Monday, October 1, 2012

புலிநகக் கொன்றை –இன்னுமொரு நூற்றாண்டிருக்கும்

 புலிநகக் கொன்றை இன்னுமொரு நூற்றாண்டிருக்கும்






தமிழ் உரைநடைக்குப் புதுப்பாணி அளித்தவர் சுஜாதா. அவர் தனது மசாலாத்தனங்களை மூட்டை கட்டி வைத்துவிட்டு ஆத்துப் புளியோதரை போல் இதமாகத் தன்னை வெளிப்படுத்தியது அவரது பிறந்த மண்ணைச் சுற்றிய ஸ்ரீரங்கத்துத் தேவதைகளில் தான். அதே போல் வைணவர்களின் மொழியை, சடங்குகளை, பக்தியை, சம்பிரதாயங்கள் முரண்பாடுகளை, சச்சரவுகளை ஊடாக வைத்து எள்ளல் நடையில் மிகச்சுவாரஸ்யமான நடையில் விவரித்துள்ளது பி,ஏ.கிருஷ்ணனின் புலிநகக்கொன்றை. ஆச்சரியம் என்னவென்றால் இந்நாவல் ஆசிரியரால் ஆங்கிலத்தில் எழுதப்பட்டு வெளிவந்து பின்னர் தமிழில் அவரே மொழி பெயர்த்துள்ளார். பிற்சேர்க்கையாகக் கொடுக்கப் பட்டுள்ள ஆங்கில மூலத்தின் சில வரிகளைப் படிக்கும் போது கவித்துவமான ஆங்கிலம் வெளிப்படுகிறது.

நாவல் பொன்னா எனப்படும் நான்குநேரியைச் சேர்ந்த வைஷ்ணவப் பெண்ணின் நினைவின் வழியே முன்னும் பின்னுமாக கிட்டத்தட்ட இரண்டு நூற்றாண்டுகள் பயணிக்கிறது. கதை என்று இல்லாமல் ஒரு மாபெரும் காலகட்டத்தின் பழக்கவழக்கங்கள், சந்தோஷங்கள், வீழ்ச்சிகள், இழப்புக்கள் என்று பதிவு செய்கிறது இந்நாவல்கள். துரதிர்ஷ்டம் பீடிக்கப் பட்டுள்ளதாக நம்பப்படும் குடும்பத்து மனிதர்கள் சுதந்திரப் போராட்டம்,கம்யூனிசம்,திராவிட இயக்கம் என்று தத்துவச் சிக்கல்களுக்கும் காதல்.ஆசை,கோபம் போன்ற லௌகீகப் போராட்டங்களுக்கும் இடையே நடத்தும் முரணியக்கமே கதையின் அடிநாதம். 


கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு அதே சமயம் அன்றாட வாழ்க்கையை அது பாதிக்குமோ என்றும் பயந்து ஒப்புக்கு ஓரிரு விஷயங்களைச் செய்து விட்டுப் புரட்சியாளன் என்ற போர்வையில் இருப்பவர்களை மிக அருமையாகச் சித்தரிக்கிறார். (வெள்ளைக்கார) அரசாங்கத்தையும் தொந்தரவு செய்யாமல் மக்களிடமும் நல்ல பெயர் எடுக்கலாம் என்று பட்சி ஹோம்ரூல் இயக்கத்தில் இருக்கிறார் கதையில். கண்ணன் கம்யூனிசம், திராவிடம் என்றெல்லாம் திரிவதை எல்லா நதிகளிலும் குளிச்சுப் பாக்கணும்னு ஆசை.ஆழம் அதிகம்னா அவனே ரொம்ப தூரம் போக மாட்டான் என்று அழகாகக் குறிப்பிடுகிறார்.

நாவல் நெடுக வழிந்து ஓடுகிறது அங்கத ஆறு. மென்மையான நகைச்சுவை. நூலகர் காதைக் கடித்த வெள்ளை ஆசிரியர், புளியோதரை உருண்டைக்காக சுப்ரீம் கோர்ட் வரை நடந்த வழக்கு, கோட்டை அடகு வைத்து இட்லி சாப்பிடும் புரட்சியாளன் என்று பல்வேறு விசித்திர சம்பவங்கள் ரசிக்கத்தக்கவை.ஐயங்காரில் விஷயமுள்ளவாளைப் பாக்கறது நம்ம மடத்துப் புளியோதரையில் முந்திரிப் பருப்பைப் பாக்கற மாதிரி போன்ற உரையாடல்களாகட்டும் எம் ஜி யார் கரகரத்த குரலில் பேசும் வில்லன்களுடன் கத்திச் சண்டையிட்டு சதை பிதுங்கி வழியும் காப்பாற்றக் கூடாத கதாநாயகிகளைக் காப்பாற்றினார்போன்ற வர்ணணைகளாகட்டும் நம்மைக் குலுங்கிச் சிரிக்க வைப்பவை. அதிலும் ராஜாஜி அணு ஆயுதத்திற்கெதிராக எழுதிய கவிதையைக் குறிப்பிட்டு  Personally I prefer the bomb to your poetry’ என்று அவருக்கே கடிதம் எழுதுவது நையாண்டியின் உச்சம்.

நாவலின் ஊடே இரண்டு நூற்றாண்டின் சரித்திரச் சம்பவங்கள் பிஜிஎம் போல் பின்னணியில் பிரிக்க முடியாமல் ஓடிக் கொண்டிருக்கின்றன. கட்டபொம்மு தூக்கிலிடப்பட்டது,ஊமைத்துரை, சுலோசனா முதலியார் மேம்பாலம் கட்டப்பட்டது (நெல்லையில் அல்வாக்கு அடுத்துப் புகழ் பெற்ற பாலம்) , சுதந்திரப் போராட்டம், திராவிட இயக்கம்,எம்ஜியாரைச் சுட்டது என்று பல்வேறு சம்பவங்கள் கதையின் ஓட்டத்தோடுப் பின்னிப் பிணைந்து வருகின்றன.

ஆசிரியர் பரந்த வாசிப்பு நமக்குக் கதை நெடுகப் புலனாகிறது. ஆஸ்கார் ஒயில்ட், செஸ்டர்டன் முதல் லெனின் வரை சேக் ஷ்பியர் ,கம்பன் முதல் வைணவ வேதமான நாலாயிரத் திவ்யப் பிரபந்தம்- குறிப்பாக நம்மாழ்வார் திருவாய்மொழி- வரை ஆங்காங்கே மேற்கோள்கள் காட்டப் படுகின்றன. கதைத் தலைப்பே ஐங்குறுநூற்றுப் பாடலிலிருந்து எடுக்கப் பெற்றிருக்கிறது. அதுமட்டுமின்றி மிகவும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியது மொழி நடை. வைணவர்களின் மணிப்ரவாள பரிபாஷை, சாதாரண பிராமண பாஷை, நெல்லைத் தமிழ் அருமையான ஆங்கிலம் என்று மொழியின் பல்வேறு சாத்தியங்களை வெளிப்படுத்தியுள்ளார். 


பொதுவாக வண்ணதாசன் ,கலாப்ரியா போன்ற நெல்லை இலக்கியவாதிகள் நெல்லையப்பர் கோவிலைச் சுற்றியுள்ள டவுண் என்னும் பகுதியின் தெருக்களையே பதிந்துள்ளனர்.கதாசிரியர் நெல்லையில் வீரராகவபுரம் எனப்படும் ஜங்க்ஷன் பகுதியில் நானிருந்த தெருவுக்கு அடுத்த தெருவில் குடியிருந்திருக்கிறார். அந்தப் பகுதியின் பஞ்சக்கிரஹாரம்,சந்யாசிக்கிராமம் ,கைலாசபுரம் என்று நான் அலைந்த இடங்களை நாவலில் காண்பது ருசியான புளியோதரையில் அகப்பட்ட முந்திரி போன்றது.

அடியார்கள் வாழ அரங்கநகர் வாழ
சடகோபன் தண்டமிழ்நூல் வாழ்க- கடல்சூழ்ந்த
மன்னுலகம் வாழ மணவாள மாமுனியே
இன்னுமொரு நூற்றாண்டிரும் என்பது வைணவர்களுக்கு முக்கியமான துதி. இந்த நாவல் ஒரு நூற்றாண்டுக்கும் மேற்பட்ட காலத்தின் கதை .சிறந்த நாவல்கள் வரிசையில் இந்நாவல் இன்னுமொரு நூற்றாண்டும் இருக்கும்

(புலிநகக் கொன்றை-பி.ஏ.கிருஷ்ணன்-காலச்சுவடு வெளியீடு- 331 பக்கங்கள்-250ரூபாய்)

Tuesday, August 28, 2012

மாற்று மருத்துவம்


 ஜூலை மாத புதிய ஆசிரியன் இதழில் வந்தது

    முன்பு படித்த துணுக்கு ஒன்று- அந்தக் காலத்திலெல்லாம் இத்தனை அழகழகான வியாதிகளும் அவற்றிற்கான வசீகரமான மருந்துக் குப்பிகளும் கிடையாது. திரேதா யுகத்தில் ஹோட்டலுக்குப் பார்சல் வாங்கச் சென்றால் சாம்பாருக்கு ஒரு பாத்திரம் எடுத்துப் போவது போல் மருத்துவரிடமும் ஒரு பாட்டிலை எடுத்துச் செல்ல வேண்டும்.கம்பவுண்டர் ஒருவர் டாக்டர் என்ன மருந்து எழுதியிருந்தாலும் அவரது மனநிலை,நோயாளியின் ராசியான நிறம் போன்றவற்றைப் பொருத்து மஞ்சள், சிகப்பு பச்சை வண்ணத் திரவங்களைக் கொடுப்பார்.லேபிளில் நோயாளியின் பெயரையும் எழுதுவார்.(இப்பொழுது சாமியார்கள் கூட அருள் வாக்கை ஒரு கேரி பேக்கில் போட்டுத்தான் கொடுக்கிறார்கள்.)

   அப்படி ஒரு முறை ஒரு கம்பவுண்டரிடம் ஒரு அம்மாள் மூச்சிரைக்க ஓடி வந்தாள். ஐய்யய்யோ! என் பேரு ஜெயலக்ஷ்மி! இந்த மருந்து பாட்டில்ல ராமலக்ஷ்மீன்னு போட்டிருக்கே! யாருக்கோ குடுக்க வேண்டிய மருந்தை நான் குடிச்சிட்டேன். ஒரே மயக்கம் படபடப்பா இருக்கு! என்று கதறி மயங்கி விழுந்தார். பின்பு மருத்துவர் வந்து மாற்று மருந்து கொடுத்த பின் தான் அந்த அம்மையாருக்கு உடல்நிலை சரியாயிற்று. மருத்துவர் செய்த மாற்று மருத்துவம் என்ன தெரியுமா? அந்த மருந்து பாட்டிலின் லேபிளைக் கிழித்து ஜெயலக்ஷ்மி என்று எழுதியதுதான்.

   கொஞ்சம் கவனக் குறைவாக இருந்தாலும் விபரீத விளைவுகள் ஏற்படும் என்பதால் மருத்துவத் துறையில் இருப்பவர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். என்றாலும் சிலசமயம் இது போன்ற நகைச்சுவைச் சம்பவங்களுக்கும் குறைவிருக்காது.

   நான் கிளினிக் தொடங்கிய புதிதில் ஒருவர் வந்து பல்வலிக்கு மருந்து வேண்டும் என்றார். வாயைத் திறங்கள்! என்றேன். யசோதைக்குக் கண்ணன் காட்டியது போல் காட்டினார். பல் ஒன்று சொத்தையாக இருக்கிறது. பல் மருத்துவரிடம் காட்டி எடுத்து விடுங்கள்! என்றதற்கு பல்வலி எனக்கில்லை! எங்கம்மாவுக்கு என்றாரே பார்க்கலாம். அவர் ஏன் வாயைத் திறந்தார் என்று இன்று வரை புரியவில்லை.நல்ல வேளை அவரது அம்மாவிற்கு மூல நோய் இல்லை.


     சமீபத்தில் ஒரு மருத்துவ மனையில் ஒரு நோயாளியைப் பார்க்க அழைத்திருந்தனர். அவரை அரை மணிநேரம் பார்த்தபின்பும் அவருக்கு மனநிலை பாதிப்பு ஒன்றும் இருப்பது போல் தெரியவில்லை. பின்புதான் புரிந்தது செவிலியர்கள் 203 ஆம் எண் அறைக்குப் பதிலாக 302 ஆம் எண் அறைக்கு அழைத்துச் சென்று விட்டனர் என்று.இன்னும் பத்து நிமிடங்கள் சென்றிருந்தால் அவருக்கே தன் மனநிலை மீது சந்தேகம் வந்திருக்கும்.

    ஒரு நோயாளி படுக்கையில் இருப்பதால் அவரது இடத்துக்கே வந்து இரத்தப் பரிசோதனை செய்வதற்கான சீட்டை அந்நோயாளியின் உறவினரிடம் கொடுத்தோம். அரை மணி நேரம் கழித்து அவ்வுறவினர் முழங்கையைப் பஞ்சால் தேய்த்துக் கொண்டே வரும் போதுதான் தெரிந்தது அவருக்கே இரத்தம் எடுத்துவிட்டு அனுப்பியிருக்கிறார்கள் என்று."கையை நீட்டச் சொன்னாங்க நீட்டினேன். யாருக்கு ரத்த டெஸ்டுன்னு கேட்கவே இல்லையே" என்றார் அவர். நான் இரத்தம் கொடுத்ததால்தான் நோயாளி பிழைத்தார் என்று பின்னர் அவர் பெருமிதத்துடன் எல்லோரிடமும் கூறியது வேறு விஷயம்.


  அதே போல் ஒருவர் என்னிடம் வந்து ஒரு சுவீட் பாக்ஸைக் கொடுத்து  எங்க அப்பாவின் உயிரைக் காப்பத்திட்டீங்க ! ரொம்பத் தேங்கஸ்! என்றார். ஏதோ தவறாகச் சிகிச்சை அளித்து விட்டோம் என்று நினைத்துக் கொண்டேன்.சொல்லிவிட்டுச் சென்றவர் பத்து நிமிடம் கழித்து வந்து சாரி சார்! நீங்க டாக்டர் ஜானகிராமன் இல்லையா? என்று வழிந்தார் என்னைப் போலவே. ஆனாலும் பெரிய மனதுடன் அந்த சுவீட் பாக்ஸை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள்! என்றார். ஒரு வேளை அதற்குள் நான் அதில் அரை லட்டைச் சாப்பிட்டு விட்டதைக் கண்டு பிடித்திருப்பார் போலும்.

இது போன்ற சம்பவங்கள் பூனைக்கும்  அடி சறுக்கி அடிபடும் என்பதை நினைவில் வைத்து இன்னும் கவனமாக இருக்கக் கோருபவைகள்.

******************************************************************************************************

காவல் கோட்டம் -அதிகாரத்தின் களவு



ஜூலை மாத  BANK WORKER'S UNITY இதழில் வந்தது


சென்ற வருடம் ‘சாகித்ய அகாடமி ‘விருது வாங்கிய சு.வெங்கடேசனின் ‘காவல் கோட்டம்’ நாவலுக்கும் அதன் ஆசிரியருக்கும் பரவலான கண்டனங்களும் பாராட்டுக்களும் ஒரு சேரக் கிடைத்தன. புத்தகத்தின் இரு அட்டைகளுக்கிடையே இருக்கும் விஷயங்களைப் பற்றி மட்டும் நாம் பார்க்கலாம்.



மதுரையை மையமாகக் கொண்டுள்ள இந்நாவல் நாயக்க வம்சம் மற்றும் பிரிட்டிஷ் அரசு போன்றவை மதுரையின் அரசதிகாரத்தைப் பெறுவதும் அவ்வரசுகளோடு தாதனூர் என்ற ஊரைச் சேர்ந்த கள்ளர்கள் கொள்ளும் முரணான உறவையும் அடிச்சரடாகக் கொண்டுள்ளது.்

பதிமூன்றாம் நூற்றாண்டில் மதுரை மீது குமார கம்பணன் மீதான விஜயநகரப் படை படையெடுத்து மதுரையைக் கைப்பற்றுகிறது, இதன் மூலம் மதுரையில் நாயக்க வம்சத்தின் அரசாட்சி நிறுவப்படிகிறது .மறுபுறம் தமது நிலத்தைப் பிரிந்த சடைச்சி என்பவளின் வாரிசான தாதனூர் கள்ளர்கள் திருமலை நாயக்கரின் அரண்மனையிலேயே கன்னம் வைக்கின்றனர். கழுவன் என்ற அக்கள்ளனுக்கு மூன்று சவுக்கடிகளோடு மதுரை கோட்டையைக் காவல் காக்கும் பொறுப்பையும் தாதனூருக்கே அளிக்கிறார் மன்னர். கள்வனை விடச் சிறந்த காவலன் யாரிருக்கிறார்கள்? இந்த இடம் நாவலில் மிகச் சுவையாக விளக்கப் பட்டுள்ளது.

காவல்,களவு இரண்டுமே தாதனூர் மக்களுக்குத் தர்மம்தான்.களவின் மூலம் இறைத் தொண்டு புரிந்து பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான திருங்கை மன்னன்தான் அவர்களின் முன்மாதிரியாக இருந்திருக்க வேண்டும். களவு அவர்களுக்கு ஒரு கலை.  ‘ராஜ களவு’ என்றால் ஊருக்கே அது ஒரு திருவிழா. அதே போலக் காவல் ஒப்புக்கொண்ட வீதியிலோ, கிராமத்திலோ ஒரு குந்துமணி அளவு நெல் களவு போனாலும் அவர்கள் அவமானத்தில் துடிதுடித்துப் போய் அதற்கான இழப்பை ஈடுகட்டுகிறார்கள்.
நாவல் முழுதும் தாதனூர் மக்களின் நுண்ணிய அறிவு,இயற்கையைக் கூர்ந்து அவதானிக்கும் முறை,தாவரம் பறவைகள், விலங்குகள் போன்றவற்றின் நடவடிக்கைகளைக் கூர்ந்து விளக்குதல் போன்றவை அருமையாகக் காட்சிப் படுத்தப் பட்டுள்ளன. வானில் முளைக்கும் வெள்ளியிலேயே பலவகையான வெள்ளிகள் மற்றும் அவற்றின் கால நேரங்கள் நாவலில் பல இடங்களில் வருகின்றன. விடிந்துவிட்டதாக எண்ணிப் பெரும் பொருளுடன் சென்று திருட்டுக் கொடுத்தவரை ஏமாற்றிய வெள்ளிக்கு ரெட்டியைக் கெடுத்த வெள்ளி என்று பெயர் வருகிறது.

விஞ்ஞான வளர்ச்சியின் பெயரால் எவ்வளவு கூர்மையான திறமைகளை நாம் இழந்திருக்கிறோம் என்று இந்நாவலைப் படிக்கும் போது தெரிகிறது. அம்மக்கள் சுவரின் மீது நிழல் விழுவதைப் போல் ஓசையின்றி இரவில் வலம் வருகின்றனர்.
கன்னம் வைப்பது, மாடு திருடுவது, கதிர் கசக்குவது,துப்பு சொல்வது போன்ற விஷயங்கள் மிகுந்த சுவாரசியத்தோடும் இயல்போடும் கி.ராஜநாரயணின் ‘கோபல்ல புரத்து மக்கள்’ போல் படம் பிடித்திருக்கிறார் ஆசிரியர்.

பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் தனது அதிகாரத்தை நிலைநாட்ட விரும்பும் போது அதற்கு உறுத்தலாக இருக்கிறது தாதனூர் குடிமக்களின் காவல் முறை.தங்களது காவல்முறையை வேருன்றச் செய்யக் குடிகாவல் முறையைச் சட்டவிரோதமாக்கிக் குற்றப் பரம்பரை என்ற முறையை உருவாக்குகின்றனர்.காவல்,களவு இவ்விரண்டின் மூலமே உயிர்வாழ்ந்து கொண்டிருந்த தாதனூர் கடுமையாகப் போராடிப் பின் வீழ்வதோடு இந்நாவல் முடிகிறது.

நாவல் முழுவதும் பின்புலமாக ஏராளமான வரலாற்றுச் சம்பவங்கள்.கிருஷ்ணதேவராயர், ராணி மங்கம்மாள், கட்ட பொம்மு, ஊமைத்துரை போன்ற ஆட்சியாளர்களைப் பற்றிய குறிப்புகள் சிறிதும் பெரிதுமாக ஆங்காங்கே வருகின்றன. கொடுமையான தாது வருஷப் பஞ்சமும் அதன் பின்புலத்தில் அமைந்த நல்லதங்காள் போன்ற புனைவுகள், முல்லைப் பெரியாறு அணை கட்டியதன் பின்னணி அதைக் கட்டும் போது ஏற்பட்ட இழப்புக்கள் என்று மிக விரிவாக வருகின்றன. அதே போல் புகைவண்டி வருவது போன்ற நவீன மாற்றங்களை மக்கள் பீதியுடன் எதிர்கொண்ட விதம் போன்றவையும் சுவைபட வந்துள்ளன.

நாவலுக்கான ஆசிரியரின் கடும் உழைப்பு வெளிப்பட்டாலும் நாவலின் சிறப்பம்சமாக வட்டார வழக்கையும் இயல்பான நையாண்டிகளையும் குறிப்பிடலாம். அளவுக்கு மீறிய சில விவரிப்புக்கள், எல்லாத் தகவல்களையும் ஒரே நாவலில் சொல்லிவிட வேண்டும் என்பது போல் பல சம்பவங்கள் வேகமாக வந்து போகின்றன.இன்னும் சற்று கவனமாகக் கத்தரித்திருக்கலாம்.
சு.வெங்கடேசன்

காவல் என்பதற்கும் களவு என்பதற்கும் பெரிய வித்தியாசம் ஒன்றுமில்லை.. காவல் உரிமை என்பது அதிகாரப் பூர்வமாகச் சுரண்டுவதற்கான உரிமை. இதைப் பெறுவதற்காகவே வரலாற்று நதியில் ஏராளாமான இரத்த வெள்ளம்.வல்லான் வகுத்ததே வாய்க்கால் என்பது போல் அதிகாரத்தின் உறுதியைக் கேள்விக்குறியாக்கும் எல்லாச் செயல்களும் குற்றம் என்று அறிவிக்கப் படுகின்றன.

சமீப காலங்களில் உலகமயமாக்கலின் விளைவாக எழுந்துள்ள புரட்சிப் போராட்டங்களையும் லண்டனில் நடைபெற்றது போன்ற சூறையாடல்களையும் நாம் கவனிக்கும் போது களவு என்பது ஒரு அதிகாரத்தின் மீதான எதிர்வினை என்ற கோணத்தில் நமக்குப் புதிய தரிசனங்கள் கிடைக்கின்றன. முழுநேர இடதுசாரி ஊழியரான சு.வெங்கடேசனும் தனது ஆயிரம் பக்க நாவலில் இதைத்தான் அடிநாதமாகக் கொள்கிறார் என்பது என் எண்ணம்.

(காவல் கோட்டம் –சு.வெங்கடேசன்.தமிழினி பதிப்பகம், 1035 பக்கங்கள் விலை ரூ.650)

துரத்தும் நோய்


              துரத்தும் நோய்  
ஜூன் மாத 'புதிய ஆசிரியன்' இதழில் வந்தது
                      

கடல்சூழ்ந்த மன்னுலகின் சந்து பொந்துகளிலெல்லாம் குடியேறியிருக்கும் தமிழர்கள் அனைவரும் பேசும் மொழி ஒன்றாக இருந்தாலும் அதில்தான் எத்தனை வித்தியாசங்கள்?.

வாரியலால வாசலத் தூக்கப் போ! என்று நெல்லைக்காரர் சொன்னால் கோவையில் இருப்பவர் குழம்பி வாசலை எப்படித் தூக்குவது என்று முழிப்பார். தூப்பது என்றால் நெல்லைத் தமிழில் பெருக்குவது. அதே போல் அடுத்த தபா ஊட்டாரனை இட்டா!(அடுத்த முறை கணவனை அழைத்து வா- என்றும் பாடம்)  என்னும் சென்னை மொழிக்கு நெல்லைக்காரர் எதோ பாரசீக மொழியைக் கேட்டது போல் மெர்சலாகி விடுவார்.

தட்டோட்டிக்கிப் போலாமா? என்றால் கேட்பவர்கள் குழம்பிக் கார் ஓட்டலாம்,பஸ் ஓட்டலாம் தட்டை எப்படி ஓட்டுவது என்று முழிப்பார்கள்.ஆனால் நெல்லைப் பக்கம் தட்டோட்டி என்றால் மொட்டை மாடி.ஒரு முறை கால்களிலிருந்த சப்பாத்து என்று படித்துச் சாப்பிடும் சப்பாத்தியை ஏன் கால்களில் வைக்க வேண்டும் என்று குழம்பினேன். பின்புதான் இலங்கைத் தமிழில் காலணி(ஷூ)களுக்குச் சப்பாத்து என்று புரிந்தது 

நண்பர் ஒருவர் சேலத்துப் பக்கம் குடியிருந்தார்.அவருக்குப் பெண் குழந்தைதான் பிறக்க வேண்டும் என்று ஆசை.அவர் மனைவிக்குப் பிரசவம் ஆனதும் நர்ஸ் வந்து பிள்ளைக் குழந்தை பிறந்திருக்கிறது என்றார். நண்பர் மனம் நொந்து குழந்தை முகத்தைக் கூடப் பார்க்கவில்லை. தற்செயலாக ஒரு நாள் குழந்தைக்கு உடை மாற்றும் போதுதான் கவனித்தார் அவருக்குப் பிறந்தது பெண்குழந்தைதான் என்று. அந்த ஊர்ப்பக்கம் பிள்ளைக் குழந்தை என்றால் பெண்குழந்தை என்று அர்த்தமாம்.

மருத்துவத் துறையிலும் வட்டாரத்துக்கேற்ப சொற்களும் அதன் பொருட்களும் வேறுபடும். நாஞ்சில் பகுதியில் ரொம்பப் பனியாக இருக்கிறது என்றால் போர்வையைப் போர்த்திக் கொண்டு படுத்துக் கொள்ளுங்கள் என்று பதில் சொல்லிவிடக் கூடாது. பனி என்றால் காய்ச்சல் என்று பொருள். அதே போல் நீக்கம்பு என்றால் எதோ நீளமான கழி அல்ல-காலரா .

ஒருவர் அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப் பட்டிருந்தார். அவரது நண்பர் அந்த டாக்டரா? அவர் ஆபரேஷனெல்லாம் கோளாறாப் பண்ணுவாரே! என்று கூற அவர் அலறி அடித்து மருத்துவ மனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆகிவிட்டார்.பிறகு தான் தெரிந்தது அந்த வட்டார வழக்கில் கோளாறா என்றால் ரொம்பவும் கச்சிதமாக என்று அர்த்தமாம்.

 ‘அசாத்தியமாக இருக்கிறது என்றால் சத்தியமாக அசதியாக இருக்கிறது என்றுதான் பொருள். சங்கு வலிக்கிறது என்றால் வந்திருப்பவர் மஹாவிஷ்ணு என்று அர்த்தமல்ல.கழுத்தில் வலி என்று புரிந்து கொள்ள வேண்டும். சென்னைக்காரர் கேரா இருக்கிறது என்றால் கேட்கும் மருத்துவருக்குத் தலைசுற்றும்.

நோயாளி ஒருவர் மருத்துவரிடம் ராத்திரியெல்லாம் ரொம்பத் துரத்துகிறது டாக்டர்! என்றால் துரத்துவது நாயா அல்லது பேயா என்று பயந்து நோயாளியைத் துரத்தி விடக் கூடாது. இருமலைத்தான் துரத்தல் என்கிறார்கள்.

ஒரு முறை  எங்களது நேபாள வாட்ச் மேனுக்குக் கையில் சீழ் கட்டியிருந்தது. அதைக் கீறி எடுத்து மருந்து போட்டுக் கட்டி விட்டேன். அவரது வலியையும், பின்னர் அவர் சொன்ன நன்றியையும் நிச்சயமாகச் சொற்களால் வெளிப்படுத்தவில்லை. எல்லா நேரங்களிலும் மொழி தேவைப் படுவதில்லை.





  

Sunday, June 10, 2012

வாக்குத் தவறாமை

புதிய ஆசிரியன் மே மாத இதழில் வந்துள்ள என் கட்டுரை


                              'வாக்'குத் தவறாமை

நடைப் பயணம் உடலுக்கு நன்மை பயக்கும் என்பதில் மாற்றுக் கருத்து கிடையாது. 'எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது' என்று கீதை சொன்னதை 'whoever walks is the best '  என்று  மொழிபெயர்த்து நமது ஆன்மீக ஆரோக்கியப் பெருமையைச் சிலாகிப்பவர்கள் உண்டு
.இன்னும் சிலர்
"நல்வாக்கு உரைப்பேன்கேள் நண்பா நலமடையச் \
செல் வாக்கு (walk) இனிமேற்் சிறந்து" என்று குறள் எழுதும் அளவுக்கு நடைப்பயிற்சி நலம்தர வல்லது.ஆனால் சில சமயம் சிகிச்சையே வியாதியை விடக் கொடுமையானதாக இருப்பது போல் நடை பழகுவது கூட ் ஆரோக்கியத்துக்குக் கேடாகவே முடியும். 

அம்மை அப்பனைச் சுற்றி வந்தால உலகத்தையே சுற்றியது போலாகும் என்று விநாயகர் 'திருவிளையாடலில்'  சொன்னாலும் சொன்னார் பலரும் அதைச் சிக்கெனப் பற்றிக் கொள்கின்றனர். சிலர் அப்பாவி முருகனைப் போல மாங்கு மாங்கென்று நடக்க சிலரோ தமது அப்பார்ட்மென்ட்டின் அடிவாரத்தையேக் கிரிவலம் போலச் சில சுற்று சுற்றிவிட்டு தமது நடைப் பயணத்தை முடிக்கி விடுகிறார்கள்.அபார்ட்மென்ட் அடித்தளத்தில் துருப்பிடித்த ஆணி, உடைந்த குழாயின் உதிரிபாகம்,சிதறிய கண்ணாடி என்று எதாவது காலில் குத்திப் பல மாதங்கள் நடக்கவே முடியாமல் ஆகிவிடும்.மொட்டை மாடியில் நடப்பவர்களுக்கு இலவச இணைப்பாகக் கேபிள் வயர்கள்
.
இன்னும் சிலர் வீட்டிலேயே ஹாலுக்கும் வாசலுக்குமாக  குறுக்கும் நெடுக்குமாக உலவுவார்கள். அவ்வப்போது இரண்டாம் தடவைக் காஃபி,சூப், அரை வேக்காடு அவியல், அப்பளம் என்று நாவுக்கரசர்களாய் ருசி பார்த்து இழந்த கலோரிகளை இரு மடங்காக ஈடுகட்டுவார்கள்.  அதேபோல் நெல்லை சரவணபவனில் காப்பியில் தொடங்கிப், பூதத்தான் முக்கில் வடை, தெற்கு ரதவீதியில் மகிழம்பூ முறுக்கு என்று ரதவீதியில் உருட்பெருந்தேராய் உலவி இருட்டுக் கடை அல்வாவில் நிலைக்கு வந்து சேரும் போது கிலோமீட்டருக்கு ஒரு கிலோ எடை கூடுபவர்களைக் கண்டிருக்கிறேன்.

வேலைப் பளுவால் வந்த ரத்தக் கொதிப்புக்காக நடக்கத் தொடங்குபவர்கள் சிலர் செல்பேசியிலேயே 'கும்மிடிப்பூண்டிக்குச் சரக்கு அனுப்பியாச்சா? கோவில்பட்டிக்குக் குரியர் அனுப்பியாச்சா? என்று அலுவலகத்தை நடந்துகொண்டே நடத்தி ரத்தக் கொந்தளிப்பில்  முடிப்பவரும் உண்டு.
சில சமயம் மருத்துவர் நோயாளியை நடக்க வைப்பது கூட விபரீதமாவதுண்டு."தினமும் இரண்டு கிலோமீட்டர் நடக்கச் சொன்னீர்கள் இப்பொழுது விருதுநகருக்கு வந்திருக்கிறேன் .எப்பொழுது மதுரைக்குத் திரும்புவது டாக்டர்?"என்று கேட்பவர்கள் உண்டு.

அதுபோல் ஒருவர் கூறினார்"அந்த மருத்துவர் என்னை ஒரே மாதத்தில் நடக்க வைத்துவிட்டார"் என்று
.அவ்வளவு திறமைசாலியா என்று கேட்டதற்கு "அதெல்லாம் ஒன்றுமில்லை. வைத்தியத்துக்கான செலவுக்கு என் காரை விற்க வேண்டியதாகி விட்டது. இப்பொழுது நடக்கிறேன்"என்றார் மனிதர்.
நடப்பது எல்லாமே நன்மைக்கு என்று இல்லை.'நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றும் இல்லை.'
**************************

Monday, April 16, 2012

நேரமிது! நேருமிது!


            (புதிய ஆசிரியன் ஏப்ரல் மாத இதழில் வந்த கட்டுரை)
தீப்பிடித்து எரியும் வீட்டில் கூட கொஞ்சம் பரபரப்பு கம்மியாக இருக்கும். அன்று என் வீட்டில் ஒரே பரபரப்பு. வழக்கமாகக் கூட்டங்களுக்கு அணியும் சட்டையில் காஃபி கொட்டிவிட்டது.கழுத்து டையின் சுருக்கு மனமொவ்வாத மூன்று முடிச்சு மாதிரி எசகுபிசகாக விழுந்து விட்டது.

விஷயம் வேறொன்றுமில்லை. ஒரு சுழல் கழகத்தின் கூட்டத்திற்குத் தலைமையேற்க என்னை அழைத்திருந்தனர். நானும் ரௌடிதான் என்று வடிவேலு முழங்குவது போல் அக்கம் பக்கம் இருப்பவர்களிடம் நானும் தலைமை தாங்கப்போகிறேன் என்று முரசுகொட்டிக் கொண்டிருந்தேன்.

என்னுடைய நண்பர் ஒருவர் இருக்கிறார். எந்த வேலையையும் கடைசி நொடிவரை தாமதித்து எல்லோரையும் பதற்றத்திற்குள்ளாக்கிவிட்டுத்தான் செய்வார். விமானத்தைப் பிடிப்பெதென்றால் கூட விமானம் கிளம்பியபின் ஓடிச்சென்று பிடிப்பது அவர் வழக்கம். தாலி கட்டும் போது கூட நல்ல நேரத்திற்குள்  ஒன்றரை முடிச்சுதான் போட முடிந்தது. மீதி ஒன்றரையை எமகண்டத்தில்தான் போட்டார்.

அவரைப் போல் தாமதிக்கக் கூடாது என்று ஒன்பது மணி கூட்டத்திற்குக்  ஒன்பதிலிருக்கும் சின்னமுள்ளிற்கு மிகச்சரியாக தொன்னூறு டிகிரி கோணத்தில் பெரியமுள் பன்னிரண்டில் இருக்கும் போது கூட்டத்திற்குச் சென்றேன்.

பந்த அறிவிக்கப் பட்ட செவ்வாய்க்கிரக வீதி போல் கூட்டம் நடக்கும் இடம் வெறிச்சோடியிருந்தது. வெகுநேரம் காத்திருந்த காதலனைப் பார்க்கவரும் காதலியைப் போல் நிதானமாக ஒருவர் வந்தார். கூட்டத்தைப் பற்றி விசாரித்தேன். இந்த சீப் கெஸ்டுங்க இருக்காங்களே, அவனுக ஆடி அசைஞ்சு மெதுவா வந்தப்பறம் தான் கூட்டம் தொடங்கும்.நீங்க போய் எதாச்சும் உருப்படியான வேலை இருந்தா பாத்திட்டு வாங்க சார் என்று கூறிவிட்டு கூட்டம் நடக்கவிருக்கும் அறையைப் பெருக்கத் துவங்கினார்.

நேர்மையாக இருப்பவனிடம் சேரும் செல்வத்தைப் போல் மெதுவாக ஒவ்வொருவராகச் சேரத்துவங்கினர்.நேரத்தையும் பணத்தையும் வைத்துக் கொண்டு என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்துக் கொண்டிருக்கும் கும்பல் அது என்று கொஞ்சம் கொஞ்சமாகத் தெரியத் துவங்கியது.

ஒருவழியாக கூட்டம் துவங்கியது. கீழே இருந்தவர்களை விட மேடையில் மூன்று பேர் அதிகமாக அமர்ந்திருந்தனர். மேடையில்  இணைத் தலைவர், துணைத்தலைவர், உடனடி முன்னாள் தலைவர் (immediate past president) என்று பலரிருந்தனர். செயலாளர் வர்க்கத்திலும் இத்துணை வர்க்கபேதங்கள். பேசிய அனைவருமே (அனைவரும் பேசினார்கள்) இவர்கள் அனைவரையும் விளித்து விட்டுத் தான் உரையைத் தொடங்கினார்கள்.

இந்தக் கூட்டத்திற்கு அழைக்கும் போது ‘POWER POINT’ வசதி இருக்கிறதா என்று கேட்ட போது இருக்கிறது என்று பலமாகச் சொன்னார்கள். அதை நம்பி மடிக்கணினியை வேறு எடுத்துச் சென்றேன். கூட்டம் நடந்த அந்த அறையில் இருந்த ஒரு பிளக் பாயின்டைத் தான் அவர்கள் சொன்னார்கள் என்பது என் ஞானதிருஷ்டிக்கு எட்டாமல் போய்விட்டது.

எதோ என் நினைவில் இருந்தவற்றைப் பேச ஆரம்பித்தேன்.திடீரென்று உணவின் மணம் வரத்துவங்கியதும் அனைவரது (என்னுடையது உட்பட) காதுகளும் செயலிழந்து விட்டன. பசி வந்ததால் பறக்கும் விஷயங்களில் பதினொன்றாவதாக என்னுடைய வரலாற்றுச் சிறப்பு மிக்க உரையும் சேர்ந்து கொண்டது.   

கூட்டம் முடிந்ததும், இறந்தபின் கிடைக்கும் பாரத் ரத்னா மாதிரித் தாமதமாகத் தலைவர் வந்தார். திரையரங்கில் தெரியாமல் நமது காலை மிதித்தவர்களுக்கு இருக்கும் அளவு குற்ற உணர்வு கூட இல்லாமல் அருமையாகப் பேசினீர்கள் என்றார். ஜய ஜய ஜய ஜயஹே என்ற வரியை மட்டும்தான் அன்றைய கூட்டத்தில் அவர் கேட்டிருந்தார்.

ராமாயண உரைக்குப் பின் சீதை ராமர் உறவு குறித்த ஐயங்களைப் போல் சில கேள்விகளுக்குப் பதிலளித்து விட்டு மீண்டும் உங்களை அழைப்போம் என்ற அவர்களின் மிரட்டலை எண்ணிக் கலங்கியவாறு இலங்கை வேந்தனாய் இல்லம் திரும்பினேன்.

(பி.கு: அன்று நான் பேசிய தலைப்பு நேர மேலாண்மை .)



  

எழுத்து வைத்தியன் ஆண்டன் செகாவ்


Bank worker's unity ஏப்ரல் மாத இதழில் வெளிவந்த என் கட்டுரை.    
 எழுத்து வைத்தியன் ஆண்டன் செகாவ்
இலக்கிய உலகில் முதன்முதலில் சிறுகதை வடிவத்தை மிகச்சிறந்த கலைவடிவமாக்கியவர் யாரென்று கேட்டால் தயங்காமல் ஆன்டன் செகாவ் என்று கூறலாம்.வெறும் தனிமனித வரலாற்று அனுபவங்களாக இருந்த நாவல் வடிவத்தை மனிதநேயமும் கருணையும் தத்துவ விவாதங்களும் கொண்ட பெரும் படைப்புக்களாக ஆக்கியதில் தாஸ்தாயவஸ்கி மற்றும் தால்ஸ்தாய் ஆற்றிய பங்கிற்குச் சற்றும் குறைந்ததில்லை செகாவின் இடம். 


ஏற்கனவே ஓரிரு கதைகலைப் படித்திருந்தாலும்செகாவ் மீது பனி பொழிகிறது என்ற எஸ்.ராமகிருஷ்ணனின் கட்டுரையைப் படித்தபின்புதான் செகாவின் கதைகளைத் தேடிப் பிடித்து வாசிக்கத் தொடங்கினேன்.
சிறுகதை என்ற வடிவத்தின் சிறப்பம்சமே படிப்படியாக வளர்ந்து ஒரு குறிப்பிட்ட தருணத்தில் உச்சகட்டத்தை அடைவது.அந்தக் கணங்களே சாதாரணமாகத் தொடங்கும் கதைகளை மிகச்சிறந்த கதைகளாக உருவாக்குகின்றன. இந்த பாணியை மிகச்சிறப்பாகக் கையாண்டிருப்பவர் செகாவ்.அவரது 'பந்தயம்' என்ற சிறுகதையில் இரண்டு லட்சம் ரூபிள் பந்தயத் தொகைக்காகப் பதினைந்து வருடங்கள் தனிமையில் ஒரு அறையில் இருக்கச் சம்மதிப்பவன் பந்தயம் முடிய ஐந்து மணிநேரம் இருக்கும் போது பணம் மற்றும் செல்வங்களை வெறுத்து வெளியேறும் தருணம் அப்படிப்பட்டதே.
கையாலாகாதவர் மீது பெரும்கருணை  வெளிப்படுத்துகிறார்.அவரது 'துக்கம்' என்ற கதையில் மகனைப் பறிகொடுத்த குதிரைவண்டிக்காரன், யாரும் தன் துக்கத்தைக் காது கொடுத்துக் கேட்காத நிலையில் தனது குதிரையிடம் சொல்லி ஆறுதல் அடைகிறான்.
வான்கா என்ற சிறுவன்   தான் வேலை பார்க்கும் வீட்டு முதலாளியின் கொடுமை தாங்காமல் தன்னை வந்து கூட்டிச் செல்லுமாறு தன் தாத்தாவிற்கு எழுதும் கடிதம் நம்மை நெகிழச் செய்கிறது  என்றால் அதைக் கிராமத்திலிருக்கும் தாத்தாவுக்கு என்று மட்டும் முகவரி எழுதி அனுப்பும் இடம் தமது சிக்கல்கள் தீர்ந்திடும் என்ற நம்பிக்கையில் வாழும் கோடான கோடி மக்களின் குறியீடாகிறது.
செகாவிற்குப் பிடிக்காத ஒரு விஷயம் போலித்தனம்.தயவு தாட்சண்யம் பார்க்காமல் கிண்டலடிப்பார்.ரஷ்யாவின் செல்வந்தர் வர்க்கத்தின் வீண் படோடோபங்களையும், வெற்று அரட்டைகளையும் பகடியாக்குகிறார்.அதே நேரம் 
தாஸ்தாய்வ்ஸ்கி ,டால்ஸ்டாய் இருவரிடமும் இல்லாத ஒரு அம்சம் செகாவிடம் உள்ளது.அதுதான் நகைச்சுவை.அவரது சிறுகதைகளின் ஒரு குறிப்பிடத்தக்க அம்சம் பாத்திரங்களின் மிகையற்ற இயல்பான  வெளிப்பாடு.மெல்லிய நகைச்சுவை இழையோடி ஊடுபாவாக வரும்.பல இடங்களில் ஊசி ஏற்றினாற்போல் நகைச்சுவை மூலம் ஒரு மிகப்பெரிய கருத்தை வெளியிட்டிருப்பார். அவரது 'ஒரு அரசாங்கக் குமாஸ்தாவின் மரணம் என்ற கதையில் ஒரு குமாஸ்தா   ஒருவன் தான் தும்மியது தவறுதலாக உயரதிகாரி மீது பட்டிருக்குமோ என்று அஞ்சி உயிரையே விடுகிறான்.  எதிர்க்க முடியாத பிராணி என்ற கதையில் விவாகரத்து விண்ணப்பத்தை மருந்துக் கடையில் கொடுப்பது போல் (உவமை-செகாவ்) தவறுதலாக வேறு ஒரு அலுவலகத்திற்கு வந்து விடாப்பிடியாக விவரம் கேட்கும் பெண்ணைப் போல் பலரை நாம் தினமும் பார்க்கின்றோம்.  
அவரது பச்சோந்தி என்ற கதை மிகப் பிரபலமானது. ஒரு காவலாளி தெருவில் ரோந்து செல்லும் போது ஒருவனை நாய் கடித்துவிட்டதாக அறிந்து அந்த நாயின் உரிமையாளரைச்  சும்மா விடக்கூடாது என்று சீறுகிறார். பின்னர் உடனிருப்பவர் அது உயரதிகாரியின் நாயாக இருக்குமோ என்று ஐயுற்றதும் கடிபட்டவன் மேல் கோபப்படுகிறார்.இப்படி அதிகார வர்க்கத்தின் பச்சோந்தி வண்ணத்தை வரைந்து காட்டுகிறார்.
ஒரு இடத்தில் கூட செகாவ் போதிப்பதில்லை. டால்ஸ்டாயின் மகத்தான நாவலான 'அன்னா கரீனினா ' போன்றே  காதல்,திருமணம் ஒழுக்கம் போன்றவற்றின் மீதான பாரபட்சமில்லா விவாதமாக செகாவின் ' நாயுடன் வந்த சீமாட்டிகுறுநாவல் விளங்குகிறது.

செகாவைப் படிக்கும் யாருக்கும் புதுமைப்பித்தன் நினைவுக்கு வருவார்.சுரீரென்று தைக்கும் கிண்டல்கள், மாயத்திரைகளைக் கிழித்தெறியும் மனப்பான்மை , அபூர்வமான தருணங்கள் என்பன மட்டுமன்றி சொற்சிக்கனமும் இருவரின் பொதுவான பண்பு. மிகச் சரியாக ஒரு சிறுகதை முடியும் இடத்தில் முடித்திருப்பர். சில கதைகளைப் படிக்கும் போது இருவருமே முழுதும் முடிக்கப் பொறுமையின்றி, எழுதும் உற்சாகம் வடிந்து திடீரென்று முடித்தது போல் முடித்திருப்பார்கள்.
தமிழில் செகாவின் சிறுகதைகள் எம்.எஸ்ஸின் மொழிபெயர்ப்பில்  'பாதரசம்' வெளீயீடாகவும் அவரது குறுநாவல்கள் மற்றும் சில சிறுகதைகள் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் வெளியீடாகவும் வந்துள்ளன.ஆங்கிலத்தில் அவருடைய எல்லாப் படைப்புக்களும்  online-literature.com என்ற தளத்தில் வாசிக்கக் கிடைக்கிறது
ஆன்டன் செகாவ் ஒரு மருத்துவர்.எளியவர் பலரின் உடல் உபாதைகளை மருந்துகள் முலம் குணப்படுத்தியவர்.உள்ள உபாதைகளுக்குப் பேனாவின் மையையே மருந்தாக்கிய எழுத்து வைத்தியன் செகாவ்.

Tuesday, February 14, 2012

அம்பானி போல் பாயும் அம்பா நீ?

Bank workers Unity நவம்பர் இதழில் வந்த என் கட்டுரை. சோம்பல் காரணமாகக் காலதாமதம் (நாமெல்லாம் எங்க அம்பானி ஆவது?)


அம்பானி போல் பாயும்  அம்பா நீ?

ஒவ்வொரு புத்தகக் கண்காட்சியிலும் சிற்றுண்டி வகையறாக்களுக்கு அடுத்தபடியாக விற்றுத் தீர்வது ஜோதிடப் புத்தகங்களும் சுய முன்னேற்றப் புத்தகங்களும்தான். ‘வீட்டிலிருந்தபடியே இருதய அறுவை சிகிச்சை செய்வது எப்படி?’ என்பது போல் ‘அறுபது நாட்களில் அம்பானி ஆவது எப்படி?’ என்ற ரீதியில் பல புத்தகங்கள் தினமும் பிரசவமாகின்றன.

சமீபத்தில் நானும் அப்படி ஒரு நூலை வாசிக்க நேர்ந்தது. நூலின் பெயர் ‘ஐஸ்க்ரீமிற்காகச் சுறாக்கள் மத்தியில் நீந்தியவர்’ (He Swam with sharks for ice cream). எழுதியவர் தவால் பாட்டியா. பொதுவான சுயமுன்னேற்றப் புத்தகம் என்றாலும் தொழிலதிபர் தீருபாய் அம்பானியைப் பெருமளவில் மேற்கோள் காட்டுகிறது. தலைப்பே அம்பானி ஒரு சாகசத்திற்காகச் சுறாக்கள் உள்ள கடலில் நீந்திய சம்பவத்தின் அடிப்படையில் இருக்கிறது.

வியாபார நுணுக்கங்களைப் ‘பனியா புத்தி’ என்ற சொல்லாடல் மூலம் மிகவும் சுவாரஸ்யமாக விவரிக்கிறார் ஆசிரியர்.ஒருகாலத்தில் பணம் சம்பாதிப்பது பாவமாகக் கருதப்பட்டது.பணக்காரன் என்பவன் பாவி. நிம்மதியாகத் தூங்கமாட்டான் என்றெல்லாம் பொதுப்புத்தியில் ஏற்றப்பட்டிருந்தது

மாறிவரும் பொருளாதாரச் சூழலில் பணம் சம்பாதிப்பது அதுவும் பெரும் பணம் பண்ணுவதே வாழ்க்கையின் ஓரே லட்சியமாகக் கொண்டுள்ள ஒரு தலைமுறை உருவாகிக் கொண்டிருக்கிறது.பன்னாட்டு,உள்நாடு நிறுவனங்களில் பணிபுரியவும் அவர்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை வாங்கும் சந்தையை உருவாக்குவதற்கும் தேவையான சூழலை உருவாக்குவதில் சுயமுன்னேற்றப் புத்தகங்கள் முதலிடம் வகிக்கின்றன.

உலகின் வளங்கள் குறைந்து கொண்டே வருகின்றன என்பது கண்கூடு.ஆனால் இந்தப் புத்தகம் நுகர்வுக் கலாச்சாரத்தைப் போற்றுகிறது. உலகிலுள்ள எல்லாருக்கும் தேவையான வளங்கள் இருக்கின்றன. ஆகையால் செலவளிப்பது ஒன்றும் குற்றமல்ல என்கிறது இந்நூல்.இந்தப் புத்தகத்தைப் படிக்கும் ஒருவருக்கு உடனே களத்தில் இறங்கிச் சம்பாதிக்க வேண்டும் என்ற உந்துதல் ஏற்படுவது இயற்கை. ஆனால் இயற்கைவளம், உயிரியல் சமன்பாடு (ecological balance), விழுமியங்கள் (values) போன்றவற்றைப் பற்றிய அடிப்படைப் புரிதல்களையாவது உருவாக்குமா என்பது சந்தேகமே.

 சமீபத்தில் மரணமடைந்த ஆப்பிள் நிறுவனத் தலைவர் ஸ்டீவ் ஜாப்ஸ் பற்றிக் கூறப்பட்ட ஒரு விஷயம் என்னவென்றால் ‘அவர் முதலில் பொருட்களை உருவாக்குவார். பின்பு அதற்கான தேவையை உருவாக்குவார்’ என்று. அதாவது தேவையற்றவற்றைக் கூட இன்றியமையாதது என்று நினைக்கச் செய்யும் வியாபார தந்திரம்.இதுவே நுகர்வுக்கலாச்சாரத்தின் சாரம்.
இதற்கு நேர்மாறான  ஒரு புத்தகத்தையும் படித்திருக்கிறேன்.அ தை எழுதியதும் ஒரு பனியாதான்.நவீனமயமாக்கலின் எல்லா முகங்களையும் கடுமையாக எதிர்த்தார் .இயந்திரமயமாக்கல், நவீனமருத்துவம் ,ஏன் அவர் அதிகம் பயன்படுத்திய புகைவண்டியைக் கூட எதிர்த்தார். ‘தேவைக்கு அதிகமாய் வைத்திருப்பவன் திருடன்’ என்றார். புத்தகத்தின் பெயர் ஹிந்த் ஸ்வராஜ்.எழுதியவர் பெயர் மகாத்மா காந்தி.அந்த அளவுக்குப் போகாவிட்டாலும் கூட ஓரளவுக்கு நம்முடைய நுகர்வுக்கலாச்சாரத்தைக் குறைத்துக்கொள்ளலாம்

உளவியல்ரீதியாக இன்றைய வாழ்க்கைச்சூழல் மிகவும் பதற்றமுடையதாகவும், போட்டி நிரம்பியதாகவும் இருப்பதற்கு ஒரு முக்கிய காரணம் நாம் அசாத்தியமான குறிக்கோள்களை வைத்திருப்பது.அந்தக் கருத்தாக்கத்தை உருவாக்குவதற்கு இது போன்ற சுயமுன்னேற்ற நூல்கள் முக்கிய காரணமாக உள்ளன.ஆகவே அடுத்த முறை பில்கேட்ஸ் ஆவதற்கு முன் சற்று யோசியுங்கள்.

கடன் தந்தார் நெஞ்சம் போல்.

புதிய ஆசிரியன் பிப்ரவரி இதழில் வந்த என் கட்டுரை. (பாவம் அந்த இதழ்)

கடன் தந்தார் நெஞ்சம் போல்..

முன் குறிப்பு: இந்தக் கட்டுரை உங்களைக் குறிப்பது போல் தோன்றினால் அதற்கு நிர்வாகம் பொறுப்பாகாது.

டிசம்பர் மாதம் வந்தால் சென்னையைத் தாக்கும் காய்ச்சல்களில் புத்தகக் காய்ச்சலும் ஒன்று.தொலைபேசி டைரக்டரியைத் தவிர வேறு புத்தகத்தை விரல் நகத்தால் கூடத் தொட்டிருக்காதவர்கள் கூட புத்தகக் கண்காட்சிக்குச் செல்வதையும் முடிந்தால் புத்தகம்
வாங்குவதையும் ஒரு கடமையாகக் கைக்கொள்வர்.

காதல் என்பது கல்யாணம் ஆகும் வரை என்பது போல் ஒரு புத்தகத்தைப் படிக்கவேண்டும் என்ற ஆர்வம் பெரும்பாலும் அதை வாங்கியவுடன் வடிந்து விடுகிறது.அடித்துப் பிடித்து வாங்கிய புத்தகங்கள் சர்க்கரை நோயாளியிடம் இருக்கும் சாக்லெட் போல் யாருக்கும் பலனின்றி இருக்கும்.

பலர் பின்னட்டையை மட்டும் படித்துவிட்டுப் ‘பின்னிட்டான்’ என்பார்கள். இப்படித்தான் ஒரு நண்பர் தான் வாங்கிய ஒரு நாவலைப் “பிரமாதம் நானே இரண்டு முறை படித்துவிட்டேன்” என்று கூறி என் கையில் தந்தார்.ஒரு சுபமுகூர்த்த வேளையில் அதைப் படிக்கும் போதுதான் தெரிந்தது அந்தப் புத்தகத்தில் சுமார் நாற்பது பக்கங்கள் ஒட்டிக் கொண்டு பிரிக்கப்படாமலே இருந்தன.படிக்கும் சுவாரஸ்யத்தில் அவர் அதைக் கவனிக்கவில்லை போலும்.

புத்தகத்தைப் படிக்காவிட்டாலும் கூட விலை கொடுத்து வாங்கினால் குறைந்தபட்சம் ஒரு படைப்பாளிக்குக் கொஞ்சம் ராயல்டியாவது கிடைக்கிறது என்று ஆறுதல் பட்டுக்கொள்ளலாம்.
ஆனால் புத்தகத்தை இரவல் பெறுவது வேறு ஒரு வகை. ‘இரவல் தந்தவன் கேட்கின்றான்.அதை இல்லையென்றால் அவன் விடுவானா?” என்ற கண்ணதாசனின் வரிகளை கண்டு கொள்ளாமலே இருப்பது நம் பழக்கம்.

ஒருவருக்குத் தந்த புத்தகத்தில் “இதைப் படித்தவுடன் தயவு செய்து டாக்டர்.ராமானுஜத்திடம் திரும்பிக் கொடுக்கவும்” என்று எழுதியிருந்தேன் அதை வாங்கிப் போன நண்பர் அதைத் தருவதைப் பற்றியே பேசக்காணோம். ஒரு நாள் அவர் வீட்டுக்குச் சென்ற போது அவர் அறியாமல் அந்த புத்தகத்தை எடுத்துப் பார்த்தேன் .அதில் நான் எழுதியதற்குக் கீழே “சரி! கொடுத்துவிடுகிறேன்” என்று எழுதியிருந்தது.

அதே போல் முன்பு ஒருமுறை சாண்டில்யன் எழுதிய ‘கடல் ராணி’ புத்தகத்தைப் பக்கத்து வீட்டில் வாங்கிச் சென்றனர். சில மாதங்கள் கழித்து அவர்கள் வீட்டில் நவராத்திரி கொலுவில் சுண்டல் வாங்கிய எனக்குப் பேரதிர்ச்சி சுண்டல் தாளில் ‘கடல் ராணி’ பயணித்துக் கொண்டிருந்தாள். அடுத்த சில நாட்கள் கழித்து பொன்னியின் செல்வன் இருக்கிறதா என்று கேட்டார்களே பார்க்கலாம்.ஒரு வேளை பத்து வருடங்களுக்குச் சுண்டல் மடிக்க ஏற்பாடு செய்தார்களோ என்னவோ.

‘புத்தகம் வனிதா வித்தம் பரஹஸ்தம் கதம்’ –என்று ஒரு சம்ஸ்கிருதப் பழமொழி உண்டு. புத்தகம்,பெண், பணம் மூன்றும் கைமாறினால் மீண்டும் கிடைக்காது என்று பொருள்.பெண்களை இப்பழமொழி இழிவுபடுத்தினாலும் புத்தக விஷயத்தில் அது முழு உண்மையே.


ஒரு நோயைக் குணப்படுத்த எதுவும் செய்ய முடியாது என்றால் மருத்துவ உலகம் குறைந்த பட்சம் அதற்கு ஒரு அழகான பெயராவது வைத்து அழைத்து மகிழும்.

புத்தகங்களைத் திருடுவதற்குப் BIBLIO KLEPTOMANIA (BIBLIO –புத்தகம் KLEPTO திருட்டு) என்று பெயர்.புத்தகங்களைத் திருப்பித்தராத குணத்தை BIBLIODEBTOMANIA என்று அழைக்கலாமா? வேறென்ன செய்யமுடியும்?

பின் குறிப்பு: எனக்கு இரவல் தந்தவர்களுக்கு இக்கட்டுரை சமர்ப்பணம்.

Saturday, January 28, 2012

ரதவீதிகளில் உலவும் தேர்


          ரதவீதிகளில் உலவும் தேர்
 
 சென்ற வருடம் ஜனவரி மாதம் நெல்லையில் சாகித்ய அகாடமி விருது பெற்ற திரு நாஞ்சில்நாடன் அவர்களுக்குப் பாராட்டு விழா நடந்தது. அங்கு வண்ணதாசன், நாறும்பூநாதன் என்று பல இலக்கியப் பிரமுகர்களைக் கண்டேன். இவர்கள் அனைவரும் வங்கியில் பணியாற்றுபவர்கள்/ ஆற்றியவர்கள் என்ற தகவல் அறிந்து வங்கிப் பணிக்கும் இலக்கியத்துக்கும் உள்ள தொடர்பை எண்ணிக் கொண்டிருந்தேன். நண்பர் எஸ்.வி.வேணுகோபாலனின் தொடர்பு  மின்னஞ்சல்கள் மூலம் அப்போதுதான் கிடைத்த சமயம்.
  சமீபத்தில் ஒரு கட்டுரைத் தொகுப்பைப் படிக்கும் போது இன்னொரு பிரபலமும் வங்கியில் பணியாற்றியவர் என்ற தகவல் அறிந்து வியந்தேன்.அவர் கவிஞர் கலாப்ரியா. உருள் பெருந்தேர் என்ற அவரது சுயசரிதைத் தன்மையுடைய கட்டுரைகள் பெரிதும் வெளிப்படையாகவும் நேர்மையாகவும் அமைந்திருக்கின்றன

Add caption

     ஒரு கோவில்.அதைச் சுற்றி நான்கு ரதவீதிகள். இவ்வளவுதான் நெல்லை டவுண். ஆனால் அவற்றில்தான் எத்தனை இலக்கியவாதிகளின் காலடிகள் .எத்தனை எத்தனை கதைகள்.கதைமாந்தர்கள்..
 சிறந்த கவிஞர் என்றாலும் கூட  பூடகமான,தத்துவார்த்தமான மொழிநடையில் இல்லாமல் மிகவும் இயல்பான மொழியில் அந்தக்காலக் கட்டத்தில் வாழ்ந்த ஒரு மனிதர் நேரில் பேசுவது போல் எழுதியிருக்கிறார்.கவித்துவம் என்பது அவர் எழுத்துக்களில் பதிவு செய்யும் கணங்களிலும் மனித உணர்வுகளிலும்தான் வெளிப்படுகிறது. செயற்கையான மிகையான வர்ணனைகளோ நாடகத்தன்மையோ துளியும் இல்லை.

  அறுபது எழுபதுகளில் உள்ள தலைமுறையினரின் வாழ்க்கையின் கல்வி,பள்ளி, கல்லூரி, கொண்டாட்டங்கள், வேலையில்லா திண்டாட்டம், அக்காலத்தில் புழங்கிய கலைச்சொற்கள் விவா (மேலதிக விவரத்திற்குப் புத்தகத்தைப்ப் பார்க்கவும்) , காதல், முக்கியமாக சினிமா போன்றவை கட்டுரைகளின் பின்னோட்டமாக வந்து போகின்றன.அந்தக் காலகட்டத்தின் ஆவணமாகவுமாகின்றன.

இக்கட்டுரைகளில் வரும் கதைமாந்தர்களை வேறு பெயர்களில் நாம் அடிக்கடி சந்தித்திருக்கிறோம்.  பெரும்பாலும் மனிதர்களின் வீழ்ச்சி அடையும் தருணங்களைப் பதிவுசெய்கின்றன.வாழ்ந்து கெட்ட மைனர்கள், ஜமீந்தார்கள், அவர்களது அதிகாரபூர்வமற்ற வாரிசுகள், ஊரைவிட்டு ஓடிப் போனவர்கள், ஒரு டிரங்க்பெட்டியோடு போகும் திசை தெரியாமல் ரயிலேறும் குடும்பம், திடீரென்று தற்கொலை செய்து கொள்பவர்கள், தொலைந்த வாட்ச்சைத் தேடிக் குறிசொல்பவரைத் தேடுபவர்கள் என்று பலவிதமான மாந்தர்கள்.

 தோசைக்கல்லில் விழுந்து நெஞ்சில் சூடு கண்ட சமையல்காரருக்கும் மனைவிக்குமான பிணக்கு, சொத்திற்காக ஒரு முறையில் தங்கை உறவுள்ளவளையே ஜமீந்தார் மணப்பது, கண்டக்டர்கள் தொப்பிக்காசு வாங்குவது போன்ற சில அபூர்வமான கணங்களும் வந்து போகின்றன 

பல இடங்களில் வாழ்வின் தரிசனங்களும் கவித்துவக் கணங்களும் பாலச்சந்திரன் சுள்ளிக்காடின் சிதம்பர நினைவுகளை நினைவு படுத்துகின்றன. தனது காதல் முயற்சிகள், நண்பனின் வருங்கால மனைவிக்கேக் காதல் கடிதம் கொடுத்தது, லாகிரி வஸ்துக்களுடனான தொடர்புகள், தற்கொலை  முயற்சிகள் என்று அபூர்வமான நேர்மையுடன் அமைந்திருக்கின்றது இந்நூல்.

   
 நதிக்கரை(BANK) களில் தான் நாகரிகமும் இலக்கியமும் தோன்றின என்பது வரலாறு. நதிக்கரைகளில் அமர்ந்து பணத்தைக் கடன் கொடுப்பவர்களால் தான் வங்கிகளுக்கே BANK  என்ற பெயர் வந்தது என்றுகூடக் கூறுவர். ஒரு வேளை அதுதான் வங்கிகளுக்கும் இலக்கியத்துக்கும் உள்ள தொடர்புக்குக் காரணமாக இருக்கலாம் . தாமிரபரணி நதிக்கரையும் ஒரு கதைவங்கிதான். நானும் கலாப்ரியாவின் அந்த BANK ஐச் சேர்ந்தவன் என்பதில் ஒரு சிறு பெருமை.

(உருள்பெருந்தேர் சந்தியா பதிப்பகம் 232 பக்கங்கள் விலை ரூ.150/)    

Friday, January 13, 2012

காட்டப் படும் மறுகன்னம்

காட்டப்படும் மறு கன்னம் 
(Bank Worker's Unity January இதழில் வந்தது)

கிறிஸ்துமஸுக்கு முந்தினம் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனின் ஐந்து நூல்கள் வெளியீட்டு விழாவில் அவரது எழுத்தில் வெளிவந்த சிறுகதையான ‘ஆம் புருனோ அவர்கள் குற்றவாளிகளே!” என்ற சிறுகதையை ஜெயராம் குழுவினர் அருமையான நாடக வடிவமாக்கி இருந்தனர். மனிதன் தோன்றிய காலம் முதலே அவனது தேடல்கள் துவங்கி விட்டன. புதிதாக ஒன்றைக் கண்டறியும் போது அவனது பழைய நம்பிக்கைகள் மாறுகின்றன. மாற்றங்கள் சிலரது இருப்பை அதிகாரத்தைக் கேள்விக்குள்ளாக்குகின்றன.
மதநம்பிக்கைகள் இறுக்கமாகி மாற்றங்களுக்கு உடன்படமுடியாத போது எதிர்ப்பவர்களை நம்பிக்கைக்கு எதிரானவனாகக் குற்றம் சாட்டுகின்றன. வானவியல் சம்பந்தமான புதிய உண்மைகளைச் சொன்னதால் புருனோவை மதத்துரோகி என்று தீர்ப்பளித்து அவரை உயிரோடு எரிக்கிறது ரோமன் நியாயசபை.
“தண்டிப்பதற்கான காரணத்தைத் தேடுவது நியாயவாதிகளுக்கு எளிதானது. தண்டனையை முடிவு செய்துவிட்டு அதை நிறைவேற்றுவதுதானே அதிகாரம்”என்று எஸ்.ரா கூறுகிறார். நம்பிக்கை உள்ளவர்களுக்கு எல்லாமே எளிமையானவை.ஆனால் படித்தவன் தன்னை மட்டுமன்றி உலகேயே குழப்புகிறான்”
இது போன்ற அருமையான வரிகளுடன் அமைந்திருக்கிறது இச்சிறுகதை.இது போல் உலக இலக்கியங்களிலும் உண்மையான கிறிஸ்துவைப் பற்றிய விசாரணைகள் பல இடம் பெற்றுள்ளன. உடனடியாக நினைவுக்கு வருவது தாஸ்தாயவஸ்கியின் கரமசாவ் சகோதரர்களில் வரும் ‘The Grand Inquisitor” என்ற அற்புதமான பகுதி.

கிறிஸ்துவின் பிறந்தநாளன்று டால்ஸ்டாயையும் தாஸ்தாயவ்ஸ்கியையும் நினைக்காமல் இருக்கமுடியாது .இருவருமே மதத்தின் தேவைகளையும் போதாமைகளையும் பற்றித் தங்கள் படைப்புகளில் சலிக்காமல் பேசியவர்கள். தாஸ்தாயவஸ்கியின் கிறிஸ்து டால்ஸ்டாயினுடையவரை விட அதிக நெகிழ்ச்சித் தன்மை உடையவர். இறுக்கமான மத நிறுவனங்களுக்கு அப்பாற்பட்டவர். குற்றமும் தண்டனையும் நாவலில் வரும் நாயகனும் கிறிஸ்துவிடம்தான் சரணடைகிறான்.

அதிலும் கரமசாவ் சகோதரர்களில் வரும்' The Grand Inquisitor' பகுதி மதமும் அதிகாரமும் இணைந்து செயல்படுகின்றன என்பதைப் பற்றிய ஒரு விசாரணையாக இருக்கிறது. மதத்துரோகம் செய்யும் நபர்களை விசாரித்துத் தீர்ப்பளிக்கும் நபருக்கு Inquisitor என்று பெயர். நாவலில் இவான் என்ற கதாபாத்திரம் இது பற்றி ஒரு நெடுங்கவிதை எழுதியிருப்பதாகத் தன் சகோதரன் அல்யுஷாவிடம் கூறுவதாக அமைந்திருக்கிறது இப்பகுதி.

கிறிஸ்து தாம் இறந்த 1500 (நாவலின் காலம் 1880) வருடங்களுக்குப் பிறகு மீண்டும் உயிர்த்தெழுந்துவருவதாக ஒரு சம்பவத்தைக் கற்பனை செய்கிறார் ஆசிரியர். மதத்தின் பெயரால் மக்களின் மீது தமது அதிகாரத்தை நிறுவியிருப்பவர்கள் கிறிஸ்துவையே மதத்துக்கு எதிரானவர் என்று கூறிச் சிறைப்படுத்துவதாகக் காட்டுகிறது அப்பகுதி. இதே போன்ற ஒரு புனைவை நாம் ஜெயமோகனின் ‘பின் தொடரும் நிழலின் குரல்’ நாவலில் காணலாம்.

முக்கியமாக டால்ஸ்டாய் உலகில் எந்த எழுத்தாளர்களும் செய்யாத வகையில் கசாக் ராணுவத்தால் பாதிக்கப்பட்ட Dukhobars என்ற இனத்துக்காகப் புத்துயிர்ப்பு என்ற நாவலை எழுதி அதில் வந்த வருமானத்தை அவர்களுக்குக் கொடுத்தார். ‘டுகோபார்ஸ்’ இனம் தம்மை ஆன்மீகக் கிறிஸ்துவர்கள் என்று அழைத்தனர். கொல்லாமை , சுய ஒழுக்கம்,தன்னிறைவு அஹிம்சை, ராணுவத்திற்கு எதிர்ப்பு போன்ற பல கொள்கைகளைக் கொண்டிருந்தனர். இக்கொள்கைகளை டால்ஸ்டாயிடமிருந்து அறிந்து கொண்ட காந்தி அவற்றைத் தம்வாழ்விலும் கடைப்பிடிக்க ஆரம்பித்தார். உண்மையிலேயே அவர்கள் தான் மறுகன்னத்தையும் காட்டும் தூய கிறிஸ்துவர்களாக இருந்தனர்.
அதிகாரம், வன்முறை போன்றவற்றுக்கு எதிராகவும் எளியவர்களுக்குப் பரிவாக உள்ள பெருங்கருணையே கிறிஸ்து. அதையே மாபெரும் இலக்கியங்களும் காண்பிக்கின்றன.

உதவிய நூல்
1.எனதருமை டால்ஸ்டாய்- எஸ்.ராமகிருஷ்ணன். உயிர்மை பதிப்பகம்

Tuesday, January 10, 2012

தொலை நோக்கியா



             தொலை நோக்கியா!
     புதிய ஆசிரியன் இதழில் வந்த கட்டுரை
    தொலைபேசி என்று பெயரிட்டவர் என்னைப் பொருத்தவரை ஒரு தொலைநோக்கி. அதாவது தீர்க்கதரிசி. தொலைப்பதற்காகவே வாங்கும் பொருட்களில் செல்போனுக்கே முதலிடம். (செல்வதனால் நாமதனைச் செல்போன் என்போம்-என்றும் ஒரு பாடபேதம் உண்டு).அடிக்கடி தொலைத்துத் தொலைத்து இப்பொழுதெல்லாம் நான் வேறு ஏதாவது எண்ணிலிருந்து வீட்டிற்குப் பேசினாலே எதிர்முனையில் ஹலோவிற்குப் பதிலாக ‘எப்ப தொலைத்தீர்கள்?” என்ற கேள்விதான் எழுகிறது.

‘ஒவ்வொருமுறை செல்போனைத் தொலைக்கும் போதும் நம்முடைய வாழ்விலிருந்து சிலர் நீங்குகிறார்கள்-நிரந்தரமாக’ –இது கேட்பதற்குக் கவிதை மாதிரி இருந்தாலும் நடைமுறையில் பல பிரச்சனைகள். குடல்நோய் நிபுணரிலிருந்து குழாய் ரிப்பேர் செய்பவர் வரைப் பலதரப்பட்ட மனிதர்களின் தொடர்பையும் ஒரே நொடியில் இழந்து விடுகிறோம்.

   தொலைபேசி நிறுவனத்திடம் அதே எண்ணுடைய ‘சிம் கார்டை’ வாங்குவது ‘சிம்’மசொப்பனம்தான். அப்படியே வாங்கியதும் நம்மை அழைக்கும் பலரையும் அடையாளம் தெரியாமல் அசடு வழிய வேண்டும். யாரிந்தப் பெண் நம்மை அழைக்கிறாளே? குரல் வேறு இனிமையாக இருக்கிறதே என்று நினைத்துக் கொண்டிருப்போம். திடீரென்று திட்ட ஆரம்பித்த பின்புதான் அழைப்பது மனைவி என்று தெரியவரும்.

  ‘தில்லு முல்லு’ என்ற திரைப்படத்தில் தேங்காய் சீனிவாசன் கூறுவார் “கேவலம் ரெண்டு இரண்டு இஞ்ச் நீளமுள்ள ஒரு மீசை இவ்வளவு பெரிய மனிதனையே ஏமாற்றி விட்டதே” என்று. அதே போல் மனித மூளையின் திறன் மகத்தானது .அது கேவலம் ஒரு அரை அங்குல அளவுள்ள ஒரு சிம்மில் சிறைபட்டுக் கிடப்பதா ? என்று எண்களை நினைவில் வைத்துக் கொள்ள முயற்சி செய்தால் ஒன்பதிற்குப் பின்னால் உள்ள ஒன்பது எண்களும் நினைவுக்கு வராமல் நவக்கிரகங்கள் போல் திசைக்கு ஒன்றாய்த் திரும்பிக் கொள்கிறது.
  ஆகவே ஒவ்வொரு முறை தொலைபேசி தொலைந்தபின்னும் அகர வரிசைப் படி எல்லாப் பெயர்களையும் எழுதி வைத்துக் கொள்ள வேண்டும்  என்று முடிவெடுத்து எழுத ஆரம்பிப்பேன். அகரத்துக்குப் பின் நகரவே நகராது. மீண்டும் ஒரு தொலைபேசி!  புனரபி தொலைத்தல்! புனரபி தொடங்குதல்!!

   செல்பேசியைத் தொலைத்த மறு நிமிடமே அறிவுரை மழைகள் பொழியத் துவங்கும். நீங்கள் சாட்டிலைட் மூலமாகத் தொலைத்த போன் எங்கிருக்கிறது என்று பார்க்கலாம் என்று ஆயிரம் ருபாய் மதிப்புள்ள தொலைபேசிக்கு ஸ்ரீ ஹரிகோட்டா வரைச் செல்லச் சொல்பவர்கள் உண்டு. ஜாதகத்தில் ‘தூர சம்பாஷண’ (தொலை பேசிதான்) தோஷம் இருக்கிறது என்று சொல்லிப் பரிகாரம் செய்ய வலியுறுத்துபவர்களும் உண்டு
சரி மன நிம்மதிக்காக மகாங்களிடமாவது போகலாம் என்றால் அவர்கள் ‘நீங்கள் தொலைபேசியைத் தொலைக்கவில்லை.தொலைபேசிதான் உங்களைத் தொலைக்கிறது ‘ என்று அத்வைதத்தின் ஆறாவது விதியை மேற்கோள் காட்டுகிறார்கள். நம்முடைய தொலைபேசி தொலைந்தால் ஆத்மார்த்தமாகப் பதட்டப்படும் ஜீவராசிகள் நமக்குக் கடன் கொடுத்தவர்கள்தான்.

ஒருமுறை நண்பர் ஒருவர் மிகவும் வருத்தத்துடன் அமர்ந்திருந்தார். என்னவென்று கேட்டதற்கு ‘தொலைபேசியைத் தொலைத்துவிட்டேன்’ என்றார். ‘இதெல்லாம் பெரிய விஷயமா? நான் கூடப் பலமுறை தொலைத்திருக்கிறேன்!’ என்று கூறினேன். அதற்கு அவர் “ சார்! நீங்களாவது செல்போனைத் தொலைத்தீங்க.நான் தொலைத்தது ‘லாண்ட்லைன்’ தொலை பேசியை’ என்றாரே பார்க்கலாம்.

“உனக்கும் கீழே உள்ளவர் கோடி. (செல்)போனால் போகட்டும் போடா!”