புலிநகக் கொன்றை –இன்னுமொரு நூற்றாண்டிருக்கும்
தமிழ் உரைநடைக்குப் புதுப்பாணி அளித்தவர் சுஜாதா. அவர் தனது மசாலாத்தனங்களை மூட்டை கட்டி வைத்துவிட்டு ஆத்துப் புளியோதரை போல் இதமாகத் தன்னை வெளிப்படுத்தியது அவரது பிறந்த மண்ணைச் சுற்றிய ஸ்ரீரங்கத்துத் தேவதைகளில் தான். அதே போல் வைணவர்களின் மொழியை, சடங்குகளை, பக்தியை, சம்பிரதாயங்கள் முரண்பாடுகளை, சச்சரவுகளை ஊடாக வைத்து எள்ளல் நடையில் மிகச்சுவாரஸ்யமான நடையில் விவரித்துள்ளது பி,ஏ.கிருஷ்ணனின் ‘புலிநகக்கொன்றை’. ஆச்சரியம் என்னவென்றால் இந்நாவல் ஆசிரியரால் ஆங்கிலத்தில் எழுதப்பட்டு வெளிவந்து பின்னர் தமிழில் அவரே மொழி பெயர்த்துள்ளார். பிற்சேர்க்கையாகக் கொடுக்கப் பட்டுள்ள ஆங்கில மூலத்தின் சில வரிகளைப் படிக்கும் போது கவித்துவமான ஆங்கிலம் வெளிப்படுகிறது.
நாவல் பொன்னா எனப்படும் நான்குநேரியைச் சேர்ந்த வைஷ்ணவப் பெண்ணின் நினைவின் வழியே முன்னும் பின்னுமாக கிட்டத்தட்ட இரண்டு நூற்றாண்டுகள் பயணிக்கிறது. கதை என்று இல்லாமல் ஒரு மாபெரும் காலகட்டத்தின் பழக்கவழக்கங்கள், சந்தோஷங்கள், வீழ்ச்சிகள், இழப்புக்கள் என்று பதிவு செய்கிறது இந்நாவல்கள். துரதிர்ஷ்டம் பீடிக்கப் பட்டுள்ளதாக நம்பப்படும் குடும்பத்து மனிதர்கள் சுதந்திரப் போராட்டம்,கம்யூனிசம்,திராவிட இயக்கம் என்று தத்துவச் சிக்கல்களுக்கும் காதல்.ஆசை,கோபம் போன்ற லௌகீகப் போராட்டங்களுக்கும் இடையே நடத்தும் முரணியக்கமே கதையின் அடிநாதம்.
கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு அதே சமயம் அன்றாட வாழ்க்கையை அது பாதிக்குமோ என்றும் பயந்து ஒப்புக்கு ஓரிரு விஷயங்களைச் செய்து விட்டுப் புரட்சியாளன் என்ற போர்வையில் இருப்பவர்களை மிக அருமையாகச் சித்தரிக்கிறார். (வெள்ளைக்கார) அரசாங்கத்தையும் தொந்தரவு செய்யாமல் மக்களிடமும் நல்ல பெயர் எடுக்கலாம் என்று பட்சி ஹோம்ரூல் இயக்கத்தில் இருக்கிறார் கதையில். கண்ணன் கம்யூனிசம், திராவிடம் என்றெல்லாம் திரிவதை ‘எல்லா நதிகளிலும் குளிச்சுப் பாக்கணும்னு ஆசை.ஆழம் அதிகம்னா அவனே ரொம்ப தூரம் போக மாட்டான்’ என்று அழகாகக் குறிப்பிடுகிறார்.
நாவல் நெடுக வழிந்து ஓடுகிறது அங்கத ஆறு. மென்மையான நகைச்சுவை. நூலகர் காதைக் கடித்த வெள்ளை ஆசிரியர், புளியோதரை உருண்டைக்காக சுப்ரீம் கோர்ட் வரை நடந்த வழக்கு, கோட்டை அடகு வைத்து இட்லி சாப்பிடும் புரட்சியாளன் என்று பல்வேறு விசித்திர சம்பவங்கள் ரசிக்கத்தக்கவை.‘ஐயங்காரில் விஷயமுள்ளவாளைப் பாக்கறது நம்ம மடத்துப் புளியோதரையில் முந்திரிப் பருப்பைப் பாக்கற மாதிரி’ போன்ற உரையாடல்களாகட்டும் ‘எம் ஜி யார் கரகரத்த குரலில் பேசும் வில்லன்களுடன் கத்திச் சண்டையிட்டு சதை பிதுங்கி வழியும் காப்பாற்றக் கூடாத கதாநாயகிகளைக் காப்பாற்றினார்’போன்ற வர்ணணைகளாகட்டும் நம்மைக் குலுங்கிச் சிரிக்க வைப்பவை. அதிலும் ராஜாஜி அணு ஆயுதத்திற்கெதிராக எழுதிய கவிதையைக் குறிப்பிட்டு ‘ Personally I prefer the bomb to your poetry’ என்று அவருக்கே கடிதம் எழுதுவது நையாண்டியின் உச்சம்.
நாவலின் ஊடே இரண்டு நூற்றாண்டின் சரித்திரச் சம்பவங்கள் பிஜிஎம் போல் பின்னணியில் பிரிக்க முடியாமல் ஓடிக் கொண்டிருக்கின்றன. கட்டபொம்மு தூக்கிலிடப்பட்டது,ஊமைத்துரை, சுலோசனா முதலியார் மேம்பாலம் கட்டப்பட்டது (நெல்லையில் அல்வாக்கு அடுத்துப் புகழ் பெற்ற பாலம்) , சுதந்திரப் போராட்டம், திராவிட இயக்கம்,எம்ஜியாரைச் சுட்டது என்று பல்வேறு சம்பவங்கள் கதையின் ஓட்டத்தோடுப் பின்னிப் பிணைந்து வருகின்றன.
ஆசிரியர் பரந்த வாசிப்பு நமக்குக் கதை நெடுகப் புலனாகிறது. ஆஸ்கார் ஒயில்ட், செஸ்டர்டன் முதல் லெனின் வரை சேக் ஷ்பியர் ,கம்பன் முதல் வைணவ வேதமான நாலாயிரத் திவ்யப் பிரபந்தம்- குறிப்பாக நம்மாழ்வார் திருவாய்மொழி- வரை ஆங்காங்கே மேற்கோள்கள் காட்டப் படுகின்றன. கதைத் தலைப்பே ஐங்குறுநூற்றுப் பாடலிலிருந்து எடுக்கப் பெற்றிருக்கிறது. அதுமட்டுமின்றி மிகவும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியது மொழி நடை. வைணவர்களின் மணிப்ரவாள பரிபாஷை, சாதாரண பிராமண பாஷை, நெல்லைத் தமிழ் அருமையான ஆங்கிலம் என்று மொழியின் பல்வேறு சாத்தியங்களை வெளிப்படுத்தியுள்ளார்.
பொதுவாக வண்ணதாசன் ,கலாப்ரியா போன்ற நெல்லை இலக்கியவாதிகள் நெல்லையப்பர் கோவிலைச் சுற்றியுள்ள டவுண் என்னும் பகுதியின் தெருக்களையே பதிந்துள்ளனர்.கதாசிரியர் நெல்லையில் வீரராகவபுரம் எனப்படும் ஜங்க்ஷன் பகுதியில் நானிருந்த தெருவுக்கு அடுத்த தெருவில் குடியிருந்திருக்கிறார். அந்தப் பகுதியின் பஞ்சக்கிரஹாரம்,சந்யாசிக்கிரா மம் ,கைலாசபுரம் என்று நான் அலைந்த இடங்களை நாவலில் காண்பது ருசியான புளியோதரையில் அகப்பட்ட முந்திரி போன்றது.
அடியார்கள் வாழ அரங்கநகர் வாழ
சடகோபன் தண்டமிழ்நூல் வாழ்க- கடல்சூழ்ந்த
மன்னுலகம் வாழ மணவாள மாமுனியே
இன்னுமொரு நூற்றாண்டிரும்’ என்பது வைணவர்களுக்கு முக்கியமான துதி. இந்த நாவல் ஒரு நூற்றாண்டுக்கும் மேற்பட்ட காலத்தின் கதை .சிறந்த நாவல்கள் வரிசையில் இந்நாவல் இன்னுமொரு நூற்றாண்டும் இருக்கும்
(புலிநகக் கொன்றை-பி.ஏ.கிருஷ்ணன்-காலச்சு வடு வெளியீடு- 331 பக்கங்கள்-250ரூபாய்)