(புதிய ஆசிரியன் ஏப்ரல் மாத இதழில் வந்த கட்டுரை)
தீப்பிடித்து எரியும் வீட்டில் கூட கொஞ்சம் பரபரப்பு கம்மியாக இருக்கும். அன்று என் வீட்டில் ஒரே பரபரப்பு. வழக்கமாகக் கூட்டங்களுக்கு அணியும் சட்டையில் காஃபி கொட்டிவிட்டது.கழுத்து டையின் சுருக்கு மனமொவ்வாத மூன்று முடிச்சு மாதிரி எசகுபிசகாக விழுந்து விட்டது.
விஷயம் வேறொன்றுமில்லை. ஒரு சுழல் கழகத்தின் கூட்டத்திற்குத் தலைமையேற்க என்னை அழைத்திருந்தனர். ‘நானும் ரௌடிதான்’ என்று வடிவேலு முழங்குவது போல் அக்கம் பக்கம் இருப்பவர்களிடம் நானும் தலைமை தாங்கப்போகிறேன் என்று முரசுகொட்டிக் கொண்டிருந்தேன்.
என்னுடைய நண்பர் ஒருவர் இருக்கிறார். எந்த வேலையையும் கடைசி நொடிவரை தாமதித்து எல்லோரையும் பதற்றத்திற்குள்ளாக்கிவிட்டுத்தான் செய்வார். விமானத்தைப் பிடிப்பெதென்றால் கூட விமானம் கிளம்பியபின் ஓடிச்சென்று பிடிப்பது அவர் வழக்கம். தாலி கட்டும் போது கூட நல்ல நேரத்திற்குள் ஒன்றரை முடிச்சுதான் போட முடிந்தது. மீதி ஒன்றரையை எமகண்டத்தில்தான் போட்டார்.
அவரைப் போல் தாமதிக்கக் கூடாது என்று ஒன்பது மணி கூட்டத்திற்குக் ஒன்பதிலிருக்கும் சின்னமுள்ளிற்கு மிகச்சரியாக தொன்னூறு டிகிரி கோணத்தில் பெரியமுள் பன்னிரண்டில் இருக்கும் போது கூட்டத்திற்குச் சென்றேன்.
பந்த அறிவிக்கப் பட்ட செவ்வாய்க்கிரக வீதி போல் கூட்டம் நடக்கும் இடம் வெறிச்சோடியிருந்தது. வெகுநேரம் காத்திருந்த காதலனைப் பார்க்கவரும் காதலியைப் போல் நிதானமாக ஒருவர் வந்தார். கூட்டத்தைப் பற்றி விசாரித்தேன். “இந்த சீப் கெஸ்டுங்க இருக்காங்களே, அவனுக ஆடி அசைஞ்சு மெதுவா வந்தப்பறம் தான் கூட்டம் தொடங்கும்.நீங்க போய் எதாச்சும் உருப்படியான வேலை இருந்தா பாத்திட்டு வாங்க சார்” என்று கூறிவிட்டு கூட்டம் நடக்கவிருக்கும் அறையைப் பெருக்கத் துவங்கினார்.
நேர்மையாக இருப்பவனிடம் சேரும் செல்வத்தைப் போல் மெதுவாக ஒவ்வொருவராகச் சேரத்துவங்கினர்.நேரத்தையும் பணத்தையும் வைத்துக் கொண்டு என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்துக் கொண்டிருக்கும் கும்பல் அது என்று கொஞ்சம் கொஞ்சமாகத் தெரியத் துவங்கியது.
ஒருவழியாக கூட்டம் துவங்கியது. கீழே இருந்தவர்களை விட மேடையில் மூன்று பேர் அதிகமாக அமர்ந்திருந்தனர். மேடையில் இணைத் தலைவர், துணைத்தலைவர், உடனடி முன்னாள் தலைவர் (immediate past president) என்று பலரிருந்தனர். செயலாளர் வர்க்கத்திலும் இத்துணை வர்க்கபேதங்கள். பேசிய அனைவருமே (அனைவரும் பேசினார்கள்) இவர்கள் அனைவரையும் விளித்து விட்டுத் தான் உரையைத் தொடங்கினார்கள்.
இந்தக் கூட்டத்திற்கு அழைக்கும் போது ‘POWER POINT’ வசதி இருக்கிறதா என்று கேட்ட போது இருக்கிறது என்று பலமாகச் சொன்னார்கள். அதை நம்பி மடிக்கணினியை வேறு எடுத்துச் சென்றேன். கூட்டம் நடந்த அந்த அறையில் இருந்த ஒரு பிளக் பாயின்டைத் தான் அவர்கள் சொன்னார்கள் என்பது என் ஞானதிருஷ்டிக்கு எட்டாமல் போய்விட்டது.
எதோ என் நினைவில் இருந்தவற்றைப் பேச ஆரம்பித்தேன்.திடீரென்று உணவின் மணம் வரத்துவங்கியதும் அனைவரது (என்னுடையது உட்பட) காதுகளும் செயலிழந்து விட்டன. பசி வந்ததால் பறக்கும் விஷயங்களில் பதினொன்றாவதாக என்னுடைய வரலாற்றுச் சிறப்பு மிக்க உரையும் சேர்ந்து கொண்டது.
கூட்டம் முடிந்ததும், இறந்தபின் கிடைக்கும் ‘பாரத் ரத்னா’ மாதிரித் தாமதமாகத் தலைவர் வந்தார். திரையரங்கில் தெரியாமல் நமது காலை மிதித்தவர்களுக்கு இருக்கும் அளவு குற்ற உணர்வு கூட இல்லாமல் “அருமையாகப் பேசினீர்கள்” என்றார். ‘ஜய ஜய ஜய ஜயஹே’ என்ற வரியை மட்டும்தான் அன்றைய கூட்டத்தில் அவர் கேட்டிருந்தார்.
ராமாயண உரைக்குப் பின் சீதை ராமர் உறவு குறித்த ஐயங்களைப் போல் சில கேள்விகளுக்குப் பதிலளித்து விட்டு ‘மீண்டும் உங்களை அழைப்போம்’ என்ற அவர்களின் மிரட்டலை எண்ணிக் கலங்கியவாறு இலங்கை வேந்தனாய் இல்லம் திரும்பினேன்.
(பி.கு: அன்று நான் பேசிய தலைப்பு ‘நேர மேலாண்மை’ .)