Wednesday, March 16, 2011

போத்திய பொன்னாடை போடற்க


         போத்திய பொன்னாடை போடற்க

           ராமானுஜம்          
        ( சற்றுத் தாமதமான பதிவு,நாஞ்சில் நாடனுக்குக் கிடைத்த விருது போல)

     நெல்லையில் ஜனவரி 30 (காந்தி இறந்த நாளாச்சே) அன்று சாகித்திய அகாதமி விருதது பெற்ற நாஞ்சில் நாடனுக்குப் பாராட்டு விழா நடந்தது. கல்யாண மண்டபமாக மாறிவிட்ட பார்வதி தியேட்டரில் மிகச்சரியாக இரண்டு மணி நேரம் தாமதமாகத் தொடங்கியது.
     அன்று தான் அனுஷ்கா,தமன்னா ஆகியோருடன் ஒரு ஓரமாக நாஞ்சிலுக்கும் கலைமாமணி விருது கிடைத்த அறிவிப்பு வந்திருந்தது.மேற்படி நடிகைகளை நாஞ்சிலார் பார்த்துவிடக் கூடாதே என்ற பொறாமையில் அரங்கிலிருந்த சிலர் அவர் கலைமாமணி விருது வாங்கப் போகக் கூடாது என்று சத்தமாகக் கருதிக் கொண்டிருந்தனர்.
      இன்னொரு தளத்தில் ஏதோ யோகாசனப் போட்டி. அங்கிருந்து இங்கு கூடு விட்டுக் கூடு பாய்ந்தனர் பலர்.
இரண்டு அதிர்ச்சிகள் எனக்குக் காத்திருந்தன. என் கையில் இருந்த ‘சூடிய பூ சூடற்க’ சிறுகதைத் தொகுப்பைப் பார்த்த ஒருவர் இதெல்லாம் கட்டுரைதானே என்றார்.இரண்டாம் அதிர்ச்சி அவர்தான் நிகழ்ச்சியின் முதல் பேச்சாளர். தவிர்க்க முடியாமல் ஜே.ஜே ஞாபகம் வந்து தொலைத்தது.
     நெல்லைக் கண்ணனுக்கும் சேர்த்து விழா (மணி விழா) நடந்தது.இடையே ஏகப்பட்ட அமைப்பினர் பொன்னாடைகளாகப் போத்தித் தள்ளினர்.போத்திய பொன்னாடையே மறு சுழற்சி ஆகி விடக் கூடாதே என்று பதட்டமாக இருந்தது.இவ்வளவு பொன்னாடையை என்ன செய்வார் நா.நா ? கோவையிலென்ன அவ்வளவு குளிராகவா இருக்கும்?
     தி.க.சி முடியாத நிலையிலும் வந்து வாழ்த்தியது சிறப்பானது .மிகச் சம்பிரதயமாக எழுதி வைத்துத் தன் உரையைப் படித்தார்.நாடகத் துறையிலும் நாஞ்சிலார் இறங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
     நிகழ்ச்சியிலேயே மிகச் சிறப்பான பேச்சு வண்ணதாசனுடையது.(இவரை வண்ண நிலவன் என்று ஒருவர் குறிப்பிட்டார்).பேசும் போது கல்யாண்ஜியாக மாறிக் கவித்துவமாக நெஞ்சில் குடியிருக்கும் என்ற இரும்புத்திரைப் பாடலையும் பார்வதி தியேட்டரையும் நாஞ்சிலின் எழுத்துக்களோடு இணைத்துப் பேசினார்.
      கலாப்பிரியா கலகலப் பிரியராய் இயல்பாக
உரையாற்றினார். 
     கூச்சத்துடன் புகழ் வெளிச்சத்தில் நெளிந்த படி இருந்த நாஞ்சிலாரின் ஏற்புரை எளிமையாகவும் அடக்கமாகவும் அவரது எழுத்துக்களைப் போல் இருந்தது.
    எந்த இசங்களுக்குள்ளும் சிக்கிக் கொள்ளாத  இயல்பான எழுத்து நாஞ்சில் நாடனின் எழுத்து.
சூடிய பூ சூடற்கவிலேயே கீழ்கண்ட வரிகள் வருவது மிகச் சுவாரசியம் தான்
    “ இருபது வருசத்துக்கு மிந்தி ஒரு பய தேடி வந்தானா? தேடிப்போனவன இருக்கச் சொல்லிக் கூடப் பேசல்லே..எவன் சீந்தினான்?இன்னிக்கு மலருக்கு மலர் கதை கேட்டு காயிதம் வருது…நாலு நாள்ளே நொட்டுன்னு!!”
   -----கதை எழுதுவதன் கதை

       “சாகித்திய அகாடெமி பிரைஸ் குடுக்கச்சிலே ஒரு தங்கத்தட்டம் குடுப்பாளாமே!

         தங்கத் தட்டம் மயிரு குடுப்பான்…அவனவன் பொண்டாட்டி தாலிய அடமானம் வச்சி செலவாக்கிப் பிரைஸ் வாங்க்கீருக்கான்.மொதல்ல அதைத் திருப்பாண்டாமாலே…”
       ---கும்ப முனி முறித்த குடைக்காம்பு

        நிச்சயம் நாஞ்சிலாருக்கு நகையைத் திருப்பும் வேலை கிடையாது.அடமானத்திலிருந்த தமிழ் மானத்தை மீட்டிருக்கிறார்,தற்காலிகமாகவேனும்

No comments:

Post a Comment