Friday, January 31, 2014

வெண்பா எழுது நண்பா 1



"அமலா நயன்தாரா அம்பிகா ராதா
சுமலதா ரோஜா சுபஸ்ரீ - அமலாபால்
ராதிகா ஊர்வசி ரஞ்சிதா சங்கீதா
ஜோதிகா ஐஸ்வர்யா குஷ்பு"

-இது வெண்பா இலக்கணம் மாறாமல் எழுதப்பட்ட நேரிசை வெண்பா. காப்பிரைட் அடியேனுக்கே.

முதலில் எல்லாச் சொற்களையும் பிரிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும் .சொற்களைப் பிரித்தால் வருபவற்றை அசைகள் என்று அழைகிறோம்.syllables என்று ஆங்கிலத்தில் சொல்வதுபோல். அசைகள் நேர் அசை என்றோ நிரை என்றோ அழைக்கப் படுகின்றன.

நெடில், நெடில்+ ஒற்றெழுத்து, குறில் + ஒற்றெழுத்து, கடைசி எழுத்தாக இருக்கும் குறில் = நேர் அசை . உதாரணம் ரோஜா = இரண்டு நெடில்கள் எனவே இரண்டு நேர் அசைகள் அதாவது நேர்நேர்.
ரேஷ்மா = ரேஷ் +மா என்று பிரிக்கவும் ரேஷ் என்பது நெடில்+ ஒற்றெழுத்து ஆகவே இது நேர் அசை, மா என்பது நெடில் ஆகவே இதுவும் நேர் அசை ஆகவே இதுவும் நேர் நேர்.
நக்மா = நக்+ மா முதல் அசை குறில்+ ஒற்றெழுத்து ஆகவே நேர் அசை, மா =நெடில்= நேர் அசை ஆகவே இந்தச் சொல்லும் இரண்டு நேர் அசையால் ஆனது
குஷ்பு = குஷ்+பு குஷ் = குறில்+ ஒற்றெழுத்து ஆகவே நேர் அசை. பு = இறுதியாக இருக்கும் குறில் ஆகவே அதுவும் நேர் அசை .ஆகவே இதுவும் நேர் நேர்.

இதே போல் ராதா, ரேகா, நேஹா, ஆர்யா, சூர்யா, பாபு, செந்தில் ,சேரன் ,நாகேஷ், எல்லா வார்த்தைகளுமே இரண்டு நேர் அசைகளால் ஆனவை
நெற்றிக்கண் (எல்லாமே நேர் அசைதான்) திரைப்படத்தில் வரும் "நானே நல்ல ராஜா ஆனால் முள்ளில் ரோஜா
ஒன்றா ரெண்டா எந்தன் ஆசை பெண்னா என்னை வெல்லக் கூடும்"

என்ற கண்ணதாசனின் முழுப் பாடலில் வரும் அசைகள் எல்லாமே நேர் அசைதான்

இரண்டு குறில்கள் மட்டும் வந்தால் நிரை அசை . முதலில் குறில் வந்து பிறகு நெடில் வந்தால் நிரை, இரண்டு குறில்+ ஒற்றெழுத்து வந்தாலும் , குறில்+நெடில் + ஒற்றெழுத்து என்று வந்தாலும் நிரை அசை
உதாரணம் கலகல = கல+கல = இரண்டு குறில்கள் வந்ததால் கல என்பது நிரை அசை, கலகல என்னும் சொல் இரண்டு நிரை அசைகளால் ஆனது
கமல் என்ற சொல் ஒரே அசையால் ஆனது. அதுவும் நிரை அசைதான் இரண்டு குறில்கள் + ஒரு ஒற்றெழுத்து.
நிலா என்ற அசையில் முதலில் குறிலும் பின்பு நெடில் வருகிறது ஆகவே இது நிரையசை. கலா, லதா எல்லாச் சொற்களும் நிரையசை தான்
அதேபோல் குறிலுகுப் பின் நெடிலும் ஒற்றெழுத்தும் வந்தால் அதுவும் நிரை அசைதான் விரால், இரால், கமால், ஹலால்,ஹராம்

"அழகிய தமிழ்மகள் இவள் இரு
விழிகளில் எழுதிய மடல் " -இந்த இரண்டு வரிகளில் இருக்கும் எல்லாமே நிரை அசைதான்

இப்போது இரு அசைகள் சேர்வதைப் பார்க்கலாம்

இரு நேரசைகள் வருவது தேமா எனப்படும். அதாவது தே மா என்ற வார்த்தையே இரண்டு நேரசைகளால் ஆனது ரோஜா, ஆர்யா ,சூர்யா, நக்மா, குஷ்பு, கன்னல், பாம்பு, பாபு என்று எல்லாச் சொற்களும் தேமா ஆகும்.

நேர் அசைக்குப் பின் நிரை அசை வந்தால் அதன் பெயர் கூவிளம் கூ=நேர் விளம் = நிரை . அம்பிகா, சங்கவி, அங்கவை, சங்கவை, ராதிகா, ஜோதிகா, பூமிகா, பால்நிலா, காய்கறி, மாங்குயில், வேர்ப்பலா,கன்னிகை,கண்ணகி, எல்லாமே கூவிளம் தான்.

நிரை அசைக்குப் பின் நேர் அசை வருவது புளிமா . புளி= நிரை மா=நேர். உதாரணம் கனகா, கவிதா, பபிதா,ஷகீலா, பமீலா,விசித்ரா சுனந்தா, படைப்பு, மகிழ்ச்சி, அடங்கு, வணங்கி, அடாது, விடாது, அராத்து

இரண்டு நிரை அசைகள் வருவது கருவிளம் ஆகும்.ரஜினிகாந்த்,(ரஜி+நிகாந்த்) விஜயகாந்த் , கயல்விழி, கனிமொழி,சுராங்கனி, சுமலதா, கலகல, அடிதடி, பலாக்கனி, விடாப்பிடி, நடத்திய, இவை எல்லாம் கருவிளம் எனப்படும் (உதாரணம் என்பதே கருவிளம்)
இப்போது மூன்று அசைகள் சேர்வதைப் பார்க்கலாம் (கண்ணைக் கட்டுகிறதென்றால் கொஞ்ச நேரம் இங்கு குறிப்பிட்டுள்ள நடிகைகள் நடித்த படங்களைப் பற்றி நினைத்துப் பார்க்கவும்.)

தேமா+ நேர் = தேமாங்காய் (உதா :சங்கீதா, பண்புள்ள, சொல்லாதே)
தேமா+நிரை= தேமாங்கனி (உதாரணம் பச்சைக்கிளி, முத்துச்சரம், ராமானுஜம்)
புளிமா +நேர்= புளிமாங்காய் (உதாரணம் நயன்தாரா, கமல்ஹாசன்,ஹரிதாஸ்பாய் , அமலாபால், பயனுள்ள, தமிழன்னை,)
புளிமா+நிரை=புளிமாங்கனி (உதாரணம் திருப்பாற்கடல், வனிதாமணி, வனமோகினி)
கூவிளம்+நேர் =கூவிளங்காய் (உதாரணம் நீலவானம்(நீ+லவா+னம்) மோதிவிடு (மோ+திவி+டு) , செய்திடுவாய், சென்றிடுவாய்)
கூவிளம்+நிரை = கூவிளங்கனி ( உதாரணம் சொல்லியபடி, எண்ணியபடி)
கருவிளம்+நேர்=கருவிளங்காய் (உதாரணம் தமிழரசி,புளிமிளகாய் )
கருவிளம்+நிரை=கருவிளங்கனி (உதாரணம் -விழிகளில்வரும்,பழமுதிர்மரம், துடிக்குதுபுஜம், ஜெயிப்பதுநிஜம்)

(தொடரும்)

Wednesday, January 29, 2014

ஆண்டாளின் ஆனைச்சாத்தன்

"கீசு கீசென்றெங்கும் ஆனைச்சாத்தன் கலந்து
பேசின பேச்சரவம் கேட்டிலையோ பேய்ப்பெண்ணே!"

என்பது ஆண்டாளின் திருப்பாவையின் ஏழாவது பாடல். இதில் வரும் 'ஆனைச் சாத்தன்' என்பது கரிச்சான் அல்லது வலியன் குருவி என்றெல்லாம் அழைக்கப்படும் இரட்டைவால் குருவியையே (BLACK DRONGO) குறிக்கிறது என்று பலரும் தெரிவிக்கின்றனர்.


                     நெல்லையில் நான் எடுத்த புகைப்படம்- இரட்டைவால் குருவி



ஆனைச்சாத்தன் பற்றி அறிய இங்கே க்ளிக்கவும்- ஆனைச் சாத்தன் -

கிராமப் புறங்களில் பரவலாகக் காணப்படும் இப்பறவை அதிகாலையில் கீச் கீச்சென்று ஒலியெழுப்பும். தற்போது மின்சாரக் கம்பிகளில் ஜம்மென்று அமர்ந்திருப்பதைக் காணலாம். ரயிலில் செல்லும்போது பார்த்தால் தெரியும்.


இதன் குரலைக் கேளுங்கள். கீசு கீசென்ற ஆண்டாளின் அவதானிப்பை ரசிக்கலாம்.