சுயம் அழியும் நேரம்
புதிய ஆசிரியன் ஜூன் 2011 இதழில் வந்தது
புதிய ஆசிரியன் ஜூன் 2011 இதழில் வந்தது
அதென்னமோ தெரியவில்லை.சுண்டலை விட சுண்டல் தரும் தாளில் உள்ள விஷயங்கள் சுவையாக இருக்கின்றன.ஒருவர் எழுதுவதைப் பலர் படிக்க வேண்டுமானால் சுண்டல்காரரிடம் அவரது புத்தகத்தைக் கொடுத்தால் போதும்.ஆனால் ஒரு கஷ்டம் .சுவாரஸ்யமாகப் படிக்கும் விஷயம் பாதியில் நின்றுவிடும். ’நாயுடன் நிற்கும் நடிகை யார்?’ என்று நம் கையில் உள்ள தாளில் உள்ள கேள்விக்கு விடை தெரியாமல் முழிப்போம்.
அன்றும் இப்படித்தான் வீட்டு வாசலில் சுண்டல் வாங்கிய தாளைப் படித்துக் கொண்டிருந்தேன்.ஏதோ ஆன்மீக இதழ் போலும். ‘யார் இந்த நான்?’ என்று ஒரு கட்டுரை. ஒரு கார்ப்பரேட் ஆனந்தா ஓஷோ,ஜே.கே, ஜென் என்று காக்டெய்லாகக் கலக்கி எழுதியிருந்தார்.
நாம் நமக்கு என்று பெயர்,இனம்,அந்தஸ்து போன்றவற்றுடன் நம்மை அடையாளப்படுத்திக் கொள்கிறோம். இந்த அடையாளங்கள் நீங்கிச் சுயம் அழிதலே ஞானம்.இவ்வாறு சென்ற கட்டுரை முடிவு தெரியாமல் பாதியில் நின்றுவிட்டது.சுயத்தை அழிக்கும் வழியைச் சுண்டல்காரரிடம் கேட்கலாம் என்றால் அவர் வெகுதூரம் சென்று விட்டார்.கட்டுரை வந்தது எந்த இதழ் என்றும் தெரியவில்லை.எடைக்குப் போட்டபின் எல்லா இதழ்களும் தங்கள் சுயத்தை இழந்து விடுகின்றனவே.
அகங்காரத்தை அழித்து ஞானம் அடையும் வழியை யோசித்துக் கொண்டிருந்தபோது ஒருவர் என்னிடம் வந்து “நீங்க தானே 53?” என்றார்.முதலில் ஒன்றும் புரியவில்லை பின்புதான் எனது வீட்டு எண்ணைச் சொல்கிறார் என்று சுதாரித்து “ஆமாம்!” என்றேன். வீட்டு வரியைக் கட்டச் சொல்லி நினைவு படுத்தி விட்டு 53 A வை அழைத்தபடிச் சென்றார் அந்த மாநகராட்சி ஊழியர்.
உள்ளே தொலைபேசி அலறியது.”நீங்க 2541494 தானே ?” என்றது பெண் குரல். என் பெயர் எண்களால் ஆனதா? அல்லது எழுத்துக்களாலா? என்றெண்ணும்போது அது தொலைபேசி எண் என்று நினைவுக்கு வந்தது.
“ஆமாம்!”
“டெலிஃபோன் லைன் கரெக்டா இருக்கான்னு செக் பண்றோம் .நான் பேசறது கேட்குதா சார்? என்றார். பதிலுரைக்கும் முன் வைத்துவிட்டார்.
வரிகட்டப் பணம் எடுக்கலாம் என்று தானியங்கி நோக்கிச் சென்றேன்.முக்கிய சாலையில் ஏ.டி.எம் இருந்ததால் ஒரே நெரிசல்.வண்டியைச் சற்று இசகு பிசகாக நிறுத்தி விட்டுச் சென்றேன்.வரிசையில் நின்ற பின் ‘எல்லாத் துறையினருக்கும் ஒரே நாளில் சம்பளம் போடுவதால் தான் ஏ.டி.எம் களில் கூட்டம் சேர்கிறது’ என்று என் சமூக பொருளாதார அறிவைக் காட்டிக் கொண்டிருந்தபோது ஒரு போக்குவரத்துப் போலீஸ் “நீங்கதானே 3322 ?” என்று கேட்டார். தலையை ஆட்டியதும் “ட்ராஃபிக்குக்கு இடைஞ்சலா இருக்கு .வண்டியை எடுங்க சார்” என்றார்.
சரி வங்கிக்கே சென்று பணமெடுக்கலாம் என்று போனால் அங்கு நல்ல கூட்டம். சற்றே அமர்ந்து அங்கு தொங்கிக் கொண்டிருக்கும் நானாவிதமான கடன் பற்றிய விளம்பரங்களில் ஏதேனும் வாங்காமல் விட்டு வைத்திருக்கிறோமா என்று பார்த்துக் கொண்டிருந்தேன். விளம்பரங்களில் தான் கடன் வாங்கியவர்களும் கொடுத்தவர்களும் சிரிக்கிறார்கள்.திடீரென அருகில் அமர்ந்திருந்த ஒருவர் “நீங்க 312 தானே?” ” உங்களைக் கூப்பிடறாங்க!” என்றார்.எனக்குத் தான் சஹஸ்ரநாமம் போல் எத்தனை பெயர்கள் (நடிகர் சஹஸ்ரநாமத்திற்கு அந்த ஒரு பெயர்தான்) என்று என் கையிலிருந்த டோக்கனைச் சரி பார்த்துப் பணம் வாங்கி வெளியே வந்தேன்.
இன்று நான் 312?நாளை யார் 312 ஆக இருப்பாரோ?ஒவ்வொரு இடத்திலும் அடையாளம் அழித்து வேடமிட்டுக் கொள்கிறோம்.
மருத்துவர்களிடம் சென்றால் கேஸ் வந்திருக்கிறது என்பார்கள்.ஆட்டோ டிரைவர் சவாரி வந்திருக்கிறது என்பார்.அவையும் நம் சுயத்தை அழிக்கும் இடங்கள் தானே என்று எண்ணியவாறே அருகிலிருந்த ஓட்டலுக்குச் சென்று காபி என்றேன்.ஏழுக்கு ஒரு காப்பி! என்று என் டேபிள் எண்ணை வைத்து என்னை அடையாளப் படுத்திச்ச சென்றார்.
ஒரு வழியாக வீடு அடைந்தேன். வாசலில் என் பெயரைப் பார்த்ததும் தான் ‘சுய’ நினைவே வந்தது.சமுதாயத்தில் கும்பலோடு இருக்கும் போது இல்லாத சுயம் தனிமையில் வந்து விடுகிறது.சமூகக் கடலில் கரையும் போது சுயம் பெருங்காயமாகிறது. ஆஹா! நமக்கும் சுயமாகவே கட்டுரை எழுத வருகிறது.இந்தத் தாடி மட்டும் சற்று வளர்ந்து தொலைத்தால் குருவாகவே ஆகிவிடலாம்! சுய சம்ஹார யோகா.கட்டணம் ஆயிரம் டாலர்கள் மட்டுமே!
(பி.கு: சுண்டல் சாப்பிட்ட பின் எறியாமல் இதைப் படித்தமைக்கு நன்றி)
hahaha... wow.... thats a good one. i enjoyed it. keep up the good work...
ReplyDeleteடாக்டர் நீங்க பாறை..
ReplyDeleteஅதாவது
Doctor you rock என்பதின் தமிழாக்கம்