ஜூலை மாத BANK WORKER'S UNITY இதழில் வந்தது
சென்ற வருடம் ‘சாகித்ய அகாடமி ‘விருது வாங்கிய சு.வெங்கடேசனின் ‘காவல் கோட்டம்’ நாவலுக்கும் அதன் ஆசிரியருக்கும் பரவலான கண்டனங்களும் பாராட்டுக்களும் ஒரு சேரக் கிடைத்தன. புத்தகத்தின் இரு அட்டைகளுக்கிடையே இருக்கும் விஷயங்களைப் பற்றி மட்டும் நாம் பார்க்கலாம்.
மதுரையை மையமாகக் கொண்டுள்ள இந்நாவல் நாயக்க வம்சம் மற்றும் பிரிட்டிஷ் அரசு போன்றவை மதுரையின் அரசதிகாரத்தைப் பெறுவதும் அவ்வரசுகளோடு தாதனூர் என்ற ஊரைச் சேர்ந்த கள்ளர்கள் கொள்ளும் முரணான உறவையும் அடிச்சரடாகக் கொண்டுள்ளது.்
பதிமூன்றாம் நூற்றாண்டில் மதுரை மீது குமார கம்பணன் மீதான விஜயநகரப் படை படையெடுத்து மதுரையைக் கைப்பற்றுகிறது, இதன் மூலம் மதுரையில் நாயக்க வம்சத்தின் அரசாட்சி நிறுவப்படிகிறது .மறுபுறம் தமது நிலத்தைப் பிரிந்த சடைச்சி என்பவளின் வாரிசான தாதனூர் கள்ளர்கள் திருமலை நாயக்கரின் அரண்மனையிலேயே கன்னம் வைக்கின்றனர். கழுவன் என்ற அக்கள்ளனுக்கு மூன்று சவுக்கடிகளோடு மதுரை கோட்டையைக் காவல் காக்கும் பொறுப்பையும் தாதனூருக்கே அளிக்கிறார் மன்னர். கள்வனை விடச் சிறந்த காவலன் யாரிருக்கிறார்கள்? இந்த இடம் நாவலில் மிகச் சுவையாக விளக்கப் பட்டுள்ளது.
காவல்,களவு இரண்டுமே தாதனூர் மக்களுக்குத் தர்மம்தான்.களவின் மூலம் இறைத் தொண்டு புரிந்து பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான திருங்கை மன்னன்தான் அவர்களின் முன்மாதிரியாக இருந்திருக்க வேண்டும். களவு அவர்களுக்கு ஒரு கலை. ‘ராஜ களவு’ என்றால் ஊருக்கே அது ஒரு திருவிழா. அதே போலக் காவல் ஒப்புக்கொண்ட வீதியிலோ, கிராமத்திலோ ஒரு குந்துமணி அளவு நெல் களவு போனாலும் அவர்கள் அவமானத்தில் துடிதுடித்துப் போய் அதற்கான இழப்பை ஈடுகட்டுகிறார்கள்.
நாவல் முழுதும் தாதனூர் மக்களின் நுண்ணிய அறிவு,இயற்கையைக் கூர்ந்து அவதானிக்கும் முறை,தாவரம் பறவைகள், விலங்குகள் போன்றவற்றின் நடவடிக்கைகளைக் கூர்ந்து விளக்குதல் போன்றவை அருமையாகக் காட்சிப் படுத்தப் பட்டுள்ளன. வானில் முளைக்கும் வெள்ளியிலேயே பலவகையான வெள்ளிகள் மற்றும் அவற்றின் கால நேரங்கள் நாவலில் பல இடங்களில் வருகின்றன. விடிந்துவிட்டதாக எண்ணிப் பெரும் பொருளுடன் சென்று திருட்டுக் கொடுத்தவரை ஏமாற்றிய வெள்ளிக்கு ரெட்டியைக் கெடுத்த வெள்ளி என்று பெயர் வருகிறது.
விஞ்ஞான வளர்ச்சியின் பெயரால் எவ்வளவு கூர்மையான திறமைகளை நாம் இழந்திருக்கிறோம் என்று இந்நாவலைப் படிக்கும் போது தெரிகிறது. அம்மக்கள் சுவரின் மீது நிழல் விழுவதைப் போல் ஓசையின்றி இரவில் வலம் வருகின்றனர்.
கன்னம் வைப்பது, மாடு திருடுவது, கதிர் கசக்குவது,துப்பு சொல்வது போன்ற விஷயங்கள் மிகுந்த சுவாரசியத்தோடும் இயல்போடும் கி.ராஜநாரயணின் ‘கோபல்ல புரத்து மக்கள்’ போல் படம் பிடித்திருக்கிறார் ஆசிரியர்.
பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் தனது அதிகாரத்தை நிலைநாட்ட விரும்பும் போது அதற்கு உறுத்தலாக இருக்கிறது தாதனூர் குடிமக்களின் காவல் முறை.தங்களது காவல்முறையை வேருன்றச் செய்யக் குடிகாவல் முறையைச் சட்டவிரோதமாக்கிக் குற்றப் பரம்பரை என்ற முறையை உருவாக்குகின்றனர்.காவல்,களவு இவ்விரண்டின் மூலமே உயிர்வாழ்ந்து கொண்டிருந்த தாதனூர் கடுமையாகப் போராடிப் பின் வீழ்வதோடு இந்நாவல் முடிகிறது.
நாவல் முழுவதும் பின்புலமாக ஏராளமான வரலாற்றுச் சம்பவங்கள்.கிருஷ்ணதேவராயர், ராணி மங்கம்மாள், கட்ட பொம்மு, ஊமைத்துரை போன்ற ஆட்சியாளர்களைப் பற்றிய குறிப்புகள் சிறிதும் பெரிதுமாக ஆங்காங்கே வருகின்றன. கொடுமையான தாது வருஷப் பஞ்சமும் அதன் பின்புலத்தில் அமைந்த நல்லதங்காள் போன்ற புனைவுகள், முல்லைப் பெரியாறு அணை கட்டியதன் பின்னணி அதைக் கட்டும் போது ஏற்பட்ட இழப்புக்கள் என்று மிக விரிவாக வருகின்றன. அதே போல் புகைவண்டி வருவது போன்ற நவீன மாற்றங்களை மக்கள் பீதியுடன் எதிர்கொண்ட விதம் போன்றவையும் சுவைபட வந்துள்ளன.
நாவலுக்கான ஆசிரியரின் கடும் உழைப்பு வெளிப்பட்டாலும் நாவலின் சிறப்பம்சமாக வட்டார வழக்கையும் இயல்பான நையாண்டிகளையும் குறிப்பிடலாம். அளவுக்கு மீறிய சில விவரிப்புக்கள், எல்லாத் தகவல்களையும் ஒரே நாவலில் சொல்லிவிட வேண்டும் என்பது போல் பல சம்பவங்கள் வேகமாக வந்து போகின்றன.இன்னும் சற்று கவனமாகக் கத்தரித்திருக்கலாம்.
சு.வெங்கடேசன் |
காவல் என்பதற்கும் களவு என்பதற்கும் பெரிய வித்தியாசம் ஒன்றுமில்லை.. காவல் உரிமை என்பது அதிகாரப் பூர்வமாகச் சுரண்டுவதற்கான உரிமை. இதைப் பெறுவதற்காகவே வரலாற்று நதியில் ஏராளாமான இரத்த வெள்ளம்.வல்லான் வகுத்ததே வாய்க்கால் என்பது போல் அதிகாரத்தின் உறுதியைக் கேள்விக்குறியாக்கும் எல்லாச் செயல்களும் குற்றம் என்று அறிவிக்கப் படுகின்றன.
சமீப காலங்களில் உலகமயமாக்கலின் விளைவாக எழுந்துள்ள புரட்சிப் போராட்டங்களையும் லண்டனில் நடைபெற்றது போன்ற சூறையாடல்களையும் நாம் கவனிக்கும் போது களவு என்பது ஒரு அதிகாரத்தின் மீதான எதிர்வினை என்ற கோணத்தில் நமக்குப் புதிய தரிசனங்கள் கிடைக்கின்றன. முழுநேர இடதுசாரி ஊழியரான சு.வெங்கடேசனும் தனது ஆயிரம் பக்க நாவலில் இதைத்தான் அடிநாதமாகக் கொள்கிறார் என்பது என் எண்ணம்.
(காவல் கோட்டம் –சு.வெங்கடேசன்.தமிழினி பதிப்பகம், 1035 பக்கங்கள் விலை ரூ.650)
No comments:
Post a Comment