மறக்கத் தெரிந்த மனமே
டாக்டர்.ஜி.ராமானுஜம்
மார்ச் மாத புதிய ஆசிரியன் இதழில் வந்த கட்டுரை
மார்ச் மாத புதிய ஆசிரியன் இதழில் வந்த கட்டுரை
மருத்துவர்களுக்கு நல்ல நினைவுத் திறன் இருக்க வேண்டும் என எதிர்பார்க்கப் படுகிறது.அவர்கள் ‘ந்யூமோ ஹைட்ரோ பெரிகார்டியம்’ போன்ற கிரேக்க இலத்தின் சொற்களை நெக்குருக நெட்டுருப் போட வேண்டும்.அது மட்டுமின்றிப் பல விஞ்ஞானிகளின் பெயர்களையும் தெரிந்து கொள்வது அவசியம்.சில ‘டவுன்ஸ் சிண்ட்ரோம்’ போல் சுலபமாக இருக்கும்.சில ‘ஸ்டீல் ரிச்சர்ட்ஸன் ஒல்ஸியவ்ஸ்கி’ என்று நாக்கை நர்த்தனமாட வைக்கும்.
எத்தனையோ அறிஞர்கள் தங்கள் வாழ்நாளெல்லம் பாடு பட்டுக் கண்டறிந்த நோய்களுக்கு அவர்களின் பெயர் சூட்டப் படுவது மிகவும் நியாயம் தான்.ஆனால் மருத்துவம் படிக்கும் மாணவர்களுக்கு அதுவே சில சமயங்களில் சோதனையாகவும் அமைந்திடும்.
அனுதினமும் ஏதேனும் ஒரு முறையாவது ஒருவரின் பெயரால் நாமகரணம் செய்யப் பட்ட ஒரு வியாதியைப் பற்றிய கேள்வி கேட்கப்படும்.ஒரே மகானுபாவர் பெயர் சில நேரங்களில் பல நோய்களுக்குச் சூட்டப்பட்டிருக்கும்.எனவே நாம் எழுதுவது மகப்பேறு தேர்வா அல்லது மன நலத் தேர்வா என்பதைப் பொறுத்துப் பதில் அமையும்.
சரித்திர மாணவன் சில நூற்றாண்டுகளுக்கு முன்பு பிறந்திருந்தால் இவ்வளவு வரலாறு படிக்கத் தேவையில்லையே என நினைப்பது போல் மருத்துவ மாணவரும் தான் சில நூறாண்டுகள் முன்பு பிறாந்திருந்தால் இத்தனை பெயர்களை நினைவில் கொள்ள வேண்டியிருக்காதே என எண்ணக் கூடும்.
அந்தப் பெயர்களும் ராமசாமிகளுக்கும் சுப்பிரமணியன்களுக்கும் பழகிய நம் நாவிற்கு முற்றிலும் அன்னியமாக இருக்கும்.(நாமெல்லாம் ஷேக்ஸ்பியரையே ஜெகப்பிரியர் என்று பாட பேதம் பண்ணுவோம்).இதற்குப் பழி வாங்குவதற்காவது இந்தியர்கள் சில நோய்களை கண்டு பிடித்து அவற்றிற்குத் தங்கள் பெயரை வைக்க வேண்டும் என நாட்டுப் பற்றுடன் எண்ணுவதுண்டு.ஒரு ஸ்பானிஷ் பெண் அங்கயற்கண்ணி சிண்ட்ரோம் என்பதை எப்படி உச்சரிப்பாள்?
படிப்பு முடித்த பின்னும் மருத்துவரைப் பெயர்கள் தொடர்கின்றன.நோயாளிகளின் நோயைத் தவறாகக் கணிக்கலாம்.ஸ்டெத்தஸ்கோப்பால் வலது புறம் இதயத்தைத் தேடலாம் .ஆனால் நோயாளியின் பெயரை மறந்து விட்டால் மருத்துவர் நம்மை நன்றாகக் கவனிக்கவில்லை என்று நினைத்து விடுவர்.
முன்பெல்லாம் குடும்ப டாக்டர் என்று ஒருவர் இருப்பார் .அவர் நோயாளியின் பெயர் மட்டுமின்றி அவரது குடும்பம் மற்றும் சூழலையே நன்கு அறிந்திருப்பர்.உள்ளே வரும்போதே “என்ன ராஜு!ஜுரம் தேவலையா?” என்று கேட்டவுடன் அந்த நோயாளி பாதி குணமடைந்து விடுவார்.
ஆனால் இது ஸ்பெஷலிஸ்டுகளின் காலம்.இங்கு நோயாளி ஒரு ஃபைலாகத்தான் பார்க்கப் படுவார்.சில சமயம் டோக்கன் எண்களாக.இருப்பினும் தன் பெயர் நினைவு கூரப் பட்டால் கிடைக்கும் மகிழ்ச்சி அலாதியானது.
சில சமயம் தொலை பேசியில் பேசும் போது அடையாளம் தெரியாமல் தடுமாறுவேன்.அப்போது நகுலனின் புகழ்பெற்ற கவிதை வரிகள் நினைவுக்கு வரும்(ராமச்சந்திரன் என்றார்.எந்த ராமச்சந்திரன் என்று நானும் கேட்க வில்லை.அவரும் சொல்லவில்லை)
சில சமயம் என்னைப் போன்ற மன நல மருத்துவர்கள் தங்கள் பெயர் போன்ற விவரங்களைத் தெரிந்து கொள்ளாமல் இருப்பதே நலம் என்றும் சிலர் எண்ணுவதுண்டு. “பெயரில் என்ன இருக்கிறது?” என்று ஜூலியட் சொல்லியிருக்கலாம்.ஆனால் சிலருக்காவது ஏதோ இருக்கிறது
இது போல் பெயர்களை மறக்கும் வியாதிக்கே ஒரு பெயர் இருக்கிறது -டிஸ்னாமியா(dysnomia). நான் இரண்டு விஷயங்கள் செய்வதாக முடிவு செய்திருக்கிறேன்
1.இன்னும் கொஞ்சம் கஷ்டப் பட்டுப் பெயர்களை நினைவில் வைப்பது
2.நான் கண்டு பிடிக்கும் நோய்க்கு என் பெயரை வைக்காமல் இருப்பது
No comments:
Post a Comment