Monday, March 7, 2011

மர்ஃபியின் விதிகள்:தப்பாமல் தப்பாகும்


மர்ஃபியின் விதிகள்:தப்பாமல் தப்பாகும்
       ஒரு இடத்திற்குச் செல்ல இரண்டு பேருந்துகள் நிற்கின்றன.நாம் ஒன்றில் ஏறியதும் இன்னொரு பேருந்து கிளம்பிவிடும்;புகைவண்டி சரியான நேரத்திற்கு வர வேண்டும் என்றால் நாம் தாமதாமாகச் சென்றால் போதும்.
இது போன்ற அனுபவங்கள் எல்லோருக்கும் ஏற்பட்டிருக்கும்.இவை மர்ஃபியின் விதிகள் என்று அழைக்கப்படுகின்றன.எனக்கு மட்டும் எல்லாம் மிகச் சரியாகத் தவறாய் நடக்கின்றன என எண்ணாதாரும் உளரோ?
     மர்ஃபியின் விதிகளுக்கு ஒரு சுவாரசியமான வரலாறு இருக்கிறது.மர்ஃபி என்பவர் ஒரு விமானப் பொறியாளர்.ஒரு முறை ஒரு சோதனையின் போது விமானத்தில் உள்ள ஆறு இணைப்புக்களையும் ஒருவர் முனையை (terminal) மாற்றி இணைத்திருப்பதைக் கண்டார்.அப்போது மர்ஃபி “அந்த நபர் (இணைப்பு கொடுத்தவர்) ஒரு விஷயத்தைத் தவறாகச் செய்ய முடியும் என்றால் தவறாமல் தவறாகவே செய்வார்!” என்றார்.
   அன்று முதல் இவை மர்ஃபியின் விதிகள் என்று அழைக்கப்படுகின்றன.மர்ஃபியின் மரணம்கூட மிகப் பொருத்தமாகவோ அல்லது முரண்பாடாகவோ மர்ஃபியின் விதிப்படிதான் நடந்தது.ஒரு முறை சாலையில் நடந்துபோகும் போது எதிரே ராங் சைடில் வந்த வண்டி மோதி உயிரிழந்தார்.
    மர்ஃபியின் விதிகள் பொது விதிகள், சிறப்பு விதிகள் என வகைப் படுத்தப் பட்டிருக்கின்றன.பொது விதிகள் எல்லாச் சூழலுக்கும், துறைகளுக்கும் பொருந்துபவையாக உள்ளன.சில பொது விதிகளைக் காணலாம்:   
     1)தப்பாக வேண்டியவை தப்பாமல் தப்பாகும்-(If something can go wrong it will) இதுதான் மர்ஃபியின் பொன்விதி என்றழைக்கப் படுகிறது.(‘துப்பார்க்கு துப்பாய’ குறள் நினைவுக்கு வருகிறதா?)
     2)ஒரு வேலையை முடிக்க நமக்குப் பலரது உதவி கிடைக்கிறது என்றால் அந்த வேலை நாமே தனியாகச் செய்து முடிக்கக் கூடியதாக இருக்கும்.
     3)நாம் நிற்கும் வரிசை நகர வேண்டுமானால் நாம் வேறு வரிசைக்கு மாற வேண்டும்.
     4)மனைவியிடம் நல்ல பெயர் எடுக்க வேண்டுமென்றால் அவரைத் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்க வேண்டும்.
     5)நீங்கள் ஒரு காலைத் தீயிலும் இன்னொரு காலைப் பனிக்கட்டியிலும் வைத்திருந்தால் நீங்கள் சராசரியாக சுகமாக இருக்கிறீர்கள் என்று அர்த்தம்.
     6)நாம் தொலைத்த சாவி உடனே கிடைக்க  வேண்டுமானால் பூட்டை உடைக்க வேண்டும். 
     7)இன்றே கடைசியாக இருக்கும் எந்த ஒரு விஷயத்தையும் நாம் நாளைதான் கவனிப்போம்.
     8)எத்தனையோ பேர் பூங்காவில் இருக்கும் போது என் தலையில் தான் ஆப்பிள் விழுந்து தொலைக்கும்- இது ஐசக் ந்யூட்டனின் மர்ஃபி விதி.

மருத்துவத்திலும் மர்ஃபியின் விதிகள் உள்ளன.
     1)ஒரு நோய் எவ்வளவுக்கெவ்வளவு (நாய் குறைப்பதை ஒத்த ஓசை நயம்!) பரவலாகத் தென்படுகிறதோ அவ்வளவு குறைவாகவே அந்த நோய் வரும் காரணங்கள், மற்றும் உரிய சிகிச்சைகள் பற்றித் தெரிந்திருக்கும்.
     2) ஒரு நோயாளி அறுவை சிகிச்சை செய்து கொள்ள சம்மதித்தால் அவருக்கு அந்த அறுவை சிகிச்சை தேவையாய் இருக்காது.
    3)எல்லாப் பரிசோதனைகளும் செய்து என்ன நோய் என்று கண்டு பிடிக்கும் போது அந்த நோய் தானே குணமாகி இருக்கும்
    4)எந்த மருந்து ஒருவருடைய நோய்க்கு மிகப் பொருத்தமாயிருக்குமோ அந்த மருந்துக்கு மட்டும் அவருக்கு ஒவ்வாமை(அலர்ஜி) இருக்கும்.
    5)உங்கள் உடலில் அரிப்பெடுக்கும் பாகம் எந்த அளவுக்குக் கைகளால் எட்ட முடியாமல் இருக்கிறதோ அந்த அளவுக்கு அரிப்பின் தீவிரமும் அதிகமாக இருக்கும்.
   6)எந்த நோயாளியும் மருத்துவரிடம் ஏதோ ஒரு விஷயத்தை மறைக்காமல் இருந்ததில்லை.
   7)சில சமயம் மருத்துவரின் தீவிர முயற்சியையும் மீறி நோயாளி குணமடைந்து விடுகிறார்.
8)மன நலத்தில் ஒரு மர்ஃபியிசம்: “ஒருவரது பேச்சு எத்தனை குழப்பமாக இருக்கிறதோ அந்த அளவுக்கு அவர் நார்மலாக இருக்கிறார் என்று அர்த்தம்.    

      சூஃபியிசம் மாதிரி தான் மர்ஃபியிசமும்.நமது தேவையற்ற அகங்காரத்திற்கு அடிக்கடி விழும் அடி.நமது அன்றாட அபத்தங்களை நம்மையன்றி வேறு யாரால் கிண்டல் செய்ய முடியும்?

2 comments:

  1. நல்லாத்தான் சொன்னார் மர்ஃபி அண்ணன். வாழ்க. வாழ்க.

    அஷ்வின்ஜி.
    www.vedantavaibhavam.blogspot.com
    www.frutarians.blogspot.com

    ReplyDelete
  2. மாற்றி யோசிக்கும் மனோபாவம் மட்டுமே மாற்றத்தை உண்டு பண்ணும் விளக்கம் விளங்கி விலகுது

    ReplyDelete