Tuesday, April 2, 2013

வெக்கை- எளியோர் ஏற்றும் தீ

ஏப்ரல் மாத Bank Worker's Unity வெளிவந்தது
                            

        கலை என்பதில் கருத்து சொல்லக் கூடாது; பிரசாரம்  செய்ய வேண்டுமென்றால் நோட்டிஸ் அடிக்கட்டும் என்று ஒரு தரப்பு வாதிட உயர்ந்த கருத்துக்களை உலகிற்குச் சொல்வதே கலைஞனின் நோக்கம் என்று இன்னொரு தரப்பு எதிர்வாதம் செய்கிறது.இந்நிலையில் உன்னதமான சில படைப்புகள் இந்த இரண்டுக்கும் இடைநிலையில் சொல்ல வந்த்தைச் சொல்லாமல் சொல்வதில் வெற்றி பெறுகின்றன. அப்படி ஒரு நாவல் தான் பூமணியின் வெக்கை.

சட்டம் என்பது எளியவர்களுக்கும் வலியவர்களுக்கும் பொதுவானது என்ற கருத்து ஏட்டளவிலேயே இருக்கிரது. நடைமுறையில் வல்லான் வகுத்ததே வாய்க்கால் என்றிருக்கையில் இந்த அமைப்புகளுக்கு வெளியே தன் பிரச்சனைகளைத் தீர்க்கும் ஒருவனைக் குற்றவாளி என்று சமூகம் பார்க்கிறது. எளிய மக்கள் முதன் முதலில் ரயில் வந்தவுடன் அதைப் பற்றிய பயம் மற்றும் பிரமிப்பின் காரணமாக அதிர்ந்து ஒதுங்கிப் போனார்கள்.அதைப் போலவே சட்டங்களை அரசாங்கம் கொண்டுவந்த போதும் அதன் அடிப்படைகள் தமக்குப் புரியாமலும் தமது அறம் மற்றும் மதிப்பீடுகளுக்குச் சற்றும் தொடர்பில்லாமல் இருப்பதைக் கண்டு தங்களது பாரம்பரிய வழிகளிலேயே பிரச்சனைகளைத் தீர்த்துக் கொண்ட்தையே இந்நாவல் படம் பிடித்திருக்கிறது.


சிதம்பரம் நினைத்தது அப்படியில்லை. வலதுகையை மட்டும் துண்டிக்கத் திட்டமிருந்தான்.’ என்று நேரடியாகத் தொடங்குகிறது நாவல். தன் அண்ணனைக் கொன்ற வடக்கூரானைப் பழி வாங்கிய ஒரு பதினைந்து வயதுப் பையனும் அவனது தலைமறைவு வாழ்வில் உறுதுணையாக நிற்கும் அவனது சொந்தங்களையும் சுற்றி வருகிறது.

நாவலின் ஒரு இடத்தில் கூடக் கொலை செய்த்து தவறு என்றோ இப்படி செய்துவிட்டாயே என்றோ சிதம்பரத்தை யாரும் கடிந்து கொள்வதில்லை. மாறாகப் பெரியவர்கள் செய்யவேண்டிய காரியத்தைப் பதின்வயதுப் பையன் செய்துவிட்டான் என்ற பெருமையே காணப்படுகிறது. இதுதான் அறம் என்று தாங்கள் நம்பியவற்றை உறுதியாகக் கடைப்பிடிக்கும் மக்களுக்குக் கால மாற்றத்தில் ஏற்படும் கலாச்சார அதிச்சி வெளிப்படுகிறது.

காவல்நிலையம், நீதிமன்றம் ,சட்டங்கள், குற்ற விசாரணை போன்ற சம்பிரதாயங்களைக் குறித்த இம்மக்களின் விமர்சன்ங்கள் காத்திரமாக வெளிப்படுகின்றன.’போலீஸ்காரன் என்ன செய்வான் ? அவனுக்குச் சட்டம் போக்குவரத்துன்னு எத்தனையோ சனியனுங்க இருக்கே’- என்பது போன்ற எளிய உரையாடல்களில் அமைப்பிற்கு எதிரான எள்ளல் தெறிக்கின்றன.
        
மேலோட்டமாகப் பார்த்தால் இரண்டு தரப்பினருக்கும் இடையேயான ஒரு சாதாரண பழிவாங்கும் கதை போலத் தோன்றினாலும் நாவலின் ஊடாகப் பல இழைகள் பின்னிப் பிணைந்திருக்கின்றன. நாவல் நடப்பது சில நாட்கள் தான். இதில் வரும் பாத்திரங்களும் சிலர்தான். எனினும் எளிமையான ஒரு கோட்டுச்சித்திரம் போல் கிராமத்து மண் மற்றும் அதன் மனிதர்களின் சுபாவங்களைப் படம்பிடிக்கிறார்.

மாமா ,அத்தை சித்தப்பா என்று உறவினை விட்டுக் கொடுக்காத சொந்தங்கள், அவர்களின் உரையாடல்கள், பழக்க வழக்கங்கள் போன்றவை வெக்கையில் வீசும் தென்றல்.

பல்வேறு வகையான நிலப்பரப்புகளூடே பயணிக்கும் தலைமறைவு வாழ்க்கையில் வகைவகையான மண்ணும் அவற்றில் முளைத்த பல்வேறு வகையான தாவரங்களும் சுற்றியுள்ள உயிரினங்களும் நாவலில் காட்சிப்படுத்தப் பட்ட விதம் எளிய மக்கள் எவ்வாறு இயல்பாகச் சுற்றுச் சூழல் பற்றிய நுண்ணறிவு கொண்டு இயற்கையோடு இயைந்து வாழ்ந்து வந்தனர் என்பதைப் புலப்படுத்துகிறது.

எண்பதுகளில் பொதுவுடமைக் கருத்துக்களும் நிலப்பிரபுத்துவ எதிர்ப்புக் கருத்துகளும் அப்போது வெளிவந்த இலக்கியங்களின் மையச் சரடாக இருந்தன.அவ்வப்போது அத்தி பூத்தாற்போல் ஓரிரு புரட்சிகர திரைப்படங்களும் வெளிவந்து கொண்டிருந்தன. அந்தக் கால கட்டத்தில் வெளிவந்த நாவல் இது என்றாலும் முப்பது ஆண்டுகளில் கழிந்த பின்னரும் நாவலின் அடிநாதம் இன்றைய சூழலுக்குப் பொருத்தமாகவே இருக்கிறது. வாழ்வாதாரத்தைக் காப்பாற்றத் தனிநபர்களுக்கு எதிரான போராட்டம் என்பது இன்று அரசு மற்றும் பெருநிறுவனங்களுக்கு எதிரான போராட்டமாக இருக்கிறது.  

உலகத் தரம் என்றால் பிரம்மாண்டம் என்று தவறாகப் புரிந்து வைத்திருக்கும் தமிழ்த் திரையுலகம் இது போன்ற நாவல்களைக் கணக்கில் கொள்ள வேண்டும்.

வெக்கை ; ஆசிரியர் பூமணி ;காலச்சுவடு வெளியீடு; 175 பக்கங்கள்; விலை 140 ரூபாய்.

1 comment:

  1. ஆற்றொழுக்கான தெளிவான எழுத்து உங்களுக்கு.

    பிரமாண்டமும், புகழும் தரத்தை நிர்ணயிப்பதில்லை என்று புரிவதற்கு மனப்பக்குவம் வேண்டும். பூமணியின் எழுத்தை அரைகுறையாகப் படமாக்கி பூமணியின் மானத்தை வேண்டாமல் இருந்தால் சரி தமிழ்த்திரையுலகம்.

    ஆழியாள்

    ReplyDelete