Saturday, July 2, 2016

காத்திருப்பான் கமலக் கண்ணன்- ராகமாலிகை ,ராகமாளிகை

பிரபல மனநல மருத்துவர் ருத்ரன் அவர்கள் ஒரு அற்புதமான கண்ணன் படம் வரைந்து முகநூலில் பதிவிட்டிருந்தார். தரையில் அமர்ந்து ராதை உருவம் வரைந்து கொண்டு என்று தலைப்பிட்டிருந்தார் அதற்கு. காத்திருப்பான் கமலக் கண்ணன் என்ற திரைப்படப் பாடல் வரிகள் அவை. அந்த அசையா உயிரோவியம் அந்த அழியாப் பாடலை நினைவு கூர வைத்தது.


ஜி.ராமநாதன் என்னும் இசைமேதை கர்னாடக சங்கீதத்தின் அடிப்படையில் ஏராளமான திரைப்பாடல்களைத் தந்திருக்கிறார். மன்மதலீலையை வென்றார் உண்டோ என்று சாருகேசியில் தொடங்கி கப்பலோட்டிய தமிழன், வீரபாண்டியக் கட்டபொம்மன், மதுரை வீரன் என ஏராளமான திரைப்படங்கள்; பாடல்கள்.

உத்தமபுத்திரன் திரைப்படத்தில் அவர் அமைத்த பாடல்கள் பிரபலமானவை. யாரடிநீ மோகினி என்று மேற்கத்திய பாணியிலும், முல்லைமலர் மேலே என்று தர்பாரி கானடாவிலும் மிளிர்பவை என்றாலும் மகுடம் வைப்பதுபோல் அமைந்தது ராகங்களின் தோரணமாக வரும் காத்திருப்பான் கமலக் கண்ணன் என்ற பாடல்தான். பி.லீலா என்னும் அசாத்திய திறமை வாய்ந்த பாடகி அநாயசமாகப் பாடிய பாடல்தான் இது. பாடல் கே.டி .சந்தானம் எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

பாடல் மூன்று ராகங்களில் தொடுத்த  மாலையாக அமைந்திருக்கிறது.
பாடல் ஆரம்பிப்பது சாருமதி ராகத்தில். நடபைரவியின் குழந்தையான இந்த ராகத்தில் மோக்ஷமு கலதா என்ற தியாகைய்யரின் கீர்த்தனை மிகப் பிரபலம். எம்,டி .ராமநாதன் பாடிக் கேட்டால் மோட்சமே தான். சாரமதி என்று அழைக்கப்படும் இந்த ராகத்தைச் சர்ச்சையில் இழுத்தவர் இசைஞானி இளையராஜா. மரி மரி நின்னே என்ற தியாகைய்யரின் காம்போதி ராகப் பாடலை சிந்து பைரவி திரைப்படத்தில் சாருமதி ராகத்தில் ஏசுதாஸைப் பாடவைத்துப் பாடறியேன் படிப்பறியேன் என்று சித்ராவை அதே ராகத்தில் பதிலடி கொடுக்க வைத்திருப்பார். இது வித்வான்களிடம் சர்ச்சையைக் கிளப்பினாலும் படைப்பாளியின் சுதந்திரமும் ஞானமும் வெளிப்படும் பாடல். அகலிகை போன்ற புராணக்கதைகளைப் புதுமைப்பித்தன் மறுவாசிப்பு செய்யவில்லையா? அதுபோல்தான்.

காத்திருப்பானுக்கு வருவோம். காத்திருப்பின் தவிப்பைச் சாருமதியில் அழகாத் தொடங்கியிருப்பார். பாடல் தாளம் ஆரம்பித்து ஒரு மூன்று அட்சரங்கள் கழித்தேத் தொடங்கும். முக்கால் இடம் தள்ளி என்று சொல்வார்கள்.  முதல் பீட் தொடங்கி ஒரு சின்ன இடைவெளி. தயக்கத்தை வெளிப்படுத்தும் விதமாக அமைந்திருக்கும். முதல் சரணமும் சாருமதியில் ஆத்தங்கரைதனிலே அந்திப் பொழுதிலே என்று மெதுவாகத் தொடங்கிப் பூத்தமென்மலர் போலே புனிதமான வனிதை ராதை வருகையைக் காண என்று தேடலின் பதைபதைப்பை விறுவிறுப்பாகச் சொல்லும். லேசாக சாரமதியிலிருந்து நெருங்கிய ராகங்களான நடபைரவி, ஜோன்பூரி ஜாடையெல்லாம் தெரியும். பெரும்பாலான திரைப்பாடல்கள் எல்லாம் 22 கேரட்தானே. அதுதானே நகைசெய்ய வசதி.

அடுத்த சரணம் திலங்கு ராகத்தில் அமைந்திருக்கும். கேலி செய்ய ஏற்ற ராகம். மனதில் உறுதி வேண்டும் என்று சிந்து பைரவியில் ராஜாவாலும் நல்லதோர் வீணை செய்தே என்று வறுமையின் நிறம் சிகப்பில் எம் எஸ் வி யாலும் புகழ்பெற்ற ராகம். கோபியர் கொஞ்சும் சல்லாபன் என்று தொடங்கி வேய்குழலிசை அமுதூட்டி எழிலொடு சுகம் காட்டும் இன்பத்தமிழ் பேசித் தாவிப் பிடிப்பான் என்ற இடத்தில் திலங்கு ராகத்தைத் தாவிப் பிடித்திருப்பார் பி. லீலா. தரையில் அமர்ந்து ராதை உருவம் வரைந்து கொண்டு என்று கையறு நிலையையும் காட்டியிருப்பார் ராமநாதன்.

மோகனம் இல்லா ராகமாலிகையா? வேடிக்கையாய் செய்வான் அலங்காரம் என்று கம்பீரமாக மோகனத்தில் உயர் ஸ்தாயியைத் தொட்டுவிட்டு வீணை இசைக்கச் சொல்லி என்ற இடத்தில் மோகனமான ஒரு வீணை துணுக்கு பாடுவான் என்று ஒரு ஆலாபனை இறுதியில் வேகமாகப் பாதம் நோகுமே என்று பரிவுடன் காதலின்பமே தந்த நாயகன் அங்கு என்று முத்தாய்பபாக முடியும்.

1958 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் . கிட்டத்தட்ட அரை நூற்றாண்டு காலமாகியும் காதில் ஒலிக்கும் பாடல். ராகப் பூக்களால்.ராமநாதன் தொடுத்த ராகமாலிகையா இல்லை இசை குடியேற அவர் எழுப்பிய ராக மாளிகையா?..இரண்டுமேதான்.

ஓவியத்தைப் பயன்படுத்த அனுமதித்த டாக்டர்  ருத்ரன் அவர்களுக்கு நன்றி.




காத்திருப்பான் கமல கண்ணன் அங்கே காத்திருப்பான் கமல கண்ணன் கனிந்து கனிந்து அன்பை நினைந்து நினைந்து கண்ணுறங்காமல் ஆத்தங்கரை தனிலே அந்தி பொழுதினிலே பூத்த மென்மலர் போலே புனிதமான வனிதை ராதை வருகை காண

கோபியர் கொஞ்சும் சல்லாபன் வேங்குழலிசை அமுதூட்டும் எழிலொடு சுகம் காட்டும் தாவி பிடிப்பான்... ஆ... ஆ... ஆ... ஆ... வெண்ணை தயிர் குடத்தை தடுப்பான் தாவி பிடிப்பான் வெண்ணை தயிர் குடத்தை தடுப்பான் தரையில் அமர்ந்து ராதை உருவம் வரைந்து கொண்டு அங்கு

வேடிக்கையாய் செய்வான் அலங்காரம் வீணை இசைக்கச் சொல்லி வேண்டுவான் சில நேரம் பாடுவான்... பாடுவான் அதற்க்கவளாடுவாள் பல நேரம் பாடுவான் அதற்க்கவளாடுவாள் மறு நேரம் பாதம் நோகுமே என்று பரிவுடன் காதலின்பமே தந்த நாயகன் வந்து






Saturday, May 14, 2016

காலை எழுந்தவுடன் காபி


காபி ராகம் ஒரு அருமையான இனிமையான ராகம். காலை நேரம் கேட்க இனிமையாக இருக்கும். பட்டிணத்தில் பூதம் திரைப்படத்தில் ஒரு ரயில் நிலையத்தில் காலையில் காபி ராகத்தை ஹம்மிங்க் செய்வார் கே ஆர் விஜயா. 'காபி வேண்டுமா என்று கேட்டால் காபி ராகத்தைப் பாடுகிறீர்களே' என்று ஜெய்சங்கர் கேட்பார். அந்தப் படத்தில் ஒரு அருமையான காபி ராகப் பாடல் 'அந்த சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி' .இது காமராசருக்காகக் கவியரசு கண்ணதாசன் எழுதிய தூது என்றும் சொல்வார்கள். இசை எம் எஸ் வி அல்ல. கோவர்த்தனம்

காபி ராகத்தில் அமைந்த நிறைய பாடல்கள் பிரபலமானவை. என்ன தவம் செய்தனை, (பாவநாசம் சிவன்) ஜகதோத்தாரனா (எம் எஸ் ஐ நா சபையில் பாடியது) போன்றவை அதில் அடக்கம்.  மாண்டலின் என்ற மொண்ணையான வாத்தியத்தில் காபியின் சங்கதிகளைக் கொண்டுவரும் மாமேதை ஸ்ரீநிவாசின் வாசிப்பைக் கேளுங்கள்.

அது போல் ஜகதோத்தாரண எம் எஸ்சின் மாஸ்டர்பீஸ்


குறையென்றுமில்லை பாடலில் வரும் திரையின்பின் நிற்கின்றாய் கண்ணா என்ற பகுதி காபி ராகத்தில் அமைந்தது. 

திரைப்பாடல்களில் பல காபி ராகத்தில் அமைந்தவை
1.செந்தமிழ்தேன்மொழியாள்- மாலையிட்ட மங்கை- விஸ்வநாதன் ராமமூர்த்தி 

2.ஏ பாடல் ஒன்று- ப்ரியா- இளையராஜா (ராஜா டச்) 

3.காதல் ரோஜாவே- ரோஜா- ஏ.ஆர் ரஹ்மான் (ஹிந்துஸ்தானி டச்)

4.ஆலங்குயில்- பார்த்திபன் கனவு- வித்யாசாகர் (அசல் ஃபில்டர் காபி) . கபிலனின் குறுங்கவிதைகளும் ஹரினியின் குரலும் இறுதியில் வரும் ஸ்வரக் கோவைகளும் பிரமாதம்.

5.காதல் வந்ததும் கன்னியின் உள்ளம்- பூவெல்லாம் உன் வாசம்- வித்யாசாகர் (வித்யாசமான காபி)


வழக்கம் போல் இளையாராஜா வித்யாசமாக காபி ராகத்தைப் பயன்படுத்தியிருப்பார். படம் ஃப்ளாப். ரஜினிக்கு படு ஃப்ளாப் ஆன சில படங்களில் ஒன்று. ஆனால் அந்த பாடல் வித்யாசமான காபி ராகம். பாடல்-அட மாப்பிளே சும்மா மொறைக்காதே. படம் சிவா.
காபி ராகத்தில் அமைந்த மாஸ்டர் பீஸ் என்றால் தும்பி வா தும்பக் குடத்து என்ற ஓலங்கள் என்கிற மலையாளப் படப் பாடல்தான். ராஜாவின் இசையும் பாலு மகேந்திராவின் ஒளிப்பதிவும் ஜானகியின் குரலும் அவ்வளவு இனிமை. கடந்த சில மணி நேரங்களாக இப்பாடல்தான் காதுகளில் ஓடிக் கொண்டிருக்கிறது.

காபி ராகத்தில் இன்னும் பல திரைப்பாடல்கள் உள்ளன. குச்சி குச்சி ராக்கம்மா கூட கொஞ்சம் லைட்டான காபிதான்.
திருமலைதென்குமரி படத்தில் வரும் மதுரை அரசாளும் மீனாட்சி பாடல் பெரும்பாலும் காபி ராகத்திலேயே அமைந்திருக்கும். இசை- குன்னக்குடி வைத்தியநாதன்
சீர்காழி பாடியிருக்கும் ஸ்வரக் கோர்வைகள் அசல் கும்பகோணம் டிகிரி காபி


ராஜரிஷி என்ற திரைப்படத்தில் அமைந்துள்ள பாடல்கள் எல்லாமே செவ்வியல் அம்சத்துடன் விளங்குபவை. அழகிய திருமகனே- மத்யமாவதி
மான் கண்டேன் மான் கண்டேன்- வசந்தா
சங்கரா சிவ சங்கரா- பந்துவராளி- மலேஷியாவின் மாஸ்டர்பீஸ்
ஆடையில் ஆடும்- மாயாமாளவகௌளை
அந்தப் படத்தில் மாதவம் ஏன் மாதவனே என்ற பாடல் ஜானகியின் குரலில் வரும் ஒரு அசத்தலான காபி ராகம். இசைஞானியின் மேதமைக்கு ஒரு சான்று. பாடலும் அழகான சிலேடைகளால் நிறைந்திருக்கும்
மா துறவை நீ அறிவாய் (பெரும் துறவு)
மாதுறவை ஏன் மறந்தாய்(மாது + உறவு)
அருள்கொடு மா தேவா (பெரும் தேவன்)
அருகினில் மாதே வா (பெண்ணே வா)
அந்திமாகலையில் இந்த மேனகைகள் அசையும் அசைவிலே இசைவிலே இடை ஒடிய ஒடிய நடனம் பயிலும் மயிலிதுதானோ - போன்ற வேகமான வரிகளுடன் அமைந்த பாடல்
வழக்கம்போல் விரகதாபத்தைக் குரலில் அருமையாக வெளிப்படுத்த ஜானகி, பாவனைகளில் லட்சுமி.



Sunday, September 6, 2015

இளைய ராஜாவும் ஏழு அடிகளும்

சில மாதங்களாக எதுவும் எழுதாமல் இருந்தேன். இன்று பொட்டுவைத்த ஒரு வட்ட நிலா என்ற பாடலைக் கேட்டேன். பாடல் நின்ற பிறகும் அதன் தாளம் கைகளில் ஓடிக் கொண்டே இருந்ததன் விளைவாக இப்பதிவு 

திருமணத்தின் போது முக்கிய சடங்கு சப்தபதி எனப்படும் தம்பதிகள் இணைந்து ஏழு அடிகள் நடக்கும் சடங்கு.
இசையிலும் ஏழு அடிக்கு முக்கியத்துவம் உண்டு. மிஸ்ரம் எனப்படும் இந்தத் தாளக் கட்டில் ஏழு பீட்கள் (அட்சரங்கள்) உண்டு. தகிட தக திமி என்பது ஏழு அடிகள்; தகிட தக திமி ;// தகிட தகதிமி // 123 12 12 ;// 123 12 12;// என்ற ஜதியில் வருவது மிஸ்ர சாபு என்று கர்னாடக இசையில் அழைக்கப்படும்.
திரைப்பாடல்களில் இந்த லயத்தை அருமையாகப் பயன்படுத்தி இருப்பதில் ராஜா ராஜா தான்.
இந்தப்பாடல் ஆரம்பிக்கும்போது கால்கொலுசின் மூலமும் சின்னி ஜெயந்த் கையில் இருக்கும் பரிட்சை அட்டை மூலமும் தகிட தக திமி என்ற ஜதியை ஆரம்பித்து பாடல் முழுதும் தபேலாவில் இந்த லயத்தை முன்னிறுத்தியிருப்பார் இளைய ராஜா. புரிந்தபின் எளிமையாகத் தோன்றும் . ஆனால் இவ்வளவு எளிமையாக அமைப்பது எளிதல்ல.
படம் இதயம். தபேலாவை உற்றுக் கவனித்தால் இந்த சந்தம் எளிதில் பிடிபடும்.
பொட்டுவைத் த ஒரு
தகிட தக திமி
வட்டநி லா குளிர்
தகிட தக திமி
புன்னகை யில் எனைத்
தகிட தக திமி
தொட்டநி லா .........
தகிட தக திமி
என்மன தில் அம்பு
தகிட தக திமி
விட்டநி லா இது
தகிட தக திமி
எட்டநின் று எனைச்
தகிட தக திமி
சுட்டநி லா .......
தகிட தக திமி
படத்தில் அனைவரும் கிட்டத்தட்டத் தவறாகத் தாளம் போடும் போது முரளி மட்டும் சரியாக இந்த லயத்தைக் கையால் போடுகிறார். அவள் பேரை நாளும் என்ற இடத்தில் . மைக் முரளியாச்சே. சங்கராபரண ராகம் ராஜா கையில் ஆபரணமாக ஜொலிக்கிறது.

இதைவிடக் கொஞ்சம் சிக்கலான அமைப்பு இன்னொரு அருமையான பாடலில். இதே தகிட தக திமி லயம் தான். தபேலாவும் எஸ் பி பாலசுப்ரமணியம் எஸ் ஜானகியின் குரல்களும் இணைந்து லய ராஜ்யம் நடத்தியிருக்கின்றன. அதிலும் தொடக்கத்தில் வரும் சௌந்தர்ய லஹரி மந்திரமும் ஜானகியின் ஆலாபனையும் கல்யாணி ராகத்தில் அமைந்த இப்பாடலைத் தெய்வீக ராகமாக்கியுள்ளன. படம் காதல் ஓவியம்


கண்காட்சி திரைப்படத்தில் வரும் அனங்கன் அங்கதன் என்ற பாடலும் இந்த மிஸ்ர (ஏழு ) ஜதிதான் ஆனால் இலக்கணப்படி கொஞ்சம் வித்தியாசப்படும். 

Thursday, February 19, 2015

தமிழ்த் தாத்தா உ வே சா அவர்களின் வாழ்க்கைச் சுருக்கம்

தமிழ் இணையக் கல்விக் கழகத்தின் நூலகத்தில் உ வே சா அவர்களின் என் சரித்திரம் நூலில் கி. வா ஜகன்னாதன் அவர்களால் எழுதப் பட்ட முன்னுரை.
உ வே சாவின் வரலாற்றைத் தமிழ் பேசும் ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

(ஒரு சிறு திருத்தம் இந்த இணையதளத்தில் அவரது பிறந்த ஆண்டை 1885 என்று தவறாகக் குறிப்பிட்டுள்ளனர் . அது 1855)



ஐயரவர்களின் வாழ்க்கை வரலாற்றுச் சுருக்கம்

-கி .வா.ஜகன்னாதன்


இந்த நூற்றாண்டில் தமிழ் இலக்கிய உலகில் இரண்டு பெரிய
மலைகளைப் போன்ற பெரியவர்கள் தமிழ்மொழிக்குப் புதிய ஒளியைக்
கொடுத்தார்கள். ஒருவர் ஸ்ரீசுப்பிரமணிய பாரதியார். மற்றொருவர் ஸ்ரீ
மகாமகோபாத்தியாய டாக்டர் உ.வே. சாமிநாதையரவர்கள் கவிஞர் பாரதியார்
தம்முடைய புதிய கவிகளால் தமிழ்த்தாய்க்குப் புதிய அணிகளைப் பூட்டினார்.
ஐயரவர்களோ, பல காலமாக மங்கி மறைந்து கிடந்த பழைய அணிகளை
மீட்டும் எடுத்துக் கொணர்ந்து துலக்கி மெருகூட்டிப் பூட்டி அழகு
பார்த்தார்கள்.
தமிழ்த் தாத்தா என்று தமிழ்க் குழந்தைகளால் அன்புடன்
போற்றப்பெறும் ஐயரவர்கள் உண்மையில் சென்ற நூற்றாண்டிலேயே
தம்முடைய அரும்பெருந் தொண்டைத் தொடங்கிவிட்டார்கள். அவர்கள்
1885-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 19-ஆம் தேதி தோன்றினார்கள்.(ஒரு சிறு திருத்தம் இந்த இணையதளத்தில் அவரது பிறந்த ஆண்டை 1885 என்று தவறாகக் குறிப்பிட்டுள்ளனர் . அது 1855)
அவர்கள் தோன்றிய காலத்தில் இருந்த தமிழின் நிலைக்கும் அவர்கள்
மறைந்த காலத்தில் (ஏப்ரல், 1942) தமிழ் உயர்ந்து நின்ற நிலைக்கும்
எவ்வளவோ வேற்றுமை உண்டு. அவர்கள் 1887-ஆம் ஆண்டில்
சீவகசிந்தாமணியை அச்சிட்டு வெளியிட்டார்கள். அது முதல் இறுதிக்
காலம் வரையில் தமிழ்த்தாயின் அணிகளை ஒவ்வொன்றாகப் புதுப்பிக்கும்
அற்புதமான தொண்டில் தம் காலம் முழுவதையும் அவர்கள் செலவிட்டார்கள்,
அவர்கள் தோன்றிய காலத்தில் பெரும் புலவர்களும் சங்க நூல்கள்
என்று பெயரளவிலே தெரிந்து கொண்டிருந்தார்களே ஒழிய அவை இன்னவை
என்பது அவர்களுக்குத் தெரியாது. கோவலன் கதை என்ற ஒரு நாடோடிக்
கதையையும் அதில் வரும் கண்ணகியையும் மாதவியையும் அறிவார்களே
யன்றிச் சிலப்பதிகாரத்தையும் அதில் உள்ள பாத்திரங்களையும்
அறியமாட்டார்கள். அகநானூறு, புறநானூறு என்ற இரண்டுக்கும் உள்ள
வேறுபாடு இன்னதென்று தெரியாது, மணிமேகலை எந்தச் சமயத்தைப் பற்றிய
நூல் என்பதும் தெரியாது.
இன்றோ பள்ளிக்கூடத்திற் பயிலும் மூன்றாம் வகுப்பு மாணவனுக்கும்
பாரியைப்பற்றிய வரலாறு தெரியும். சேரன் செங்குட்டுவனுடைய வெற்றியைப்
பற்றி மேல் வகுப்பு மாணாக்கர்கள் படிக்கிறார்கள். பள்ளிக் கூடங்களிலும்
கல்லூரிகளிலும் புறநானூறு, குறுந்தொகை பத்துப்பாட்டு முதலிய சங்க
நூல்களிலுள்ள பகுதிகளைப் பாடமாக வாசிக்கிறார்கள் பிள்ளைகள்.

பல ஆண்டுகளுக்கு முன் திராவிட மொழிகளின் அமைப்பைப் பற்றிக்
கால்டுவெல் என்ற ஆங்கிலேயர் அழகான நூல் ஒன்று எழுதினார். ‘திராவிட
மொழிகளின் ஒப்பியல்’ (Comparative Phonology of Dravidian
Languages
) என்பது அந்து நூலின் பெயர். அதை இன்றும் சிறந்த நூலாகப்
புலவர்கள் கொண்டாடுகிறார்கள். அதை எழுதினவருக்கே எட்டுத் தொகை,
பத்துப்பாட்டு ஆகியவை கிடைக்கவில்லை. அந் நூல்களின் அமைப்பை
அவர் அறியார்.
இன்றோ சங்ககாலத் தமிழரைப் பற்றியும், நூல்களைப் பற்றியும் பல
பல நூல்கள் வந்திருக்கின்றன, பல வகையான ஆராய்ச்சிகள் நிகழ்ந்து
வருகின்றன. தமிழ் இலக்கியத்தின் பொற்காலம் என்று சங்க காலத்தைப்
போற்றிப் பாராட்டிப் பெருமிதத்துடன் பேசுகிறோம். தமிழர் பண்பாடு,
தமிழர் நாகரிகம், தமிழர் மரபு என்று நமக்குரிய தனிச் சிறப்பைப் பல
மேடைகளில் புலவர் பெருமக்கள் பேசுகிறார்கள்; எழுதுகிறார்கள். பாரத
நாட்டில் உயிருடன் வழங்கி வரும் மொழிகள் யாவற்றிலும் பழையது.
இலக்கிய வளம் பொருந்தியது, இலக்கண வரம்புடையது, எதையும்
வழங்கத்தக்க சொல்வளமுடையது என்றெல்லாம் மற்றவர்களும் ஒப்புக்
கொள்ளும் நிலை தமிழுக்குக் கிடைத்திருக்கிறது.
தமிழ்த் தாத்தாவின் அரும்பெருந் தொண்டே இத்தனை உயர்வுக்கும்
மூலகாரணம் என்பதைத் தமிழ்ப் புலவர்கள் அறிவார்கள். தமிழ் வரலாற்றில்
ஐயரவர்களுக்கு என்று ஒரு தனிப் பகுதி இருக்கும் என்பதில் சந்தேகமே
இல்லை.
ஐயரவர்களுடைய ஊர் தஞ்சை ஜில்லாவில் உள்ள உத்தமதானபுரம்
என்ற சிறிய கிராமம். சங்கீத வித்துவானகிய ஸ்ரீ வேங்கட சுப்பையருக்கும்
ஸ்ரீமதி சரசுவதியம்மாளுக்கும் புத்திரராக ஐயரவர்கள் பிறந்தார்கள்.
அவர்களுடைய தந்தையார் பல இடங்களுக்குச் சென்று தம்முடைய இசைத்
திறமையைக் காட்டி ஊதியம் பெற்று வாழ்ந்து வந்தார்கள். குறிப்பிட்ட
வேலையும் குறிப்பிட்ட சம்பளமும் இல்லாவிட்டாலும் அக்காலத்தில் வாழ்ந்தமக்களின் அன்பும் கலையபிமானமும் அவரைப் போன்ற கலைஞர்களைப்
பாதுகாத்து வந்தன. அங்கங்கே இருந்த செல்வர்களும் ஜமீன்தார்களும்
அவருக்குச் சிறப்புச் செய்து, வாழ்க்கையைச் சுவையுடையதாக்கினார்கள்.
இந்தச் சூழ்நிலையில் ஐயரவர்கள் வளர்ந்து வந்தார்கள். தந்தையாரிடமும்
சில திண்ணைப் பள்ளிக் கூடத்து ஆசிரியர்களிடமும் இப்பேரறிஞர்
இளமையில் கல்வி பயின்றார். அக்காலத்தில் சில நூல்களையே
கற்றிருந்தாலும், அவற்றைத் திருத்தமாகப் பயின்று மற்றவர்களுக்கும்
தெளிவாகப் பாடம் சொல்லும் சிறிய புலவர்கள் அங்கங்கே இருந்தார்கள்.
அத்தகையவர்களாகிய அரியலூர்ச் சடகோபையங்கார், செங்கணம் விருத்தாசலரெட்டியார் 
முதலியவர்களிடம் ஐயரவர்கள் சில நூல்களைக் கற்றார்கள். ஐயரவர்களுடைய
தந்தையாருக்குத் தம் குமாரரைப் பெரிய சங்கீத வித்துவானாக ஆக்க
வேண்டுமென்ற ஆசையே முதலில் எழுந்தது. ஆனால் இவர்களுக்குத் தமிழில்
உண்டான பெரும் பசியைக் கண்ட போது அந்தத் துறையில் இவர்களை
ஈடுபடுத்துவதுதான் தம்முடைய கடமை என்பதை அவர் உணர்ந்தார்.
அதனால் எங்கெங்கே தமிழ் நூல்களைப் பாடம் சொல்லுகிறவர்கள்
இருக்கிறார்களோ, அந்த அந்த ஊர்களுக்கெல்லாம் குடியேறித் தம்முடைய
குமாரர் தமிழ்க் கல்வி பெறும்படி செய்து வந்தார்.
அப்போது திருவாவடுதுறை ஆதீனத்தில் பெருங் கவிஞராகவும் சிறந்த
புலவராகவும் திகழ்ந்த மாகவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின்
புகழ் தமிழ்நாடு முழுவதும் பரவியிருந்தது. அவர் பல மாணாக்கர்களுக்குப்
பாடம் சொல்லிக் கொடுத்துவருகிறார் என்ற செய்தி ஐயரவர்களின் தந்தையார்
காதில் விழுந்தது. “நம் பிள்ளையையும் அந்த மகாவித்துவானிடம் சேர்த்து
விட வேண்டும்” என்ற ஆவல் அவருக்கு உண்டாயிற்று.
1870-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஐயரவர்கள் வாழ்க்கையின்
இரண்டாம் பகுதி தொடங்கியது. மாயூரத்தில் இருந்த மகாவித்துவான்
மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களிடம் இவர்கள் மாணாக்கராகச் சேர்ந்தார்கள்.
அதுமுதல் அந்தத் தமிழ்க் கடலின் மறைவு வரையில் (1-2-1876) உடனிருந்து
பலவகையான தமிழ் நூல்களைக் கற்றார்கள். அப்புலவர்பிரான் அவ்வப்போது
இயற்றிவந்த நூல்களை எழுதுவதும் திருவாவடுதுறை மடத்தின்
ஆதீனகர்த்தர்களாக இருந்த ஸ்ரீ சுப்பிரமணிய தேசிகருடன் பழகுவதும், அந்த
மடத்துக்கு வரும் தமிழ்ப் புலவர்களிடத்திலும் வடமொழி வாணரிடத்திலும்
சங்கீத வித்துவான்களிடத்திலும் நெருங்கிப் பழகுவதும் போன்ற செயல்களால்
இவர்களுக்கிடைத்த அநுபவம் வேறு யாருக்கும் கிடைத்தற்கு அரிது.
அத்தகைய அநுபவத்தினால் ஐயரவர்கள் பெற்ற பயன் மிக அதிகம். எந்தப்
பொருளானாலும், எத்தகைய மனிதரானாலும், எந்த விதமான
நிகழ்ச்சியானாலும் கூர்ந்து உணரும் இயல்பு ஐயரவர்களிடம் சிறந்திருந்தது.
அதனால் அக்காலத்தில் அவர்கள் கண்டவையும் கேட்டவையும்
அப்படியப்படியே இவர்களுடைய இளநெஞ்சில் நன்றாகப் பதிந்தன. பெரிய
ஆதீனத்தின் தொடர்பால் பலவகை மக்களின் பழக்கம் இவர்களுக்கு
ஏற்பட்டது. பெரும்புலவருடைய தொடர்பால் பல நூல்களில் அறிவு
உண்டாயிற்று. பல கலைஞருடைய நட்பினால் பல துறையிலும் அறிவு
சிறந்தது. வெவ்வேறு ஊர்களுக்குத் தம்முடைய ஆசிரியருடன் செல்ல
வேண்டியிருந்தமையால் பல தலங்களைப்பற்றிய செய்திகளும் அங்கங்குள்ள பெரிய மனிதர்களின் 
பழக்கமும் ஐயரவர்களுக்குக் கிடைத்தன.
பிள்ளையவர்கள் மறைவுக்குப்பின்பு திருவாவடுதுறை ஆதீனத்தின்
தொடர்பு ஐயரவர்களுக்குப் பின்னும் இறுகலாக அமைந்தது. அதற்கு முன்
பிள்ளையவர்கள் மூலமாக ஆதீனத்தின் தொடர்பு இருந்துவந்தது. அதற்குப்
பின் ஆதினகர்த்தராகிய ஸ்ரீ சுப்பிரமணிய தேசிகரிடமே பாடம் கேட்கப்
புகுந்தார்கள் ஐயரவர்கள். அதோடு மாணாக்கர்களுக்குப் பாடம் சொல்லும்
பணியையும் மேற்கொண்டார்கள். இதனால் இவர்களுடைய தமிழறிவு உரம்
பெற்று வந்தது.
அக்காலத்தில் கும்பகோணம் அரசாங்கக் காலேஜில் தியாகராச
செட்டியார் என்ற பெரும்புலவர் தமிழாசிரியராக இருந்தார். அவர்
மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களிடம் படித்தவர். அவர்
ஓய்வு பெறவேண்டிய காலம் வந்தபோது அவர் தம்முடைய இடத்தில்
ஐயரவர்களை நியமிக்கும்படி செய்தார். 1880-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம்
16-ஆம் தேதி முதல் ஐயரவர்கள் கல்லூரித் தமிழாசிரியராக வேலை பார்க்கத்
தொடங்கினார்கள்.
நிறைந்த தமிழ்ப் புலமை, எதையும் சுவையாக எடுத்து விளக்கும்
ஆற்றல், இசைப்பயிற்சி, அன்பு முதலிய இயல்புகளை இவர்கள் சிறப்பாகப்
பெற்றிருந்தமையால் கல்லூரி மாணாக்கர்கள் உள்ளத்தை எளிதில்
கவர்ந்தார்கள். ஆங்கில மோகம் உச்சநிலையில் இருந்த காலம் அது.
ஆங்கிலமும் பிறபாடங்களும் கற்பிக்கும் பேராசிரியர்களிடம்
மாணாக்கர்களுக்கும் மற்றவர்களுக்கும் நல்ல மதிப்பு இருந்து வந்தது.
இங்கிலீஷ்காரர்கள் சிலர் அந்தப் பாடங்களைக் கற்பித்து வந்தார்கள்.
அதனாலும் அவற்றிற்கும் அவற்றைக் கற்பிப்பவர்களுக்கும் மதிப்பு
உயர்ந்திருந்தது. தமிழாசிரியர்களுக்கு அத்தகைய மதிப்பு இல்லை.
அவர்களுக்குக் கிடைத்த ஊதியமும் மிகக் குறைவு. கல்லூரிச் சேவகனுக்கு
அடுத்தபடி சம்பளம் வாங்கினவர் தமிழாசிரியரே.
இத்தகைய நிலையில் ஐயரவர்கள் மாணாக்கர்களின் உள்ளத்தைப்
பிணித்ததோடு மற்ற ஆசிரியர்களுக்குச் சமமான மதிப்பையும் பெற்றார்கள்.
ஆங்கிலம் சிறிதும் அறியாவிட்டாலும், ஆண்டில் இளைஞராக இருந்தாலும்,
அவர்களுடைய புலமையும், பண்பும் மாணாக்கர்களும் ஆசிரியர்களும்
பிறரும் இவர்களைச் சிறந்தவர்களாக மதிப்பதற்குரிய காரணங்களாக இருந்தன.
காலேஜில் ஆசிரியராகப் புகுந்த ஆண்டிலேயே (அக்டோபர் மாதம்)
ஐயரவர்களுக்கும் கும்பகோணத்தில் ஜில்லா முன்சீபாக இருந்த சேலம்
இராமசுவாமி முதலியாரவர்களுக்கும் பழக்கம்உண்டாயிற்று. அந்தப் பழக்கமே ஐயரவர்கள் பிறந்ததன் பயனைத் 
தமிழுலகத்துக்குக் கிடைக்கும்படி செய்யக் காரணமாயிற்று. முதலியார்
சிந்தாமணியைப் பாடம் சொல்லும்படி ஐயரவர்களிடம் கேட்டுக்கொண்டார்.
அதனை முன்பு பாடம் கேட்டறியாதவர்கள் இவர்கள்; அந்த நூலைப்
பார்த்தது கூட இல்லை. ஆயினும் தைரியமாகப் பாடம் சொல்லப்
புகுந்தார்கள். ஏட்டுச் சுவடியை வைத்துக் கொண்டு பாடம் சொன்னார்கள்.
சிந்தாமணியில் ஆழ்ந்தார்கள். தாம் அதுகாறும் படித்த நூல் குவியல்களால்
அறியவொண்ணாத பலவற்றை அதில் கண்டார்கள். அது ஜைனசமய
நூலாதலால் பல செய்திகள் ஐயரவர்களுக்கு விளங்கவில்லை. அவற்றை
யெல்லாம் ஜைனர்களிடம் சென்று கேட்டு அறிந்தார்கள். சிந்தாமணிக்கு
நச்சினார்க்கினியர் எழுதிய உரையைப் படித்தார்கள். அவருடைய
உரைப்போக்கும் அதனிடையே அவர் காட்டியிருக்கும் மேற்கோள்களும்
ஏதோ ஒரு புதிய பிரபஞ்சத்தையே அவர்கள் அகக்கண்முன் தோற்றுவித்தன.
தமிழ் மக்கள் செய்த தவத்தின் பயனாக இவர்களுக்குச் சிந்தாமணியைப்
பதிப்பிக்கவேண்டும். என்னும் எண்ணம் உண்டாயிற்று. ஆராய்ச்சி
நடைபெற்றது. மேட்டுமடையில் நீர் பாய்வதுபோன்ற வேதனையைப் பல
சமயத்தில் அவர்கள் அடைந்தார்கள். ஆனாலும் விடாப்பிடியாக முயன்று,
1887-ஆம் ஆண்டு சிந்தாமணியை வெளியிட்டார்கள். அந்தப் பதிப்பைக்
கண்ட தமிழ் நாட்டினர் மிகவும் ஆனந்தமடைந்து களிக்கூத்தாடினர். அது
முதல் ஐயரவர்கள் பழைய நூல்களைப் பதிப்பித்து வெளியிடும் முயற்சியில்
ஈடுபட்டார்கள்.
சிந்தாமணிக்குப்பின் பத்துப்பாட்டு வெளியாயிற்று. அதன்பின்
சிலப்பதிகாரம், புறநானூறு, மணிமேகலை என்பவை வந்தன. புறநானூறு
கண்ட தமிழுலகம் ஏதோ ஒரு புதிய கண்டத்தைக்கண்டு பிடித்ததுபோன்ற
மகிழ்ச்சியையும் ஊக்கத்தையும் அடைந்தது. ஆராய்ச்சிக்காரர்களுடைய மூளை
வேலை செய்யத் தொடங்கியது. பழந்தமிழ் மக்களின் வாழ்க்கையைப்பற்றிய
ஆராய்ச்சிகளை அறிஞர்கள் எழுதத் தொடங்கினார்கள்.
இவ்வாறு ஐயரவர்கள் பழந்தமிழ் நூல்களை அச்சிடும் தொண்டை
விடாது செய்து வந்தார்கள். ஐம்பெருங் காப்பியங்கள் என்று சேர்த்துச்
சொல்லும் நூல்களில் கிடைத்த சிலப்பதிகாரம், மணிமேகலை,
சீவகசிந்தாமணி 
என்ற மூன்றையும் அவர்கள் வெளியிட்டார்கள்.
பத்துப்பாட்டை அவர்களுடைய உழைப்பால் தமிழுலகம் காண முடிந்தது.
எட்டுத்தொகைகளில் ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல், புறநானூறு
என்பன மலர்ந்தன.பெருங்கதை, புறப்பொருள் வெண்பாமாலை, நன்னூல் சங்கர 
நமச்சிவாயர் உரை என்னும் இலக்கிய இலக்கணங்கள் வெளிவந்தன.
இவற்றையன்றித் திருவாலவாயுடையார் திருவிளையாடற் புராணம்
திருக்காளத்திப் புராணம் 
முதலிய பல புராணங்களும், கோவை, உலா,
கலம்பகம், பிள்ளைத்தமிழ், இரட்டை மணிமாலை, அந்தாதி, குறவஞ்சி 

முதலிய பலவகைப் பிரபந்தங்களும் குறிப்புரைகளுடன் வெளிவந்தன.
தம்முடைய ஆசிரியர் இயற்றிய பிரபந்தங்கள் எல்லாவற்றையும் தொகுத்து
ஒரு தொகுதியாக வெளியிட்டார்கள்.
ஏட்டில் இருக்கிறதை அப்படியே பெயர்த்துக் காகிதத்தில் அச்சிடும்
வேலை அன்று, ஐயரவர்கள் செய்தது. புத்தகப் பதிப்பு அவ்வளவு எளிதாக
இருந்தால் எத்தனையோ அறிஞர்கள் அதை முன்பே செய்து புகழ்
பெற்றிருப்பார்கள். ஏட்டில் உள்ள பாடம் பிழைபட்டிருக்கும்; பல இடங்களில்
இன்னதென்றே ஊகிக்க முடியாத அளவுக்குச் சிதைவு உண்டாகியிருக்கும்;
அவற்றையெல்லாம் பல நூல் அறிவினாலும் இயற்கையான அறிவுத்
திறமையாலும் விடாமுயற்சியினாலும் திருவருளின் துணையாலும் ஆராய்ந்து
செப்பம் செய்யவேண்டும். ஐயரவர்கள் திக்குத் தெரியாத காட்டில் நுழைந்து
தாமே வழியமைத்துக் காடு நாடாக்கிய பெருந்தொண்டர். அவர்களுடைய
பதிப்பு என்றாலே தமிழ்ப் புலவர்களும் ஆராய்ச்சியாளரும் போற்றிப்
பாதுகாக்கிறார்கள். ஒவ்வொரு நூலிலும் முன்னே உள்ள முகவுரையும்,
ஆசிரியர் வரலாறும், நூலைப்பற்றிய குறிப்புக்களும், பிற செய்திகளும் மிகமிக
அற்புதமானவை. விளக்கங்களும் பல நூல்களிலிருந்து எடுத்த ஒப்புமைப்
பகுதிகளும் காட்சி தரும். அவை ஐயரவர்களுடைய பரந்த நூற்புலமைக்குச்
சான்றாக விளங்கும். இறுதியில் நூலில் கண்ட சொற்களுக்கும்
பொருள்களுக்கும் அகராதி இருக்கும். ஆசிரியரின் உதவியின்றியே பயிலும்
வகையில் அமைந்தவை ஐயரவர்களின் பதிப்புக்கள்.
இந்த முறையில் கண்ணாடிபோல் மேல் நாட்டாரும் வியக்கும் வண்ணம்
ஆங்கிலமே அறியாத ஒரு தமிழ்ப் பண்டிதர் புதிதாக இத்துறையில் புகுந்து
சாதித்தார் என்று சொன்னால் அது அதிசயமான செயல் அல்லவா?
முன்னுரை முதலியவற்றை எழுதி உரைநடை எழுதும் ஆற்றலைச் சிறிய
அளவிலே வெளிப்படுத்திய ஐயரவர்கள், தாம் பதிப்பித்த நூல்களின்
அங்கமாக மணிமேகலைக் கதைச் சுருக்கம், புத்த தர்மம், உதயணன் கதைச்
சுருக்கம் என்பவற்றை எழுதியளித்தார்கள்.கும்பகோணம் கல்லூரியிலிருந்து சென்னைக் கல்லூரிக்குத் 
தமிழாசிரியராக 1903-ஆம் ஆண்டு வந்தார்கள். அப்பால் அந்தப்
பதவியிலிருந்து 1919-ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார்கள். கல்லூரி ஆசிரியர்
என்ற அலுவலிலிருந்து ஓய்வு பெற்றார்களேயன்றி மாணாக்கர்களுக்குப்
பாடம் சொல்லும் ஆசிரியத் தொண்டிலிருந்தோ, நூல்களைப் பதிப்பிக்கும்
பதிப்பாசிரியத் தொண்டிலிருந்தோ, அவர்கள் ஓய்வு பெறவில்லை.
உண்மையில் அவ்வேலைகள் பின்னும் பன்மடங்கு பெருகின.
கல்லூரியில் வேலையாக இருந்தபோதே வீட்டில் தனியே இவர்களிடம்
பலர் பாடம் கேட்டார்கள். மகாபாரதப் பதிப்பாசிரியராகிய
மகாமகோபாத்தியாய ம.வீ. இராமாநுஜாசாரியார், திருப்பனந்தாள் காசி
மடத்தின் அதிபராக விளங்கிய சொக்கலிங்கத் தம்பிரான் முதலிய பலர்
இவ்வகையில் பாடம் கேட்டவர்கள். இவர்களிடம் இருந்து ஆராய்ச்சி
முறையைக் கற்றுக் கொண்டு தாமே நூல்களை வெளியிட்டவர்கள் சிலர்.
பின்னத்தூர் நாராயணசாமி ஐயர், இ.வை. அனந்தராமையர் முதலியவர்கள்
இத்தகைய வரிசையில் இருந்தவர்கள். இவர்கள் ஏடு தேடி ஆராய்ந்து
பதிப்பித்து வெளியிட்ட நூல்களைப் படித்து அந்த முறையையும் அறிந்த சில
புலவர்கள் பழந்தமிழ் நூல்களைத் தாமே வெளியிடும் முயற்சியில்
ஈடுபட்டார்கள்.
1924 முதல் 1927 வரையில் ஐயரவர்கள் ராஜா அண்ணாமலை
செட்டியாரவர்கள் நிறுவிய மீனாட்சி தமிழ்க் கல்லூரியின் தலைவராக
இருந்தார்கள்.
அவர்கள் ஓய்வு பெற்ற பிறகு, தமிழ் நூல்களைப் பதிப்பிப்பதோடு
தம்முடைய அனுபவங்களை எளிய இனிய உரைநடையில் எழுதத்
தொடங்கினார்கள். இந்தத் துறையில் ஐயரவர்கள் தொண்டாற்றப் புகுந்தபோது
பெரியவர்களும், சிறுவர்களும், ஆடவரும், பெண்டிரும், புலவர்களும் பிறரும்
ஒருங்கே இவர்கள் எழுத்தைப் படித்து இன்புற்றார்கள். பத்திரிகைகளில்
இவர்கள் கட்டுரைகள் வெளியாயின. மாதந்தோறும் முதலில் ஐயரவர்களின்
கட்டுரை ஒன்றைத் தாங்கிச் சிறப்படைந்தது கலைமகள். தமிழ் நாட்டுப்
பத்திரிகைகளின் மலர்கள் ஐயரவர்களின் கட்டுரைகளோடு மலர்ந்தன.
தம்முடைய ஆசிரியராகிய மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம்
பிள்ளையவர்களின் வரலாற்றை வெளியிட வேண்டும் என்னும் நெடு நாள்
ஆர்வத்தால் அவர்கள் பல செய்திகளைத் தொகுத்து வைத்திருந்தார்கள்.
அவற்றைக் கொண்டு மிகவிரிவாக அச்சரித்திரத்தை இரண்டு பாகங்களாக
எழுதி முடித்தார்கள். தம்முடைய வாழ்க்கையில் எந்தப் பெரியார்களோடு பழக நேர்ந்ததோ 
அவர்களைப் பற்றிய வரலாறுகளையும் நிகழ்ச்சிகளையும் சுவை ததும்ப
எழுதினார்கள். தியாகராச செட்டியார் சரித்திரம் கோபாலகிருஷ்ண பாரதியார்
சரித்திரம், மகா வைத்தியநாதையர் சரித்திரம், கனம் கிருஷ்ணையர் வரலாறு
என்பன இவர்களுடைய அன்பையும் எழுதும் ஆற்றலையும் நன்றியறிவையும்
விளக்குகின்றன. சிலருடைய வரலாற்றைச் சுருக்கமாக எழுதினார்கள்; இந்த
வகையில் பூண்டி அரங்கநாத முதலியார், மணி ஐயர், வி.கிருஷ்ணசாமி ஐயர்,
திவான் சேஷையா சாஸ்திரிகள் முதலியவர்களைப் பற்றிய கட்டுரைகள்
வெளியாயின.
இவர்களுடைய பெருமையைத் தமிழுலகம், மெல்ல மெல்ல
உணரலாயிற்று. அரசாங்கத்தார், 1906-ஆம் ஆண்டு ‘மகாமகோபாத்தியாயர்’
என்ற பட்டத்தை அளித்தார்கள். 1917-ஆம் ஆண்டு பாரத தர்ம
மண்டலத்தார், ‘திராவிட வித்தியா பூஷணம்‘ என்ற பட்டத்தை வழங்கிச்
சிறப்பித்தார்கள். 1925-ஆம் ஆண்டு காமகோடி பீடாதிபதிகளாகிய ஸ்ரீ
சங்கராசார்ய ஸ்வாமிகளவர்கள், ‘தாக்ஷிணாத்திய கலா நிதி’ என்ற
பட்டத்தை அருளினார்கள். இவர்கள், சென்னை, மைசூர், ஆந்திரா, காசி
முதலிய இடங்களில் உள்ள பல்கலைக் கழகங்களில் பல வகையில் கலந்து
தொண்டாற்றினார்கள். 1932-இல் சென்னைப் பல்கலைக் கழகத்தார் ‘டாக்டர்’
பட்டம் அளித்தார்கள்.
1935-ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 6-ஆம் தேதி ஐயரவர்கள் 80-
ஆண்டுகள் நிறைந்து விளங்கினார்கள். அவர்களுடைய சதாபிஷேக
விழாவைத் தமிழுலகம் முழுவதும் கொண்டாடியது. சென்னையில் பல்கலைக்
கழக மண்டபத்தில் இவ்விழா மிகமிகச் சிறப்பாக நடைபெற்றது.
பழுத்த பருவத்திலும் ஐயரவர்கள் தமிழ்த் தொண்டு வீறு கொண்டு
நடைபெற்றது. குறுந்தொகையை விரிவான உரையுடன் பதிப்பித்தார்கள்.
சிவக்கொழுந்து தேசிகர், குமரகுருபரர் என்னும் புலவர்களின் பிரபந்தத்
திரட்டுகள் குறிப்புடன் வெளியாயின. தமிழன்பர்களின் விருப்பப்படி ஆனந்த
விகடனில் வாரந்தோறும் தம்முடைய வரலாற்றை “என் சரித்திரம்” என்ற
தலைப்பில் எழுதத் தொடங்கினார்கள். 1940-ஆம் ஆண்டு ஜனவரியில்
தொடங்கிய அது 122 அத்தியாயங்களோடு சுயசரித்திரமாக வரும் நிலை
பெற்றது.
1942-ஆம் ஆண்டு உலகப் பெரும்போர் நிகழ்ந்தபோது ஐயரவர்கள்
தம் குடும்பத்துடன் திருக்கழுக்குன்றம் சென்று
தங்கினார்கள். ஏப்ரல் மாதம் 28-ஆம் தேதி அந்தத்தலத்தில் தமிழ்த் தாயின்
தவப்புதல்வராகிய ஐயரவர்கள், தாம் பிறந்த காலத்தில் கண்ட நிலையை
மாற்றித் தமிழ் மக்களைப் பழந்தமிழ்ச் செல்வத்துக்கு உரிமையுடையவர்களாக
ஆக்கி, ஆசி கூறிவிட்டு இறைவன் திருவடியை அடைந்தார்கள்.
1948 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் ஆறாம் தேதி சென்னை அரசினர்
கல்லூரியில் ஐயரவர்களுடைய முழு உருவச் சிலையொன்றை நிறுவினார்கள்.
தமிழ்க் கடலின் விரிவை மீட்டும் தமிழுலகத்துக்குக் காட்டிய ஐயரவர்களின்
திருவுருவம் பெருங் கடலை நோக்கி நிற்கும்கோலத்தை இன்றும் கண்டு
மகிழலாம்.
1955-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 19-ஆம் தேதி ஐயரவர்கள் பிறந்து
நூறு ஆண்டுகள் நிறைவடைந்தன. அதனை, அவர்கள் பெயர் கொண்ட நூல்
நிலையம் மிகச் சிறப்பாகக் கொண்டாடிற்று.
ஐயரவர்களுடைய குணநலங்கள் பல சிறந்த பண்பு உள்ளவர்கள்
இவர்கள். இணையற்ற ஆசிரியர். பலவகை மாணாக்கர்களுடைய உள்ளம்
அறிந்து தக்கவண்ணம் பாடம் சொல்வதில் வல்லவர்கள். புலமைப்
பெருங்கடல்; கவிஞர்; சிறந்த எழுத்தாளர். முன்னும் பின்னும் கண்டறியாத
அற்புதப் பதிப்பாசிரியர். சுப்பிரமணிய பாரதியார் தாம் பாடிய பாட்டில்
  
 “கும்பமுனி எனத்தோன்றும் சாமிநாதப் புலவன்”
 
என்று ஐயரவர்களைச் சிறப்பிக்கிறார்.
  
  “பொதியமலைப் பிறந்த தமிழ் வாழ்வறியும்
           காலமெலாம் புலவோர் வாயில்
  துதியறிவாய் அவர்நெஞ்சின் வாழ்த்தறிவாய்
           இறப்பின்றித் துலங்குவாயே”
 
என்று அவர் பாடியிருப்பதற்குமேல் நாம் என்ன சொல்ல முடியும்?


Friday, January 31, 2014

வெண்பா எழுது நண்பா 1



"அமலா நயன்தாரா அம்பிகா ராதா
சுமலதா ரோஜா சுபஸ்ரீ - அமலாபால்
ராதிகா ஊர்வசி ரஞ்சிதா சங்கீதா
ஜோதிகா ஐஸ்வர்யா குஷ்பு"

-இது வெண்பா இலக்கணம் மாறாமல் எழுதப்பட்ட நேரிசை வெண்பா. காப்பிரைட் அடியேனுக்கே.

முதலில் எல்லாச் சொற்களையும் பிரிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும் .சொற்களைப் பிரித்தால் வருபவற்றை அசைகள் என்று அழைகிறோம்.syllables என்று ஆங்கிலத்தில் சொல்வதுபோல். அசைகள் நேர் அசை என்றோ நிரை என்றோ அழைக்கப் படுகின்றன.

நெடில், நெடில்+ ஒற்றெழுத்து, குறில் + ஒற்றெழுத்து, கடைசி எழுத்தாக இருக்கும் குறில் = நேர் அசை . உதாரணம் ரோஜா = இரண்டு நெடில்கள் எனவே இரண்டு நேர் அசைகள் அதாவது நேர்நேர்.
ரேஷ்மா = ரேஷ் +மா என்று பிரிக்கவும் ரேஷ் என்பது நெடில்+ ஒற்றெழுத்து ஆகவே இது நேர் அசை, மா என்பது நெடில் ஆகவே இதுவும் நேர் அசை ஆகவே இதுவும் நேர் நேர்.
நக்மா = நக்+ மா முதல் அசை குறில்+ ஒற்றெழுத்து ஆகவே நேர் அசை, மா =நெடில்= நேர் அசை ஆகவே இந்தச் சொல்லும் இரண்டு நேர் அசையால் ஆனது
குஷ்பு = குஷ்+பு குஷ் = குறில்+ ஒற்றெழுத்து ஆகவே நேர் அசை. பு = இறுதியாக இருக்கும் குறில் ஆகவே அதுவும் நேர் அசை .ஆகவே இதுவும் நேர் நேர்.

இதே போல் ராதா, ரேகா, நேஹா, ஆர்யா, சூர்யா, பாபு, செந்தில் ,சேரன் ,நாகேஷ், எல்லா வார்த்தைகளுமே இரண்டு நேர் அசைகளால் ஆனவை
நெற்றிக்கண் (எல்லாமே நேர் அசைதான்) திரைப்படத்தில் வரும் "நானே நல்ல ராஜா ஆனால் முள்ளில் ரோஜா
ஒன்றா ரெண்டா எந்தன் ஆசை பெண்னா என்னை வெல்லக் கூடும்"

என்ற கண்ணதாசனின் முழுப் பாடலில் வரும் அசைகள் எல்லாமே நேர் அசைதான்

இரண்டு குறில்கள் மட்டும் வந்தால் நிரை அசை . முதலில் குறில் வந்து பிறகு நெடில் வந்தால் நிரை, இரண்டு குறில்+ ஒற்றெழுத்து வந்தாலும் , குறில்+நெடில் + ஒற்றெழுத்து என்று வந்தாலும் நிரை அசை
உதாரணம் கலகல = கல+கல = இரண்டு குறில்கள் வந்ததால் கல என்பது நிரை அசை, கலகல என்னும் சொல் இரண்டு நிரை அசைகளால் ஆனது
கமல் என்ற சொல் ஒரே அசையால் ஆனது. அதுவும் நிரை அசைதான் இரண்டு குறில்கள் + ஒரு ஒற்றெழுத்து.
நிலா என்ற அசையில் முதலில் குறிலும் பின்பு நெடில் வருகிறது ஆகவே இது நிரையசை. கலா, லதா எல்லாச் சொற்களும் நிரையசை தான்
அதேபோல் குறிலுகுப் பின் நெடிலும் ஒற்றெழுத்தும் வந்தால் அதுவும் நிரை அசைதான் விரால், இரால், கமால், ஹலால்,ஹராம்

"அழகிய தமிழ்மகள் இவள் இரு
விழிகளில் எழுதிய மடல் " -இந்த இரண்டு வரிகளில் இருக்கும் எல்லாமே நிரை அசைதான்

இப்போது இரு அசைகள் சேர்வதைப் பார்க்கலாம்

இரு நேரசைகள் வருவது தேமா எனப்படும். அதாவது தே மா என்ற வார்த்தையே இரண்டு நேரசைகளால் ஆனது ரோஜா, ஆர்யா ,சூர்யா, நக்மா, குஷ்பு, கன்னல், பாம்பு, பாபு என்று எல்லாச் சொற்களும் தேமா ஆகும்.

நேர் அசைக்குப் பின் நிரை அசை வந்தால் அதன் பெயர் கூவிளம் கூ=நேர் விளம் = நிரை . அம்பிகா, சங்கவி, அங்கவை, சங்கவை, ராதிகா, ஜோதிகா, பூமிகா, பால்நிலா, காய்கறி, மாங்குயில், வேர்ப்பலா,கன்னிகை,கண்ணகி, எல்லாமே கூவிளம் தான்.

நிரை அசைக்குப் பின் நேர் அசை வருவது புளிமா . புளி= நிரை மா=நேர். உதாரணம் கனகா, கவிதா, பபிதா,ஷகீலா, பமீலா,விசித்ரா சுனந்தா, படைப்பு, மகிழ்ச்சி, அடங்கு, வணங்கி, அடாது, விடாது, அராத்து

இரண்டு நிரை அசைகள் வருவது கருவிளம் ஆகும்.ரஜினிகாந்த்,(ரஜி+நிகாந்த்) விஜயகாந்த் , கயல்விழி, கனிமொழி,சுராங்கனி, சுமலதா, கலகல, அடிதடி, பலாக்கனி, விடாப்பிடி, நடத்திய, இவை எல்லாம் கருவிளம் எனப்படும் (உதாரணம் என்பதே கருவிளம்)
இப்போது மூன்று அசைகள் சேர்வதைப் பார்க்கலாம் (கண்ணைக் கட்டுகிறதென்றால் கொஞ்ச நேரம் இங்கு குறிப்பிட்டுள்ள நடிகைகள் நடித்த படங்களைப் பற்றி நினைத்துப் பார்க்கவும்.)

தேமா+ நேர் = தேமாங்காய் (உதா :சங்கீதா, பண்புள்ள, சொல்லாதே)
தேமா+நிரை= தேமாங்கனி (உதாரணம் பச்சைக்கிளி, முத்துச்சரம், ராமானுஜம்)
புளிமா +நேர்= புளிமாங்காய் (உதாரணம் நயன்தாரா, கமல்ஹாசன்,ஹரிதாஸ்பாய் , அமலாபால், பயனுள்ள, தமிழன்னை,)
புளிமா+நிரை=புளிமாங்கனி (உதாரணம் திருப்பாற்கடல், வனிதாமணி, வனமோகினி)
கூவிளம்+நேர் =கூவிளங்காய் (உதாரணம் நீலவானம்(நீ+லவா+னம்) மோதிவிடு (மோ+திவி+டு) , செய்திடுவாய், சென்றிடுவாய்)
கூவிளம்+நிரை = கூவிளங்கனி ( உதாரணம் சொல்லியபடி, எண்ணியபடி)
கருவிளம்+நேர்=கருவிளங்காய் (உதாரணம் தமிழரசி,புளிமிளகாய் )
கருவிளம்+நிரை=கருவிளங்கனி (உதாரணம் -விழிகளில்வரும்,பழமுதிர்மரம், துடிக்குதுபுஜம், ஜெயிப்பதுநிஜம்)

(தொடரும்)

Wednesday, January 29, 2014

ஆண்டாளின் ஆனைச்சாத்தன்

"கீசு கீசென்றெங்கும் ஆனைச்சாத்தன் கலந்து
பேசின பேச்சரவம் கேட்டிலையோ பேய்ப்பெண்ணே!"

என்பது ஆண்டாளின் திருப்பாவையின் ஏழாவது பாடல். இதில் வரும் 'ஆனைச் சாத்தன்' என்பது கரிச்சான் அல்லது வலியன் குருவி என்றெல்லாம் அழைக்கப்படும் இரட்டைவால் குருவியையே (BLACK DRONGO) குறிக்கிறது என்று பலரும் தெரிவிக்கின்றனர்.


                     நெல்லையில் நான் எடுத்த புகைப்படம்- இரட்டைவால் குருவி



ஆனைச்சாத்தன் பற்றி அறிய இங்கே க்ளிக்கவும்- ஆனைச் சாத்தன் -

கிராமப் புறங்களில் பரவலாகக் காணப்படும் இப்பறவை அதிகாலையில் கீச் கீச்சென்று ஒலியெழுப்பும். தற்போது மின்சாரக் கம்பிகளில் ஜம்மென்று அமர்ந்திருப்பதைக் காணலாம். ரயிலில் செல்லும்போது பார்த்தால் தெரியும்.


இதன் குரலைக் கேளுங்கள். கீசு கீசென்ற ஆண்டாளின் அவதானிப்பை ரசிக்கலாம்.





Tuesday, November 19, 2013

தர்மவதி- தத்திதோம் என்று தித்திக்கும்

தர்மவதி- இது ஒரு அருமையான ராகம். வடக்கே இதற்குப் பைஜாமாவெல்லாம் அணிவித்து மதுவந்தி என்கிறார்கள். இதில் அரிதாக ஆனால் அட்டகாசமான திரைப்பாடல்கள் அமைந்துள்ளன.'அவன் ஒரு சரித்திரம்' என்ற திரைப்படத்தில் வரும்
"அம்மானை அழகு மிகு பெண்மானை" என்ற பாடலைக் கேட்டால் பத்து நாளுக்காவது இப்பாடலை முணுமுணுப்பீர். வாணி ஜெயராம் -டி.எம்.எஸ் ஜோடி பாடிய மிகச்சில பாடல்களுள் இதுவும் ஒன்று.இதன் prelude ஐக் கேட்டால் வேறு ஒரு பாடல் நினைவிற்கு வருகிறதா? 



அம்மானை' பாடலைக் கேட்ட உடனே எனக்கு நினைவிற்கு வரும் பாடல் 'ஒட்டகத்தைக் கட்டிக்கோ'. ஏ.ஆர் .ரஹ்மானின் ஆரம்ப காலத்தில் போட்ட ஒரு அருமையான பாடல். ஷெனாயில் அருமையான தர்மவதி!



 தர்மவதியின் ஒட்டிப்பிறந்த ராகமான மதுவந்தியில் இளையராஜா சில க்ளாசிக் பாடல்களை அமைத்துள்ளார். 'உனக்காகவே வாழ்கிறேன் ' படத்தில் வரும் இளஞ்சோலை பூத்ததா? ஒரு உன்னதமான பாடல்



அதே போல் மதுவந்தியில் வாணிஜெயராமின் இனிமையான குரலில் விரகதாபத்தை ,சோகத்தை வெளிப்படுத்தும் ஒரு அருமையான பாடல் 'ரோசாப்பூ ரவிக்காரி ' படத்தில் அமைந்த 'என்னுள்ளில் ஏதோ' என்ற பாடல்.

 மதுவந்தியில் இளையராஜாவின் மாஸ்டர்பீஸ் -விக்ரம் படத்தில் வரும் 'மீண்டும் மீண்டும் வா'எனும் பாடல்தான். இளஞ்சோலை பூத்ததா என்ற பாடலை நினைவுறுத்தும் மெட்டு. டிம்பிள் கபாடியாவை ஜொள்ளாமல் கேட்டால் மதுவந்தி தெரியும்


 

மெல்லிசை மன்னர் அமைத்த ஒரு அருமையான மதுவந்தி, மன்மதலீலை படத்தில் வரும் 'ஹலோ மை டியர் ராங்க் நம்பர்' பாடல்தான்.







ஆனால் தர்மவதியில் அமைந்த மாஸ்டர் பீஸ் என்றால் அது மரகதமணி போட்ட பாடல்தான். சித்ரா எனும் ராட்சசியின் குரலில் கீ போர்டும் மம்முட்டியின் கம்பீரமான நடிப்பும் நினைவிற்கு வரும் அந்தப் பாடல் "தத்தித்தோம்".எத்தனை முறை கேட்டிருந்தாலும் எள்முனை அளவுகூட சலிப்பு வராது.





Saturday, September 21, 2013

' பார்த்துக் கொண்டே தீர்த்துக் கொண்டே'


செப்டம்பர் மாத புதிய ஆசிரியன் இதழில் வெளிவந்த கட்டுரை

 இன்றைய தினம் (அரசியல்வாதிகள் தான் இப்படி ஆரம்பிக்க வேண்டுமா என்ன?)
இணையத்தில் நாம் என்ன தேடினாலும் கிடைக்கிறது.அடை செய்வதிலிருந்து
அணுகுண்டு செய்வது வரை செயல்முறை விளக்கத்தோடு கிடைக்கிறது. மனித
வெடிகுண்டாகச் செயல்படுவது எப்படி என்ற வீடியோ கூட இருப்பதாகத்
தகவல்.எனக்குத்  தற்சமயம் தேவை இல்லாததால் பார்க்கவில்லை.

How to .....என்று ஆங்கிலத்தில் கூகுளிட்டால் 'குரங்கைக் குளிப்பாட்டுவது
எப்படி?' 'ஈமு முட்டையை உடைப்பது எப்படி?' 'வங்கியில் வாங்கிய கடனைத்
திருப்பிச் செலுத்தாமல் இருப்பது எப்படி?' 'மாமியாரை வீட்டை விட்டு
விரட்டுவது எப்படி?' 'நேர்முகத் தேர்வில் பிட் அடிப்பது எப்படி?' என்று
எத்தனையோ விஷயங்களைத் தெரிந்து கொள்ளலாம்.மணிமேகலை பதிப்பகம் வெளியிடும்
புத்தகப் பட்டியலில் உள்ள விஷயங்கள் எல்லாவற்றயும்  தேடிக்கொள்ளலாம்
என்பதால் பழைய பென்சில் தொலைந்து போனால் கூட இணையத்தில்தான் முதலில்
தேடத் தோன்றுகிறது.

நண்பர் ஒருவர் கடை துவங்கினார். அதற்குப் பூஜை போட வந்திருந்த ஒருவர்
செல் போனைப் பார்த்தபடியே மந்திரங்களைச் சொல்லிக்
கொண்டிருந்தார்.என்னவென்று பார்த்தால் 'கணபதி ஹோமம் செய்வது எப்படி ?'
என்று ஒரு வெப்சைட்டைப் பார்த்துக் கொண்டே சொல்லிக்
கொண்டிருந்தார்.ஹோமத்தீயில் போடவும் என்று படித்துவிட்டுத் தவறுதலாகத்
தனது செல்போனையே நெருப்பில் போட்டுவிட்டார்.

அதேபோல் இணையத்தைப் பார்த்தபடியே செல்போனை ஒருவர் ரிப்பேர் செய்தார்.
அதன்பிறகு சென்ட்ரல் ஸ்டேஷனில் எந்த ரயில் எந்த பிளாட்பாரத்தில்
வந்தாலும் இவரது தொலைபேசியில் கனிவான கவனத்திற்கு அறிவிப்பு
வந்துவிடுகிறது.ஒரு சௌகரியம் என்னவென்றால் வெளியூர் சென்ற மனைவி எப்போது
ரயிலில் திரும்பி வருவார் என்று தெரிந்து உஷாராக இருக்கலாம்.

புதிதாகக் கார் வாங்கிய ஒருவர் தன் நண்பனையும் அழைத்துக் கொண்டு காரை
ஓட்டிச் சென்றார்.திடீரென்று காரை ஓட்டியபடியே நண்பரிடம் "உன் செல்போனில்
இண்டர்நெட் பார்க்க முடியுமா?" என்று கேட்டார். ஏன் என்று கேட்ட
நண்பருக்குச் சாவகாசமாகப் பதில் சொன்னார்  " கார் ஓட்டுவது எப்படி என்று
ஒரு இணையதளத்தைப் பார்த்துப் படித்தேன். பிரேக் எப்படிப் பிடிக்க
வேண்டும் என்று பார்க்க வேண்டும்"..


மருத்துவத்திலும் இதுபோல் பலர் இணையத்தைப் பார்த்தபடியே சுயவைத்தியம்
மட்டுமன்றி சுற்றுவட்டாரத்துக்கே வைத்தியம் செய்வதுண்டு.

பெரும்பாலான தகவல்கள் டுபாக்கூரானவை.ஜோதிடத்தில் 'ஆண்மூலம் அரசாளும்'
'பரணி நட்சத்திரம் தரணியாளும்' என்றெல்லாம் வாக்குகள் உண்டு. அவை ஏதோ
எதுகை மோனைக்காக உருவாக்கப் பட்டிருக்கும். உண்மையில் பரணி
நட்சத்திரக்காரர் வீடுவீடாகப் பீட்சா விற்றுக் கொண்டிருப்பார்.அதுபோலவே
மருத்துவத்திலும் இதுபோன்ற இணையதளங்களில் 'காட்டு இலந்தைப் பழம்
சாப்பிட்டால் கணையத்திற்கு நல்லது' என்பது போல் தகவல்களைத்
தெளித்திருப்பார்கள். இதை நம்பி காட்டுக்குள் போய் கரடியிடம் அடிவாங்கி
வருபவர்களும் உண்டு.

மருத்துவர்களும் சில விஷயங்களுக்காக இணையத்தைப் படித்து விஷயங்களைத்
தெரிந்து கொள்வதுண்டு.இணையம் வருவதற்கு முன் படித்த ஒரு நகைச்சுவைத்
துணுக்கு உண்டு.ஒரு டாக்டர் புத்தகத்தைப் படித்துக் கொண்டே ஒரு
நோயாளியின் வயிற்றில் அறுவை சிகிச்சை செய்து கொண்டிருந்தார்.
புத்தகத்தில் ஒரு இடத்தில் P.T.O என்று போட்டிருந்தது. அவர் நோயாளியைக்
குப்புறப் புரட்டி முதுகில் மீதி ஆபரேஷனை முடித்து விட்டார்.

அதேபோல் இணையத்தைப் பார்த்தபடியே அறுவை சிகிச்சை செய்தார் ஒரு டாக்டர்.
விளக்கம் முடிந்தவும் அந்தப் பக்கத்தை மூடிவதற்காகக் க்ளோஸ் என்று
போட்டிருந்தது. அவரும் க்ளோஸ் செய்துவிட்டார். நோயாளியை!!

Thursday, June 6, 2013

டி.எம்.எஸ் பாட்டும் பாவமும் 2

டி.எம்.எஸ் என்றாலே திரைப்பாடல்களோடு  முருகன் பாடல்களும் நம் நினைவிற்கு வரும். வாலியின் முதல்பாடலான 'கற்பனை என்றாலும்' தொடங்கி 'உள்ளம் உருகுதைய்யா' 'மண்ணானாலும் திருச்செந்தூரின்' போன்ற பாடல்கள் சம்பிரதாயமான மெல்லிசை பக்திப் பாடல்கள் என்றாலும் 'ஓராறு முகமும் ஈராறு கரமும் (ராக மாலிகை) ' 'நினைத்த போது நீ வரவேண்டும் (ஆரபி), கந்தன் திருநீறணிந்தால் (பாகேஸ்ரீ) என்று ராகங்களைக் காட்டியிருப்பார்.



அந்த முருகனுக்குப் பிடித்த ஷண்முகப்ரியா என்றால் டி.எம்.எஸ் விடுவாரா? மிகவும் பிரபலமான இந்த ராகத்தில் ஏராளமான பாடல்கள் உள்ளன. 'மாமா' மஹாதேவன் என்னும் மாமேதை போட்ட 'மறைந்திருந்தே பார்க்கும் மர்மமென்ன' விற்கு (தில்லானா மோகனாம்பாள்)  ஈடாக இனி ஒரு ஷண்முகப்ரியா அமையாது. எனையாளும் ஷண்முகா வா என்ற இடத்தில் பி.சுசீலா பாடியிருப்பது பாற்கடலைக் கடைந்தெடுத்த அமுதம். 'தம்தன தம்தன தாளம் வரும்' (புதிய வார்ப்புகள்), 'தகிட தகமி' (சலங்கை ஒலி) , 'சொல்லாயோ வாய்திறந்து' (மோகமுள்- அபாரமான பாடல்) ,'கண்ணுக்குள் நூறு நிலவா' (வேதம் புதிது-இசை தேவேந்திரன்) என்று ஏராளமான முத்துக்கள் உள்ளன.

ஷண்முகப்ரியாவில் டி.எம்.எஸ் பாடிய இரு பாடல்கள் உடனடியாக நினைவிற்கு வருகின்றன. 'அருணகிரி நாதரில் வரும் 'முத்தைத் தரு பத்தி' என்ற திருப்புகழ் அதி வேகமான பாடல். 'அணுகுண்டா' என்ற வார்த்தையை 'அனகோண்டா' என்றும் 'பிரியமா பொண்ணைக் கட்டு' என்பதை 'பெரியம்மா பொண்ணைக் கட்டு' என்றும் இப்போதுள்ள உஸ்தாதுகள் பாடி வருகின்றனர். இந்நிலையில்
 "பத்துத் தலை தத்தக் கணை தொடு
ஒற்றைக் கிரி மத்தைப் பொருதொரு
பட்டப் பகல் வட்டத் திகிரியில் இரவாக
பத்தற்கிர தத்தைக் கடவிய
பச்சைப் புயல் மெச்சத் தகுபொருள்
பட்சத்தொடு ரட்சித் தருள்வதும் ஒரு நாளே'
என்றெல்லாம் வரும் வரிகளைச் சந்தம் மாறாமல் உச்சரிக்கும் டி.எம்.எஸ் ஷண்முகப்ரியாவில் செய்துள்ளது அசுர சாதனை.என்ன ஒரு குறையென்றால் இப்பாடலில் நடிகர் டி.எம்.எஸ்ஸுக்குப் பாடகர் டி.எம்.எஸ்ஸின் குரல் பொருந்தவில்லை.இப்பாடலுக்குச் சிவாஜி நடித்து இருப்பதாகத் தான் வெகுகாலம் நினைத்திருந்தேன்.


எஸ்.வி .வெங்கட்ராமன் குறைவாகவே இசையமைத்தாலும் மறக்கமுடியாத இசையமைப்பாளர். 'காற்றினிலே வரும் கீதம்' போன்ற அருமையான பாடல்களைத் தந்திருக்கிறார்.அவரது இசையில் 'இரும்புத்திரை' திரைப்படத்தில் ஒரு அருமையான ஷண்முகப்ரியாவை அமைத்திருக்கிறார். 'நெஞ்சில் குடியிருக்கும் அன்பருக்கு நான் எழுதும்' என்ற அந்தப் பாடலில் 'கண்ணில் குடியிருக்கும் காதலிக்கு நான் எழுதும்' என்று உச்சஸ்தாயியில் எடுப்பார் டி.எம்.எஸ். மிகவும் நேர்த்தியாகவும் நளினமாகவும் இந்த ராகத்தைப் பாடியிருப்பார் ..உடன் பாடியவர் பி.லீலா.



ஆரபி ஒரு கம்பீரமான விறுவிறுப்பான ராகம். ஆனால் பெரும்பாலும் கேலி,கிண்டல் போன்ற சூழலுக்கு இந்த ராகத்தைத் திரையில் அமைத்திருக்கின்றனர். 'தம்பிக்கு எந்த ஊரு' திரைப்படத்தில் 'ஆசைக் கிளியே அரைக் கிலோ புளியே' என்று இளையராஜா இசையமைத்த ஆரபியை மலேசியா வாசுதேவன் அருமையாகப் பாடியிருப்பார். தியாகய்யரின் பஞ்சரத்ன கீர்த்தனைகளில் ஒன்றான 'சாதிஞ்சனே மனஸா' இந்த ராகத்தில்தான் அமைந்துள்ளது.இப்பாடல் கூட கண்ணனின் லீலைகளைக் கேலி செய்யும் தொனியில் தான் அமைந்துள்ளது. சோபானம் என்ற மலையாளத் திரைப்படத்தில் கே.ஜே.யேசுதாஸ் ,டி.என்.சேஷகோபாலனுடன் இணைந்து இப்பாடலைப் பிரமாதமாகப் பாடியிருப்பார்.

அப்படிப்பட்ட ஆரபியில் அமைந்த ஒரு கிராமத்து மெட்டைக் கே.வி.மஹாதேவன் தனது இசையில் அருமையாகக் கொடுத்திருப்பார். படம் முதலாளி. 'ஏரிக்கரையின் மேலே போறவளே பெண்மயிலே' என்று உச்சத்தில் ஆரம்பிக்கும் டி.எம்.எஸ் அப்பாடல் முழுதும் கிண்டல் கலந்த பாவத்துடன் மேல்ஸ்தாயிக்கும் கீழ்ஸ்தாயியிற்கும் இராட்டினம் மாதிரி பயணிப்பார். 'அன்னம் போல நடை ந டந்து 'என்று கீழே இறங்குபவர் 'ஆசைதீர நின்னு கொஞ்சம்' என்று உத்தரவிடுவது போல் மேலே ஏறுவது ஆரபியில் ஆடும் சர்க்கஸ்.



எல்லா ராகங்களையும் சொல்லிவிட்டு ராகங்களின் தலைவியான கல்யாணியை விட்டுவிட முடியுமா?. கல்யாணி ராகத்தின் மாஸ்டர் பீஸான 'மன்னவன் வந்தானடி' (திருவருட்செல்வர்-கே.வி,மகாதேவன்)  பாடலுக்குத் தனிக் கட்டுரையே எழுத வேண்டும். 'ஜனனி ஜனனி (தாய் மீகாம்பிகை), வந்தாள் மகாலக்ஷ்மியே (உயர்ந்த உள்ளம்), நதியில் ஆடும் பூவனம் (காதல் ஓவியம்- வாவ் கிளாசிக்), மஞ்சள் வெய்யில் (நண்டு) என்று இளையராஜாங்கமே நடத்தியிருக்கிறார் இந்த ராகத்தில்.

அப்படிப்பட்ட கல்யாணியில் டி.எம்.எஸ் நினைவில் நீங்காத பல பாடல்களைப் பாடியிருக்கிறார். 'முகத்தில் முகம் பார்க்கலாம்' தங்கப்பதுமை படத்தில் வரும் ஒரு மறக்க முடியாத பாடல்.டி,எம்.எஸ் பாணியிலான உச்சஸ்தாயி எடுப்பு, பிசிறற்ற சுருதி, அற்புதமான உச்சரிப்புடன் அமைந்த இப்பாடலுக்கு இசை விஸ்வநாதன் -ராமமூர்த்தி .பாடலை இயற்றியவர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம். 'விரல் நகத்தில் பவழத்தில் நிறம் பார்க்கலாம்' போன்ற வரிகளைக் கொண்ட இப்பாடலைக் காணக் கீழே லிங்க் உள்ளது. யூ ட்யூபில் இப்பாடல் இல்லை என்று நினைக்கிறேன்.
http://www.dailymotion.com/video/xj3dvt_mugathil-mugam-paarkalaam_auto#.UbCPvdJHJfU

அதே கல்யாணியில் 'சிந்தனை செய் மனமே' என்று ஒரு அற்புதமான பாடலைப் பாடியிருப்பார் டி.எம்.எஸ். 'அம்பிகாபதி' திரைப்படத்தில்- இசை ஜி.ராமநாதன். ஆனாலும் கல்யாணி ராகத்தில் டி.எம்.எஸ் முத்திரை பதித்த பாடல் என்றால் அது 'தவப்புதல்வன் 'திரைப்படத்தில் வரும் 'இசை கேட்டால் புவி அசைந்தாடும்' பாடல் தான். தான்சேனாக அப்பாடலில் வரும் சிவாஜி பாடுவது போல் லேசான ஹிந்துஸ்தானி ஜாடையில் அமைந்திருக்கும் இப்பாடல்.(கல்யாணி-மங்களகரமான பெயர் ;ஆனால் விந்திய மலைக்கு வடக்கே  இந்த ராகத்தின் பெயர் 'யமன்'. என்ன கொடுமை சார் இது?). எம்.எஸ்.விஸ்வநாதனின் அருமையான இசையமைப்பில் இந்தப் பாடலில் கல்யாணி ராகத்தின் சோகம், கருணை, கோபம்,கம்பீரம் என்று எல்லா உணர்ச்சிகளையும் டி.எம்.எஸ். வெளிப்படுத்தியிருக்கிறார் .

அபாரமான குரல்வளம், நல்ல இசை ஞானம் ,அப்பழுக்கற்ற உச்சரிப்பு இவைகளைக் கொண்டிருந்தாலும் டி.எம்.எஸ் பாடும் முறையில் ஒரு சிறு குறையாக நான் ஒன்றைக் கருதுவேன். எல்லாப் பாடலிலும் அந்தப் பாடலுக்கேற்ற உணர்ச்சியைக் கொடுத்தாலும் அதையும் மீறி ஒரு மூலையில் அந்தப் பாடலில் டி.எம்.எஸ் ஒளிந்து கொண்டு 'இந்தப்பாடலை எப்படிப் பாடுகிறேன் பார்த்தாயா?' என்று பெருமிதத்துடன் கேட்பது போல் பாடுவார்-அது சோகப் பாடல் என்றாலும் கூட. சீர்காழி, பி.சுசீலா போன்றவர்கள் தனது பெர்ஃபார்மன்ஸ்ஸை (இதற்குப் பொருத்தமான தமிழ்ச் சொல் கிடைக்கவில்லை) விட அப்பாடலின் உணர்வில் கரைந்து தன்னையே மறந்து பாடியிருப்பார்கள். டி.எம்.எஸ் எப்பொழுதும் தன்னுடைய பெர்ஃபார்மன்ஸ் பற்றிய விழிப்புணர்வுடன் இருப்பது பாடலின் மூல உணர்ச்சியை லேசாகக் குறைத்து விடும். இந்தச் சிறு குறை தவிர்த்துப் பார்த்தால் அவர் மகா கலைஞன் என்பதில் சந்தேகமில்லை. தங்கத்திலே ஒரு குறையிருந்தாலும் தரத்தினில் குறைவதுண்டோ?.

பி.கு: இன்னும் மத்யமாவதி, சாருகேசி ,கீரவாணியெல்லாம் இருக்கிறதே? ஒருவேளை இன்னொரு பாகம் வருமோ?

Tuesday, May 28, 2013

டி.எம்.எஸ் - பாட்டும் பாவமும்.

   

டி.எம்.எஸ் என்றால் நமக்கு நினைவில் வருபவை உற்சாகமாக வீரமாக எம்.ஜி.ஆருக்குப் பாடிய கொள்கைப் பாடல்கள் , சோகமாக விரக்தியுடன் சிவாஜிக்குப் பாடிய தத்துவப் பாடல்கள், இருவருக்கும் பி.சுசீலாவுடன் பாடிய எண்ணற்ற டூயட் பாடல்கள். இவற்றையெல்லாம் தாண்டி டி.எம்.எஸ் என்ற கலைஞனுக்குள் இருக்கும் கர்னாடக இசைக் கலைஞன் அடிக்கடி வெளிப்படுவதில்லை. ஆனால் ஒவ்வொரு முறை வெளிப்படும் போதும் அழுத்தமாகவும் வீரியமாகவும் வெளிப்படுகிறார். டி.எம்.எஸ்ஸைக் கர்னாடக இசையோடு பலருக்குத் தொடர்பு படுத்த முடியாது. அவரது குரலில் ஒலித்த சில ராகங்களைப் பற்றிய பதிவு இது.

தியாகராஜ பாகவதர் தான் டி.எம்.எஸ்ஸின் முன்மாதிரி. அவரது பாணியிலேயே உச்சஸ்தாயியில் பாடிப் பயின்றதன் விளைவாக கிருஷ்ண விஜயம் (1950) படத்தில் பாகவதர் பாடலை ஒத்த 'ராதே நீ என்னை விட்டுப் போகாதேடி' என்று தனது முதல் திரைப்பாடலைப் பாடினார் டி.எம்.எஸ். 'கற்பகவல்லி நின் ' போன்ற தனிப்பாடல்களில் தனதுகர்னாடக இசைப் புலமையைக் காட்டியிருப்பார். ஆனந்த பைரவி, ரஞ்சனி, பாகேஸ்ரீ, கல்யாணி, என்று கற்பகவல்லி பாடலில் அவர் பாடியிருப்பது அவர் கட்டிய ராகமாளிகை.





 கௌரி மனோகரி என்றொரு ராகம். அது கர்னாடக இசையில் அவ்வளவாகப் பிரபலமாகவில்லை. கொஞ்சம் மெதுவாக இழுத்தால் ஹிந்துஸ்தானி ஜாடை வரும். தியாகய்யர் ஏதோ பேருக்கு ஒரு கீர்த்தனை இயற்றியிருக்கிறார். ஆனால் மெல்லிசையாகத் திரையிசையில் பல நல்ல பாடல்கள் இந்த ராகத்தில் வந்திருக்கின்றன. 'கௌரி மனோகரியைக் கண்டேன், மலரே குறிஞ்சி மலரே' போன்ற அருமையான பாடல்களை மெல்லிசை மன்னர் கொடுத்திருக்கிறார்.'பூபாளம் இசைக்கும்' பொன்வானம் பன்னீர் தூவும் இந்நேரம்' என்று தன் பங்கிற்கு இளையராஜா வழங்கியிருக்கிறார்.

ஆனால் இந்த கௌரி மனோகரி ராகத்தை அடிப்படையாக வைத்து ஒரு அக்மார்க் கர்னாடக சங்கீதப் பாடலைத் தந்தவர் திரை இசைத் திலகம் கே.வி.மகாதேவன். ஆலாபனை, ஸ்வரங்கள்,ஜதிகள் என்று ஒரு மினி சங்கீத விருந்தே படைத்திருக்கிறார்.இறைவனே வந்து பாடினால் எப்படி இருக்கும் என்று நம் கண்முன்னே நிறுத்துபவர் டி.எம்.எஸ். இதுவரை யாரும் அவர் பாடியதில் பாதியளவு கூடப் பாடிக் கேட்டதில்லை. இவ்வளவு உச்சஸ்தாயியில் பிசிறில்லாமல் கம்பீரமாகப் பாடுவது அசாத்தியம். இப்படியும் பாட முடியுமா என்று ஒவ்வொரு முறையும் அதிசயிக்க வைக்கும் அப்பாடல்- பாட்டும் நானே ! படம் -திருவிளையாடல். என்னிசை இருந்தால் அசையும் உலகே ஏ ஏ என்று எவரெஸ்ட் உச்சிக்கே சென்றுவிடுவார். சினிமாவில் வந்துள்ள கர்னாடக இசையில் இது உச்சம் என்றால் மிகையில்லை என்றே நினைக்கிறேன். கௌரி மனோகரி என்றால் இந்தப் பாடல் தான் நினைவுக்கு வரும்.SYNONYMOUS WITH GOWRI MANOHARI.


பொதுவாக மெல்லிசை மன்னர் எம் எஸ் வி சுத்தமான கர்னாடக இசையை விட மெல்லிசையையே அதிகம் பயன்படுத்துவார். மாமா என்றழைக்கப்படும் கே.வி.மஹாதேவனோ தில்லானா மோகனாம்பாள்,திருவிளையாடல்,  திருவருட்செல்வர் போன்ற படங்களில் கல்யாணி(மன்னவன் வந்தானடி), ஷண்முகப்ரியா (மறைந்திருந்தே), என்று வெளுத்துக் கட்டுவார். (கே.வி எம் அவ்வளவாக இந்தத் தலைமுறையினரிடம் பிரபலமாகாதது ஒரு சோகம். சங்கராபரணம் திரைப்படத்துக்கு இவரது இசை தான் என்றால் இவர் திறமை விளங்கும் என நினைக்கிறேன்). ஆனால் எம் எஸ் வியும் சில சமயங்களில் சுத்தமான கர்னாடக இசையைத் தந்து நம்மை மயக்குவார். 

கரஹரப்ரியா என்றொரு ராகம். கௌரி மாதிரி இல்லாமல் மிகவும் பிரபலமான கனமான ராகம். 'சக்கனி ராஜ மார்க்க' என்ற தியாகைய்யர் கீர்த்தனை மிகவும் பிரபலம். இளையராஜாவும் இதை அருமையாக 'ஆனந்தம் பொங்கிட' 'நீ நடமிடும் அதிசய பொன்மயிலே' போன்று திரையில் பயன்படுத்தியிருக்கிறார். எம்.எஸ்.வி தந்திருக்கும் ஒரு கரஹரப்ரியா கௌரிமனோஹரிக்கு ஒரு 'பாட்டும் நானே' போல் இந்த ராகத்தின் அடையாளங்களில் ஒன்றானது. இதை டி.எம்.எஸ் பாடியிருக்கும் விதம் அபாரமானது. பாடலை ஜீவனோடு பாடுவது என்று சொல்வது இது தான். அந்தப் பாடலின் உயிர்த்தன்மை அவரது வெண்கலக் குரல் தான்.  வேறு யாராவது அப்பாடலைப் பாடுவதைக் கேட்டால் அந்த வித்தியாசம் விளங்கும். அந்தப் பாடல் 'மாதவிப் பொன்மயிலாள். படம் இரு மலர்கள். வானில் வரும் வில் போல் புருவம் கொண்டால் என்ற வாலியின் வரியை அவர் எடுக்கும் விதம் தேர்ந்த கர்னாடக இசைக் கலைஞனுடையது.




லதாங்கி என்பது சூது இல்லாத ஐ.பி.எல் ஆட்டம் போல் வெகு அரிதான ஆனால் கம்பீரமான ராகம். சிம்மானசத்தின் மேல் அமர்ந்து ராஜகம்பீரத்துடன் தர்பார் நடத்துவதைப் போன்று அமைந்துள்ள ராகம். ஒரு முறை நெல்லையப்பர் கோவிலில் யாருமே இல்லாத காந்திமதி அம்மன் சந்நிதியில் மருமகள் தொல்லை தாங்காமல் கோவிலுக்கு வந்துள்ள ஆச்சிகள் இருவரின் முன்னிலையில் ஒரு ஓதுவார் 'தண்டையணி வெண்டையும் கிண்கிணி சதங்கையும்' என்று ஒரு திருப்புகழை லதாங்கியில் பாடியதைக் கேட்டேன் பாருங்கள். அச்சு அசலான லதாங்கி. என்ன பண் என்று தெரியவில்லை. ஆனால் நிச்சயம் தமிழிசை கர்னாடக இசைக்குக் கொடுத்த ஏராளமான கொடைகளுள் ஒன்றாகத் தான் லதாங்கி இருக்க வேண்டும்.

அருணகிரி நாதர் படத்தில் டி.எம்.எஸ் இப்பாடலைப் பாடியிருப்பார். ராகமாலிகையானஅப்பாடலின் ஆரம்பம் லதாங்கியில் அமைந்திருக்கும் . இசை திரை இசை மேதை ஜி.ராமநாதன்.
கண்டுற கடம்புடன், சந்த மகுடங்களும்,
கஞ்ச மலர் செங்கையும், சிந்து வேலும்,கண்களும், முகங்களும், சந்திர நிறங்களும்,கண்குளிர என்றன் முன் சந்தியாவோ?

போன்ற வரிகளைத் தமிழைத் தாய்மொழியாகக் கொள்ளாத ஒருவர் அற்புத உச்சரிப்புடன் பாடியிருக்கிறார் என்றால் நம்பமுடிகிறதா? பிராமணர்களை விட அழகாக  கச்சிதமான சமிஸ்கிருத உச்சரிப்பைப் பிராமணரல்லாத எம்.எஸ்.சுப்புலக்ஷ்மியால் கொடுக்க முடிந்ததைப் போன்றதல்லவா இது? பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்பதை மீண்டும் மீண்டும் மகாகலைஞர்கள் நிரூபிப்பார்கள்.


ஆனால் 'தண்டையணி'  வெறும் பக்க  உணவு (சைட் டிஷ்) தான். லதாங்கியில் தலை வாழை இலை போட்டு ஒரு விருந்தே பரிமாறியிருக்கிறார் எம் எஸ்வி. அதுவும் கர்னாடக இசையின் பெண் மும்மூர்த்திகளுள் ஒருவரான எம் எல் வசந்தகுமாரியுடன் டி.எம்.எஸ் இணைந்து பாடியிருப்பார். சொல்லப் போனால் சில இடங்களில் டி.எம்.எஸ்,  எம் .எல்.வியையே ஓரங்கட்டியிருப்பார் தன் உணர்ச்சி மிகுந்த  பாடும் முறையால்.மன்னாதி மன்னன் படத்தில் இடம் பெற்ற 'ஆடாத மனமும் உண்டோ 'பாடல்தான் அது. 'வாடாத‌ ம‌ல‌ர்போலும் விழி பார்வையில் கை வ‌ளையோசை த‌ருமின்ப‌ இசை கார்வையில்'  'இதழ் கொஞ்சும் கனியமுதை மிஞ்சும் குர‌லில் குயில் அஞ்சும் உனைக் காணவே'  போன்ற வரிகளைக் கேட்கும் போது காதுகளில் தேனாறு ஓடுவது நிஜம்.



(பி.கு)இதே லதாங்கியில் 'சின்ன ராசாவே சித்தெறும்பு என்னைக் கடிக்குதா" என்று அமைத்த இளையராஜா ' இதே எம்.எல்.வியின் மாணவியான சுதா ரகுநாதனை வைத்து இதே லதாங்கி ராகத்தில் 'ஆடும் பதம்' என்று ஒரு பாடலைக் கொடுத்துள்ளார். படம்- பொன்மேகலை.(வந்ததா?).கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்தில் வரும்' எங்கே எனது கவிதை' பாடலில்  ஒரு இடத்தில்  'மாலை அந்திகளில்....' என்று லதாங்கியைக் காட்டுவார் ஏ.ஆர்.ரஹ்மான்.

பி.கு.2 :எச்சரிக்கை- டி.எம்.எஸ் - பாட்டும் பாவமும்  தொடரும்.