Tuesday, August 28, 2012

மாற்று மருத்துவம்


 ஜூலை மாத புதிய ஆசிரியன் இதழில் வந்தது

    முன்பு படித்த துணுக்கு ஒன்று- அந்தக் காலத்திலெல்லாம் இத்தனை அழகழகான வியாதிகளும் அவற்றிற்கான வசீகரமான மருந்துக் குப்பிகளும் கிடையாது. திரேதா யுகத்தில் ஹோட்டலுக்குப் பார்சல் வாங்கச் சென்றால் சாம்பாருக்கு ஒரு பாத்திரம் எடுத்துப் போவது போல் மருத்துவரிடமும் ஒரு பாட்டிலை எடுத்துச் செல்ல வேண்டும்.கம்பவுண்டர் ஒருவர் டாக்டர் என்ன மருந்து எழுதியிருந்தாலும் அவரது மனநிலை,நோயாளியின் ராசியான நிறம் போன்றவற்றைப் பொருத்து மஞ்சள், சிகப்பு பச்சை வண்ணத் திரவங்களைக் கொடுப்பார்.லேபிளில் நோயாளியின் பெயரையும் எழுதுவார்.(இப்பொழுது சாமியார்கள் கூட அருள் வாக்கை ஒரு கேரி பேக்கில் போட்டுத்தான் கொடுக்கிறார்கள்.)

   அப்படி ஒரு முறை ஒரு கம்பவுண்டரிடம் ஒரு அம்மாள் மூச்சிரைக்க ஓடி வந்தாள். ஐய்யய்யோ! என் பேரு ஜெயலக்ஷ்மி! இந்த மருந்து பாட்டில்ல ராமலக்ஷ்மீன்னு போட்டிருக்கே! யாருக்கோ குடுக்க வேண்டிய மருந்தை நான் குடிச்சிட்டேன். ஒரே மயக்கம் படபடப்பா இருக்கு! என்று கதறி மயங்கி விழுந்தார். பின்பு மருத்துவர் வந்து மாற்று மருந்து கொடுத்த பின் தான் அந்த அம்மையாருக்கு உடல்நிலை சரியாயிற்று. மருத்துவர் செய்த மாற்று மருத்துவம் என்ன தெரியுமா? அந்த மருந்து பாட்டிலின் லேபிளைக் கிழித்து ஜெயலக்ஷ்மி என்று எழுதியதுதான்.

   கொஞ்சம் கவனக் குறைவாக இருந்தாலும் விபரீத விளைவுகள் ஏற்படும் என்பதால் மருத்துவத் துறையில் இருப்பவர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். என்றாலும் சிலசமயம் இது போன்ற நகைச்சுவைச் சம்பவங்களுக்கும் குறைவிருக்காது.

   நான் கிளினிக் தொடங்கிய புதிதில் ஒருவர் வந்து பல்வலிக்கு மருந்து வேண்டும் என்றார். வாயைத் திறங்கள்! என்றேன். யசோதைக்குக் கண்ணன் காட்டியது போல் காட்டினார். பல் ஒன்று சொத்தையாக இருக்கிறது. பல் மருத்துவரிடம் காட்டி எடுத்து விடுங்கள்! என்றதற்கு பல்வலி எனக்கில்லை! எங்கம்மாவுக்கு என்றாரே பார்க்கலாம். அவர் ஏன் வாயைத் திறந்தார் என்று இன்று வரை புரியவில்லை.நல்ல வேளை அவரது அம்மாவிற்கு மூல நோய் இல்லை.


     சமீபத்தில் ஒரு மருத்துவ மனையில் ஒரு நோயாளியைப் பார்க்க அழைத்திருந்தனர். அவரை அரை மணிநேரம் பார்த்தபின்பும் அவருக்கு மனநிலை பாதிப்பு ஒன்றும் இருப்பது போல் தெரியவில்லை. பின்புதான் புரிந்தது செவிலியர்கள் 203 ஆம் எண் அறைக்குப் பதிலாக 302 ஆம் எண் அறைக்கு அழைத்துச் சென்று விட்டனர் என்று.இன்னும் பத்து நிமிடங்கள் சென்றிருந்தால் அவருக்கே தன் மனநிலை மீது சந்தேகம் வந்திருக்கும்.

    ஒரு நோயாளி படுக்கையில் இருப்பதால் அவரது இடத்துக்கே வந்து இரத்தப் பரிசோதனை செய்வதற்கான சீட்டை அந்நோயாளியின் உறவினரிடம் கொடுத்தோம். அரை மணி நேரம் கழித்து அவ்வுறவினர் முழங்கையைப் பஞ்சால் தேய்த்துக் கொண்டே வரும் போதுதான் தெரிந்தது அவருக்கே இரத்தம் எடுத்துவிட்டு அனுப்பியிருக்கிறார்கள் என்று."கையை நீட்டச் சொன்னாங்க நீட்டினேன். யாருக்கு ரத்த டெஸ்டுன்னு கேட்கவே இல்லையே" என்றார் அவர். நான் இரத்தம் கொடுத்ததால்தான் நோயாளி பிழைத்தார் என்று பின்னர் அவர் பெருமிதத்துடன் எல்லோரிடமும் கூறியது வேறு விஷயம்.


  அதே போல் ஒருவர் என்னிடம் வந்து ஒரு சுவீட் பாக்ஸைக் கொடுத்து  எங்க அப்பாவின் உயிரைக் காப்பத்திட்டீங்க ! ரொம்பத் தேங்கஸ்! என்றார். ஏதோ தவறாகச் சிகிச்சை அளித்து விட்டோம் என்று நினைத்துக் கொண்டேன்.சொல்லிவிட்டுச் சென்றவர் பத்து நிமிடம் கழித்து வந்து சாரி சார்! நீங்க டாக்டர் ஜானகிராமன் இல்லையா? என்று வழிந்தார் என்னைப் போலவே. ஆனாலும் பெரிய மனதுடன் அந்த சுவீட் பாக்ஸை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள்! என்றார். ஒரு வேளை அதற்குள் நான் அதில் அரை லட்டைச் சாப்பிட்டு விட்டதைக் கண்டு பிடித்திருப்பார் போலும்.

இது போன்ற சம்பவங்கள் பூனைக்கும்  அடி சறுக்கி அடிபடும் என்பதை நினைவில் வைத்து இன்னும் கவனமாக இருக்கக் கோருபவைகள்.

******************************************************************************************************

காவல் கோட்டம் -அதிகாரத்தின் களவுஜூலை மாத  BANK WORKER'S UNITY இதழில் வந்தது


சென்ற வருடம் ‘சாகித்ய அகாடமி ‘விருது வாங்கிய சு.வெங்கடேசனின் ‘காவல் கோட்டம்’ நாவலுக்கும் அதன் ஆசிரியருக்கும் பரவலான கண்டனங்களும் பாராட்டுக்களும் ஒரு சேரக் கிடைத்தன. புத்தகத்தின் இரு அட்டைகளுக்கிடையே இருக்கும் விஷயங்களைப் பற்றி மட்டும் நாம் பார்க்கலாம்.மதுரையை மையமாகக் கொண்டுள்ள இந்நாவல் நாயக்க வம்சம் மற்றும் பிரிட்டிஷ் அரசு போன்றவை மதுரையின் அரசதிகாரத்தைப் பெறுவதும் அவ்வரசுகளோடு தாதனூர் என்ற ஊரைச் சேர்ந்த கள்ளர்கள் கொள்ளும் முரணான உறவையும் அடிச்சரடாகக் கொண்டுள்ளது.்

பதிமூன்றாம் நூற்றாண்டில் மதுரை மீது குமார கம்பணன் மீதான விஜயநகரப் படை படையெடுத்து மதுரையைக் கைப்பற்றுகிறது, இதன் மூலம் மதுரையில் நாயக்க வம்சத்தின் அரசாட்சி நிறுவப்படிகிறது .மறுபுறம் தமது நிலத்தைப் பிரிந்த சடைச்சி என்பவளின் வாரிசான தாதனூர் கள்ளர்கள் திருமலை நாயக்கரின் அரண்மனையிலேயே கன்னம் வைக்கின்றனர். கழுவன் என்ற அக்கள்ளனுக்கு மூன்று சவுக்கடிகளோடு மதுரை கோட்டையைக் காவல் காக்கும் பொறுப்பையும் தாதனூருக்கே அளிக்கிறார் மன்னர். கள்வனை விடச் சிறந்த காவலன் யாரிருக்கிறார்கள்? இந்த இடம் நாவலில் மிகச் சுவையாக விளக்கப் பட்டுள்ளது.

காவல்,களவு இரண்டுமே தாதனூர் மக்களுக்குத் தர்மம்தான்.களவின் மூலம் இறைத் தொண்டு புரிந்து பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான திருங்கை மன்னன்தான் அவர்களின் முன்மாதிரியாக இருந்திருக்க வேண்டும். களவு அவர்களுக்கு ஒரு கலை.  ‘ராஜ களவு’ என்றால் ஊருக்கே அது ஒரு திருவிழா. அதே போலக் காவல் ஒப்புக்கொண்ட வீதியிலோ, கிராமத்திலோ ஒரு குந்துமணி அளவு நெல் களவு போனாலும் அவர்கள் அவமானத்தில் துடிதுடித்துப் போய் அதற்கான இழப்பை ஈடுகட்டுகிறார்கள்.
நாவல் முழுதும் தாதனூர் மக்களின் நுண்ணிய அறிவு,இயற்கையைக் கூர்ந்து அவதானிக்கும் முறை,தாவரம் பறவைகள், விலங்குகள் போன்றவற்றின் நடவடிக்கைகளைக் கூர்ந்து விளக்குதல் போன்றவை அருமையாகக் காட்சிப் படுத்தப் பட்டுள்ளன. வானில் முளைக்கும் வெள்ளியிலேயே பலவகையான வெள்ளிகள் மற்றும் அவற்றின் கால நேரங்கள் நாவலில் பல இடங்களில் வருகின்றன. விடிந்துவிட்டதாக எண்ணிப் பெரும் பொருளுடன் சென்று திருட்டுக் கொடுத்தவரை ஏமாற்றிய வெள்ளிக்கு ரெட்டியைக் கெடுத்த வெள்ளி என்று பெயர் வருகிறது.

விஞ்ஞான வளர்ச்சியின் பெயரால் எவ்வளவு கூர்மையான திறமைகளை நாம் இழந்திருக்கிறோம் என்று இந்நாவலைப் படிக்கும் போது தெரிகிறது. அம்மக்கள் சுவரின் மீது நிழல் விழுவதைப் போல் ஓசையின்றி இரவில் வலம் வருகின்றனர்.
கன்னம் வைப்பது, மாடு திருடுவது, கதிர் கசக்குவது,துப்பு சொல்வது போன்ற விஷயங்கள் மிகுந்த சுவாரசியத்தோடும் இயல்போடும் கி.ராஜநாரயணின் ‘கோபல்ல புரத்து மக்கள்’ போல் படம் பிடித்திருக்கிறார் ஆசிரியர்.

பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் தனது அதிகாரத்தை நிலைநாட்ட விரும்பும் போது அதற்கு உறுத்தலாக இருக்கிறது தாதனூர் குடிமக்களின் காவல் முறை.தங்களது காவல்முறையை வேருன்றச் செய்யக் குடிகாவல் முறையைச் சட்டவிரோதமாக்கிக் குற்றப் பரம்பரை என்ற முறையை உருவாக்குகின்றனர்.காவல்,களவு இவ்விரண்டின் மூலமே உயிர்வாழ்ந்து கொண்டிருந்த தாதனூர் கடுமையாகப் போராடிப் பின் வீழ்வதோடு இந்நாவல் முடிகிறது.

நாவல் முழுவதும் பின்புலமாக ஏராளமான வரலாற்றுச் சம்பவங்கள்.கிருஷ்ணதேவராயர், ராணி மங்கம்மாள், கட்ட பொம்மு, ஊமைத்துரை போன்ற ஆட்சியாளர்களைப் பற்றிய குறிப்புகள் சிறிதும் பெரிதுமாக ஆங்காங்கே வருகின்றன. கொடுமையான தாது வருஷப் பஞ்சமும் அதன் பின்புலத்தில் அமைந்த நல்லதங்காள் போன்ற புனைவுகள், முல்லைப் பெரியாறு அணை கட்டியதன் பின்னணி அதைக் கட்டும் போது ஏற்பட்ட இழப்புக்கள் என்று மிக விரிவாக வருகின்றன. அதே போல் புகைவண்டி வருவது போன்ற நவீன மாற்றங்களை மக்கள் பீதியுடன் எதிர்கொண்ட விதம் போன்றவையும் சுவைபட வந்துள்ளன.

நாவலுக்கான ஆசிரியரின் கடும் உழைப்பு வெளிப்பட்டாலும் நாவலின் சிறப்பம்சமாக வட்டார வழக்கையும் இயல்பான நையாண்டிகளையும் குறிப்பிடலாம். அளவுக்கு மீறிய சில விவரிப்புக்கள், எல்லாத் தகவல்களையும் ஒரே நாவலில் சொல்லிவிட வேண்டும் என்பது போல் பல சம்பவங்கள் வேகமாக வந்து போகின்றன.இன்னும் சற்று கவனமாகக் கத்தரித்திருக்கலாம்.
சு.வெங்கடேசன்

காவல் என்பதற்கும் களவு என்பதற்கும் பெரிய வித்தியாசம் ஒன்றுமில்லை.. காவல் உரிமை என்பது அதிகாரப் பூர்வமாகச் சுரண்டுவதற்கான உரிமை. இதைப் பெறுவதற்காகவே வரலாற்று நதியில் ஏராளாமான இரத்த வெள்ளம்.வல்லான் வகுத்ததே வாய்க்கால் என்பது போல் அதிகாரத்தின் உறுதியைக் கேள்விக்குறியாக்கும் எல்லாச் செயல்களும் குற்றம் என்று அறிவிக்கப் படுகின்றன.

சமீப காலங்களில் உலகமயமாக்கலின் விளைவாக எழுந்துள்ள புரட்சிப் போராட்டங்களையும் லண்டனில் நடைபெற்றது போன்ற சூறையாடல்களையும் நாம் கவனிக்கும் போது களவு என்பது ஒரு அதிகாரத்தின் மீதான எதிர்வினை என்ற கோணத்தில் நமக்குப் புதிய தரிசனங்கள் கிடைக்கின்றன. முழுநேர இடதுசாரி ஊழியரான சு.வெங்கடேசனும் தனது ஆயிரம் பக்க நாவலில் இதைத்தான் அடிநாதமாகக் கொள்கிறார் என்பது என் எண்ணம்.

(காவல் கோட்டம் –சு.வெங்கடேசன்.தமிழினி பதிப்பகம், 1035 பக்கங்கள் விலை ரூ.650)

துரத்தும் நோய்


              துரத்தும் நோய்  
ஜூன் மாத 'புதிய ஆசிரியன்' இதழில் வந்தது
                      

கடல்சூழ்ந்த மன்னுலகின் சந்து பொந்துகளிலெல்லாம் குடியேறியிருக்கும் தமிழர்கள் அனைவரும் பேசும் மொழி ஒன்றாக இருந்தாலும் அதில்தான் எத்தனை வித்தியாசங்கள்?.

வாரியலால வாசலத் தூக்கப் போ! என்று நெல்லைக்காரர் சொன்னால் கோவையில் இருப்பவர் குழம்பி வாசலை எப்படித் தூக்குவது என்று முழிப்பார். தூப்பது என்றால் நெல்லைத் தமிழில் பெருக்குவது. அதே போல் அடுத்த தபா ஊட்டாரனை இட்டா!(அடுத்த முறை கணவனை அழைத்து வா- என்றும் பாடம்)  என்னும் சென்னை மொழிக்கு நெல்லைக்காரர் எதோ பாரசீக மொழியைக் கேட்டது போல் மெர்சலாகி விடுவார்.

தட்டோட்டிக்கிப் போலாமா? என்றால் கேட்பவர்கள் குழம்பிக் கார் ஓட்டலாம்,பஸ் ஓட்டலாம் தட்டை எப்படி ஓட்டுவது என்று முழிப்பார்கள்.ஆனால் நெல்லைப் பக்கம் தட்டோட்டி என்றால் மொட்டை மாடி.ஒரு முறை கால்களிலிருந்த சப்பாத்து என்று படித்துச் சாப்பிடும் சப்பாத்தியை ஏன் கால்களில் வைக்க வேண்டும் என்று குழம்பினேன். பின்புதான் இலங்கைத் தமிழில் காலணி(ஷூ)களுக்குச் சப்பாத்து என்று புரிந்தது 

நண்பர் ஒருவர் சேலத்துப் பக்கம் குடியிருந்தார்.அவருக்குப் பெண் குழந்தைதான் பிறக்க வேண்டும் என்று ஆசை.அவர் மனைவிக்குப் பிரசவம் ஆனதும் நர்ஸ் வந்து பிள்ளைக் குழந்தை பிறந்திருக்கிறது என்றார். நண்பர் மனம் நொந்து குழந்தை முகத்தைக் கூடப் பார்க்கவில்லை. தற்செயலாக ஒரு நாள் குழந்தைக்கு உடை மாற்றும் போதுதான் கவனித்தார் அவருக்குப் பிறந்தது பெண்குழந்தைதான் என்று. அந்த ஊர்ப்பக்கம் பிள்ளைக் குழந்தை என்றால் பெண்குழந்தை என்று அர்த்தமாம்.

மருத்துவத் துறையிலும் வட்டாரத்துக்கேற்ப சொற்களும் அதன் பொருட்களும் வேறுபடும். நாஞ்சில் பகுதியில் ரொம்பப் பனியாக இருக்கிறது என்றால் போர்வையைப் போர்த்திக் கொண்டு படுத்துக் கொள்ளுங்கள் என்று பதில் சொல்லிவிடக் கூடாது. பனி என்றால் காய்ச்சல் என்று பொருள். அதே போல் நீக்கம்பு என்றால் எதோ நீளமான கழி அல்ல-காலரா .

ஒருவர் அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப் பட்டிருந்தார். அவரது நண்பர் அந்த டாக்டரா? அவர் ஆபரேஷனெல்லாம் கோளாறாப் பண்ணுவாரே! என்று கூற அவர் அலறி அடித்து மருத்துவ மனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆகிவிட்டார்.பிறகு தான் தெரிந்தது அந்த வட்டார வழக்கில் கோளாறா என்றால் ரொம்பவும் கச்சிதமாக என்று அர்த்தமாம்.

 ‘அசாத்தியமாக இருக்கிறது என்றால் சத்தியமாக அசதியாக இருக்கிறது என்றுதான் பொருள். சங்கு வலிக்கிறது என்றால் வந்திருப்பவர் மஹாவிஷ்ணு என்று அர்த்தமல்ல.கழுத்தில் வலி என்று புரிந்து கொள்ள வேண்டும். சென்னைக்காரர் கேரா இருக்கிறது என்றால் கேட்கும் மருத்துவருக்குத் தலைசுற்றும்.

நோயாளி ஒருவர் மருத்துவரிடம் ராத்திரியெல்லாம் ரொம்பத் துரத்துகிறது டாக்டர்! என்றால் துரத்துவது நாயா அல்லது பேயா என்று பயந்து நோயாளியைத் துரத்தி விடக் கூடாது. இருமலைத்தான் துரத்தல் என்கிறார்கள்.

ஒரு முறை  எங்களது நேபாள வாட்ச் மேனுக்குக் கையில் சீழ் கட்டியிருந்தது. அதைக் கீறி எடுத்து மருந்து போட்டுக் கட்டி விட்டேன். அவரது வலியையும், பின்னர் அவர் சொன்ன நன்றியையும் நிச்சயமாகச் சொற்களால் வெளிப்படுத்தவில்லை. எல்லா நேரங்களிலும் மொழி தேவைப் படுவதில்லை.