Thursday, November 10, 2011

ஐ.சி.யு வில் வந்தியத்தேவன்

நவம்பர் மாத செம்மலர் இதழில் வந்தூள்ள என் கட்டுரை


வந்தியத்தேவனும் ஆழ்வார்க்கடியனும் தீவிரமாகப் பேசிக்கொண்டிருந்த போது ஒரு நர்ஸ் வந்து “டாக்டர்! மாரியம்மாள் பேஷண்டுக்கு திரும்பவும் ஃபீவரா இருக்கு!” என்றாள்.இது ஏதோ பின்நவீனத்துவ நிகழ்வல்ல.பதிமூன்று ஆண்டுகளுக்கு முன் பயிற்சி மருத்துவனாக இருந்த நான் தீவிர சிகிச்சைப் பிரிவின் அரைகுறை இருளில் பொன்னியின் செல்வன் படித்துக் கொண்டிருக்கும் போது நடந்தது.
மிகக் குறைந்த இலக்கிய வாசிப்பு கொண்டவர்கள் என்று எத்தனை கறாரான பட்டியல் போட்டாலும் அதில் முதல் மூன்று இடங்களுக்குள் மருத்துவர்கள் வருவது உறுதி.



பிளஸ் டூ விலிருந்தே (இப்பொழுதெல்லாம் ஆறாம் வகுப்பிலிருந்தே ) தொடங்கி விடும் பாட புத்தகங்களை மட்டும் வாசிக்கும் பழக்கம். தப்பித் தவறி இலக்கிய புத்தகத்தைப் படித்தாலும் நண்பர் மற்றும் பெற்றோரின் நடவடிக்கைகளால் குற்ற உணர்வு கொண்டு புத்தகத்தைத் தூக்கி எறிந்து விடுவர்.

மருத்துவப் படிப்பின் போதும் புத்தக வாசிப்பு சொல்லிக் கொள்ளும் படி இருக்காது.பயிற்சி மருத்துவ காலம் சுதந்திரமான காலம்.படிப்புச் சுமை இருக்காது. பயிற்சிக்கால ஊதியம் சொற்பமேயாயினும் பண நடமாட்டம் இருக்கும்.. எனவே பலர் சீரியஸாகக் காதலிப்பது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட ஆரம்பித்து விடுவர். அதிலும் அப்போது அலைபேசி கிடையாது.ஒருவருடன் பேச வேண்டுமென்றால் கற்கால மனிதர் போல நேரே சென்று முகத்தைப் பார்த்துத்தான் பேச வேண்டும்.


கையாலாகாத ஒருசிலரே வாசிப்பின் பக்கம் திரும்புவோம்.அத்தி மலராய் வாசிக்கும் சில பெண்களிடம் மரப்பசு,அம்மா வந்தாள் போன்ற நாவல்களைப் பரிமாறலாம்.எனினும் ஏவாளின் காலத்திலிருந்தே ஜாக்கிரதை உணர்வு மிக்க பெண்கள் இலக்கிய ரசனையை ஒருவரைக் காதலிப்பதற்கான தகுதியாகப் பார்ப்பதில்லை.”பொழுது போகவில்லை ஏதாவது புக் இருந்தாக் குடு!” என்று கேட்கும் பெண்ணிடம் ‘ஜே.ஜே சில குறிப்புகள்’ ,லா.ச.ரா என்று கொடுப்பது எவ்வளவு ஆபத்தானது என்று உணர்ந்ததும் அக்கால கட்டத்தில் தான்.மறுநாள் நாவலுடன் ஒரு முறைப்பும் சேர்ந்தே திரும்பக் கிடைக்கும்.அதுவே அவர்கள் நம்மைப் பார்க்கும் கடைசிப் பார்வை.


எனவே மேலும் தீவிர வாசிப்பே கதியாய் இருக்கும்.அலைபேசி ரீ சார்ஜ், வாகன எரிபொருள் செலவு போன்றவை இல்லாத காலம்.எங்கள் பேராசிரியர்கள் சிலர் நடந்தும் சைக்கிளிலும் வருவர்.இன்று சைக்கிள்களைச் சர்க்கஸில்தான் அதிகம் காண முடிகிறது.எனவே அநாவசியச் செலவே புத்தகம் வாங்குவதுதான்.
வாசிப்பே மனநலப் பிரிவைத் தேர்ந்தெடுக்க என்னைத் தள்ளியது.இன்றைய மனநல அறிவியல் மனித மனத்தைப் பெரும்பாலும் செரட்டோனின்,டோபமின் போன்ற ரசாயனங்களாகவே பார்க்கிறது.மனம் என்பது ஒரு வேதியல் வினை (mind is a chemical reaction) என்று சொல்லும் பாட புத்தகங்களை விட இலக்கிய வாசிப்பே மனிதனைப் புரிந்து கொள்ள உதவுகிறது.


இன்றைய சூழலில் மருத்துவத்தில் மேற்படிப்பு இல்லாமல் காலம் தள்ள முடியாது என்ற நிலை இருப்பதால் பயிற்சி மருத்துவர்கள் பாட புத்தகங்களிலிருந்து தலையை எடுப்பதேயில்லை;எப்பொழுதாவது நேரம் கிடைத்தால் நோயாளியைப் பார்ப்பதைத் தவிர. 


ஏதோ ஒரு உந்துதலில் என்முன் இருக்கும் காலச்சுவடையோ வேறு படங்கள் இல்லாமல் நீள நீள வாக்கியங்கள் கொண்ட புத்தகத்தையோ புரட்டினால் பாட புத்தகத்தைக் கண்டது போல் அதிர்ச்சி அடைந்து விடுவர்.
மருத்துவத்திலும் கிளாசிக்குகள் என்று சொல்லப்படும் சில புத்தகங்கள் இலக்கியத் தரத்தில் இருக்கும்.கிரேயின் அனாடமி (Gray’s anatomy) மருத்துவர் அல்லாதவர்களிடமும் புகழ் பெற்றது.பாய்டின் நோய்க்குறியீட்டியல் (Boyd’s pathology) புத்தகத்தைப் படிக்காதவர்கள் போலி மருத்துவராகக் கூடத் தகுதியற்றவர் என்று எங்கள் பேராசிரியர் கூறுவார். பெய்லி மற்றும் லவ் எழுதிய அறுவை சிகிச்சை நூல் மிகுந்த கவித்துவத்துடன் ஷேக்ஸ்பியரின் வரிகளுடன் இருக்கும். 


ஆனால் இப்போது மாணவர்கள் கோனார் உரை போன்ற புத்தகங்களையே படிக்கிறார்கள்.இலக்கியம், வரலாறு மற்றும் மானுடம் ஆகியவை வடிகட்டப் பட்டு வெறும் தகவல் அறிவாகவே படிப்பு இருக்கிறது.மற்ற துறையில் இருப்பவர்களை விட மருத்துவர்களுக்கு இலக்கிய வாசிப்பின் தேவை அதிகம்.எரிக் சீகலின் ‘டாக்டர்ஸ்’ எல்லா மருத்துவரும் படிக்க வேண்டிய நாவல்.ஆனால் பெரும்பாலானோர் சோமாலியா நாட்டு உள்துறை அமைச்சரைப் பற்றித் தெரிந்து கொண்ட அளவை விடக் கம்மியாகவே இந்நாவலைப் பற்றி அறிந்துள்ளனர்.


கொஞ்சம் மேல்தட்டுப் பெண்கள்,வெளி மாநிலப் பெண்கள் டான் பிரவுன் வாசிக்கின்றர்.ஏனோ அவர்களிடம் கடலை போடுவதற்காகக் கூடப் பையன்கள் புத்தகங்கள் படித்துப் பார்த்ததில்லை.யாரும் காதல் கடிதங்களைப்(அப்படி ஒன்று இருந்தால்) புத்தகத்தில் வைத்துக் கொடுப்பதில்லை.


விதிவிலக்காக ஒரு மாணவர் இருந்தார்.தீவிர சிகிச்சைப் பிரிவில் உட்கார்ந்து அதி தீவிரமாகக் கவிதை எழுதிக்கொண்டிருப்பார்.சிற்றிதழ்களில் வெளிவருவதும் உண்டு.ஒரு முறை ஒரு தாளை நீட்டினார்.நோயாளிகளைப் பற்றிய விவரங்கள் எழுதும் கேஸ் ஷீட் தாள்.அதில் அவர் ஒரு கவிதை எழுதியிருந்தார்.நோயாளியின் பெயர் என்பதற்கு நேரே கவிதையின் தலைப்பு இருந்தது.நோய் அறிதல்(டயக்னோசிஸ்) என்பதற்கு நேரே கவிதையின் கடைசி வரி ‘மர்மமாக உள்ளது’ என்று முடிந்திருந்தது.

நான் சொன்னேன் “ கவிதை நன்றாக உள்ளது.ஆனால் தயவு செய்து வேறு தாளில் எழுதி அனுப்புங்கள்.இல்லையென்றால் மருத்துவ ஆய்வுக்கட்டுரை என்றோ பின்நவீனத்துவக் கவிதை என்றோ அப்படியே பிரசுரமாகிவிடும்”

Saturday, November 5, 2011

அழகே அழகு - விரல்களே விழிகள்.

ஒரு பாடலை முணுமுணுத்துக் கொண்டிருக்கும் போது திடீரென்று மற்றொரு பாடல் வந்துவிடுகிறது. பெரும்பாலும் அந்தப் பாடல்கள் ஒரே ராகத்தைச் சேர்ந்தவையாக இருக்கின்றன. அப்படித்தான் சிவரஞ்சனியில் ஏழிசை கீதமேவை வாசித்துக் கொண்டிருக்கும் போது திடீரென்று இந்தப் பாடல் வந்துவிட்டது. பிள்ளையார் பிடிக்க .பிள்ளையாருக்குப் பிடித்த கொழுக்கட்டையாய் முடிந்த  மாதிரி.

என்ன ஒரு அற்புதமான பாடல்.சில இடங்களில் சிவரஞ்சனியின் இலக்கணங்களை மீறினாலும் இசையின் அழகு கூடுகிறதே தவிரக் குறைவதில்லை.ஒரு புலனால் மற்றொரு புலனை உணர்வதற்குப் பெயர் synaesthesia. உ-ம் இசையைப் பார்ப்பது. இங்கு விழிப்புலன் இல்லாத ஒருவன் தன் விரல்களால் காண்கிறான். கவியரசு கண்ணதாசனின் வரிகள். அந்திமழையாய்ப் பொழிய ஆரம்பித்த வைரமுத்துவின் ஆவேசக் காதல் வரிகளுக்கு இடையே மெல்லிய தூறலாய்ப் பெய்யும் கவியரசின் கவிச்சாரல் இந்தப் பாடல்

அழகே அழகு.. தேவதை...
ஆயிரம் பாவலர் எழுதும் காவியம்

கூந்தல் வண்ணம் மேகம் போல
குளிர்ந்து நின்றது
கொஞ்சுகின்ற செவிகள் இரண்டும்
கேள்வி ஆனது
பொன்முகம் தாமரை
பூக்களே கண்களோ
மன கண்கள் சொல்லும் பொன்னோவியம்

சிப்பி போல இதழ்கள் ரெண்டும்
மின்னுகின்றன
சேர்ந்த பல்லின் வரிசையாவும்
முல்லை போன்றன
மூங்கிலே தோள்களோ
தேன்குழல் விரல்களோ
ஒரு அஙகம் கைகள் அறியாதது

பூ உலாவும் கொடியை போல
இடையை காண்கிறேன்
போக போக வாழை போல
அழகை காண்கிறேன்
மாவிலை பாதமோ
மங்கை நீ வேதமோ
இந்த மண்ணில் இது போல் பெண்ணில்லயே