Friday, September 9, 2011

பெயரியல் கலை-பெயரைக் கலை!


  

ஒருவருடன் கடைசிவரை வருவது யாரோ ? என்று கண்ணதாசன் பாடியுள்ளார். சில சமயம் கடைசி வரை பேரோ? என்று கூடக் கேட்கலாம் என்று தோன்றுகிறது. இட்ட தினத்திருந்து இடுகாடு வரை நம்மைத் தொடர்ந்து வருவது நம்முடைய பெயரே ஆகும்..

ஆனால் அதுவே சிலருக்குத் துரதிர்ஷ்டமாகிறது.அவர்களது விருப்பமின்றி ஒரு பெரிய மரு போல் உறுத்திக்கொண்டு இருக்கிறது.எல்லோருக்குமே ஒருமுறையாவது தன் பெயர் சரியில்லை என்ற எண்ணம் வந்திருக்கும்.

பெயரிடும் போது குழந்தையின் எதிர்காலத்தை நினைத்து வைப்பவர் சிலரே. ஒருவரைக் கூப்பிட்டால் அவர் மட்டும் திரும்பிப் பார்க்கும் வண்ணம் பெயர் இருப்பது நலம். ஹைகோர்ட், நடுக்கடல், என்றெல்லாம் கூடப் பெயருள்ள மனிதர்கள் இருக்கிறார்கள். சீன முறையில் ஒரு பெரிய பாத்திரத்தைக் குழந்தையை உதைக்கச் செய்து அது எழுப்பும் ‘டிங்க் டங்க் ‘ என்ற ஓசையைப் பெயராக வைப்பதாக ஒரு ஐதீகம்.

அதனினும் அரிது இட்ட பெயர் பொருத்தமாக அமைவது. ஊரெல்லாம் கடன்வாங்கும் ‘கோடீஸ்வரன்’கள் , மூன்றாவது வகுப்பில் தோல்வியடையும் ‘மதிவாணன்’கள் என்று ஏராளமானோர் உண்டு. ஆங்கிலத்தில் மிஸ்னோமெர் (MISNOMER- MISS NO MORE அல்ல) என்று இப்பிழைப் பெயர்களைக் கூறுவார்கள்.விதிவிலக்காகப் பொருத்தமான பெயருடையவரும் உண்டு. சமீபத்தில் ஒரு மொடாக்குடியர் சிகிச்சைக்கு வந்தார். கங்குலும் பகலும் தண்ணீரிலேயே மிதக்கும் கயல்களை ஒத்த அவரது பெயரைக் கேட்டேன். ‘ஜல’கண்டேஸ்வரன் என்றார். அவரது தந்தையின் தீர்க்க தரிசனத்தை வியந்தேன்.

மனிதர்களுக்கு வைப்பது போல் வியாதிகளுக்கும் பெயர் வைப்பதும் ஒரு கலை.. மலையாளக் கவிதைகளைப் புரிந்து கொள்ள மலையாளம் தெரிந்திருக்க வேண்டியதில்லை. ஆனால் சம்ஸ்கிருதம் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும் என்று சுந்தர ராமசாமி ஒருமுறை கூறியிருந்தார். அதே மாதிரி மருத்துவத் துறையில் பெயர்களை அறிய ஆங்கிலத்தை விட கிரேக்கம்,லத்தீன் தெரிந்திருப்பது அவசியம். கேன்சர் என்றால் நண்டு, கேட்டராக்ட் என்றால் அருவி. தூக்கமின்மையைக் குறிக்கும் இன்சோம்னியா என்ற வார்த்தை கூட சோம்னாஸ் என்ற தூக்கத்துக்கான இத்தாலியக் கடவுளின் பெயரிலிருந்து வந்தது. நம் ஊர் கும்பகர்ணனுக்கு இதிலும் யோகமில்லை.


சில வியாதிகளுக்குத் தான் நல்ல கம்பீரமான பெயர் அமையும்.
எனக்கு என்ன வியாதி டாக்டர்? என்று கேட்கும் போது நோயாளியின் கண்களில் மருத்துவர் ஒரு நல்ல பெயருடைய வியாதியைக் குறிப்பிட வேண்டுமே என்ற ஆவல் தெரியும். கண்ணில் புரை என்றால் அவரது கண்களில் ஏமாற்றம் பளிச்சிடும்.அதுவே ‘அக்யூட் கஞ்சங்க்ட்டிவைட்டிஸ் (சென்னை ஐ தான்) என்றால் முகம் பிரகாசிக்கும். அழகான பெயருள்ள வியாதி வரவும் கொடுத்து வைத்திருக்க வேண்டும். கடுமையான உச்சரிப்புக் கொண்ட பெயர்கள் நோயாளிகளைப் பயமுறுத்தவும் செய்கின்றன. ‘லுக்கீமியா’ என்று சொன்னால் ஏற்படும் பயம் ‘வெண்குருதி’ என்றால் ஏற்படுவதில்லை.

இப்பொழுதெல்லாம் பெயரியல் நிபுணர்களின் ஆலோசனைப் படிக் குழந்தைகளுக்குப் பெயரிடுகின்றனர். ‘ஞௌ’ ‘ஙீ’ போன்ற எழுத்துகளில் ஆரம்பிக்கும் பெயர் தெரிந்தால் சொல்லுங்கள் என்று சிலர் மிரட்டுவதும் உண்டு. பெயர்களில் உள்ள எழுத்துக்களை மாற்றி பெயரில் X ‘Z போன்ற எழுத்துக்களையும் சேர்த்துக் கொள்ளும் மருத்துவ முறையும் இருக்கிறது. ஒருமுறை ஒரு பெயரியல் நிபுணர் சர்க்கரை நோயாளிக்கு ஆலோசனை வழங்கினார் “ உங்க பெயரில் ஒரு ‘R’ சேர்த்துக் கொள்ளுங்கள் –RAJARRAM என்று.உங்கள் ரத்தத்தில் சர்க்கரை அளவு குறையும் “ என்று. பாவம் அந்த நோயாளி தெரியாமல் இரண்டு R ஐச் சேர்த்துவிட்டார். சர்க்கரை அளவு மிகவும் குறைந்து ஐ சி யு வில் சேர்க்கும்படி ஆகி விட்டது.

நண்பர் எஸ்.வி.வி சொன்ன பயனுள்ள யோசனை ஒன்று எதிர்கால ஆய்வுக்காகப் பயன்படும். அதாவது ஒவ்வொரு மனிதனின் பெயரையும் பெயரியல் படி மாற்றுவதை விட அந்த வியாதிகளின் பெயரையே மாற்றி மனிதர்களுக்கு வரவிடாமல் செய்துவிடலாமே என்பதுதான் அந்த யோசனை. டயப்பட்டீஸ் என்பதைக் கூட ஒரு ‘T’ சேர்த்து அழைத்தால் என்ன குறைந்து விடப் போகிறது?