Bank workers Unity நவம்பர் இதழில் வந்த என் கட்டுரை. சோம்பல் காரணமாகக் காலதாமதம் (நாமெல்லாம் எங்க அம்பானி ஆவது?)
அம்பானி போல் பாயும் அம்பா நீ?
ஒவ்வொரு புத்தகக் கண்காட்சியிலும் சிற்றுண்டி வகையறாக்களுக்கு அடுத்தபடியாக விற்றுத் தீர்வது ஜோதிடப் புத்தகங்களும் சுய முன்னேற்றப் புத்தகங்களும்தான். ‘வீட்டிலிருந்தபடியே இருதய அறுவை சிகிச்சை செய்வது எப்படி?’ என்பது போல் ‘அறுபது நாட்களில் அம்பானி ஆவது எப்படி?’ என்ற ரீதியில் பல புத்தகங்கள் தினமும் பிரசவமாகின்றன.
சமீபத்தில் நானும் அப்படி ஒரு நூலை வாசிக்க நேர்ந்தது. நூலின் பெயர் ‘ஐஸ்க்ரீமிற்காகச் சுறாக்கள் மத்தியில் நீந்தியவர்’ (He Swam with sharks for ice cream). எழுதியவர் தவால் பாட்டியா. பொதுவான சுயமுன்னேற்றப் புத்தகம் என்றாலும் தொழிலதிபர் தீருபாய் அம்பானியைப் பெருமளவில் மேற்கோள் காட்டுகிறது. தலைப்பே அம்பானி ஒரு சாகசத்திற்காகச் சுறாக்கள் உள்ள கடலில் நீந்திய சம்பவத்தின் அடிப்படையில் இருக்கிறது.
வியாபார நுணுக்கங்களைப் ‘பனியா புத்தி’ என்ற சொல்லாடல் மூலம் மிகவும் சுவாரஸ்யமாக விவரிக்கிறார் ஆசிரியர்.ஒருகாலத்தில் பணம் சம்பாதிப்பது பாவமாகக் கருதப்பட்டது.பணக்காரன் என்பவன் பாவி. நிம்மதியாகத் தூங்கமாட்டான் என்றெல்லாம் பொதுப்புத்தியில் ஏற்றப்பட்டிருந்தது
மாறிவரும் பொருளாதாரச் சூழலில் பணம் சம்பாதிப்பது அதுவும் பெரும் பணம் பண்ணுவதே வாழ்க்கையின் ஓரே லட்சியமாகக் கொண்டுள்ள ஒரு தலைமுறை உருவாகிக் கொண்டிருக்கிறது.பன்னாட்டு,உள் நாடு நிறுவனங்களில் பணிபுரியவும் அவர்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை வாங்கும் சந்தையை உருவாக்குவதற்கும் தேவையான சூழலை உருவாக்குவதில் சுயமுன்னேற்றப் புத்தகங்கள் முதலிடம் வகிக்கின்றன.
உலகின் வளங்கள் குறைந்து கொண்டே வருகின்றன என்பது கண்கூடு.ஆனால் இந்தப் புத்தகம் நுகர்வுக் கலாச்சாரத்தைப் போற்றுகிறது. உலகிலுள்ள எல்லாருக்கும் தேவையான வளங்கள் இருக்கின்றன. ஆகையால் செலவளிப்பது ஒன்றும் குற்றமல்ல என்கிறது இந்நூல்.இந்தப் புத்தகத்தைப் படிக்கும் ஒருவருக்கு உடனே களத்தில் இறங்கிச் சம்பாதிக்க வேண்டும் என்ற உந்துதல் ஏற்படுவது இயற்கை. ஆனால் இயற்கைவளம், உயிரியல் சமன்பாடு (ecological balance), விழுமியங்கள் (values) போன்றவற்றைப் பற்றிய அடிப்படைப் புரிதல்களையாவது உருவாக்குமா என்பது சந்தேகமே.
சமீபத்தில் மரணமடைந்த ஆப்பிள் நிறுவனத் தலைவர் ஸ்டீவ் ஜாப்ஸ் பற்றிக் கூறப்பட்ட ஒரு விஷயம் என்னவென்றால் ‘அவர் முதலில் பொருட்களை உருவாக்குவார். பின்பு அதற்கான தேவையை உருவாக்குவார்’ என்று. அதாவது தேவையற்றவற்றைக் கூட இன்றியமையாதது என்று நினைக்கச் செய்யும் வியாபார தந்திரம்.இதுவே நுகர்வுக்கலாச்சாரத்தின் சாரம்.
இதற்கு நேர்மாறான ஒரு புத்தகத்தையும் படித்திருக்கிறேன்.அ தை எழுதியதும் ஒரு பனியாதான்.நவீனமயமாக்கலின் எல்லா முகங்களையும் கடுமையாக எதிர்த்தார் .இயந்திரமயமாக்கல், நவீனமருத்துவம் ,ஏன் அவர் அதிகம் பயன்படுத்திய புகைவண்டியைக் கூட எதிர்த்தார். ‘தேவைக்கு அதிகமாய் வைத்திருப்பவன் திருடன்’ என்றார். புத்தகத்தின் பெயர் ஹிந்த் ஸ்வராஜ்.எழுதியவர் பெயர் மகாத்மா காந்தி.அந்த அளவுக்குப் போகாவிட்டாலும் கூட ஓரளவுக்கு நம்முடைய நுகர்வுக்கலாச்சாரத்தைக் குறைத்துக்கொள்ளலாம்
உளவியல்ரீதியாக இன்றைய வாழ்க்கைச்சூழல் மிகவும் பதற்றமுடையதாகவும், போட்டி நிரம்பியதாகவும் இருப்பதற்கு ஒரு முக்கிய காரணம் நாம் அசாத்தியமான குறிக்கோள்களை வைத்திருப்பது.அந்தக் கருத்தாக்கத்தை உருவாக்குவதற்கு இது போன்ற சுயமுன்னேற்ற நூல்கள் முக்கிய காரணமாக உள்ளன.ஆகவே அடுத்த முறை பில்கேட்ஸ் ஆவதற்கு முன் சற்று யோசியுங்கள்.