ரதவீதிகளில் உலவும் தேர்
சென்ற வருடம் ஜனவரி மாதம் நெல்லையில் சாகித்ய அகாடமி விருது பெற்ற திரு நாஞ்சில்நாடன் அவர்களுக்குப் பாராட்டு விழா நடந்தது. அங்கு வண்ணதாசன், நாறும்பூநாதன் என்று பல இலக்கியப் பிரமுகர்களைக் கண்டேன். இவர்கள் அனைவரும் வங்கியில் பணியாற்றுபவர்கள்/ ஆற்றியவர்கள் என்ற தகவல் அறிந்து வங்கிப் பணிக்கும் இலக்கியத்துக்கும் உள்ள தொடர்பை எண்ணிக் கொண்டிருந்தேன். நண்பர் எஸ்.வி.வேணுகோபாலனின் தொடர்பு மின்னஞ்சல்கள் மூலம் அப்போதுதான் கிடைத்த சமயம்.
சமீபத்தில் ஒரு கட்டுரைத் தொகுப்பைப் படிக்கும் போது இன்னொரு பிரபலமும் வங்கியில் பணியாற்றியவர் என்ற தகவல் அறிந்து வியந்தேன்.அவர் கவிஞர் கலாப்ரியா. ‘உருள் பெருந்தேர்’ என்ற அவரது சுயசரிதைத் தன்மையுடைய கட்டுரைகள் பெரிதும் வெளிப்படையாகவும் நேர்மையாகவும் அமைந்திருக்கின்றன
Add caption |
ஒரு கோவில்.அதைச் சுற்றி நான்கு ரதவீதிகள். இவ்வளவுதான் நெல்லை டவுண். ஆனால் அவற்றில்தான் எத்தனை இலக்கியவாதிகளின் காலடிகள் .எத்தனை எத்தனை கதைகள்.கதைமாந்தர்கள்..
சிறந்த கவிஞர் என்றாலும் கூட பூடகமான,தத்துவார்த்தமான மொழிநடையில் இல்லாமல் மிகவும் இயல்பான மொழியில் அந்தக்காலக் கட்டத்தில் வாழ்ந்த ஒரு மனிதர் நேரில் பேசுவது போல் எழுதியிருக்கிறார்.கவித்துவம் என்பது அவர் எழுத்துக்களில் பதிவு செய்யும் கணங்களிலும் மனித உணர்வுகளிலும்தான் வெளிப்படுகிறது. செயற்கையான மிகையான வர்ணனைகளோ நாடகத்தன்மையோ துளியும் இல்லை.
அறுபது எழுபதுகளில் உள்ள தலைமுறையினரின் வாழ்க்கையின் கல்வி,பள்ளி, கல்லூரி, கொண்டாட்டங்கள், வேலையில்லா திண்டாட்டம், அக்காலத்தில் புழங்கிய கலைச்சொற்கள் ‘விவா’ (மேலதிக விவரத்திற்குப் புத்தகத்தைப்ப் பார்க்கவும்) , காதல், முக்கியமாக சினிமா போன்றவை கட்டுரைகளின் பின்னோட்டமாக வந்து போகின்றன.அந்தக் காலகட்டத்தின் ஆவணமாகவுமாகின்றன.
இக்கட்டுரைகளில் வரும் கதைமாந்தர்களை வேறு பெயர்களில் நாம் அடிக்கடி சந்தித்திருக்கிறோம். பெரும்பாலும் மனிதர்களின் வீழ்ச்சி அடையும் தருணங்களைப் பதிவுசெய்கின்றன.வாழ்ந்து கெட்ட மைனர்கள், ஜமீந்தார்கள், அவர்களது அதிகாரபூர்வமற்ற வாரிசுகள், ஊரைவிட்டு ஓடிப் போனவர்கள், ஒரு டிரங்க்பெட்டியோடு போகும் திசை தெரியாமல் ரயிலேறும் குடும்பம், திடீரென்று தற்கொலை செய்து கொள்பவர்கள், தொலைந்த வாட்ச்சைத் தேடிக் குறிசொல்பவரைத் தேடுபவர்கள் என்று பலவிதமான மாந்தர்கள்.
தோசைக்கல்லில் விழுந்து நெஞ்சில் சூடு கண்ட சமையல்காரருக்கும் மனைவிக்குமான பிணக்கு, சொத்திற்காக ஒரு முறையில் தங்கை உறவுள்ளவளையே ஜமீந்தார் மணப்பது, கண்டக்டர்கள் தொப்பிக்காசு வாங்குவது போன்ற சில அபூர்வமான கணங்களும் வந்து போகின்றன
பல இடங்களில் வாழ்வின் தரிசனங்களும் கவித்துவக் கணங்களும் பாலச்சந்திரன் சுள்ளிக்காடின் ‘சிதம்பர நினைவுகளை’ நினைவு படுத்துகின்றன. தனது காதல் முயற்சிகள், நண்பனின் வருங்கால மனைவிக்கேக் காதல் கடிதம் கொடுத்தது, லாகிரி வஸ்துக்களுடனான தொடர்புகள், தற்கொலை முயற்சிகள் என்று அபூர்வமான நேர்மையுடன் அமைந்திருக்கின்றது இந்நூல்.
நதிக்கரை(BANK) களில் தான் நாகரிகமும் இலக்கியமும் தோன்றின என்பது வரலாறு. நதிக்கரைகளில் அமர்ந்து பணத்தைக் கடன் கொடுப்பவர்களால் தான் வங்கிகளுக்கே BANK என்ற பெயர் வந்தது என்றுகூடக் கூறுவர். ஒரு வேளை அதுதான் வங்கிகளுக்கும் இலக்கியத்துக்கும் உள்ள தொடர்புக்குக் காரணமாக இருக்கலாம் . தாமிரபரணி நதிக்கரையும் ஒரு கதைவங்கிதான். நானும் கலாப்ரியாவின் அந்த BANK ஐச் சேர்ந்தவன் என்பதில் ஒரு சிறு பெருமை.
(உருள்பெருந்தேர் சந்தியா பதிப்பகம் 232 பக்கங்கள் விலை ரூ.150/)
No comments:
Post a Comment