றது.(1976).ஆரம்பத்தில் வரும் குழலிசையும் சந்தூரிலிருந்து வரும் கிண்கிணி ஒலியையும் கவனியுங்கள் .இரண்டும் சுத்தமான ரீதிகௌளைதான். குழலில் ஒருவகையாகவும் கம்பியிலிருந்து வேறுவகையும் சுவை தருகிறது.

            
    ரீதிகௌளை இனிமையான கருணைச் சுவை பொங்கும் ராகம்.கர்னாடக சங்கீதத்தில் ஓஹோ என்றில்லாவிட்டாலும் ஓரளவு பிரபலமான ராகம்.எம்.டி ராமநாதன் என்ற இசைமேதை பரிப்பாலய என்ற தியாகராஜஸ்வாமிகளின் பாடலைப் பாடிப் பிரபலப் படுத்தினார்.'ஜனனி நின்னுவினா' என்ற சுப்பராய சாஸ்திரியின் (மும்மூர்த்திகளில் ஒருவரான ஸ்யாமா சாஸ்திரியின் மகன்) கீர்த்தனை புகழ்பெற்றது.தமிழில் 'குருவாயுரப்பனே அப்பன்' என்ற அம்புஜம் கிருஷ்ணாவின் பாடலும் கேட்க இனிமையாக இருக்கும்.பாபனாசம் சிவனின தத்வமறிய தரமா? என்ற பாடலும் ரீதிகௌளையில் சோபிக்கும்.இப்பாடல்களை எல்லம் தொடர்ந்து கேட்டு வந்தாலே நாம் ரீதிகௌளையை எங்கே சந்தித்தாலும் கண்டுபிடித்து 'ஹாய்' சொல்லலாம்.


ரீதிகௌளையை மடைதிறந்து விட்டவர் இளையராஜா.ஆனால் அபூர்வமாகவே அந்த ராகம் பயன்படுத்தப்பட்டது. ஆனால் துருப்புச்சீட்டு மாதிரி ஒவ்வொரு முறையும் நல்ல பாடலாகவே அமைகிறது.
ஒரு ஓடை நதியாகிறது என்று ஒரு படம்.1983 இல் வெளிவந்தது.அதில் எஸ் பி பியும் ராஜேஸ்வரியும் பாடிருக்கும் பாடல் 'தலையைக் குனியும் தாமரையே'.இசை ஞானியின் கைவண்ணத்தில் விறுவிறுப்பான தாளங்களுடன் வேகமாக அமைந்த பாடல்.ஆரம்பத்தில் வரும் வயலினும். பாட்டின் நடுவில் பாற்கடலின் ஓரம் என்று இழுக்கும் இடத்தையும் கவனியுங்கள்.இசை அறிந்தால் இரட்டை இன்பத்துடன் ரசிக்கலாம்

கே விஸ்வநாத் தெலுங்கில் நல்ல இசையம்சமுள்ள படங்களைத் தந்தவர்.1985 இல் அவர் இயக்கத்தில் வந்த சிப்பிக்குள் முத்து (தெலுங்கில் ஸ்வாதி முத்யம்)  படத்தில் ரீதிகௌளையில் ஞானியும் எஸ் பி பியும் விளையாடியிருப்பார்கள்
'சீதையின் சுயம்வரம் நிச்சயிக்கப் பட்ட நாளிலே, ஜனகனின் மண்டபத்திலே மாலை ஏந்தி வந்த ஜானகியை வெண்ணிலா மண்ணிலா வந்ததென்று மன்னவரெல்லாம் பார்க்க ஸ்ரீ ரா....மச்சந்த்ர முர்த்தி ,கண்ணெடுத்துப் பார்க்க மாட்டாரோ என்று கவலை கொண்டார்களாம் சீதா தேவியின் செல்லத்தோழிகள்.' என்று தொகையறாவாகப் (வசனத்தை ராகத்துடன் பாடுதல்)  பாடியிருக்கும் இடத்தில் ராகமும் குரலும் இணைந்து கலக்கும்.
                    

இசைப்புயல் ரீதி கௌளையை விட்டு விடுமா? ஏ ஆர் ரகுமான் கர்னாடக இசையைப் பெரும்பாலும் இந்த தலைமுறைக்கு ஏற்றவாறு மாற்றிக் கொடுப்பவர்.மேற்கத்திய மற்றும் ஹிந்துஸ்தானி இசைக் கூறுகள் அதிகம் தென்படும் இவர் பாடல்களிலும் அவ்வப்போது சுத்தமான கர்னாடக இசையைக் காணலாம்.முதல்வன் படத்தில் ரீதி கௌளையில் ஒரு நல்ல பாடல் தந்திருப்பார்.அழகான ராட்சசியே (நிச்சயமாக மனிஷா கொய்ராலா அல்ல. அவர் வயதான ராட்சசி) என்ற அந்தப் பாடலில் 'குயிலே ஆலங்குயிலே ' என்று இழுக்கும் இடம் தான் ரீதி கௌளையை ரிஃப்ளெக்ட் செய்கிறது.

                            
ரீதிகௌளை லேசாக ஒலித்தாலும் கண்டுபிடித்து விடலாம்.தாழம்பூ வாசம் மாதிரி. வித்யாசாகர் நல்ல கர்னாடக இசை நுணுக்கம் அறிந்தவர்.தூய கர்னாடக இசையைத் தருபவர் (கொஞ்ச நேரம் கொஞ்ச நேரம்- சந்திரமுகியில் ஆபோகி ராகத்தை அற்புதமாய் வெளிப்படுத்தி இருப்பார்).'தம்பி' என்ற படத்தில் ஒரு மெல்லிய ஹிந்துஸ்தானி ஜாடையில் ரீதிகௌளையைப் பயன்படுத்தி இருப்பார். டிப்பிக்கல் வித்யாசாகர் பாணி.'காதலித்துப் பார்' என்ற இடத்தில் ராகமுத்திரை இருக்கிறது

        
        
சமீபத்தில் இன்னொரு  ஒரு நல்ல ரீதிகௌளையைக் கேட்க முடிந்தது. சுப்பிரமணிய புரத்தில் வரும் 'கண்கள் இரண்டால் பாடல்'. ஜேம்ஸ் வசந்தனின் நல்ல முயற்சி.ஓரிரு முறை கேட்டாலே அழகான ராட்சசியேவும் இதுவும் ஒரே ராகம் என்று சட்டென்று புலப்படும்.

                      
                                
ராகம் என்பது ஒரு சமையல் குறிப்பைப் போன்றது.என்னென்ன பொருட்களைச் சேர்க்கலாம் என்று கூறும். சமையல் குறிப்பைப் பின்பற்றி நூறு பேர் உப்புமா செய்தாலும் ஒவ்வொன்றும் ஒவ்வொரு சுவையாய் இருக்கும். அது போலவே மெட்டுக்களும்.




      
  
               

Sunday, April 17, 2011

யானே கவிஞன்


நானும் என் நண்பர் எஸ் வி வேணுகோபாலனும் இணைந்து எழுதிய விபரீதக் கட்டுரை
ல்லோரும் இன்னாட்டு மன்னர்களோ இல்லையோ,எல்லோரும் கவிஞர்கள் என்பதில் சந்தேகமில்லை.ஜனத்தொகைக் கனக்கெடுப்பில் கவிஞர்களின் எண்ணிக்கையைக் கணக்கில் எடுத்துக் கொள்வதில்லை.எனினும் தமிழ்நாட்டின் ஜனத்தொகையில் முக்கால்வாசிக்கும் மேற்பட்டவர்கள் கவிஞர்கள் என்பதில் யாதொரு ஐயமும் இராது.மீதி இருப்பவர்களும் பேனா,பென்சில் பற்றாக்குறையால் கவிஞராவதில்லை என்பது ஒரு பொருளாதார ஆய்வின் முடிவு.

நேரடியாகக் கவிதை எழுதுபவர்கள் ஒருபுறம் இருக்கத் 'தாம் செய்வது இன்னதென்று அறியாமாலேயே'கவிஞர்களாகுபவர்கள் உண்டு.இவர்கள் பெரும்பாலும் இன்னொருவர் எழுதிய பாடலைத் தமது அனுபவம்,மொழி ஆளுமை,கலாச்சாரம்,இசை அறிவு,ஓசைநயம் போன்றவற்றால் தூண்டப்பட்டுத் தமக்கேற்றவாறு பண்படுத்திக்கொள்கின்றனர்(பண்-பாடல்).

சமயத்தில்அப்படியான புதிய வரிகள்மூலப் பாடலை முந்தி நிற்பதாகவும் அமைவதுண்டு. இப்படித்தான் ஓர் அன்பர்,கேள்வியின் நாயகனே என்ற அபூர்வ ராகங்கள் படத்தின் புகழ் பெற்ற பாடலின் முதல் அடியிலேயே தனது கை வரிசையைக் காட்டினார். கேள் விநாயகனே என்று பக்தி பரவசமாக அதை மாற்றியிருந்தார்... இன்னொருவர்அன்னக் கிளி உன்னைத் தேடுதே என்ற இளையராஜாவின் திரை நுழைவு அற்புத உருவாக்கத்திற்குக் கொஞ்சம் மெருகேற்றினார்எந்த உள் நோக்கமும் இல்லாமல்.  ஆவாரம் பூ மேனி வாடுதே என்று வருவதை அந்தச் சிருங்கார சிந்தனையாளர் அவரன்பு மேனி வாடுதே என்று அடுத்த கட்டத்திற்கு நகர்த்தினார் அந்தக் காதல் குழைவை..

திரைப் பாடல்களைக் கேட்க ரேடியோ ஒன்றே கதி என்ற காலம் ஒன்று இருந்தது. கொஞ்சம் வசதி வைத்தால்ரெகார்ட் ப்ளேயர். திரையரங்குகளில் சினிமா பாட்டு புத்தகம் விற்பனை மசால் வடைசமூசா விற்பனையை மிஞ்சும் அளவு நடப்பதுண்டு.  அப்படியான பாடல் புத்தகங்கள் பலவற்றிலும்பாடல் ஆசிரியர் கண்ணதாசன்வாலிஉடுமலை நாராயண கவி என்று ஒரு மரியாதைக்குப் போட்டுவிட்டுயாரோ ஒரு வரகவி தமது சொந்தப் பாக்களை அருளி இருப்பார் உள்ளே.  சில பாடல்களுக்கு முன் தொகையறா என்று வேறு போட்டு மிரட்டுவார்கள்.  பாட்டுப் புத்தகத்தை வைத்துக் கொண்டு பாடிக் கொண்டே போனால்மேடு பள்ளங்களில் விழுந்து எழுந்து ஒரு இசைப் பயணம் நடத்த வேண்டியிருக்கும்.  அதை அடுத்த முறைவானொலியில் ஒலிப்பதோடு ஒப்பிட்டுக் கேட்டுப் பிழைகளைத் திருத்த உட்கார்ந்தால் புதிய பாடல் உருவாகி முடிந்திருக்கும்...

இவ்வாறு கவிதையை உருமாற்றம் செய்பவர்கள் சிறுவயதிலேயே இதற்கான பயிற்சியைப் பெரும்பாலும் தன்னைவிடச் சற்று அதிகம் கெட்டுப் போன நண்பர்களிடம் பெறுவர்.அறிந்த பாடலைச் சந்தம் கெடாமல்அச்சிடமுடியாத வார்த்தைகளால் பாடும் கலையை அறிந்தபின் திரைப்பாடல்களைப் பற்றிய மாயை அகன்றுவிடுகிறது.மீட்டரை மேட்டரால் நிரப்புவதே பாடல் என்று உணர்ந்தபின் அவனுக்கு எந்தப் பாடலைப் பாடவும் வார்த்தைகளை அறிந்திருக்க வேண்டும் என்ற மனத்தடை அகல்கிறது.ஸ்பானிஷ் மொழிப் பாடலாக இருந்தாலும் ஒரு முறை கேட்டாலே மீண்டும் அவனால் பாடமுடிகிறது.

ஒரு காலத்தில் ஏராளமான இந்தித் திரைப்படப் பாடல்களை ஒரு தலைமுறையே இஷ்டத்திற்கு இட்டுக்கட்டிப் பாடிக்கொண்டிருந்தது.'ஒ மாரியா ஒ மாரியா என்ற இந்திப் பாடலை (சாகர்) சோமாரியாசும்மாருய்யா! என்று தமிழ்கூறும் நல்லுலகத்திற்கு மொழிமாற்றம் செய்து கொண்டிருந்தனர்.  . 

பிறகு சங்கராபரணம் போன்ற படங்களின் வரவினால் தெலுங்குப் பாடல்களைப் பாடி ஒரு அறிவிக்கப் படாத தமிழிசை இயக்கமே நடத்திவந்தனர்.அந்த மரபின் தொடர்ச்சியாக இப்பொழுதும் தியாகப்பிரம்மத்தின் பாடல்களைப் பாடகர்கள் கேட்பவர்கள் கண்ணீர் மல்குமாறு(உணர்ச்சியால் அல்ல உச்சரிப்பால்) பாடுகிறார்கள்.எந்தரோ மஹானுபாவுலு என்ற பாடலை எந்த ரோ என்று கேட்டாலும் பரவாயில்லை எந்த ரோம   ......ஹானுபாவுலு ...எந்த..ரோம என்று பாடுவர்.ரோமம் என்பது தலைமுடியின் இன்னொரு பெயராய் வேறு இருந்து தொலைக்கிறது 

எண்பதுகளில் தமிழகமெங்கும் புதிய புதிய திரை இசைக் குழுக்கள் பெருமளவு பிரபலம் ஆகி வந்தன.  அவற்றில் சம்பிரதாயமாக முதல் பாடல் கடவுள் மீது தான் இருக்கும்.  இந்துக் கடவுள் தான். பெரும்பாலும்புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே வாக இருக்கும்.  அதில் ஒரு கொடியோடு மதுராவை ஆள்கின்றவன் என்று வரும் இடத்தைப் பல குழுக்களிலும்மதுராவை நமது மதுரையோடு குழப்பிக் கொண்டு பாடலை இப்படி பாடுவதைப் பல மேடைகளில் கேட்டுக் குமைந்திருக்கிறோம்: மீன் கொடியோடு மதுராவை ஆள்கின்றவன் என்று எடுத்து விடுவார்கள். 

ஆனால்கானா கலைஞர்கள் எல்லோரையும் தூக்கிச் சாப்பிட்டார்கள்.  மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன் என்ற டி எம் எஸ் அவர்களின் கம்பீரமான பாடலைகள் ஆனாலும் பாப்பாரப்பட்டி கள் ஆவேன் என்று தொடங்கி பீடா ஆனாலும் சவுகார்பேட்டை பீடா(வா)வேன்    என்று பல்லவியை அழகாய் அமைத்தனர். நாத்திக பிரியர்கள்திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா என்ற சூலமங்கலம் ராஜலக்ஷ்மி -பி.சுசிலாவின் பாடலைதிருப்பரங்குன்றத்தில் மொட்டை அடித்தால் முருகா,திருத்தணி மலை மீது மயிர் முளைக்கும் என்று வெறுப்பேற்றினார்கள்

திரைப்படப் பாடகர்களும் சளைத்தவர்களல்ல.டி.எம்.எஸ் போன்று சுத்தமான உச்சரிப்புக் கொண்டவர்களின் பாடல் வரிகளையே நாம் கைமா போடுவோம்.மலர்ந்தும் மலராத பாதி மலர் போல பாடலில் வரும் விழி வண்ணமே ,கலை அன்னமே இளந்தென்றலேதமிழ் மன்றமேஎன்ற வார்த்தைகளைக் கட்டவிழ்ந்த சுதந்திரடத்துன் கலப்பு இனப்பெருக்கம் செய்து அறுபதுக்கும் மேற்பட்ட வகைகளில் பாடுவோம்.பாடகர் உச்சரிப்பு சற்றுப் புரியவில்லை என்றால் விடுவோமா?ஜன கன மன புரியவில்லை என்று பாடாமல் இருக்கிறோமா?

எஸ்பிபியின் குழைவான உச்சரிப்பினால் வார்த்தை சரியாக விளங்காமல் 'வாயிலே தேனிலா என்று வானிலிருந்த நிலவை வாயினருகில் கொணர்ந்தவரும் உண்டு.அதே மாதிரி எஸ் பி பி ஆயிரம் நிலவே வா வில் நல்லிரவு என்று பாடியிருப்பார்.ஆனால் பலருக்கு நள்ளிரவு தான் துணையிருக்கும்.இன்றும் ஆயிரம் மலர்களே மலருங்கள் என்ற நிறம் மாறாதா பூக்கள் படப் பாடலின் சரணத்தை ஜென்சி 'வாயிலே வெண்ணிலாஎன்று பாடுவதுபோல்தான் எனக்குக் கேட்கும்.ஜென்சிக்கு எல்லாமே வல்லினம் தான் .'மலறுங்கள்'.'நெறுங்கிவந்து தான்.ஆனால் யேசுதாஸின் "தெருக்கோவிலே ஓடி வா" வை (நினைவாலே சிலை செய்து-அந்தமான் காதலி) மிஞ்ச எதனாலும் முடியாது.  தெருமுனையில் இருந்த பிள்ளையார் கோவிலின் ஞாபகமே இந்தப் பாடலைக் கேட்கும் போது வரும்.

இவர்களாவது அண்டை மாநிலத்தவர். தமிழுடன் தொப்புள் கொடி உறவாது இருக்கும் .ஆனால் வடக்கிலிருந்து வருபவர்களது உச்சரிப்பைக் கேட்டால் வடக்கிருந்து உயிர் விடலாம் என்று தோன்றும்.ஒரு பாடலில் 'பெரியம்மா பெண்ணைக் கட்டுஎன்று பாடுகிறார் பாடகர். இது ஏதோ முறைதவறிய பாலியல் விவகாரம் என்று தோன்றும்.ஆனால் உண்மையான வரிகள் "பிரியமாப் பெண்ணைக் கட்டு"என்பதேயாகும்.அதே பாடகர் பாடிய ஒரு பாடலில் 'கண்கள் என்ன அனகோண்டா ?" என்று பாடியிருப்பார்.கண்களை மலைப்பாம்பிற்கு ஒப்பிட்ட கவிஞரது சிந்தனையைப் பாராட்டிய பின்புதான்  'கண்கள் என்ன அணுகுண்டா?'  என்பதைத் தான் பாடகர் அவ்வாறு பாடியிருக்கிறார்  என்பது தெரியவரும்.

     செம்மொழியான தமிழ்மொழியையே தும்மலாய்,இருமலாய் வெளியிடுபவர்கள் மலாய் மொழியென்றால் விடுவோமா? ப்ரியா படத்தில் ஹத்தியக்கு சுக்காவா ஸ்லாலுவக்கு ஜிந்த்தாவாஎன்ற தொகையறாவைத் தொகையலாக்கி துவம்சம் செய்து 

விடுவோம். 'பத்தியத்து சுக்காவா?லாலுவுக்கு ஜிந்தாபாத்.சதா பாண்டுரங்கன் தெரியுமா சதா நீ ஹரி ஹரி சொல்லு மக்கா என்றெல்லாம் சின்னா பின்னமாகி மகிழ்வோம்.

          ஒரே பரமாத்மாவின் பல்வேறு வடிவங்களே ஜீவாத்மாக்கள் என்ற விசிஷ்டாத்வைத வேதாந்தத்திற்கு இணங்க ஒரே பாடலைப் பல்வேறு வடிவங்கள் மூலம் பாடிமகிழ்கிறோம்.யானோ பாடகன்?யானே கவிஞன்!!

Sunday, April 10, 2011

சுத்த தன்யாசி - மென்மையான சோகம்


இன்று காலை ரசனை மிகுந்த நண்பர் வேணுகோபால் அவர்களிடம் பேசும் போது தியாகம் படத்தில் வரும் வசந்தகாலக் கோலங்கள் என்ற பாட்டு தனக்கு மிகவும் பிடிக்குமென்றார். காலை முழுதும் ஜானகியின் மிகச்சிறந்த அந்தப் பாடலே என் காதில் ஒலித்துக் கொண்டிருந்தது.பின்பு புல்லாங்குழலிலும் அதை வாசித்துக் கொண்டே இருந்தேன் சுத்த தன்யாசி ராகம் அப்படியே ஆளை மயக்கக் கூடியது. ஒரு பாடலிலிருந்து இன்னொன்று என்று வரிசையாக சுத்த தன்யாசியாய் வந்து போனது.

       சுத்த தன்யாசி எளிமையான ராகம். ஸ க ம ப நி ஸ் ஸ் நி ப ம க ஸ . அவ்வளவுதான்.ஆனால் எத்தனை அருமையான பாடல்கள். கர்னாடக சங்கீதத்தில் சுத்த தன்யாசி என்றதும் என் நினைவிற்கு வருவது எம் எஸ் அம்மா பாடிய அன்னாமாச்சாரியார் கீர்த்தனை ‘பாவமுலோனா” தான்.சினிமாவில் கல்யாண வீட்டைக் காட்டும் போது நாதஸ்வரத்தில் இந்தப் பாட்டைத் தான் வாசிப்பார்கள்.அடுத்தமுறை கவனியுங்கள். 


                        அதே மாதிரி ஜி என் பி யின் ஹிமகிரிதனயே. அற்புதமான பாடல்.ஏனோ கர்னாடக சங்கீதத்தை விட மெல்லிசையிலும் திரை இசையிலும் இந்த ராகம் பிரபலமானது.(மத்யமாவதி போல்).கொஞ்சம் மேற்கத்திய சாயலும் இருப்பதாலும் இருக்கலாம்.
   

     சுத்த தன்யாசி என்றால் ‘பலே பாண்டியாவில்’ வரும் ‘நீயே உனக்கு என்றும் நிகரானவன்’ தான் நினைவுக்கு வரும்.சுத்தமான சுத்த தன்யாசி.டி எம் எஸ் அமர்க்களம் செய்திருப்பார்.கடைசியில் காமெடி பண்ணியிருந்தாலும் அற்புதமான ஸ்வரக் கோர்வைகளுடன் விளங்கும் பாட்டு.மெல்லிசை மன்னர் மெல்லிசை விருந்தாய்ப்  பண்ணியிருக்கும் (ராமமூர்த்தியுடன்) இன்னொரு சுத்த.தன்யாசி பாடல் ‘தொட்டல் பூ மலரும்’ (படகோட்டி).அற்புதமான இசை இணைப்புக்கள் (interlude).ஆனால் பி.சுசிலாவின் குரலும் இசையும் சேர்ந்து மயக்கும் ஒரு அதி அற்புதப் பாடலை எம் எஸ் வி கர்ணன் படத்தில் தந்திருப்பார்.கண்கள் எங்கே என்ற அந்தப் பாடலைக் கேட்பதற்கே பூர்வ ஜன்ம புண்ணியம் செய்திருக்க வேண்டும்
              

    இசை ஞானி சும்மா விடுவாரா?. முப்பதுக்கும் மேல் சுத்த தன்யாசிப் பாடல்கள்.பல கலப்பினப் பாடல்கள். மேலே சொன்ன வசந்த காலக் கோலங்கள் ஒரு க்ளாசிக்.பெரும் பாலும் இனம் புரியாத சோகத்தை வெளிப்படுத்தப் பயன் படுத்தி இருக்கிறார். சத்ரியனில் வரும் ‘மாலையில் யாரோ ‘ மறக்க முடியுமா? ஸ்வர்ணலதா நம்மிடையே இல்லை .எனினும் அப்பாடல் அமரத்துவம் பெற்ற பாடல்.இந்தப் பாடலின் துவக்கத்தைக் கேளுங்கள்.வானிலிருந்து ஆயிரமாயிரம் பன்னீர் புஷ்பங்களை நம் மேல் சொரிவது போல் இருக்கும்.
        

       அதே போல் இளமைக் காலங்களில் வரும் ‘ராகவனே ரமணா’ வும் ஒரு அக்மார்க் சுத்த தன்யாசி.ஸ்ரீ ராமச் சந்திரா என்று பி சுசிலா எடுக்கும் இடமும்,ஆரம்பத்தில் வரும் ஆலாபனை மற்றும் ஸ்வரக் கோர்வைகளும் அற்புதமாய் இருக்கும்.

    சிறு பொன்மணி அசையும் (கல்லுக்குள் ஈரம்) சுத்த தன்யாசியில் ஒரு வித்தியாசமான முயற்சி.இன்று தம்தம்தன தாளம் வரும் பாடலைப் போல் அதுவும் திரைப்படங்களில் காதலைக் கிண்டல் செய்யும் போது (உ-ம் காமெடியன் ஒரு பெண்ணைப் பார்த்து மயங்கும் போது) பின்னணியில் ஒலிக்கிறது.  
     ‘விழியில் விழுந்து இதயம் நுழைந்து உயிரில் கலந்த’ அலைகள் ஓய்வதில்லைப் பாடலும் சுத்த தன்யாசிதான்.ஸ்வரங்களுடன் இணைந்த குரலும்,வரிகளும் சற்றி சிரமமான தாளக்கட்டும் மறக்கமுடியாதவை.
ஆயிரம் மலர்களே மலருங்கள் என்று ஜென்சியின் தேன் தடவிய உச்சறிப்பில் (வல்லின ற -வேண்டுமென்றே போட்டது) ஒரு சுத்த தன்யாசி மெல்லிய சோகம் இழையோடியபடி வரும்.
    உன்னால் முடியும் தம்பியில் ஒரு நல்ல காட்சி. புஞ்சை உண்டு நஞ்சை உண்டு என்று கமல் பாடியிருப்பதைக் கேட்டு “சுத்த தன்யாசியா இது அசுத்த தன்யாசி என்று கோவித்துவிட்டுப் பின் மனோரமாவிடம் கமலைப் புகழ்வார்.
      இதே ராகத்தை அவ்வப்போது வேகமான பாடல்களுக்கும் சுத்த தன்யாசியைப் பயன்படுத்தியிருப்பார் .பாடாமல் பார்த்த நெஞ்சம்( பூந்தோட்டக் காவல் காரன்),பாடும் நேரம் (சூர சம்ஹாரம்) ,ஒ மானே மானே (வெள்ளை ரோஜா),ஏ உன்னைத் தானே (காதல் பரிசு).பெரும்பாலும் கேலி,போட்டிப் பாடல்களுக்குப் பயன்படுத்தி இருக்கிறார் இந்த ராகத்தை.(பூ மாலை -தங்க மகன்).
     பிற்காலத்தில் செம்பூவே பூவே (சிறைச்சாலை),ஆனந்தக் குயிலின் பாட்டு (காதலுக்கு மரியாதை ) போன்ற மெல்லிசைப் பாடல்களை இந்த ராகத்தில் தந்திருக்கிறார்.ராசையா படத்தில் வரும் 'காதல் வானிலே' என்ற பாடல் வித்தியாசமான தொடக்கத்துடன் அமைந்திருக்கும்.
       தேவாவும் தன் பங்குக்கு நினைத்தேன் வந்தாய் படத்தில் மல்லிகையே மல்லிகையே என்று ஒரு நல்ல சுத்த தன்யாசியைத் தந்திருப்பார்.
       இணையத்தில் தேடினால் இன்னும் நிறையக் கிடைக்கும்.ஆனால் தேடாமலே நினைவில் நின்ற பாடல்களே சிறந்தவைஎனவே அவற்றை மட்டும் பேசியிருக்கிறேன்.சுத்த தன்யாசி-- மாலை நேர மயக்கம்!!