Sunday, June 10, 2012

வாக்குத் தவறாமை

புதிய ஆசிரியன் மே மாத இதழில் வந்துள்ள என் கட்டுரை


                              'வாக்'குத் தவறாமை

நடைப் பயணம் உடலுக்கு நன்மை பயக்கும் என்பதில் மாற்றுக் கருத்து கிடையாது. 'எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது' என்று கீதை சொன்னதை 'whoever walks is the best '  என்று  மொழிபெயர்த்து நமது ஆன்மீக ஆரோக்கியப் பெருமையைச் சிலாகிப்பவர்கள் உண்டு
.இன்னும் சிலர்
"நல்வாக்கு உரைப்பேன்கேள் நண்பா நலமடையச் \
செல் வாக்கு (walk) இனிமேற்் சிறந்து" என்று குறள் எழுதும் அளவுக்கு நடைப்பயிற்சி நலம்தர வல்லது.ஆனால் சில சமயம் சிகிச்சையே வியாதியை விடக் கொடுமையானதாக இருப்பது போல் நடை பழகுவது கூட ் ஆரோக்கியத்துக்குக் கேடாகவே முடியும். 

அம்மை அப்பனைச் சுற்றி வந்தால உலகத்தையே சுற்றியது போலாகும் என்று விநாயகர் 'திருவிளையாடலில்'  சொன்னாலும் சொன்னார் பலரும் அதைச் சிக்கெனப் பற்றிக் கொள்கின்றனர். சிலர் அப்பாவி முருகனைப் போல மாங்கு மாங்கென்று நடக்க சிலரோ தமது அப்பார்ட்மென்ட்டின் அடிவாரத்தையேக் கிரிவலம் போலச் சில சுற்று சுற்றிவிட்டு தமது நடைப் பயணத்தை முடிக்கி விடுகிறார்கள்.அபார்ட்மென்ட் அடித்தளத்தில் துருப்பிடித்த ஆணி, உடைந்த குழாயின் உதிரிபாகம்,சிதறிய கண்ணாடி என்று எதாவது காலில் குத்திப் பல மாதங்கள் நடக்கவே முடியாமல் ஆகிவிடும்.மொட்டை மாடியில் நடப்பவர்களுக்கு இலவச இணைப்பாகக் கேபிள் வயர்கள்
.
இன்னும் சிலர் வீட்டிலேயே ஹாலுக்கும் வாசலுக்குமாக  குறுக்கும் நெடுக்குமாக உலவுவார்கள். அவ்வப்போது இரண்டாம் தடவைக் காஃபி,சூப், அரை வேக்காடு அவியல், அப்பளம் என்று நாவுக்கரசர்களாய் ருசி பார்த்து இழந்த கலோரிகளை இரு மடங்காக ஈடுகட்டுவார்கள்.  அதேபோல் நெல்லை சரவணபவனில் காப்பியில் தொடங்கிப், பூதத்தான் முக்கில் வடை, தெற்கு ரதவீதியில் மகிழம்பூ முறுக்கு என்று ரதவீதியில் உருட்பெருந்தேராய் உலவி இருட்டுக் கடை அல்வாவில் நிலைக்கு வந்து சேரும் போது கிலோமீட்டருக்கு ஒரு கிலோ எடை கூடுபவர்களைக் கண்டிருக்கிறேன்.

வேலைப் பளுவால் வந்த ரத்தக் கொதிப்புக்காக நடக்கத் தொடங்குபவர்கள் சிலர் செல்பேசியிலேயே 'கும்மிடிப்பூண்டிக்குச் சரக்கு அனுப்பியாச்சா? கோவில்பட்டிக்குக் குரியர் அனுப்பியாச்சா? என்று அலுவலகத்தை நடந்துகொண்டே நடத்தி ரத்தக் கொந்தளிப்பில்  முடிப்பவரும் உண்டு.
சில சமயம் மருத்துவர் நோயாளியை நடக்க வைப்பது கூட விபரீதமாவதுண்டு."தினமும் இரண்டு கிலோமீட்டர் நடக்கச் சொன்னீர்கள் இப்பொழுது விருதுநகருக்கு வந்திருக்கிறேன் .எப்பொழுது மதுரைக்குத் திரும்புவது டாக்டர்?"என்று கேட்பவர்கள் உண்டு.

அதுபோல் ஒருவர் கூறினார்"அந்த மருத்துவர் என்னை ஒரே மாதத்தில் நடக்க வைத்துவிட்டார"் என்று
.அவ்வளவு திறமைசாலியா என்று கேட்டதற்கு "அதெல்லாம் ஒன்றுமில்லை. வைத்தியத்துக்கான செலவுக்கு என் காரை விற்க வேண்டியதாகி விட்டது. இப்பொழுது நடக்கிறேன்"என்றார் மனிதர்.
நடப்பது எல்லாமே நன்மைக்கு என்று இல்லை.'நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றும் இல்லை.'
**************************

1 comment:

  1. ஆஹா! 1954 வாக்கில் நெல்லை டவுணை விட்டுவந்து விட்டேன்.அவ்வப்போது போவது உண்டு .சரவண பவன் காபி, பூதத்தான் முக்கு வடை, தெற்கு ரதவீதி மகிழம்பூ முறுக்கு, இருட்டுக்கடை அல்வா,----நான் இருக்கும்போது இவை இல்லையே! மாரார் ஸ்டூடியோ வுக்கு எதிரில்கீழரத வீதியில் சப்பாத்தி ஸ்டாலுண்டு. சந்திப்பிள்ளையார் முக்கில் பொத்தி ஹோட்டல் உண்டு---சென்றமாதம் போனபோது போத்தி ஹோட்டலையும் கானவில்லை.லாலா கடை இருக்கிறது. காலணாவுக்கு பர்பியும்,காலணாவுக்கு ஓமப்போடியும்கோடுப்பார்கள்----அசைபோட வாய்புக்கொடுத்த டாகடருக்குநன்றி---காஸ்யபன்.

    ReplyDelete