Thursday, July 7, 2011

பேசுவது கிலியா?

(அச்சுப்பிழை அல்ல கிலி தான்)


புதிய ஆசிரியன் ஜூலை இதழில் வந்த கட்டுரை.


     ‘நீரா’ ரும் கடலுடுத்த தமிழகத்தின் அரசியல்வாதிகளுக்கு மட்டுமல்ல ,மருத்துவர்களுக்கும் தொலைபேசி உரையாடல் சில சமயம் கிலியை உண்டாக்கும்.
       திடீரென்று ஒரு அழைப்பு வரும் “ சார்! அந்த நீலக்கலர் மாத்திரையை எப்ப சாப்பிடணும்? காலையிலா? மாலையிலா?” என்று. அல்லது “ சார்! மூணு வருஷத்துக்கு முன்னே வந்தேன்ல! இப்பவும் அதே மாதிரி தொந்தரவு இருக்கு.அதே மாத்திரையைச் சாப்பிடட்டுமா?” என்று ஒருவர் சிவ பெருமான் மாதிரி ஆதியும் அந்தமும் தெரியாமல் புதிர் போடுவார்.
        ஒருமுறை ஒருவர் தொலைபேசியில் அழைத்துத் தன் மகன் இருமுவதைத் தொலைபேசியில் கேளுங்கள் என்று மகன் வாயருகில் ஃபோனை வைத்துக் கேட்கச் செய்தார். நல்ல வேளை அவனுக்கு வாய்வுத் தொந்தரவு இல்லை! 
   பொதுவாக மருத்துவச் செலவுகள் பர்ஸைப் பதம் பார்ப்பது போல் மருத்துவச் சொற்கள்  நம் பற்களைப் பதம் பார்க்கும். என் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் பல முறை தொலைபேசியில் ஒரு ஸ்கேன் ரிப்போர்ட்டையோ,ஆய்வகப் பரிசோதனை முடிவையோ வாசிப்பார்கள்.அப்போது ஒவ்வொரு சொல்லையும் பதம் பிரித்து அவர்கள் வாசித்து முடிப்பதற்குள் என் தலைமுடி ஒரு  இஞ்ச் கூடுதலாக வளர்ந்திருக்கும். ஒரு முறை ஒருவர் ஒரு நவீன மருத்துவ மனையில் எடுத்த ஒரு மாஸ்டர் ஹெல்த் செக்கப்பின் முப்பத்தி இரண்டு பக்கங்களையும் தொலைபேசியில் படித்தார். “போன வருடம் எடுத்ததையும் படிக்கிறேன் .கம்பேர் பண்றீங்களா? “ என்றார்.நல்ல வேலை என் தொலைபேசி அதற்குள் உயரிழந்து விட்டது. இப்பொழுதெல்லாம் அந்த முடிவுகளை மின்னஞ்சல் செய்யச் சொல்லித் தப்பித்து விட முடிகிறது.
     அதே போல் தொலை பேசி உரையாடல் மருத்துவ அறிவை மட்டுமின்றி ஆங்கில அறிவையும் சோதிப்பதாக அமையக்கூடும்.என்னுடைய ஆங்கில மொழிப்புலமையை என் மனைவி அவ்வளவாகச் சிலாகிக்காவிட்டாலும் நான் சற்று உயர்வாக எண்ணிக் கொண்டிருந்தேன்.அந்த நினைப்பில் கொஞ்சம் கொஞ்சமாக மண் விழத் தொடங்கியது தொலைபேசி உரையாடல்களால்தான்.
     நாம் அன்றாடம் தொலைபேசியில் யாருக்காவது நம் பெயர்,விலாசம்,வளர்ப்பு மிருகம் பற்றிய விவரங்கள் என்று ஏதாவது தகவல் தெரிவிக்க வேண்டியிருக்கிறது.ஒரு முறை ஒரு வங்கியிலிருந்து பேசிய தேன்மொழியாள் ஒருவள் நான் சொன்ன எல்லாச் சொற்களுக்கும் “ஸ்பெல்லிங்க் என்ன?” என்று கேட்டுக் கொண்டே இருந்தாள்.என்னுடைய படிப்பு என்ன என்று கேட்டாள்(நல்ல வேளை மதிப்பெண்களைக் கேட்கவில்லை).நான் M.D என்றதும் அதற்கும் ஸ்பெல்லிங்க் கேட்டாள்.ஒரு வேளை MD என்பதை  empty என்று நினைத்துவிட்டாள் போலும்.

       நோயாளி மருத்துவர் இருவருக்கும்
மிகவும் பயங்கரமான அனுபவம் தொலைபேசியில் மருந்துகளைச் சொல்வது.நாம் ஆஸ்பிரின் என்று சொல்லிவிட்டுத் தொலை
பேசியை வைத்துவிட முடியாது.உடனே “ஏ ஃபார்?” என்ற கேள்வி வரும்.”எஸ் ஃபார் ?” என்ற துணைக்கேள்வி வரும்.
நானும் ஆங்கில அகராதியை உருவாக்கிய சாமுவேல் ஜான்சன் ரேஞ்சுக்கு யோசிப்பேன். எனினும் வார்த்தைகள் வராமல் தடுமாறும்.ஆங்கில எழுத்துக்களில் குறைந்தபட்சம் இருபத்தைந்து எழுத்துக்களாவது எனக்குத் தொந்தரவு கொடுக்கும். (தொலைபேசியில் மருந்துகளைக் கூறுவதில் இன்னொரு சங்கடம் –அதற்கு ஃபீஸ் வாங்க முடியாது)

   ஒருமுறை இப்படித்தான் ஒருவர் தொலைபேசியில் மருந்து கேட்டார். அப்போது என் என்ற ஆங்கில எழுத்துவரும் ஒரு மருந்தைச் சொன்னே. ‘என்’ ஃபார் என்பதற்கு எந்த வார்த்தையும் நினைவுக்கு வரவில்லை. திடீரென்று என் ஃபார் நயன் தாரா என்றேன். மறுமுனையில் இருந்தவர் ஒரு ஆச்சாரமான முதியவர்.என்ன நினைத்தார் என்று தெரியவில்லை.அதன்பின் என்னிடம் வரவே இல்லை.ஒருவேளை நாராயணா என்று சொல்லியிருக்க வேண்டும் என்று எதிர்பார்த்தாரோ என்னவோ? . இல்லை அவர் த்ரிஷாவின் ரசிகராகக் கூட இருக்கலாம்.


(ஹிந்து வில் மார்ச் 27 வந்த என் ஆங்கிலக் கட்டுரையைச் சின்னாபின்னமாக்கித் தந்திருக்கிறேன்)

3 comments:

  1. ராமானுஜம் அவர்களே! " நல்லவேளை அவர் மகனுக்கு வாயுத்தொந்தரவு இல்லை" .அருமையான நகைச்சுவை .வாழ்த்துக்களுடன்---காஸ்யபன்

    ReplyDelete
  2. அருமையான நகைச்சுவை

    ReplyDelete
  3. மனம் விட்டு சிரித்தேன். நல்ல நகைச்சுவை சரளமாக வருகிறது.

    ReplyDelete