டி.எம்.எஸ் என்றால் நமக்கு நினைவில் வருபவை உற்சாகமாக வீரமாக எம்.ஜி.ஆருக்குப் பாடிய கொள்கைப் பாடல்கள் , சோகமாக விரக்தியுடன் சிவாஜிக்குப் பாடிய தத்துவப் பாடல்கள், இருவருக்கும் பி.சுசீலாவுடன் பாடிய எண்ணற்ற டூயட் பாடல்கள். இவற்றையெல்லாம் தாண்டி டி.எம்.எஸ் என்ற கலைஞனுக்குள் இருக்கும் கர்னாடக இசைக் கலைஞன் அடிக்கடி வெளிப்படுவதில்லை. ஆனால் ஒவ்வொரு முறை வெளிப்படும் போதும் அழுத்தமாகவும் வீரியமாகவும் வெளிப்படுகிறார். டி.எம்.எஸ்ஸைக் கர்னாடக இசையோடு பலருக்குத் தொடர்பு படுத்த முடியாது. அவரது குரலில் ஒலித்த சில ராகங்களைப் பற்றிய பதிவு இது.
தியாகராஜ பாகவதர் தான் டி.எம்.எஸ்ஸின் முன்மாதிரி. அவரது பாணியிலேயே உச்சஸ்தாயியில் பாடிப் பயின்றதன் விளைவாக கிருஷ்ண விஜயம் (1950) படத்தில் பாகவதர் பாடலை ஒத்த 'ராதே நீ என்னை விட்டுப் போகாதேடி' என்று தனது முதல் திரைப்பாடலைப் பாடினார் டி.எம்.எஸ். 'கற்பகவல்லி நின் ' போன்ற தனிப்பாடல்களில் தனதுகர்னாடக இசைப் புலமையைக் காட்டியிருப்பார். ஆனந்த பைரவி, ரஞ்சனி, பாகேஸ்ரீ, கல்யாணி, என்று கற்பகவல்லி பாடலில் அவர் பாடியிருப்பது அவர் கட்டிய ராகமாளிகை.
கௌரி மனோகரி என்றொரு ராகம். அது கர்னாடக இசையில் அவ்வளவாகப் பிரபலமாகவில்லை. கொஞ்சம் மெதுவாக இழுத்தால் ஹிந்துஸ்தானி ஜாடை வரும். தியாகய்யர் ஏதோ பேருக்கு ஒரு கீர்த்தனை இயற்றியிருக்கிறார். ஆனால் மெல்லிசையாகத் திரையிசையில் பல நல்ல பாடல்கள் இந்த ராகத்தில் வந்திருக்கின்றன. 'கௌரி மனோகரியைக் கண்டேன், மலரே குறிஞ்சி மலரே' போன்ற அருமையான பாடல்களை மெல்லிசை மன்னர் கொடுத்திருக்கிறார்.'பூபாளம் இசைக்கும்' பொன்வானம் பன்னீர் தூவும் இந்நேரம்' என்று தன் பங்கிற்கு இளையராஜா வழங்கியிருக்கிறார்.
ஆனால் இந்த கௌரி மனோகரி ராகத்தை அடிப்படையாக வைத்து ஒரு அக்மார்க் கர்னாடக சங்கீதப் பாடலைத் தந்தவர் திரை இசைத் திலகம் கே.வி.மகாதேவன். ஆலாபனை, ஸ்வரங்கள்,ஜதிகள் என்று ஒரு மினி சங்கீத விருந்தே படைத்திருக்கிறார்.இறைவனே வந்து பாடினால் எப்படி இருக்கும் என்று நம் கண்முன்னே நிறுத்துபவர் டி.எம்.எஸ். இதுவரை யாரும் அவர் பாடியதில் பாதியளவு கூடப் பாடிக் கேட்டதில்லை. இவ்வளவு உச்சஸ்தாயியில் பிசிறில்லாமல் கம்பீரமாகப் பாடுவது அசாத்தியம். இப்படியும் பாட முடியுமா என்று ஒவ்வொரு முறையும் அதிசயிக்க வைக்கும் அப்பாடல்- பாட்டும் நானே ! படம் -திருவிளையாடல். என்னிசை இருந்தால் அசையும் உலகே ஏ ஏ என்று எவரெஸ்ட் உச்சிக்கே சென்றுவிடுவார். சினிமாவில் வந்துள்ள கர்னாடக இசையில் இது உச்சம் என்றால் மிகையில்லை என்றே நினைக்கிறேன். கௌரி மனோகரி என்றால் இந்தப் பாடல் தான் நினைவுக்கு வரும்.SYNONYMOUS WITH GOWRI MANOHARI.
பொதுவாக மெல்லிசை மன்னர் எம் எஸ் வி சுத்தமான கர்னாடக இசையை விட மெல்லிசையையே அதிகம் பயன்படுத்துவார். மாமா என்றழைக்கப்படும் கே.வி.மஹாதேவனோ தில்லானா மோகனாம்பாள்,திருவிளையாடல், திருவருட்செல்வர் போன்ற படங்களில் கல்யாணி(மன்னவன் வந்தானடி), ஷண்முகப்ரியா (மறைந்திருந்தே), என்று வெளுத்துக் கட்டுவார். (கே.வி எம் அவ்வளவாக இந்தத் தலைமுறையினரிடம் பிரபலமாகாதது ஒரு சோகம். சங்கராபரணம் திரைப்படத்துக்கு இவரது இசை தான் என்றால் இவர் திறமை விளங்கும் என நினைக்கிறேன்). ஆனால் எம் எஸ் வியும் சில சமயங்களில் சுத்தமான கர்னாடக இசையைத் தந்து நம்மை மயக்குவார்.
கரஹரப்ரியா என்றொரு ராகம். கௌரி மாதிரி இல்லாமல் மிகவும் பிரபலமான கனமான ராகம். 'சக்கனி ராஜ மார்க்க' என்ற தியாகைய்யர் கீர்த்தனை மிகவும் பிரபலம். இளையராஜாவும் இதை அருமையாக 'ஆனந்தம் பொங்கிட' 'நீ நடமிடும் அதிசய பொன்மயிலே' போன்று திரையில் பயன்படுத்தியிருக்கிறார். எம்.எஸ்.வி தந்திருக்கும் ஒரு கரஹரப்ரியா கௌரிமனோஹரிக்கு ஒரு 'பாட்டும் நானே' போல் இந்த ராகத்தின் அடையாளங்களில் ஒன்றானது. இதை டி.எம்.எஸ் பாடியிருக்கும் விதம் அபாரமானது. பாடலை ஜீவனோடு பாடுவது என்று சொல்வது இது தான். அந்தப் பாடலின் உயிர்த்தன்மை அவரது வெண்கலக் குரல் தான். வேறு யாராவது அப்பாடலைப் பாடுவதைக் கேட்டால் அந்த வித்தியாசம் விளங்கும். அந்தப் பாடல் 'மாதவிப் பொன்மயிலாள். படம் இரு மலர்கள். வானில் வரும் வில் போல் புருவம் கொண்டால் என்ற வாலியின் வரியை அவர் எடுக்கும் விதம் தேர்ந்த கர்னாடக இசைக் கலைஞனுடையது.
லதாங்கி என்பது சூது இல்லாத ஐ.பி.எல் ஆட்டம் போல் வெகு அரிதான ஆனால் கம்பீரமான ராகம். சிம்மானசத்தின் மேல் அமர்ந்து ராஜகம்பீரத்துடன் தர்பார் நடத்துவதைப் போன்று அமைந்துள்ள ராகம். ஒரு முறை நெல்லையப்பர் கோவிலில் யாருமே இல்லாத காந்திமதி அம்மன் சந்நிதியில் மருமகள் தொல்லை தாங்காமல் கோவிலுக்கு வந்துள்ள ஆச்சிகள் இருவரின் முன்னிலையில் ஒரு ஓதுவார் 'தண்டையணி வெண்டையும் கிண்கிணி சதங்கையும்' என்று ஒரு திருப்புகழை லதாங்கியில் பாடியதைக் கேட்டேன் பாருங்கள். அச்சு அசலான லதாங்கி. என்ன பண் என்று தெரியவில்லை. ஆனால் நிச்சயம் தமிழிசை கர்னாடக இசைக்குக் கொடுத்த ஏராளமான கொடைகளுள் ஒன்றாகத் தான் லதாங்கி இருக்க வேண்டும்.
அருணகிரி நாதர் படத்தில் டி.எம்.எஸ் இப்பாடலைப் பாடியிருப்பார். ராகமாலிகையானஅப்பாடலின் ஆரம்பம் லதாங்கியில் அமைந்திருக்கும் . இசை திரை இசை மேதை ஜி.ராமநாதன்.
கண்டுற கடம்புடன், சந்த மகுடங்களும்,
கஞ்ச மலர் செங்கையும், சிந்து வேலும்,கண்களும், முகங்களும், சந்திர நிறங்களும்,கண்குளிர என்றன் முன் சந்தியாவோ?போன்ற வரிகளைத் தமிழைத் தாய்மொழியாகக் கொள்ளாத ஒருவர் அற்புத உச்சரிப்புடன் பாடியிருக்கிறார் என்றால் நம்பமுடிகிறதா? பிராமணர்களை விட அழகாக கச்சிதமான சமிஸ்கிருத உச்சரிப்பைப் பிராமணரல்லாத எம்.எஸ்.சுப்புலக்ஷ்மியால் கொடுக்க முடிந்ததைப் போன்றதல்லவா இது? பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்பதை மீண்டும் மீண்டும் மகாகலைஞர்கள் நிரூபிப்பார்கள்.
ஆனால் 'தண்டையணி' வெறும் பக்க உணவு (சைட் டிஷ்) தான். லதாங்கியில் தலை வாழை இலை போட்டு ஒரு விருந்தே பரிமாறியிருக்கிறார் எம் எஸ்வி. அதுவும் கர்னாடக இசையின் பெண் மும்மூர்த்திகளுள் ஒருவரான எம் எல் வசந்தகுமாரியுடன் டி.எம்.எஸ் இணைந்து பாடியிருப்பார். சொல்லப் போனால் சில இடங்களில் டி.எம்.எஸ், எம் .எல்.வியையே ஓரங்கட்டியிருப்பார் தன் உணர்ச்சி மிகுந்த பாடும் முறையால்.மன்னாதி மன்னன் படத்தில் இடம் பெற்ற 'ஆடாத மனமும் உண்டோ 'பாடல்தான் அது. 'வாடாத மலர்போலும் விழி பார்வையில் கை வளையோசை தருமின்ப இசை கார்வையில்' 'இதழ் கொஞ்சும் கனியமுதை மிஞ்சும் குரலில் குயில் அஞ்சும் உனைக் காணவே' போன்ற வரிகளைக் கேட்கும் போது காதுகளில் தேனாறு ஓடுவது நிஜம்.
(பி.கு)இதே லதாங்கியில் 'சின்ன ராசாவே சித்தெறும்பு என்னைக் கடிக்குதா" என்று அமைத்த இளையராஜா ' இதே எம்.எல்.வியின் மாணவியான சுதா ரகுநாதனை வைத்து இதே லதாங்கி ராகத்தில் 'ஆடும் பதம்' என்று ஒரு பாடலைக் கொடுத்துள்ளார். படம்- பொன்மேகலை.(வந்ததா?).கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்தில் வரும்' எங்கே எனது கவிதை' பாடலில் ஒரு இடத்தில் 'மாலை அந்திகளில்....' என்று லதாங்கியைக் காட்டுவார் ஏ.ஆர்.ரஹ்மான்.
பி.கு.2 :எச்சரிக்கை- டி.எம்.எஸ் - பாட்டும் பாவமும் தொடரும்.