துரத்தும் நோய்
ஜூன் மாத 'புதிய ஆசிரியன்' இதழில் வந்தது
கடல்சூழ்ந்த மன்னுலகின் சந்து பொந்துகளிலெல்லாம் குடியேறியிருக்கும் தமிழர்கள் அனைவரும் பேசும் மொழி ஒன்றாக இருந்தாலும் அதில்தான் எத்தனை வித்தியாசங்கள்?.
‘வாரியலால வாசலத் தூக்கப் போ!’ என்று நெல்லைக்காரர் சொன்னால் கோவையில் இருப்பவர் குழம்பி வாசலை எப்படித் தூக்குவது என்று முழிப்பார். தூப்பது என்றால் நெல்லைத் தமிழில் பெருக்குவது. அதே போல் “அடுத்த தபா ஊட்டாரனை இட்டா!”(அடுத்த முறை கணவனை அழைத்து வா- என்றும் பாடம்) என்னும் சென்னை மொழிக்கு நெல்லைக்காரர் எதோ பாரசீக மொழியைக் கேட்டது போல் மெர்சலாகி விடுவார்.
தட்டோட்டிக்கிப் போலாமா? என்றால் கேட்பவர்கள் குழம்பிக் கார் ஓட்டலாம்,பஸ் ஓட்டலாம் தட்டை எப்படி ஓட்டுவது என்று முழிப்பார்கள்.ஆனால் நெல்லைப் பக்கம் தட்டோட்டி என்றால் மொட்டை மாடி.ஒரு முறை கால்களிலிருந்த சப்பாத்து என்று படித்துச் சாப்பிடும் சப்பாத்தியை ஏன் கால்களில் வைக்க வேண்டும் என்று குழம்பினேன். பின்புதான் இலங்கைத் தமிழில் காலணி(ஷூ)களுக்குச் சப்பாத்து என்று புரிந்தது
நண்பர் ஒருவர் சேலத்துப் பக்கம் குடியிருந்தார்.அவருக்குப் பெண் குழந்தைதான் பிறக்க வேண்டும் என்று ஆசை.அவர் மனைவிக்குப் பிரசவம் ஆனதும் நர்ஸ் வந்து ‘பிள்ளைக் குழந்தை பிறந்திருக்கிறது’ என்றார். நண்பர் மனம் நொந்து குழந்தை முகத்தைக் கூடப் பார்க்கவில்லை. தற்செயலாக ஒரு நாள் குழந்தைக்கு உடை மாற்றும் போதுதான் கவனித்தார் அவருக்குப் பிறந்தது பெண்குழந்தைதான் என்று. அந்த ஊர்ப்பக்கம் பிள்ளைக் குழந்தை என்றால் பெண்குழந்தை என்று அர்த்தமாம்.
மருத்துவத் துறையிலும் வட்டாரத்துக்கேற்ப சொற்களும் அதன் பொருட்களும் வேறுபடும். நாஞ்சில் பகுதியில் ‘ரொம்பப் பனியாக இருக்கிறது’ என்றால் போர்வையைப் போர்த்திக் கொண்டு படுத்துக் கொள்ளுங்கள் என்று பதில் சொல்லிவிடக் கூடாது. பனி என்றால் காய்ச்சல் என்று பொருள். அதே போல் நீக்கம்பு என்றால் எதோ நீளமான கழி அல்ல-காலரா .
ஒருவர் அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப் பட்டிருந்தார். அவரது நண்பர் “அந்த டாக்டரா? அவர் ஆபரேஷனெல்லாம் கோளாறாப் பண்ணுவாரே!” என்று கூற அவர் அலறி அடித்து மருத்துவ மனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆகிவிட்டார்.பிறகு தான் தெரிந்தது அந்த வட்டார வழக்கில் கோளாறா என்றால் ரொம்பவும் கச்சிதமாக என்று அர்த்தமாம்.
‘அசாத்தியமாக இருக்கிறது’ என்றால் சத்தியமாக அசதியாக இருக்கிறது என்றுதான் பொருள். சங்கு வலிக்கிறது என்றால் வந்திருப்பவர் மஹாவிஷ்ணு என்று அர்த்தமல்ல.கழுத்தில் வலி என்று புரிந்து கொள்ள வேண்டும். சென்னைக்காரர் ‘கேரா இருக்கிறது’ என்றால் கேட்கும் மருத்துவருக்குத் தலைசுற்றும்.
நோயாளி ஒருவர் மருத்துவரிடம் ‘ராத்திரியெல்லாம் ரொம்பத் துரத்துகிறது டாக்டர்!’ என்றால் துரத்துவது நாயா அல்லது பேயா என்று பயந்து நோயாளியைத் துரத்தி விடக் கூடாது. இருமலைத்தான் துரத்தல் என்கிறார்கள்.
ஒரு முறை எங்களது நேபாள வாட்ச் மேனுக்குக் கையில் சீழ் கட்டியிருந்தது. அதைக் கீறி எடுத்து மருந்து போட்டுக் கட்டி விட்டேன். அவரது வலியையும், பின்னர் அவர் சொன்ன நன்றியையும் நிச்சயமாகச் சொற்களால் வெளிப்படுத்தவில்லை. எல்லா நேரங்களிலும் மொழி தேவைப் படுவதில்லை.
No comments:
Post a Comment