நோயா? பேயா?
(தமிழ் ஹெல்த்கேர் மாத இதழுக்கான கட்டுரை)
மனிதன் தோன்றிய காலம் முதலே அவனைப் பின்தொடர்கிறது நோய்.ஆதி மனிதன் தன்னால் புரிந்து கொள்ள இயலாத விஷயங்களை மதத்தின் பெயராலும் தன்னை மீறிய சக்திகளின் பெயராலும் விளக்க முற்பட்டான்.தன்னால் கட்டுப்படுத்த முடியாத விஷயங்களைக் கண்டு அஞ்சினான்.அவற்றைக் கடவுளென ,தீய சக்திகளென வணங்கினான்.
ஒரு காலத்தில் எல்லா நோய்களுமே தீய சக்திகளால் விளைகின்றன என்று நம்பினான்.பின்பு விஞ்ஞானம் வளர வளர நோய்களுக்குக்கான காரணிகளைக் கண்டறிந்து தன் மூட நம்பிக்கையை மாற்றிக் கொண்டான்.சில காலத்துக்கு முன் கூட தொழுநோய் பாவத்தின் விளைவு என்று நம்பிக்கொண்டிருந்தான்
எனினும் இன்னும் கூட மக்கள் மத்தியில் பேய்பிடித்தல்,பில்லிசூனியம்,செய்வினை போன்ற நம்பிக்கைகள்.புழங்குகின்றன.இவற்றினை அறிவியல் பூர்வமாகப் பார்ப்போம்.
பொதுவாக பேய்பிடித்தல் போன்ற மன நிலைகளை ஆளுமைச் சிதைவு ( Dissociative Disorders) என்று மருத்துவத்தில் கூறுவர்.அதாவது தன்னுணர்வு அற்றுப் போய் தான் செய்வது இன்னவென்று தெரியாமல் இருத்தல். இது போன்ற நிலைகள் பெரும்பாலும் தற்காலிகமானவை.சில நிமிடங்கள் அல்லது சில மணி நேரங்களில் தன் உணர்வு அடைந்திடுவர்.கவனிக்கவும் :இந்த ஆளுமைச் சிதைவு என்பது மனச் சிதைவு (schizophrenia) அல்ல.தற்காலிக சமநிலைச் சீர்குலைவு என்று சொல்லலாம்.
முன்பு ஹிஸ்டீரியா என்ற பெயரால் இவை அழைக்கப்பட்டன.ஹிஸ்டெர் என்றால் கருப்பை என்று பொருள்.இது போன்ற பாதிப்புகள் பெண்களிடம் அதிகம் காணப்பட்டதால் இவை ஹிஸ்டீரியா என்று அழைக்கப்பட்டன.(கர்ப்பப்பையில் சுரக்கும் இரசாயங்களே இதற்குக் காரணம் என்று தவறாக நினைத்திருந்தனர்)
அதிக உணர்ச்சி வசப்படும் போது நாம் நமது மனம்,செயல், உணர்வுகள் மீதான கட்டுப்பாட்டை இழக்கிறோம். சில வகை தியானங்களிலும்,ஆன்மீக அனுபவங்களிலும் நாம் நம்மைப் பற்றிய உணர்வே இன்றி மெய்மறந்திருப்போம்.இதை Trance state ,அதாவது தன்னைக் கடந்த ஒரு பரவச நிலை என்று அழைப்பர்.இந்த அனுபவம் முற்றிலும் இயல்பானதே.
கிட்டத் தட்ட அதே மனநிலையில்தான் நம்மைப் “பேய்’ பிடித்துக் கொள்கிறது.அதீத உணர்ச்சி வசப்பட்ட நிலையில் நம் மூளை சிந்திக்கும் திறனை இழக்கத் தொடங்குகிறது.யோசிக்காமல் சில விஷயங்களை நம்பத் தொடங்குகிறது.இதற்கு suggestibility என்று பெயர்.பகுத்தறியும் திறன் செயலிழந்த பிறகு பிறரது கருத்துக்களையோ அடிமனதின் பாதிப்புக்களையோ ஏற்றுக் கொண்டு செயல்படத் துவங்குகின்றனர்.சுய கட்டுப்பாட்டை இழந்து செயல்படத் தொடங்குகின்றனர்.
இந்தத் தற்காலிகச் சமநிலைச் சீர்குலைவில்(Disssociative disorders) சில வகைகள் இருக்கின்றன.
1) பரவச நிலை (Trance) இதை நாம் ஏற்கனவே பார்த்தபடி இயற்கையான ஒன்றே.
2) தற்காலிக மறதி,குழப்பம்: மிகவும் உணர்ச்சிவசப்பட்ட நிலை அல்லது அதிர்ச்சியில் உறைந்து போய்ச் சில நிமிடங்கள் அல்லது மணிநேரங்கள் என்ன நடந்தது என்பதையே அறியாமல் போவது.அதிர்ச்சியான சம்பவங்கள்,பாலியல் பலாத்காரம்,வன்முறை போன்ற அனுபவங்களில் இது போல் ஏற்படுகின்றன
3) தற்காலிக உணர்வற்றுத் திரிதல் (FUGUE STATE) இது போன்ற நிலைகளில் தன்னுணர்வு இல்லாமல் தான் யாரென்பதே மறந்து குழப்பமாகத் திரிவார்கள்.இவர்களில் சிலர் நெடும்பயணங்களில் கூட ஈடுபடுவர். சுய உணர்வு வந்த பின் தான் எப்படி அந்த இடத்துக்கு வந்தோம் என்று ஆச்சரியப் படுவார்கள்.
4) ஆளுமைச் சிதைவுக் கோளாறு (multiple personality ) நம் மீது நல்ல அல்லது கெட்ட சக்திகள் புகுந்துவிட்டதைப் போல் நடந்து கொள்வதும் ஒரு மனநிலை வெளிப்பாடே.இது பிறருக்கும் தமக்கும் தொந்தரவு இல்லாமலும்,தற்காலிகமாகவும் இருக்கும் வரை இதனை மாறுபாடானது (abnormal) என்று கூறமுடியாது.எனினும் நீண்ட நேரம் இதுபோன்ற பாதிப்பு இருந்தால் இதற்குத் தகுந்த ஆலோசனை பெறவேண்டும்.
நாம் ஒரு திரைப்படத்தை மிகவும் ஒன்றிப் பார்க்கும் போது தற்காலிகமாக அந்தப் பாத்திரத்துடன் நம்மை அடையாளப் படுத்திக் கொள்கிறோம்.நம்முடைய சுய உணர்வைத் தற்காலிகமாக இழக்கிறோம்.ஆனால் திரைப்படத்தில் ‘வணக்கம்’ போட்டதும் நம் சுய உணர்வை அடைகிறோம்.அதுபோன்றே ஒரு ஆளுமையின் மீது அடிமனதில் ஈர்ப்பு இருந்து பின் மன அழுத்தம் ஏற்படும் சூழலில் தம்முடைய சுய ஆளுமை மறந்து வேறொரு நபர்போலவோ அல்லது வேறொரு சக்தி பீடித்திருப்பது போன்றோ (POSESSION) நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள்.
இது போன்ற கோளாறுகள் மட்டுமின்றி மூளையில் ஏற்படும் ரசாயன மாற்றங்களால் வரும் மனச்சிதைவு (schizophrenia) போன்ற நோய்களையும் பேய்க் கோளாறு என்று வகைப்படுத்தும் மனப்பான்மை எல்லாத் தரப்பினரிடையும் காணப்படுகிறது.
இதுபோன்ற ஆளுமைச் சிதைவுகள் உளவியல் பாதிப்புகளே என்பதைப் புரிந்து கொள்வது மிகவும் முக்கியம்.இவற்றைப் பற்றியும் பில்லி சூனியம் போன்றவற்றைப் பற்றியும் இன்னொரு சமயம் விரிவாகப் பார்ப்போம்
*****************************************************************