ஆகஸ்ட் மாத 'புதிய ஆசிரியன்' இதழில் வந்தது
‘விசிட்’டாத்வைதம்
(ராமானுஜரின் விசிஷ்டாத்வைதத்திற்கும் இதற்கும் எந்தத் தொடர்பும் கிடையாது)
நோயுற்றிருப்பவரை மிகவும் அச்சுறுத்துவது நோயின் தீவிரமோ, மருத்துவமனை பில்லோ கூட அல்ல. அது நோயாளிகளைப் பார்க்க வருபர்கள் சிலரது செயல்பாடுகள்தான். மருத்துவ வட்டாரங்களையும் மிரள வைக்கும் ‘விசிட்டர்’ என்ற சொல்
நோயாளிகளைப் பார்ப்பது என்பதை ஒரு திருவிழா மாதிரி உற்சாகமாகக் கிளம்புவார்கள் சிலர். “ஆஸ்பத்திரிக்குப் போய் மாமாவைப் பாத்துட்டு அப்படியே சரவணபவன்ல போய் சாப்டுட்டு வீட்டுக்குப் போலாம்” என்று திட்டமிட்டுப் படையெடுக்கும் ஒரு கும்பல்.. வசிட்டர் வாயல் கூட பிரம்ம ரிஷிப் பட்டம் வாங்கி விடலாம். ஆனால் விசிட்டராக வருபவர் வாயால் நல்ல தகவல் கிடைப்பது அபூர்வம்.
“நம்ம பரமசிவம் பையன் இப்படித்தான் சாதாரண ஜுரம்னு ட்ரீட்மெண்ட் எடுத்திட்டிருந்திருந்தான். கடைசில பாத்தா முத்தின டி.பி யாம்.” என்று திகிலூட்டுவதுடன் “இந்த ஆஸ்பத்திரியா ? நம்ம ராமசாமி வீட்டை விக்க வைச்சதே இந்த டாக்டர்தான்” என்று ஜப்தி செய்ய வந்திருக்கும் அமீனா அளவுக்கு மிரட்டுவதும் உண்டு .
நோயாளியைப் பார்பதற்கென்றே உரிய சடங்கு சாங்கியமான கட்டிதட்டிப் போன ஹார்லிக்ஸ், வாடிய ஆரஞ்சு (இவற்றை நோயாளியே பின்னர் வெளியில் விற்றுவிடுவார்) போன்றவற்றைக் கொடுத்து நோயாளியைப் பார்த்துவிட்டுச் சும்மாச் செல்பவர்கள் சிலரே. சிலருக்குத் தன் மருத்துவ அறிவை நிருபிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு விடும்.
மருத்துவருக்கே சரியாகப் புரியாத எக்ஸ்ரே, ஸ்கேன் போன்றவற்றை ஸ்டைலாகப் பிடித்து “என்ன சித்தப்பா! இங்க இவ்வளவு வெள்ளையா இருக்கு? “ என்று கருத்துக் கூறுவர் . அல்லது “ அக்கா! அரிசியை நல்லாக் களைஞ்சிருந்தா மச்சானுக்கு கிட்னில கல் வந்திருக்காதுல்ல! “ என்று இன்று ஒரு தகவல் கொடுப்பர்.
பிறகு பைநிறைய தாங்கள் கொண்டு வந்திருக்கும் அறிவுரைகளைப் பொழிந்து தள்ளும் படலம் ஆரம்பம். இன்னும் ‘மூணு வருஷத்துக்கு எந்த வேலையும் செய்யக் கூடாது !’ என்று வீட்டில் உலைவைப்பதற்கே உலைவைப்பார். அல்லது தினம் ‘அரைக்கிலோ பாகற்காய் சாப்பிட்டு கிழக்கிலோ வடக்கிலோ ஒரு கிலோமீட்டர் நடந்தால் நல்லது!” என்று என்றோ ஒரு நாள் முடி வெட்டிக் கொள்ள சலூனில் காத்திருந்த போது செய்தித்தாளில் படித்த செய்தியைப் பகிர்ந்து கொள்வார்.
விபத்தாக இருந்தால் கட்டாயம் ‘தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போச்சு’ என்ற பழமொழியை முன்மொழியாமல் போக மாட்டார்கள்.
நோயாளியிடம் தனக்கிருக்கும் அக்கறையை வெளிப்படுத்த “எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை டாக்டர். குணமாக்கிருங்க !” என்று மருத்துவர்களை உசுப்பேற்றுவதும் இவர்களே. பில்வரும் போதோ அந்தத் தொகுதிப் பக்கமே காணப்படமாட்டார்.
பல வருடங்களாக முகத்திலேயே முழிக்காமல் இருப்பவர் ‘ஒரே ஒரு நிமிஷம் பார்த்திட்டுப் போறேன்’ என்று அவசரப் பிரிவில் சண்டையிடுவது மற்றும் இவ்வளவு நாள் ஒரு வாய் தண்ணீர் கூடக் கொடுக்காதவர் “ டாக்டர் ! இவர் ஆப்பிள் ஜூஸ் சாப்பிடலாம் தானே? “ என்று கேட்பது போன்றவை சில விசிட்டர்களின் விசேஷ குணங்கள்.
இவர்களைக் கலைக்கக் கண்ணீர்புகையை விட வலிய குண்டு ஒன்றை எங்கள் பேராசிரியர்கள் சிலர் பயன் படுத்துவதுண்டு. “சார்! நீங்க எந்த ப்ளட் க்ரூப்? நோயாளிக்கு ரெண்டு பாட்டில் இரத்தம் தேவைப் படுகிறது. கொஞ்சம் கூட வாங்க” என்றால் உடனே “காலையில் ஷேவ் பண்ணும் போது நிறைய ரத்தம் போயிடுச்சு….” என்று இழுத்த படியே காணாமல் போய்விடுவார்கள்.
“கேட்டிலும் உண்டோர் உறுதி கிளைஞரை
நீட்டி அளக்குமோர் கோல்”—குறள்
நல்ல நண்பரை அளக்கும் கருவியாக இருப்பதால் கெடுதியிலும் ஒரு நன்மை உண்டு. நோயுறுதலும் அவ்வாறே.
*************************************************************************************************