Sunday, May 15, 2011

மாயாமாளவ கௌளை -ராஜ ராகம்

மீண்டும் எழுத்தாளர் சுஜாதாவுக்கே வருவோம்.அவருடைய எழுத்துக்கள் பலதரப்பட்டவை. தாத்தா ஈஸிச்சேரில் சாய்ந்து கொண்டு சுஜாதா ஆழ்வார்களைப் பற்றி எழுதியதைப் படித்துக் கொண்டிருப்பார்.பேரன் மெக்ஸிகோ சலவைக்காரி ஜோக்கைப் படித்து ரசித்துக் கொண்டிருப்பான்.அவரா இது என்று வியக்கவைக்கும்.அதுபோல் சில ராகங்களையும் இசை அமைப்பாளர்கள் வேறு வேறு இடங்களில் பயன்படுத்தி இருப்பார்கள்.ஒரே ராகத்தில் அமைந்த இரண்டு பாடல்களைக் கேட்கும் போது அதுவா இது என்று வியக்கவைப்பதே ஒரு இசையமைப்பாளரின் படைப்புத்திறனின் வெளிப்பாடு.

படைப்பாளியின் கற்பனையோடு ராகமும் வளைந்து கொடுக்கும் தன்மையுடையதாய் இருந்தால் நமக்குக் கிடைப்பது விதவிதமான விருந்துகள் தான்.அப்படி ஒரு ராகம் தான் மாயா மாளவ கௌளை.இந்த இடத்தில் ஒரு சிறு தகவல்.கர்நாடக சங்கீதத்தில் ரி,க,ம,த,நி ஆகிய ஸ்வரங்கள் இரண்டிரண்டு இருக்கும் உ-ம் சின்ன ரி(ரி1) பெரிய ரி (ரி2). 'ஸ' வும் 'ப' வும் ஆதார ஸ்ருதிகள் ஆகவே ஒன்றுதான்.கீ போர்டில் ஒரு வெள்ளைக் கட்டைக்கு முன் மேலே இருக்கும் கருப்புக் கட்டை சின்ன ஸ்வரம்.('ம' மட்டும் விதிவிலக்கு). ஒரு ராகத்தில் ஏதாவது ஒரு ஸ்வரம்( சின்னதோ பெரியதோ) மட்டுமே வரும்.(இதிலும் சில விதிவிலக்குகள் உள்ளன).



இவ்வாறு ஸ்வரங்களின் விதவிதமானச சேர்க்கையில் (உ-ம் ஸ ரி1க2 ம1 ப த1நி2ஸ் -மாயா மாளவ கௌளை.ஸ ரி2க2ம2ப த2 நி2 ஸ்-கல்யாணி) 72 வகையான ராகங்கள் கிடைக்கின்றன.இவை மேளகர்த்தா ராகங்கள் என அழைக்கப் படுகின்றன.ஏழு சுரங்களும் வருவதால் சம்பூர்ண ராகம் என்றும் அழைக்கப்படும்.இவற்றில் 15 ஆவது மேளகர்த்தா ராகம் மாயாமாளவ கௌளை.ராகங்கள் உருவாகும் விதம் பற்றி இன்னொரு முறை விரிவாக விவாதிக்கலாம்.

கர்நாடக சங்கீதம் படிப்பவர்களுக்கான பால பாடங்கள் மாயா மாளவ கௌளை ராகத்தில்தான் சொல்லிக்கொடுக்கப்படிகின்றன.உடல் பொருள் ஆனந்தி என்றொரு நாவலில் ஜாவர் சீதாராமன் இந்த ராகம் வீணையில் வாசிக்கப்படுவது  எப்படி உள்ளத்தை உருக்கும் விதம் உள்ளது  என்று விலாவாரியாக விவரித்திருப்பார்.சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துஸ்வாமி தீட்சிதர் 'ஸ்ரீ நாதாதி குரு குஹோ 'என்று இந்த ராகத்தில் தான் தன் முதல்பாடலை இயற்றினார்.தியாகய்யர் 'துளசி தளமுலசே' என்று ஒரு இனிமையான கீர்த்தனை அமைத்திருக்கிறார்.முத்துத்தாண்டவர் இயற்றிய 'ஆடிக்கொண்டார் ' என்ற தமிழ்பாடலும் மிகப் புகழ்பெற்றது



துளசிதளமுல மெட்டிலேயே  பட்டினத்தார் (1962)படத்தில் 'நிலவே நீ இந்த சேதி சொல்லாயோ 'என்று ஜி.ராமனாதன் அற்புதமான பாடல் ஒன்றை அமைத்திருப்பார்.'கோடிச் செல்வம் நிறைந்தாலும் என்ன
அதைக் குலவிக் கொஞ்ச மனம் குளிர்ந்திடுமோ
ஓடி வந்து விளையாட இங்கு ஒரு
பாலன் வேண்டுமென வேலன் தந்தையிடம்
(நிலவே) என்று மருதகாசி உருக்கமாய் எழுதியிருப்பார்....பழைய படங்களில் அபூர்வமாகவே இந்த ராகம் பயன்பட்டது.எனினும் 'ஆலய மணி'(1962) யில் வந்த இப்பாடல் மிகப் புகழ்பெற்றது.இடையில் வரும் ஹம்மிங்கில் ராக ஆலாபனை இனிமையாக இருக்கும்


திரை இசையில் மாயாமாளவ  கௌள ராகத்தை மிகமிக அதிகமாகப் பயன்படுத்தியது இளையராஜா தான்.எனக்குத் தெரிந்தே ஐம்பது பாடல்கள் வரை இந்த ராகத்தில் போட்டிருக்கிறார்.                            
இந்த ராகத்தைப் பெரும்பாலும் உருக்கத்தையும் சோகத்தையும் வெளிப்படுத்தப் பயன்படுத்தி இருந்தாலும் வித்யாசமான களங்களிலும் பயன்படுத்தி இருப்பார்.. ஆரம்பகாலத்தில் தீபம் (1977) படத்தில் வரும் 'அந்தப்புரத்தில் ஒரு மகராணி ' என்று இந்த ராகத்தில் அமைத்திருப்பார்.கவரிமான் (1979) படத்தில் 'பூப்போல உன் புன்னகையில்' என்ற பாடலும்     வட்டத்துக்குள் சதுரம் (1978) படத்தில் வரும் 'இதோ இதோ என்னெஞ்சிலே' என்ற பாடலும் உருக்கமானவை என்றால் முதல் இரவு படத்தில் வரும் 'மஞ்சள் நிலாவுக்கு இங்கு ஒரே சுகம் ' என்ற பாடல் மிக அருமையாக ரயிலின் ஒலி,தாளலயத்துடன் அமைந்துள்ளது



இசை என்பது ஒழுங்கு படுத்தப்பட்ட ஓசை .அவ்வளவே.அதில் கர்நாடக இசை, மேற்கத்திய இசை என்ற பிரிவினையெல்லாம் மேதைகளுக்கில்லை.நாட்டுப்புற இசையில் இந்த ராகத்தைப் பிரமாதமாகப் பயன்படுத்தியிருப்பார் ராஜா. 'எங்க ஊரு பாட்டுக்காரன் ' படத்தின் 'மதுர மரிகொழுந்து வாசம்'; கிளிப்பேச்சுக் கேட்கவா வில் 'சிவகாமி நினைப்பினிலே'  ;கரகாட்டக்காரனில் 'மாரியம்மா மாரியம்மா'; சின்னத்தம்பியில் 'குயிலைப் பிடிச்சி' என்று ஏராளமான பாடல்கள் இருந்தாலும் நாட்டுப்புற இசையில் இந்த ராகத்தைக் குழைத்தெடுத்த பாடல்களில் சிறந்தது 'சின்னத்தாயி' படத்தின் இப்பாடல் தான்.ராஜாவின் மேதமைக்கு இப்பாடல் ஒரு சாட்சி.






பலநாள் பட்டினி கிடந்தவன் ஐந்து நட்சத்திர விடுதியில் நடக்கும் விருந்துக்கு வந்தது போல் எதை எடுப்பது எதை விடுவது என்று குழப்பமாய் இருக்கிறது.எனினும் ஓரிரு பாடல்களைக் குறிப்பிடாமல் இருக்க முடியாது.
இரண்டு 'பூ' பாடல்கள். ஒன்று 'அம்மன் கோவில் கிழக்காலே' படத்தில் வரும் 'பூவை எடுத்து ஒரு மாலை' என்ற பாடல்.இடையில் வரும் 'காத்துல சூடன் போலக் கரையுதே' என்று ஜானகி பாடுவதைக் கேட்டால் நாமும் கரைவோம்.


இரண்டாவது பூ பாடல் இளையராஜா இசையமைத்த சிறந்த பத்துப் பாடல்கள் என்ற பட்டியலை யார் போட்டாலும் இடம் பெறும்.இந்தப் பாடலின் ஆரம்பம் மிகச் சிறந்த இசைக் கோர்வையாக(ஆர்கெஸ்ட்ரா) அமைந்திருக்கும்.வயலினும் குழலும் இணைந்து இசை மழை பொழிந்திருக்கும்.படம் 'நிழல்கள்' பாடல் ' பூங்கதவே தாழ்திறவாய்'


'ஆறடிச் சுவருதான் ஆசையைப் பிரிக்குமா' (இது நம்ம பூமி) ,உயிரே உயிரே உருகாதே (ஒருவர் வாழும் ஆலயம்),என்று சோகத்தை வெளிப்படுத்தவும் பயன்படுத்தியுள்ளார்.
சுத்தமான மேற்கத்திய பாணியிலும் இந்த ராகத்தைப் பயன் படுத்தியிருக்கிறார்.இளையராஜா என்றால் வயலின் தான்.இந்தப் பாடலில் வரும் வயலின் இசை மிக அற்புதமான ஒன்று. 'காதல் கவிதைகள் படித்திடும் நேரம்' படம் -கோபுர வாசலிலே



ஒன்றரை அடி நீளமேயுள்ள ஒரு ஆர்மோனியப் பெட்டியையும் ஏழு ஸ்வரங்களையும் வைத்துக் கொண்டு நூற்றுக் கணக்கான மெட்டுக்கள் அமைப்பது மனித மூளையின் கட்டற்ற ஆற்றலின் வெளிப்பாடே.மாயா மாளவ கௌளையில்,சுத்தமான கர்னாடக சங்கீதத்தில் அமைந்த இளையராஜாவின் பாடலோடு முடிப்போம்.இங்கே இடம்பெற்றவை கொஞ்சமே.

      படம் ஸ்ரீ ராகவேந்திரர். யேசுதாஸின் கந்தர்வக் குரலில் 'ராம நாமம் ஒரு'



Saturday, May 7, 2011

ஆபேரி -- கொஞ்சும் சலங்கை ஒலி



நாதஸ்வரத்தில் வாசிக்கப் பட்டிருந்த அந்தப் பாடலைப் பாடப் பலரையும் அணுகினார் இசையமைப்பாளர் எஸ் எம் சுப்பையா நாயுடு.வருடம் 1962.ஒருவரும் சரிப்படவில்லை.அந்தப் பாடலை நாகஸ்வரத்தில் வாசித்திருந்தவர் திருநெல்வேலியிலிருந்து இருபது கிலோ மீட்டர் தொலைவில் உள்ள காருகுறிச்சி என்ற கிராமம் உலகப் புகழ் பெறுவதற்குக் காரணமாயிருந்த நாகஸ்வர மேதை அருணாசலம்.கடைசியில் அப்போது அவ்வளவு பிரபலமாயிராத எஸ்.ஜானகியைப் பாட வைத்தார்.கொஞ்சும் சலங்கை படத்தில் வந்த இன்றும் அழியாப் புகழுடன் விளங்கும் 'சிங்கார வேலனே தேவா ' என்ற பாடல் அது. இத்தனைக்கும் அந்தப் பாடலுக்கு முன் வரும் 'ஏன் சாந்தா பாட்டை நிறுத்திவிட்டாய் ?' என்ற வசனத்தைக் கேலி செய்யாதவர்களே இருந்திருக்க மாட்டார்கள்.'ஆபேரி' ராகத்தில் அமைந்திருந்த அந்தப் பாடல் அந்த ராகத்தில் அமைந்துள்ள எல்லாப் பாடல்களுக்கும் சிகரம் வைத்தாற்போல் அமைந்துள்ளது.இப்பாடலை எழுதியவர் கு.மா.பாலசுப்பிரமணியம்





ஆபேரி ராகம் நிறுத்தி நிதானமாகவும் வாசிக்கப் படும்.விறுவிறுப்பாகவும் வாசிக்கப்படும்..கர்னாடக சங்கீதத்தில் தியாக ராஜரின் 'நகுமோமு' என்ற கீர்த்தனை புகழ் பெற்றது.ஹிந்துஸ்தானி சங்கீதத்தில் இதற்குப் பைஜாமா அணிவித்துப் பீம்ப்ளாஸ் என்று அழைப்பர்.துதிப்போர்க்கு வல்வினை போம் என்று ஆரம்பிக்கும் கந்தர் சஷ்டி கவசத்தின் (சூலமங்கலம் சகோதரிகள்கள் பாடியது) முதல் சில நிமிடங்கள் ஆபேரி ராகத்தில் தான் இருக்கும்.சஷ்டியை நோக்கச் சரவண பவனார் என்றஅந்த மெட்டு பலரது உள்ளத்தில் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.பக்திக்காக இல்லாவிட்டாலும் இசைக்காக.

இருபத்தியோரு தந்திகளைக் கொண்டக் கொண்ட பேரியாழ் (ஆயிரம் தந்தி உடைய பேரியாழும் இருந்தது என்கிறார் ஆபிரகாம் பண்டிதர்)  என்னும் யாழில் பண்டைய பாணர்கள் இசைத்த பண்ணே ஆபேரி .தமிழர்தம் இசைக் கருவியான நாகஸ்வரத்தில் வாசிக்க ஏற்ற ராகம்.தில்லானா மோகனாம்பாள் படத்தில் வாசிக்கப் படும் ஆபேரியைக் கேளுங்கள்.ராஜ கம்பீரம் என்றால் இது தான்.






திரை இசைத் திலகம் கே.வி மஹாதேவன் தில்லானா மோகனாம்பாள் மட்டுமின்றிப் பல பக்திப் படங்களிலும் ஆபேரியைக் கையாண்டிருப்பார் .திருவிளையாடலில் இசைத்தமிழ் நீ செய்த அருஞ்சாதனை என்று டி.ஆர்.மகாலிங்கம் பாடியிருப்பது ஆபேரியில் .பாண பத்திரரின் பாட்டாக வரும் அப்பாடலில் வரும் உச்சஸ்தாயி நம்மைத் திகைக்க வைக்கும்




சரஸ்வதி சபதத்தில் வரும் கோமாதா எங்கள் குல மாதா பாடல் கூட ஆபேரி தான். இசை ஞானி இது போன்ற ராகத்தைப் பெரும்பாலும் மென்மையான காதல் பாடலுக்குப் பயன்படுத்தியுள்ளார்.நல்லதொரு குடும்பம் படத்தில் வந்த இப்பாடல் ஆபேரியின் மென்மையைக் காட்டுகிறது.வாணிஸ்ரீயைப் போன்றே இசையும் அழகாய் இருக்கிறது.



கமல் ஸ்ரீதேவியைப் பெண்பார்க்க வருகிறார்.வீணையை வைத்துக் கொண்டு அவர் பாடுகிறார்.பாதியில் பாடல் மறந்து விடுவது,சொந்தக்காரக் குழந்தை மடியில் உச்சா போவது என்று கலக்கலான பாடல் ஆபேரி ராகத்தில்.படம் மீண்டும் கோகிலா.(1981) வெள்ளிப் பனி உருகி மடியில் வீழ்வது போன்ற      பாடல்.எஸ்.பி ஷைலஜா, கே ஜெ யேசுதாஸ் பாடியது





சுத்தமான கர்நாடக ராகத்தை நாட்டுப்புற இசையோடு கலப்பதில் ராஜா ராஜாதான். ஆனந்த ராகம் படத்தில் வரும் பாட்டைக் கவனியுங்கள்.மீனவர்களுக்கான இசையும் ஆபேரி ராகத்தையும் இணைத்திருப்பது ஆனந்தம் தருவது.ஏதோ நெஞ்சில் ஆசை வந்து என்னென்னவோ ஆகிப் போச்சு என்ற இடத்தில் ஜானகி ஏசுதாசும் பாடும் போது நமக்கு ஏதோ ஆகிப்போகிறது.

                                     

பல பாடல்களை ஆபேரியில்  அமைத்திருக்கிறார் ராஜா.என் பாட்டு என் பாட்டு(பூ மணி) ,உம் மனசுல பாட்டுதான் படிக்குது (பாண்டி நாட்டுத் தங்கம்) வெள்ளிக் கொலுசு மணி (பொங்கி வரும் காவேரி) என்று ஏராளமான ஆபேரியை ராஜா போட்டிருந்தாலும் இரண்டு சோகம் கலந்த பாடல்கள் மிகுந்த இனிமையானவை.இரண்டுமே ஃபாஸிலின் படங்கள் தாம்.ஒன்று தமிழ் சினிமாவில் மிக அபூர்வமாகப் பாட்டி- பேத்தி உறவைப் பற்றிய படம், பாட்டும் பூவே பூச்சூடவா தான். இரண்டாவது கற்பூர முல்லை படத்தில் வரும் பூங்காவியம் என்ற பாடல். இடையில் வரும் வயலின் இசை  மனதை உருக்கும்.தாய் மகள் உறவை அற்புதமாகச் சித்தரித்த படம்.இன்று நெல்லையில் அந்தப் படங்கள் ஓடிய செல்வம் தியேட்டர் கார் ஷோ ரூமாக இருக்கிறது


ஏ ஆர் ரகுமானும் ஆபேரியில் ஒரு நல்ல துள்ளல் பாடலைப் போட்டிருப்பார்.இடையில் திசை மாறிப் போனாலும் ஜீன்ஸ் படத்துப் பாடல் நித்யஸ்ரீ யின் குரலில் அற்புதமாக ஒலிக்கிறது.





ஆபேரி ராகம்  கம்பீரமாகச் சில சமயம் மென்மையாக ,இனிமையாகச் சில சமயம் சோகமாகவும் இசைக்கப்படும் ராகம்.சிங்கார வேலனுக்கு ஈடும் உள்ளதோ?

பின் குறிப்பு : சம்சாரம் அது மின்சாரம் படத்தில் வரும் ஜானகி தேவி என்ற பாடலை மறந்து விட்டேன்.நண்பர் இசை அறிஞர் சுப்பாராவ் நினைவூட்டினார்-நன்றி .பாடலுக்கு இசை சங்கர்-கணேஷ்.


                       
                   

Friday, May 6, 2011

எண்ணும் எழுத்தும்


              
(குறிப்பு: மார்ச் 27 ஹிந்துவில் வெளிவந்த எனது கட்டுரையைச் சற்றுத் தமிழ்ப்படுத்தித் தந்திருக்கிறேன்.புதிய ஆசிரியன் மே இதழில் வந்துள்ளது) 
   டான் பிரவுன் என்ற புகழ்பெற்ற நாவலாசிரியரின்( டாவின்சி கோட் என்ற நாவலை எழுதியவர்)  கதைகளில் ராபர்ட் லாங்க்டன் என்ற ஹார்வர்ட் பல்கலைக்கழகப் பேராசிரியர் வருவார்.அவர் தலைசிறந்த சங்கேத,குறியீட்டு மொழியில் நிபுணர்.(SYMBOLOGIST).அக்கதைகளில் மையமாக ஒரு குறியீடு சங்கேத மொழியில் இருக்கும்.அதனை எப்படிக் கண்டுபிடிக்கிறார் என்பதே கதை.ஆனால் ராபர்ட் லாங்க்டனே வந்தாலும் சில மருத்துவர்களின் கையெழுத்தை விளக்க முடியாமல் வெட்கித் தலை குனிவார்.
   ஏன் சில மருத்துவர்கள் கையெழுத்து பிராமி எழுத்துக்களை விடக் குழப்பமாக உள்ளது?கையால் எழுதுவதே அழிந்துவரும் ஒரு கலையாகி வருகிறது.எனினும் பெரும்பாலான மருந்துச் சீட்டுகள் கையால் கிறுக்க …மன்னிக்கவும் எழுதப் படுகின்றன.
    ஒரு மருந்துச் சீட்டில் இரு அம்சங்கள் உள்ளன,முதலாவது அந்த நோயாளியைப் பற்றியும் நோயைப் பற்றியும் குறிப்புகள்.இரண்டாவது மருந்தின் பெயர்கள்.மருத்துவர்கள் நோயாளியைப் பற்றியச் சில விவரங்களை ரகசியமாக வைத்துக் கொள்ள விரும்புவர்.ஆனால் நோயாளியோ அதைத் தெரிந்து கொள்ள ஆசைப் படுவார்.மருத்துவர்,நோயாளி இருவருமே ஒருவருக்கொருவர் முழு உண்மையையும் சொல்வதில்லை.
   நான் ஒரு சீனியர் மருத்துவரிடம் பணியாற்றிய போது மருந்துச் சீட்டில் AOO,EO என்று எழுதி விடுவார்.நானும் மருத்துவத் தலையணைகளை(புத்தகங்கள் தான்)யெல்லாம் புரட்டியும் என்னால் அது என்ன என்று கண்டுபிடிக்க முடியவில்லை.கடைசியில் அந்த மருத்துவரிடமே கேட்ட போது சிரித்துக் கொண்டே அது அவருடைய ஃபீஸைக் குறிக்கிறது என்றார். A,B,C முறையே 1,2,3 ஐக் குறிக்கிறது O-பூஜ்யம்.எனவே AOO என்றால் நூறு ரூபாய்,EO என்றால் ஐம்பது ரூபாய்.நல்ல வேளை 140 ரூபாய் ஃபீஸ் வாங்கவில்லை .சீட்டில் NO என்று எழுதி விடுவார்.உதவியாளர் ஃபீஸ் வாங்காமலே அனுப்பி விடுவார்.  
     மருந்துகளைப் பொறுத்த மட்டில் அவை பெரிய எழுத்துக்களில் (விக்கிரமாதித்தன் கதைபோல் அல்ல –CAPITAL LETTERS) தெளிவாக எழுதப்பட வேண்டும்.ஒரு முறை மருந்துச்சீட்டில் முதலில் எழுதிய மருந்து மருந்துக் கடைகளில் கிடைக்கவில்லை என்று ஒருவர் மருத்துவரிடம் போய்க் கேட்டார்.அதற்கு மருத்துவர் சொன்ன பதில்”சார்!அது மருந்துடைய பெயர் இல்லை.உங்களுடைய பெயர்!”
    மருத்துவர்களுக்கு நேரமில்லாமல் இருப்பதும் ஒரு காரணம்.நான் தெளிவாக எழுதிக் கொடுப்பதைப் பார்த்து நான் ஒரு போலி டாக்டரோ என்று கூடச் சிலர் ஐயுறுவர்.சிலரது கையெழுத்தே மோசமானதாக இருக்கும்.ஆனால் இவற்றை எல்லாம் காரணமாக ஏற்றுக்கொள்ள முடியாது.இது போன்ரவர்கள் வேறு நபர்களை விட்டு எழுதுவதோ அல்லது டைப் அடிப்பதோதான் சிறந்த வழி.
    சில சமயம் நள்ளிரவில் எழுப்பப்பட்டு தூக்கக் கலக்கத்தில் எதையோ கிறுக்கிய அனுபவம் எல்லா மருத்துவர்களுக்கும் ஏற்பட்டிருக்கும்.மருத்துவரின் தூக்கக்கலக்கம் நோயாளியை மீளாத் துயிலில் ஆழ்த்திவிடக் கூடாது.
      இங்கிலாந்தில் உள்ள ராயல் காலேஜின் ஆய்வு மருத்துவர்களின் சீட்டுக்களில் மூன்று சதவிகம் தவறுகள் இருப்பதாகக் கூறுகிறது.பெரும்பாலும் சிறுதவறுகள் எனினும் சில பெரும் பிழைகளும் இருக்கின்றன.
      ஒரு மருத்துவர் தனது காதலிக்கு ஒரு கடிதம் எழுதி அனுப்பினார்.ஆனால் அந்தப் பெண்ணுக்கு ஒரு வார்த்தை கூடப் புரியவில்லை.எனினும் அவள் புத்திசாலி.அருகிலிருந்த மருந்துக் கடைக்குச் சென்று கடைகாரர் மூலம் படித்துவிட்டாள்,
     நல்லவேளை இந்தக் கட்டுரையைக் கையால் எழுதவில்லை.புதிய ஆசிரியன் ஆசிரியர் பிழைத்தார்!!!