Tuesday, November 19, 2013

தர்மவதி- தத்திதோம் என்று தித்திக்கும்

தர்மவதி- இது ஒரு அருமையான ராகம். வடக்கே இதற்குப் பைஜாமாவெல்லாம் அணிவித்து மதுவந்தி என்கிறார்கள். இதில் அரிதாக ஆனால் அட்டகாசமான திரைப்பாடல்கள் அமைந்துள்ளன.'அவன் ஒரு சரித்திரம்' என்ற திரைப்படத்தில் வரும்
"அம்மானை அழகு மிகு பெண்மானை" என்ற பாடலைக் கேட்டால் பத்து நாளுக்காவது இப்பாடலை முணுமுணுப்பீர். வாணி ஜெயராம் -டி.எம்.எஸ் ஜோடி பாடிய மிகச்சில பாடல்களுள் இதுவும் ஒன்று.இதன் prelude ஐக் கேட்டால் வேறு ஒரு பாடல் நினைவிற்கு வருகிறதா? 



அம்மானை' பாடலைக் கேட்ட உடனே எனக்கு நினைவிற்கு வரும் பாடல் 'ஒட்டகத்தைக் கட்டிக்கோ'. ஏ.ஆர் .ரஹ்மானின் ஆரம்ப காலத்தில் போட்ட ஒரு அருமையான பாடல். ஷெனாயில் அருமையான தர்மவதி!



 தர்மவதியின் ஒட்டிப்பிறந்த ராகமான மதுவந்தியில் இளையராஜா சில க்ளாசிக் பாடல்களை அமைத்துள்ளார். 'உனக்காகவே வாழ்கிறேன் ' படத்தில் வரும் இளஞ்சோலை பூத்ததா? ஒரு உன்னதமான பாடல்



அதே போல் மதுவந்தியில் வாணிஜெயராமின் இனிமையான குரலில் விரகதாபத்தை ,சோகத்தை வெளிப்படுத்தும் ஒரு அருமையான பாடல் 'ரோசாப்பூ ரவிக்காரி ' படத்தில் அமைந்த 'என்னுள்ளில் ஏதோ' என்ற பாடல்.

 மதுவந்தியில் இளையராஜாவின் மாஸ்டர்பீஸ் -விக்ரம் படத்தில் வரும் 'மீண்டும் மீண்டும் வா'எனும் பாடல்தான். இளஞ்சோலை பூத்ததா என்ற பாடலை நினைவுறுத்தும் மெட்டு. டிம்பிள் கபாடியாவை ஜொள்ளாமல் கேட்டால் மதுவந்தி தெரியும்


 

மெல்லிசை மன்னர் அமைத்த ஒரு அருமையான மதுவந்தி, மன்மதலீலை படத்தில் வரும் 'ஹலோ மை டியர் ராங்க் நம்பர்' பாடல்தான்.







ஆனால் தர்மவதியில் அமைந்த மாஸ்டர் பீஸ் என்றால் அது மரகதமணி போட்ட பாடல்தான். சித்ரா எனும் ராட்சசியின் குரலில் கீ போர்டும் மம்முட்டியின் கம்பீரமான நடிப்பும் நினைவிற்கு வரும் அந்தப் பாடல் "தத்தித்தோம்".எத்தனை முறை கேட்டிருந்தாலும் எள்முனை அளவுகூட சலிப்பு வராது.





Saturday, September 21, 2013

' பார்த்துக் கொண்டே தீர்த்துக் கொண்டே'


செப்டம்பர் மாத புதிய ஆசிரியன் இதழில் வெளிவந்த கட்டுரை

 இன்றைய தினம் (அரசியல்வாதிகள் தான் இப்படி ஆரம்பிக்க வேண்டுமா என்ன?)
இணையத்தில் நாம் என்ன தேடினாலும் கிடைக்கிறது.அடை செய்வதிலிருந்து
அணுகுண்டு செய்வது வரை செயல்முறை விளக்கத்தோடு கிடைக்கிறது. மனித
வெடிகுண்டாகச் செயல்படுவது எப்படி என்ற வீடியோ கூட இருப்பதாகத்
தகவல்.எனக்குத்  தற்சமயம் தேவை இல்லாததால் பார்க்கவில்லை.

How to .....என்று ஆங்கிலத்தில் கூகுளிட்டால் 'குரங்கைக் குளிப்பாட்டுவது
எப்படி?' 'ஈமு முட்டையை உடைப்பது எப்படி?' 'வங்கியில் வாங்கிய கடனைத்
திருப்பிச் செலுத்தாமல் இருப்பது எப்படி?' 'மாமியாரை வீட்டை விட்டு
விரட்டுவது எப்படி?' 'நேர்முகத் தேர்வில் பிட் அடிப்பது எப்படி?' என்று
எத்தனையோ விஷயங்களைத் தெரிந்து கொள்ளலாம்.மணிமேகலை பதிப்பகம் வெளியிடும்
புத்தகப் பட்டியலில் உள்ள விஷயங்கள் எல்லாவற்றயும்  தேடிக்கொள்ளலாம்
என்பதால் பழைய பென்சில் தொலைந்து போனால் கூட இணையத்தில்தான் முதலில்
தேடத் தோன்றுகிறது.

நண்பர் ஒருவர் கடை துவங்கினார். அதற்குப் பூஜை போட வந்திருந்த ஒருவர்
செல் போனைப் பார்த்தபடியே மந்திரங்களைச் சொல்லிக்
கொண்டிருந்தார்.என்னவென்று பார்த்தால் 'கணபதி ஹோமம் செய்வது எப்படி ?'
என்று ஒரு வெப்சைட்டைப் பார்த்துக் கொண்டே சொல்லிக்
கொண்டிருந்தார்.ஹோமத்தீயில் போடவும் என்று படித்துவிட்டுத் தவறுதலாகத்
தனது செல்போனையே நெருப்பில் போட்டுவிட்டார்.

அதேபோல் இணையத்தைப் பார்த்தபடியே செல்போனை ஒருவர் ரிப்பேர் செய்தார்.
அதன்பிறகு சென்ட்ரல் ஸ்டேஷனில் எந்த ரயில் எந்த பிளாட்பாரத்தில்
வந்தாலும் இவரது தொலைபேசியில் கனிவான கவனத்திற்கு அறிவிப்பு
வந்துவிடுகிறது.ஒரு சௌகரியம் என்னவென்றால் வெளியூர் சென்ற மனைவி எப்போது
ரயிலில் திரும்பி வருவார் என்று தெரிந்து உஷாராக இருக்கலாம்.

புதிதாகக் கார் வாங்கிய ஒருவர் தன் நண்பனையும் அழைத்துக் கொண்டு காரை
ஓட்டிச் சென்றார்.திடீரென்று காரை ஓட்டியபடியே நண்பரிடம் "உன் செல்போனில்
இண்டர்நெட் பார்க்க முடியுமா?" என்று கேட்டார். ஏன் என்று கேட்ட
நண்பருக்குச் சாவகாசமாகப் பதில் சொன்னார்  " கார் ஓட்டுவது எப்படி என்று
ஒரு இணையதளத்தைப் பார்த்துப் படித்தேன். பிரேக் எப்படிப் பிடிக்க
வேண்டும் என்று பார்க்க வேண்டும்"..


மருத்துவத்திலும் இதுபோல் பலர் இணையத்தைப் பார்த்தபடியே சுயவைத்தியம்
மட்டுமன்றி சுற்றுவட்டாரத்துக்கே வைத்தியம் செய்வதுண்டு.

பெரும்பாலான தகவல்கள் டுபாக்கூரானவை.ஜோதிடத்தில் 'ஆண்மூலம் அரசாளும்'
'பரணி நட்சத்திரம் தரணியாளும்' என்றெல்லாம் வாக்குகள் உண்டு. அவை ஏதோ
எதுகை மோனைக்காக உருவாக்கப் பட்டிருக்கும். உண்மையில் பரணி
நட்சத்திரக்காரர் வீடுவீடாகப் பீட்சா விற்றுக் கொண்டிருப்பார்.அதுபோலவே
மருத்துவத்திலும் இதுபோன்ற இணையதளங்களில் 'காட்டு இலந்தைப் பழம்
சாப்பிட்டால் கணையத்திற்கு நல்லது' என்பது போல் தகவல்களைத்
தெளித்திருப்பார்கள். இதை நம்பி காட்டுக்குள் போய் கரடியிடம் அடிவாங்கி
வருபவர்களும் உண்டு.

மருத்துவர்களும் சில விஷயங்களுக்காக இணையத்தைப் படித்து விஷயங்களைத்
தெரிந்து கொள்வதுண்டு.இணையம் வருவதற்கு முன் படித்த ஒரு நகைச்சுவைத்
துணுக்கு உண்டு.ஒரு டாக்டர் புத்தகத்தைப் படித்துக் கொண்டே ஒரு
நோயாளியின் வயிற்றில் அறுவை சிகிச்சை செய்து கொண்டிருந்தார்.
புத்தகத்தில் ஒரு இடத்தில் P.T.O என்று போட்டிருந்தது. அவர் நோயாளியைக்
குப்புறப் புரட்டி முதுகில் மீதி ஆபரேஷனை முடித்து விட்டார்.

அதேபோல் இணையத்தைப் பார்த்தபடியே அறுவை சிகிச்சை செய்தார் ஒரு டாக்டர்.
விளக்கம் முடிந்தவும் அந்தப் பக்கத்தை மூடிவதற்காகக் க்ளோஸ் என்று
போட்டிருந்தது. அவரும் க்ளோஸ் செய்துவிட்டார். நோயாளியை!!

Thursday, June 6, 2013

டி.எம்.எஸ் பாட்டும் பாவமும் 2

டி.எம்.எஸ் என்றாலே திரைப்பாடல்களோடு  முருகன் பாடல்களும் நம் நினைவிற்கு வரும். வாலியின் முதல்பாடலான 'கற்பனை என்றாலும்' தொடங்கி 'உள்ளம் உருகுதைய்யா' 'மண்ணானாலும் திருச்செந்தூரின்' போன்ற பாடல்கள் சம்பிரதாயமான மெல்லிசை பக்திப் பாடல்கள் என்றாலும் 'ஓராறு முகமும் ஈராறு கரமும் (ராக மாலிகை) ' 'நினைத்த போது நீ வரவேண்டும் (ஆரபி), கந்தன் திருநீறணிந்தால் (பாகேஸ்ரீ) என்று ராகங்களைக் காட்டியிருப்பார்.



அந்த முருகனுக்குப் பிடித்த ஷண்முகப்ரியா என்றால் டி.எம்.எஸ் விடுவாரா? மிகவும் பிரபலமான இந்த ராகத்தில் ஏராளமான பாடல்கள் உள்ளன. 'மாமா' மஹாதேவன் என்னும் மாமேதை போட்ட 'மறைந்திருந்தே பார்க்கும் மர்மமென்ன' விற்கு (தில்லானா மோகனாம்பாள்)  ஈடாக இனி ஒரு ஷண்முகப்ரியா அமையாது. எனையாளும் ஷண்முகா வா என்ற இடத்தில் பி.சுசீலா பாடியிருப்பது பாற்கடலைக் கடைந்தெடுத்த அமுதம். 'தம்தன தம்தன தாளம் வரும்' (புதிய வார்ப்புகள்), 'தகிட தகமி' (சலங்கை ஒலி) , 'சொல்லாயோ வாய்திறந்து' (மோகமுள்- அபாரமான பாடல்) ,'கண்ணுக்குள் நூறு நிலவா' (வேதம் புதிது-இசை தேவேந்திரன்) என்று ஏராளமான முத்துக்கள் உள்ளன.

ஷண்முகப்ரியாவில் டி.எம்.எஸ் பாடிய இரு பாடல்கள் உடனடியாக நினைவிற்கு வருகின்றன. 'அருணகிரி நாதரில் வரும் 'முத்தைத் தரு பத்தி' என்ற திருப்புகழ் அதி வேகமான பாடல். 'அணுகுண்டா' என்ற வார்த்தையை 'அனகோண்டா' என்றும் 'பிரியமா பொண்ணைக் கட்டு' என்பதை 'பெரியம்மா பொண்ணைக் கட்டு' என்றும் இப்போதுள்ள உஸ்தாதுகள் பாடி வருகின்றனர். இந்நிலையில்
 "பத்துத் தலை தத்தக் கணை தொடு
ஒற்றைக் கிரி மத்தைப் பொருதொரு
பட்டப் பகல் வட்டத் திகிரியில் இரவாக
பத்தற்கிர தத்தைக் கடவிய
பச்சைப் புயல் மெச்சத் தகுபொருள்
பட்சத்தொடு ரட்சித் தருள்வதும் ஒரு நாளே'
என்றெல்லாம் வரும் வரிகளைச் சந்தம் மாறாமல் உச்சரிக்கும் டி.எம்.எஸ் ஷண்முகப்ரியாவில் செய்துள்ளது அசுர சாதனை.என்ன ஒரு குறையென்றால் இப்பாடலில் நடிகர் டி.எம்.எஸ்ஸுக்குப் பாடகர் டி.எம்.எஸ்ஸின் குரல் பொருந்தவில்லை.இப்பாடலுக்குச் சிவாஜி நடித்து இருப்பதாகத் தான் வெகுகாலம் நினைத்திருந்தேன்.


எஸ்.வி .வெங்கட்ராமன் குறைவாகவே இசையமைத்தாலும் மறக்கமுடியாத இசையமைப்பாளர். 'காற்றினிலே வரும் கீதம்' போன்ற அருமையான பாடல்களைத் தந்திருக்கிறார்.அவரது இசையில் 'இரும்புத்திரை' திரைப்படத்தில் ஒரு அருமையான ஷண்முகப்ரியாவை அமைத்திருக்கிறார். 'நெஞ்சில் குடியிருக்கும் அன்பருக்கு நான் எழுதும்' என்ற அந்தப் பாடலில் 'கண்ணில் குடியிருக்கும் காதலிக்கு நான் எழுதும்' என்று உச்சஸ்தாயியில் எடுப்பார் டி.எம்.எஸ். மிகவும் நேர்த்தியாகவும் நளினமாகவும் இந்த ராகத்தைப் பாடியிருப்பார் ..உடன் பாடியவர் பி.லீலா.



ஆரபி ஒரு கம்பீரமான விறுவிறுப்பான ராகம். ஆனால் பெரும்பாலும் கேலி,கிண்டல் போன்ற சூழலுக்கு இந்த ராகத்தைத் திரையில் அமைத்திருக்கின்றனர். 'தம்பிக்கு எந்த ஊரு' திரைப்படத்தில் 'ஆசைக் கிளியே அரைக் கிலோ புளியே' என்று இளையராஜா இசையமைத்த ஆரபியை மலேசியா வாசுதேவன் அருமையாகப் பாடியிருப்பார். தியாகய்யரின் பஞ்சரத்ன கீர்த்தனைகளில் ஒன்றான 'சாதிஞ்சனே மனஸா' இந்த ராகத்தில்தான் அமைந்துள்ளது.இப்பாடல் கூட கண்ணனின் லீலைகளைக் கேலி செய்யும் தொனியில் தான் அமைந்துள்ளது. சோபானம் என்ற மலையாளத் திரைப்படத்தில் கே.ஜே.யேசுதாஸ் ,டி.என்.சேஷகோபாலனுடன் இணைந்து இப்பாடலைப் பிரமாதமாகப் பாடியிருப்பார்.

அப்படிப்பட்ட ஆரபியில் அமைந்த ஒரு கிராமத்து மெட்டைக் கே.வி.மஹாதேவன் தனது இசையில் அருமையாகக் கொடுத்திருப்பார். படம் முதலாளி. 'ஏரிக்கரையின் மேலே போறவளே பெண்மயிலே' என்று உச்சத்தில் ஆரம்பிக்கும் டி.எம்.எஸ் அப்பாடல் முழுதும் கிண்டல் கலந்த பாவத்துடன் மேல்ஸ்தாயிக்கும் கீழ்ஸ்தாயியிற்கும் இராட்டினம் மாதிரி பயணிப்பார். 'அன்னம் போல நடை ந டந்து 'என்று கீழே இறங்குபவர் 'ஆசைதீர நின்னு கொஞ்சம்' என்று உத்தரவிடுவது போல் மேலே ஏறுவது ஆரபியில் ஆடும் சர்க்கஸ்.



எல்லா ராகங்களையும் சொல்லிவிட்டு ராகங்களின் தலைவியான கல்யாணியை விட்டுவிட முடியுமா?. கல்யாணி ராகத்தின் மாஸ்டர் பீஸான 'மன்னவன் வந்தானடி' (திருவருட்செல்வர்-கே.வி,மகாதேவன்)  பாடலுக்குத் தனிக் கட்டுரையே எழுத வேண்டும். 'ஜனனி ஜனனி (தாய் மீகாம்பிகை), வந்தாள் மகாலக்ஷ்மியே (உயர்ந்த உள்ளம்), நதியில் ஆடும் பூவனம் (காதல் ஓவியம்- வாவ் கிளாசிக்), மஞ்சள் வெய்யில் (நண்டு) என்று இளையராஜாங்கமே நடத்தியிருக்கிறார் இந்த ராகத்தில்.

அப்படிப்பட்ட கல்யாணியில் டி.எம்.எஸ் நினைவில் நீங்காத பல பாடல்களைப் பாடியிருக்கிறார். 'முகத்தில் முகம் பார்க்கலாம்' தங்கப்பதுமை படத்தில் வரும் ஒரு மறக்க முடியாத பாடல்.டி,எம்.எஸ் பாணியிலான உச்சஸ்தாயி எடுப்பு, பிசிறற்ற சுருதி, அற்புதமான உச்சரிப்புடன் அமைந்த இப்பாடலுக்கு இசை விஸ்வநாதன் -ராமமூர்த்தி .பாடலை இயற்றியவர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம். 'விரல் நகத்தில் பவழத்தில் நிறம் பார்க்கலாம்' போன்ற வரிகளைக் கொண்ட இப்பாடலைக் காணக் கீழே லிங்க் உள்ளது. யூ ட்யூபில் இப்பாடல் இல்லை என்று நினைக்கிறேன்.
http://www.dailymotion.com/video/xj3dvt_mugathil-mugam-paarkalaam_auto#.UbCPvdJHJfU

அதே கல்யாணியில் 'சிந்தனை செய் மனமே' என்று ஒரு அற்புதமான பாடலைப் பாடியிருப்பார் டி.எம்.எஸ். 'அம்பிகாபதி' திரைப்படத்தில்- இசை ஜி.ராமநாதன். ஆனாலும் கல்யாணி ராகத்தில் டி.எம்.எஸ் முத்திரை பதித்த பாடல் என்றால் அது 'தவப்புதல்வன் 'திரைப்படத்தில் வரும் 'இசை கேட்டால் புவி அசைந்தாடும்' பாடல் தான். தான்சேனாக அப்பாடலில் வரும் சிவாஜி பாடுவது போல் லேசான ஹிந்துஸ்தானி ஜாடையில் அமைந்திருக்கும் இப்பாடல்.(கல்யாணி-மங்களகரமான பெயர் ;ஆனால் விந்திய மலைக்கு வடக்கே  இந்த ராகத்தின் பெயர் 'யமன்'. என்ன கொடுமை சார் இது?). எம்.எஸ்.விஸ்வநாதனின் அருமையான இசையமைப்பில் இந்தப் பாடலில் கல்யாணி ராகத்தின் சோகம், கருணை, கோபம்,கம்பீரம் என்று எல்லா உணர்ச்சிகளையும் டி.எம்.எஸ். வெளிப்படுத்தியிருக்கிறார் .

அபாரமான குரல்வளம், நல்ல இசை ஞானம் ,அப்பழுக்கற்ற உச்சரிப்பு இவைகளைக் கொண்டிருந்தாலும் டி.எம்.எஸ் பாடும் முறையில் ஒரு சிறு குறையாக நான் ஒன்றைக் கருதுவேன். எல்லாப் பாடலிலும் அந்தப் பாடலுக்கேற்ற உணர்ச்சியைக் கொடுத்தாலும் அதையும் மீறி ஒரு மூலையில் அந்தப் பாடலில் டி.எம்.எஸ் ஒளிந்து கொண்டு 'இந்தப்பாடலை எப்படிப் பாடுகிறேன் பார்த்தாயா?' என்று பெருமிதத்துடன் கேட்பது போல் பாடுவார்-அது சோகப் பாடல் என்றாலும் கூட. சீர்காழி, பி.சுசீலா போன்றவர்கள் தனது பெர்ஃபார்மன்ஸ்ஸை (இதற்குப் பொருத்தமான தமிழ்ச் சொல் கிடைக்கவில்லை) விட அப்பாடலின் உணர்வில் கரைந்து தன்னையே மறந்து பாடியிருப்பார்கள். டி.எம்.எஸ் எப்பொழுதும் தன்னுடைய பெர்ஃபார்மன்ஸ் பற்றிய விழிப்புணர்வுடன் இருப்பது பாடலின் மூல உணர்ச்சியை லேசாகக் குறைத்து விடும். இந்தச் சிறு குறை தவிர்த்துப் பார்த்தால் அவர் மகா கலைஞன் என்பதில் சந்தேகமில்லை. தங்கத்திலே ஒரு குறையிருந்தாலும் தரத்தினில் குறைவதுண்டோ?.

பி.கு: இன்னும் மத்யமாவதி, சாருகேசி ,கீரவாணியெல்லாம் இருக்கிறதே? ஒருவேளை இன்னொரு பாகம் வருமோ?

Tuesday, May 28, 2013

டி.எம்.எஸ் - பாட்டும் பாவமும்.

   

டி.எம்.எஸ் என்றால் நமக்கு நினைவில் வருபவை உற்சாகமாக வீரமாக எம்.ஜி.ஆருக்குப் பாடிய கொள்கைப் பாடல்கள் , சோகமாக விரக்தியுடன் சிவாஜிக்குப் பாடிய தத்துவப் பாடல்கள், இருவருக்கும் பி.சுசீலாவுடன் பாடிய எண்ணற்ற டூயட் பாடல்கள். இவற்றையெல்லாம் தாண்டி டி.எம்.எஸ் என்ற கலைஞனுக்குள் இருக்கும் கர்னாடக இசைக் கலைஞன் அடிக்கடி வெளிப்படுவதில்லை. ஆனால் ஒவ்வொரு முறை வெளிப்படும் போதும் அழுத்தமாகவும் வீரியமாகவும் வெளிப்படுகிறார். டி.எம்.எஸ்ஸைக் கர்னாடக இசையோடு பலருக்குத் தொடர்பு படுத்த முடியாது. அவரது குரலில் ஒலித்த சில ராகங்களைப் பற்றிய பதிவு இது.

தியாகராஜ பாகவதர் தான் டி.எம்.எஸ்ஸின் முன்மாதிரி. அவரது பாணியிலேயே உச்சஸ்தாயியில் பாடிப் பயின்றதன் விளைவாக கிருஷ்ண விஜயம் (1950) படத்தில் பாகவதர் பாடலை ஒத்த 'ராதே நீ என்னை விட்டுப் போகாதேடி' என்று தனது முதல் திரைப்பாடலைப் பாடினார் டி.எம்.எஸ். 'கற்பகவல்லி நின் ' போன்ற தனிப்பாடல்களில் தனதுகர்னாடக இசைப் புலமையைக் காட்டியிருப்பார். ஆனந்த பைரவி, ரஞ்சனி, பாகேஸ்ரீ, கல்யாணி, என்று கற்பகவல்லி பாடலில் அவர் பாடியிருப்பது அவர் கட்டிய ராகமாளிகை.





 கௌரி மனோகரி என்றொரு ராகம். அது கர்னாடக இசையில் அவ்வளவாகப் பிரபலமாகவில்லை. கொஞ்சம் மெதுவாக இழுத்தால் ஹிந்துஸ்தானி ஜாடை வரும். தியாகய்யர் ஏதோ பேருக்கு ஒரு கீர்த்தனை இயற்றியிருக்கிறார். ஆனால் மெல்லிசையாகத் திரையிசையில் பல நல்ல பாடல்கள் இந்த ராகத்தில் வந்திருக்கின்றன. 'கௌரி மனோகரியைக் கண்டேன், மலரே குறிஞ்சி மலரே' போன்ற அருமையான பாடல்களை மெல்லிசை மன்னர் கொடுத்திருக்கிறார்.'பூபாளம் இசைக்கும்' பொன்வானம் பன்னீர் தூவும் இந்நேரம்' என்று தன் பங்கிற்கு இளையராஜா வழங்கியிருக்கிறார்.

ஆனால் இந்த கௌரி மனோகரி ராகத்தை அடிப்படையாக வைத்து ஒரு அக்மார்க் கர்னாடக சங்கீதப் பாடலைத் தந்தவர் திரை இசைத் திலகம் கே.வி.மகாதேவன். ஆலாபனை, ஸ்வரங்கள்,ஜதிகள் என்று ஒரு மினி சங்கீத விருந்தே படைத்திருக்கிறார்.இறைவனே வந்து பாடினால் எப்படி இருக்கும் என்று நம் கண்முன்னே நிறுத்துபவர் டி.எம்.எஸ். இதுவரை யாரும் அவர் பாடியதில் பாதியளவு கூடப் பாடிக் கேட்டதில்லை. இவ்வளவு உச்சஸ்தாயியில் பிசிறில்லாமல் கம்பீரமாகப் பாடுவது அசாத்தியம். இப்படியும் பாட முடியுமா என்று ஒவ்வொரு முறையும் அதிசயிக்க வைக்கும் அப்பாடல்- பாட்டும் நானே ! படம் -திருவிளையாடல். என்னிசை இருந்தால் அசையும் உலகே ஏ ஏ என்று எவரெஸ்ட் உச்சிக்கே சென்றுவிடுவார். சினிமாவில் வந்துள்ள கர்னாடக இசையில் இது உச்சம் என்றால் மிகையில்லை என்றே நினைக்கிறேன். கௌரி மனோகரி என்றால் இந்தப் பாடல் தான் நினைவுக்கு வரும்.SYNONYMOUS WITH GOWRI MANOHARI.


பொதுவாக மெல்லிசை மன்னர் எம் எஸ் வி சுத்தமான கர்னாடக இசையை விட மெல்லிசையையே அதிகம் பயன்படுத்துவார். மாமா என்றழைக்கப்படும் கே.வி.மஹாதேவனோ தில்லானா மோகனாம்பாள்,திருவிளையாடல்,  திருவருட்செல்வர் போன்ற படங்களில் கல்யாணி(மன்னவன் வந்தானடி), ஷண்முகப்ரியா (மறைந்திருந்தே), என்று வெளுத்துக் கட்டுவார். (கே.வி எம் அவ்வளவாக இந்தத் தலைமுறையினரிடம் பிரபலமாகாதது ஒரு சோகம். சங்கராபரணம் திரைப்படத்துக்கு இவரது இசை தான் என்றால் இவர் திறமை விளங்கும் என நினைக்கிறேன்). ஆனால் எம் எஸ் வியும் சில சமயங்களில் சுத்தமான கர்னாடக இசையைத் தந்து நம்மை மயக்குவார். 

கரஹரப்ரியா என்றொரு ராகம். கௌரி மாதிரி இல்லாமல் மிகவும் பிரபலமான கனமான ராகம். 'சக்கனி ராஜ மார்க்க' என்ற தியாகைய்யர் கீர்த்தனை மிகவும் பிரபலம். இளையராஜாவும் இதை அருமையாக 'ஆனந்தம் பொங்கிட' 'நீ நடமிடும் அதிசய பொன்மயிலே' போன்று திரையில் பயன்படுத்தியிருக்கிறார். எம்.எஸ்.வி தந்திருக்கும் ஒரு கரஹரப்ரியா கௌரிமனோஹரிக்கு ஒரு 'பாட்டும் நானே' போல் இந்த ராகத்தின் அடையாளங்களில் ஒன்றானது. இதை டி.எம்.எஸ் பாடியிருக்கும் விதம் அபாரமானது. பாடலை ஜீவனோடு பாடுவது என்று சொல்வது இது தான். அந்தப் பாடலின் உயிர்த்தன்மை அவரது வெண்கலக் குரல் தான்.  வேறு யாராவது அப்பாடலைப் பாடுவதைக் கேட்டால் அந்த வித்தியாசம் விளங்கும். அந்தப் பாடல் 'மாதவிப் பொன்மயிலாள். படம் இரு மலர்கள். வானில் வரும் வில் போல் புருவம் கொண்டால் என்ற வாலியின் வரியை அவர் எடுக்கும் விதம் தேர்ந்த கர்னாடக இசைக் கலைஞனுடையது.




லதாங்கி என்பது சூது இல்லாத ஐ.பி.எல் ஆட்டம் போல் வெகு அரிதான ஆனால் கம்பீரமான ராகம். சிம்மானசத்தின் மேல் அமர்ந்து ராஜகம்பீரத்துடன் தர்பார் நடத்துவதைப் போன்று அமைந்துள்ள ராகம். ஒரு முறை நெல்லையப்பர் கோவிலில் யாருமே இல்லாத காந்திமதி அம்மன் சந்நிதியில் மருமகள் தொல்லை தாங்காமல் கோவிலுக்கு வந்துள்ள ஆச்சிகள் இருவரின் முன்னிலையில் ஒரு ஓதுவார் 'தண்டையணி வெண்டையும் கிண்கிணி சதங்கையும்' என்று ஒரு திருப்புகழை லதாங்கியில் பாடியதைக் கேட்டேன் பாருங்கள். அச்சு அசலான லதாங்கி. என்ன பண் என்று தெரியவில்லை. ஆனால் நிச்சயம் தமிழிசை கர்னாடக இசைக்குக் கொடுத்த ஏராளமான கொடைகளுள் ஒன்றாகத் தான் லதாங்கி இருக்க வேண்டும்.

அருணகிரி நாதர் படத்தில் டி.எம்.எஸ் இப்பாடலைப் பாடியிருப்பார். ராகமாலிகையானஅப்பாடலின் ஆரம்பம் லதாங்கியில் அமைந்திருக்கும் . இசை திரை இசை மேதை ஜி.ராமநாதன்.
கண்டுற கடம்புடன், சந்த மகுடங்களும்,
கஞ்ச மலர் செங்கையும், சிந்து வேலும்,கண்களும், முகங்களும், சந்திர நிறங்களும்,கண்குளிர என்றன் முன் சந்தியாவோ?

போன்ற வரிகளைத் தமிழைத் தாய்மொழியாகக் கொள்ளாத ஒருவர் அற்புத உச்சரிப்புடன் பாடியிருக்கிறார் என்றால் நம்பமுடிகிறதா? பிராமணர்களை விட அழகாக  கச்சிதமான சமிஸ்கிருத உச்சரிப்பைப் பிராமணரல்லாத எம்.எஸ்.சுப்புலக்ஷ்மியால் கொடுக்க முடிந்ததைப் போன்றதல்லவா இது? பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்பதை மீண்டும் மீண்டும் மகாகலைஞர்கள் நிரூபிப்பார்கள்.


ஆனால் 'தண்டையணி'  வெறும் பக்க  உணவு (சைட் டிஷ்) தான். லதாங்கியில் தலை வாழை இலை போட்டு ஒரு விருந்தே பரிமாறியிருக்கிறார் எம் எஸ்வி. அதுவும் கர்னாடக இசையின் பெண் மும்மூர்த்திகளுள் ஒருவரான எம் எல் வசந்தகுமாரியுடன் டி.எம்.எஸ் இணைந்து பாடியிருப்பார். சொல்லப் போனால் சில இடங்களில் டி.எம்.எஸ்,  எம் .எல்.வியையே ஓரங்கட்டியிருப்பார் தன் உணர்ச்சி மிகுந்த  பாடும் முறையால்.மன்னாதி மன்னன் படத்தில் இடம் பெற்ற 'ஆடாத மனமும் உண்டோ 'பாடல்தான் அது. 'வாடாத‌ ம‌ல‌ர்போலும் விழி பார்வையில் கை வ‌ளையோசை த‌ருமின்ப‌ இசை கார்வையில்'  'இதழ் கொஞ்சும் கனியமுதை மிஞ்சும் குர‌லில் குயில் அஞ்சும் உனைக் காணவே'  போன்ற வரிகளைக் கேட்கும் போது காதுகளில் தேனாறு ஓடுவது நிஜம்.



(பி.கு)இதே லதாங்கியில் 'சின்ன ராசாவே சித்தெறும்பு என்னைக் கடிக்குதா" என்று அமைத்த இளையராஜா ' இதே எம்.எல்.வியின் மாணவியான சுதா ரகுநாதனை வைத்து இதே லதாங்கி ராகத்தில் 'ஆடும் பதம்' என்று ஒரு பாடலைக் கொடுத்துள்ளார். படம்- பொன்மேகலை.(வந்ததா?).கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்தில் வரும்' எங்கே எனது கவிதை' பாடலில்  ஒரு இடத்தில்  'மாலை அந்திகளில்....' என்று லதாங்கியைக் காட்டுவார் ஏ.ஆர்.ரஹ்மான்.

பி.கு.2 :எச்சரிக்கை- டி.எம்.எஸ் - பாட்டும் பாவமும்  தொடரும்.

Tuesday, April 2, 2013

அழைக்காதே! பிழைக்காதே!


ஏப்ரல் மாத புதிய ஆசிரியன் இதழில் வந்த கட்டுரை

நண்பர் ஒருவர் ஒரு ஞாயிறு மாலை தன் குடும்பத்துடன் திரைப்படத்திற்குச் செல்லலாம் என்று நினைத்தார். போகும் வழியில் அவரது வண்டி பஞ்சராகி விட்டது. வண்டியைப் பழுது பார்க்கப் போதிய பணமில்லாததால் ஏ.டி.எம்மில் வங்கி அட்டையை நுழைத்தார். அது சிக்கிக் கொண்டு வெளியே வரமறுத்து விட்டது. உடன் என்னைச் செல்போனில் தொடர்பு கொண்டார். அதுவரை கோபப்படாமல் இருந்தவர் என்னுடைய தொலைபேசியை அழைக்கும் போது கேட்ட பாடலைக் கேட்டுவிட்டு கோபத்தின் எல்லைக்கே சென்று “என்ன பாட்டு வைச்சிருக்கீங்க? கொஞ்சம் கூடப் சமய சந்தர்ப்பம் இல்லாமல்” என்று என்னைச் சத்தம் போட்டார். வேறு ஒன்றுமில்லை என்னை அழைத்தால் நீங்கள் கேட்கும் பாடல் ‘இது ஒரு பொன்மாலைப் பொழுது’.

இது போல் பலருக்கும் அனுபவம் நிகழ்ந்திருக்கும். வெளியூரில் மதியமும் அல்லாமல் மாலையும் ஆகாத ஒரு விடலையான பொழுது சாப்பிட எதுவுமே இல்லாமல் என்ன செய்வது என்று நண்பனை அழைத்தால் அவனது தொலைபேசியில் ‘கல்யாண சமயல் சாதம் காய்கறிகளும் பிரமாதம்’ என்று கண்டசாலா சப்புக் கொட்டிக் கொண்டிருப்பார்.

இரவு நேர ரயில்பயணத்தில் ஆங்கிலேய ஏகாதிபத்திய காலத்து அந்தமான் சிறைக் கைதிகள் போல் எலி, கரப்பான் பெருச்சாளி போன்ற விஷ ஜந்துக்களுக்கு மத்தியில் ஒருவழியாகத் தூங்கத் துவங்கும் போது உச்சஸ்தாயியில் ஒருவருடைய செல்போன் ‘தூங்காதே தம்பி தூங்காதே!’ என்று பாடும்.

பவர் கட்’ ஆகி மின்விசிறி ஓடாமல் நள்ளிரவில் கொசுக்கடியில் மின்வாரியத்தைச் சேர்ந்த நண்பரைத் தொலைபேசியில் அழைத்தால் ‘மின்சாரம் என் மீது பாய்கின்றதே’ என்று பாடல் கேட்டு நமக்கு ரத்தம் கொதிக்கும்.

இப்படித்தான் ஒரு பெரியவர் என்னிடம் இளைஞர்கள் எப்படியெல்லாம் கெட்டுப் போகிறார்கள் என்று வருத்தப்பட்டு உரையாற்றிக் கொண்டிருந்தார்.தொலைக்காட்சி திரைப்படங்கள் பாடல்கள் எல்லாம் எப்படிக் கலாச்சாரத் தீவிரவாதத்தை ஊக்குவிக்கிறது என்று அவர் சொல்லிக் கொண்டிருக்கும் போதே அவரது செல்போன் ‘வாடா மாப்பிளை! வாழைக்கா தோப்பிலே வாலிபால் ஆடலாமா?’ என்று பாடியது. அவசரமாக தொலைபேசி அழைப்பைத் துண்டித்தபடி “ஹி ஹி! பேரன் எதோ செஞ்சு வைச்சிருக்கான். மாத்த முடியலை’ என்றார்

மருத்துவத்துறையிலும் இதுபோல் நோயாளிகளுக்கும் மருத்துவர்களுக்கும் அகாலமான அனுபவங்கள் நேரிடும். நோயாளி எப்படி இருக்கிறார் என்று உறவினர்கள் கேட்கும் போதே ‘போனால் போகட்டும் போடா!”என்று யாரோ ஒருவருடைய தொலைபேசி பாடத் துவங்கும்.

அதே போல் ஒரு மருத்துவரை அழைக்கும் போதெல்லாம் ஒரு பாடல் கேட்கும்.நல்ல பாடல்தான் ஆனால் நோயாளிகள் சற்று எரிச்சலடைந்து ‘டாக்டர்! ஃபீஸ் வேண்டுமென்றாலும் ஐம்பது ரூபாய் கூடத் தந்துவிடுகிறோம்.தயவு செய்து பாட்டை மாற்றுங்கள்!” என்று சொல்ல அரம்பித்துவிட்டார்கள். வேறு ஒன்றுமில்லை அந்தப் பாடல்- ‘நலந்தானா?’.

பொதுவாக நம் மக்கள் சகுனம், நேரம் போன்றவற்றை அதிகம் நம்புவார்கள். அதிலும் நோய்வாய்ப் பட்டிருந்தால் நோயாளிகளும் கூட இருப்பவர்களும் நல்ல நேரம் ராகு காலம் போன்றவற்றில் மிகவும் எச்சரிக்கையாக இருப்பார்கள். அவர்கள் மருத்துவர்கள், மருத்துவம் சம்பந்தப் பட்ட நபர்களை அழைக்கும் போது ‘ஆடி அடங்கும் வாழ்க்கையடா! ஆறடி நிலமே சொந்தமடா!’ ‘வாழ்வே மாயம்’ ‘வீடு வரை உறவு’ போன்ற பாடல்கள் ஒலிக்கும் போது நொந்தே போய்விடுவார்கள்.

ஒரு அறுவை சிகிச்சை நிபுணர் இருந்தார். திடீரென்று அவருக்கு வரும் நோயாளிகள் எண்ணிக்கை குறையத் தொடங்கியது. என்ன காரணமென்று அவருக்குத் தெரியவில்லை. அவரை அழைக்கும் போதுதான் தெரிந்தது. அப்போது ஒலித்த பாடல் ‘ உசிரே போகுது! உசிரே போகுது!!’.

வெக்கை- எளியோர் ஏற்றும் தீ

ஏப்ரல் மாத Bank Worker's Unity வெளிவந்தது
                            

        கலை என்பதில் கருத்து சொல்லக் கூடாது; பிரசாரம்  செய்ய வேண்டுமென்றால் நோட்டிஸ் அடிக்கட்டும் என்று ஒரு தரப்பு வாதிட உயர்ந்த கருத்துக்களை உலகிற்குச் சொல்வதே கலைஞனின் நோக்கம் என்று இன்னொரு தரப்பு எதிர்வாதம் செய்கிறது.இந்நிலையில் உன்னதமான சில படைப்புகள் இந்த இரண்டுக்கும் இடைநிலையில் சொல்ல வந்த்தைச் சொல்லாமல் சொல்வதில் வெற்றி பெறுகின்றன. அப்படி ஒரு நாவல் தான் பூமணியின் வெக்கை.

சட்டம் என்பது எளியவர்களுக்கும் வலியவர்களுக்கும் பொதுவானது என்ற கருத்து ஏட்டளவிலேயே இருக்கிரது. நடைமுறையில் வல்லான் வகுத்ததே வாய்க்கால் என்றிருக்கையில் இந்த அமைப்புகளுக்கு வெளியே தன் பிரச்சனைகளைத் தீர்க்கும் ஒருவனைக் குற்றவாளி என்று சமூகம் பார்க்கிறது. எளிய மக்கள் முதன் முதலில் ரயில் வந்தவுடன் அதைப் பற்றிய பயம் மற்றும் பிரமிப்பின் காரணமாக அதிர்ந்து ஒதுங்கிப் போனார்கள்.அதைப் போலவே சட்டங்களை அரசாங்கம் கொண்டுவந்த போதும் அதன் அடிப்படைகள் தமக்குப் புரியாமலும் தமது அறம் மற்றும் மதிப்பீடுகளுக்குச் சற்றும் தொடர்பில்லாமல் இருப்பதைக் கண்டு தங்களது பாரம்பரிய வழிகளிலேயே பிரச்சனைகளைத் தீர்த்துக் கொண்ட்தையே இந்நாவல் படம் பிடித்திருக்கிறது.


சிதம்பரம் நினைத்தது அப்படியில்லை. வலதுகையை மட்டும் துண்டிக்கத் திட்டமிருந்தான்.’ என்று நேரடியாகத் தொடங்குகிறது நாவல். தன் அண்ணனைக் கொன்ற வடக்கூரானைப் பழி வாங்கிய ஒரு பதினைந்து வயதுப் பையனும் அவனது தலைமறைவு வாழ்வில் உறுதுணையாக நிற்கும் அவனது சொந்தங்களையும் சுற்றி வருகிறது.

நாவலின் ஒரு இடத்தில் கூடக் கொலை செய்த்து தவறு என்றோ இப்படி செய்துவிட்டாயே என்றோ சிதம்பரத்தை யாரும் கடிந்து கொள்வதில்லை. மாறாகப் பெரியவர்கள் செய்யவேண்டிய காரியத்தைப் பதின்வயதுப் பையன் செய்துவிட்டான் என்ற பெருமையே காணப்படுகிறது. இதுதான் அறம் என்று தாங்கள் நம்பியவற்றை உறுதியாகக் கடைப்பிடிக்கும் மக்களுக்குக் கால மாற்றத்தில் ஏற்படும் கலாச்சார அதிச்சி வெளிப்படுகிறது.

காவல்நிலையம், நீதிமன்றம் ,சட்டங்கள், குற்ற விசாரணை போன்ற சம்பிரதாயங்களைக் குறித்த இம்மக்களின் விமர்சன்ங்கள் காத்திரமாக வெளிப்படுகின்றன.’போலீஸ்காரன் என்ன செய்வான் ? அவனுக்குச் சட்டம் போக்குவரத்துன்னு எத்தனையோ சனியனுங்க இருக்கே’- என்பது போன்ற எளிய உரையாடல்களில் அமைப்பிற்கு எதிரான எள்ளல் தெறிக்கின்றன.
        
மேலோட்டமாகப் பார்த்தால் இரண்டு தரப்பினருக்கும் இடையேயான ஒரு சாதாரண பழிவாங்கும் கதை போலத் தோன்றினாலும் நாவலின் ஊடாகப் பல இழைகள் பின்னிப் பிணைந்திருக்கின்றன. நாவல் நடப்பது சில நாட்கள் தான். இதில் வரும் பாத்திரங்களும் சிலர்தான். எனினும் எளிமையான ஒரு கோட்டுச்சித்திரம் போல் கிராமத்து மண் மற்றும் அதன் மனிதர்களின் சுபாவங்களைப் படம்பிடிக்கிறார்.

மாமா ,அத்தை சித்தப்பா என்று உறவினை விட்டுக் கொடுக்காத சொந்தங்கள், அவர்களின் உரையாடல்கள், பழக்க வழக்கங்கள் போன்றவை வெக்கையில் வீசும் தென்றல்.

பல்வேறு வகையான நிலப்பரப்புகளூடே பயணிக்கும் தலைமறைவு வாழ்க்கையில் வகைவகையான மண்ணும் அவற்றில் முளைத்த பல்வேறு வகையான தாவரங்களும் சுற்றியுள்ள உயிரினங்களும் நாவலில் காட்சிப்படுத்தப் பட்ட விதம் எளிய மக்கள் எவ்வாறு இயல்பாகச் சுற்றுச் சூழல் பற்றிய நுண்ணறிவு கொண்டு இயற்கையோடு இயைந்து வாழ்ந்து வந்தனர் என்பதைப் புலப்படுத்துகிறது.

எண்பதுகளில் பொதுவுடமைக் கருத்துக்களும் நிலப்பிரபுத்துவ எதிர்ப்புக் கருத்துகளும் அப்போது வெளிவந்த இலக்கியங்களின் மையச் சரடாக இருந்தன.அவ்வப்போது அத்தி பூத்தாற்போல் ஓரிரு புரட்சிகர திரைப்படங்களும் வெளிவந்து கொண்டிருந்தன. அந்தக் கால கட்டத்தில் வெளிவந்த நாவல் இது என்றாலும் முப்பது ஆண்டுகளில் கழிந்த பின்னரும் நாவலின் அடிநாதம் இன்றைய சூழலுக்குப் பொருத்தமாகவே இருக்கிறது. வாழ்வாதாரத்தைக் காப்பாற்றத் தனிநபர்களுக்கு எதிரான போராட்டம் என்பது இன்று அரசு மற்றும் பெருநிறுவனங்களுக்கு எதிரான போராட்டமாக இருக்கிறது.  

உலகத் தரம் என்றால் பிரம்மாண்டம் என்று தவறாகப் புரிந்து வைத்திருக்கும் தமிழ்த் திரையுலகம் இது போன்ற நாவல்களைக் கணக்கில் கொள்ள வேண்டும்.

வெக்கை ; ஆசிரியர் பூமணி ;காலச்சுவடு வெளியீடு; 175 பக்கங்கள்; விலை 140 ரூபாய்.