Saturday, July 2, 2016

காத்திருப்பான் கமலக் கண்ணன்- ராகமாலிகை ,ராகமாளிகை

பிரபல மனநல மருத்துவர் ருத்ரன் அவர்கள் ஒரு அற்புதமான கண்ணன் படம் வரைந்து முகநூலில் பதிவிட்டிருந்தார். தரையில் அமர்ந்து ராதை உருவம் வரைந்து கொண்டு என்று தலைப்பிட்டிருந்தார் அதற்கு. காத்திருப்பான் கமலக் கண்ணன் என்ற திரைப்படப் பாடல் வரிகள் அவை. அந்த அசையா உயிரோவியம் அந்த அழியாப் பாடலை நினைவு கூர வைத்தது.


ஜி.ராமநாதன் என்னும் இசைமேதை கர்னாடக சங்கீதத்தின் அடிப்படையில் ஏராளமான திரைப்பாடல்களைத் தந்திருக்கிறார். மன்மதலீலையை வென்றார் உண்டோ என்று சாருகேசியில் தொடங்கி கப்பலோட்டிய தமிழன், வீரபாண்டியக் கட்டபொம்மன், மதுரை வீரன் என ஏராளமான திரைப்படங்கள்; பாடல்கள்.

உத்தமபுத்திரன் திரைப்படத்தில் அவர் அமைத்த பாடல்கள் பிரபலமானவை. யாரடிநீ மோகினி என்று மேற்கத்திய பாணியிலும், முல்லைமலர் மேலே என்று தர்பாரி கானடாவிலும் மிளிர்பவை என்றாலும் மகுடம் வைப்பதுபோல் அமைந்தது ராகங்களின் தோரணமாக வரும் காத்திருப்பான் கமலக் கண்ணன் என்ற பாடல்தான். பி.லீலா என்னும் அசாத்திய திறமை வாய்ந்த பாடகி அநாயசமாகப் பாடிய பாடல்தான் இது. பாடல் கே.டி .சந்தானம் எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

பாடல் மூன்று ராகங்களில் தொடுத்த  மாலையாக அமைந்திருக்கிறது.
பாடல் ஆரம்பிப்பது சாருமதி ராகத்தில். நடபைரவியின் குழந்தையான இந்த ராகத்தில் மோக்ஷமு கலதா என்ற தியாகைய்யரின் கீர்த்தனை மிகப் பிரபலம். எம்,டி .ராமநாதன் பாடிக் கேட்டால் மோட்சமே தான். சாரமதி என்று அழைக்கப்படும் இந்த ராகத்தைச் சர்ச்சையில் இழுத்தவர் இசைஞானி இளையராஜா. மரி மரி நின்னே என்ற தியாகைய்யரின் காம்போதி ராகப் பாடலை சிந்து பைரவி திரைப்படத்தில் சாருமதி ராகத்தில் ஏசுதாஸைப் பாடவைத்துப் பாடறியேன் படிப்பறியேன் என்று சித்ராவை அதே ராகத்தில் பதிலடி கொடுக்க வைத்திருப்பார். இது வித்வான்களிடம் சர்ச்சையைக் கிளப்பினாலும் படைப்பாளியின் சுதந்திரமும் ஞானமும் வெளிப்படும் பாடல். அகலிகை போன்ற புராணக்கதைகளைப் புதுமைப்பித்தன் மறுவாசிப்பு செய்யவில்லையா? அதுபோல்தான்.

காத்திருப்பானுக்கு வருவோம். காத்திருப்பின் தவிப்பைச் சாருமதியில் அழகாத் தொடங்கியிருப்பார். பாடல் தாளம் ஆரம்பித்து ஒரு மூன்று அட்சரங்கள் கழித்தேத் தொடங்கும். முக்கால் இடம் தள்ளி என்று சொல்வார்கள்.  முதல் பீட் தொடங்கி ஒரு சின்ன இடைவெளி. தயக்கத்தை வெளிப்படுத்தும் விதமாக அமைந்திருக்கும். முதல் சரணமும் சாருமதியில் ஆத்தங்கரைதனிலே அந்திப் பொழுதிலே என்று மெதுவாகத் தொடங்கிப் பூத்தமென்மலர் போலே புனிதமான வனிதை ராதை வருகையைக் காண என்று தேடலின் பதைபதைப்பை விறுவிறுப்பாகச் சொல்லும். லேசாக சாரமதியிலிருந்து நெருங்கிய ராகங்களான நடபைரவி, ஜோன்பூரி ஜாடையெல்லாம் தெரியும். பெரும்பாலான திரைப்பாடல்கள் எல்லாம் 22 கேரட்தானே. அதுதானே நகைசெய்ய வசதி.

அடுத்த சரணம் திலங்கு ராகத்தில் அமைந்திருக்கும். கேலி செய்ய ஏற்ற ராகம். மனதில் உறுதி வேண்டும் என்று சிந்து பைரவியில் ராஜாவாலும் நல்லதோர் வீணை செய்தே என்று வறுமையின் நிறம் சிகப்பில் எம் எஸ் வி யாலும் புகழ்பெற்ற ராகம். கோபியர் கொஞ்சும் சல்லாபன் என்று தொடங்கி வேய்குழலிசை அமுதூட்டி எழிலொடு சுகம் காட்டும் இன்பத்தமிழ் பேசித் தாவிப் பிடிப்பான் என்ற இடத்தில் திலங்கு ராகத்தைத் தாவிப் பிடித்திருப்பார் பி. லீலா. தரையில் அமர்ந்து ராதை உருவம் வரைந்து கொண்டு என்று கையறு நிலையையும் காட்டியிருப்பார் ராமநாதன்.

மோகனம் இல்லா ராகமாலிகையா? வேடிக்கையாய் செய்வான் அலங்காரம் என்று கம்பீரமாக மோகனத்தில் உயர் ஸ்தாயியைத் தொட்டுவிட்டு வீணை இசைக்கச் சொல்லி என்ற இடத்தில் மோகனமான ஒரு வீணை துணுக்கு பாடுவான் என்று ஒரு ஆலாபனை இறுதியில் வேகமாகப் பாதம் நோகுமே என்று பரிவுடன் காதலின்பமே தந்த நாயகன் அங்கு என்று முத்தாய்பபாக முடியும்.

1958 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் . கிட்டத்தட்ட அரை நூற்றாண்டு காலமாகியும் காதில் ஒலிக்கும் பாடல். ராகப் பூக்களால்.ராமநாதன் தொடுத்த ராகமாலிகையா இல்லை இசை குடியேற அவர் எழுப்பிய ராக மாளிகையா?..இரண்டுமேதான்.

ஓவியத்தைப் பயன்படுத்த அனுமதித்த டாக்டர்  ருத்ரன் அவர்களுக்கு நன்றி.
காத்திருப்பான் கமல கண்ணன் அங்கே காத்திருப்பான் கமல கண்ணன் கனிந்து கனிந்து அன்பை நினைந்து நினைந்து கண்ணுறங்காமல் ஆத்தங்கரை தனிலே அந்தி பொழுதினிலே பூத்த மென்மலர் போலே புனிதமான வனிதை ராதை வருகை காண

கோபியர் கொஞ்சும் சல்லாபன் வேங்குழலிசை அமுதூட்டும் எழிலொடு சுகம் காட்டும் தாவி பிடிப்பான்... ஆ... ஆ... ஆ... ஆ... வெண்ணை தயிர் குடத்தை தடுப்பான் தாவி பிடிப்பான் வெண்ணை தயிர் குடத்தை தடுப்பான் தரையில் அமர்ந்து ராதை உருவம் வரைந்து கொண்டு அங்கு

வேடிக்கையாய் செய்வான் அலங்காரம் வீணை இசைக்கச் சொல்லி வேண்டுவான் சில நேரம் பாடுவான்... பாடுவான் அதற்க்கவளாடுவாள் பல நேரம் பாடுவான் அதற்க்கவளாடுவாள் மறு நேரம் பாதம் நோகுமே என்று பரிவுடன் காதலின்பமே தந்த நாயகன் வந்து


Saturday, May 14, 2016

காலை எழுந்தவுடன் காபி


காபி ராகம் ஒரு அருமையான இனிமையான ராகம். காலை நேரம் கேட்க இனிமையாக இருக்கும். பட்டிணத்தில் பூதம் திரைப்படத்தில் ஒரு ரயில் நிலையத்தில் காலையில் காபி ராகத்தை ஹம்மிங்க் செய்வார் கே ஆர் விஜயா. 'காபி வேண்டுமா என்று கேட்டால் காபி ராகத்தைப் பாடுகிறீர்களே' என்று ஜெய்சங்கர் கேட்பார். அந்தப் படத்தில் ஒரு அருமையான காபி ராகப் பாடல் 'அந்த சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி' .இது காமராசருக்காகக் கவியரசு கண்ணதாசன் எழுதிய தூது என்றும் சொல்வார்கள். இசை எம் எஸ் வி அல்ல. கோவர்த்தனம்

காபி ராகத்தில் அமைந்த நிறைய பாடல்கள் பிரபலமானவை. என்ன தவம் செய்தனை, (பாவநாசம் சிவன்) ஜகதோத்தாரனா (எம் எஸ் ஐ நா சபையில் பாடியது) போன்றவை அதில் அடக்கம்.  மாண்டலின் என்ற மொண்ணையான வாத்தியத்தில் காபியின் சங்கதிகளைக் கொண்டுவரும் மாமேதை ஸ்ரீநிவாசின் வாசிப்பைக் கேளுங்கள்.

அது போல் ஜகதோத்தாரண எம் எஸ்சின் மாஸ்டர்பீஸ்


குறையென்றுமில்லை பாடலில் வரும் திரையின்பின் நிற்கின்றாய் கண்ணா என்ற பகுதி காபி ராகத்தில் அமைந்தது. 

திரைப்பாடல்களில் பல காபி ராகத்தில் அமைந்தவை
1.செந்தமிழ்தேன்மொழியாள்- மாலையிட்ட மங்கை- விஸ்வநாதன் ராமமூர்த்தி 

2.ஏ பாடல் ஒன்று- ப்ரியா- இளையராஜா (ராஜா டச்) 

3.காதல் ரோஜாவே- ரோஜா- ஏ.ஆர் ரஹ்மான் (ஹிந்துஸ்தானி டச்)

4.ஆலங்குயில்- பார்த்திபன் கனவு- வித்யாசாகர் (அசல் ஃபில்டர் காபி) . கபிலனின் குறுங்கவிதைகளும் ஹரினியின் குரலும் இறுதியில் வரும் ஸ்வரக் கோவைகளும் பிரமாதம்.

5.காதல் வந்ததும் கன்னியின் உள்ளம்- பூவெல்லாம் உன் வாசம்- வித்யாசாகர் (வித்யாசமான காபி)


வழக்கம் போல் இளையாராஜா வித்யாசமாக காபி ராகத்தைப் பயன்படுத்தியிருப்பார். படம் ஃப்ளாப். ரஜினிக்கு படு ஃப்ளாப் ஆன சில படங்களில் ஒன்று. ஆனால் அந்த பாடல் வித்யாசமான காபி ராகம். பாடல்-அட மாப்பிளே சும்மா மொறைக்காதே. படம் சிவா.
காபி ராகத்தில் அமைந்த மாஸ்டர் பீஸ் என்றால் தும்பி வா தும்பக் குடத்து என்ற ஓலங்கள் என்கிற மலையாளப் படப் பாடல்தான். ராஜாவின் இசையும் பாலு மகேந்திராவின் ஒளிப்பதிவும் ஜானகியின் குரலும் அவ்வளவு இனிமை. கடந்த சில மணி நேரங்களாக இப்பாடல்தான் காதுகளில் ஓடிக் கொண்டிருக்கிறது.

காபி ராகத்தில் இன்னும் பல திரைப்பாடல்கள் உள்ளன. குச்சி குச்சி ராக்கம்மா கூட கொஞ்சம் லைட்டான காபிதான்.
திருமலைதென்குமரி படத்தில் வரும் மதுரை அரசாளும் மீனாட்சி பாடல் பெரும்பாலும் காபி ராகத்திலேயே அமைந்திருக்கும். இசை- குன்னக்குடி வைத்தியநாதன்
சீர்காழி பாடியிருக்கும் ஸ்வரக் கோர்வைகள் அசல் கும்பகோணம் டிகிரி காபி


ராஜரிஷி என்ற திரைப்படத்தில் அமைந்துள்ள பாடல்கள் எல்லாமே செவ்வியல் அம்சத்துடன் விளங்குபவை. அழகிய திருமகனே- மத்யமாவதி
மான் கண்டேன் மான் கண்டேன்- வசந்தா
சங்கரா சிவ சங்கரா- பந்துவராளி- மலேஷியாவின் மாஸ்டர்பீஸ்
ஆடையில் ஆடும்- மாயாமாளவகௌளை
அந்தப் படத்தில் மாதவம் ஏன் மாதவனே என்ற பாடல் ஜானகியின் குரலில் வரும் ஒரு அசத்தலான காபி ராகம். இசைஞானியின் மேதமைக்கு ஒரு சான்று. பாடலும் அழகான சிலேடைகளால் நிறைந்திருக்கும்
மா துறவை நீ அறிவாய் (பெரும் துறவு)
மாதுறவை ஏன் மறந்தாய்(மாது + உறவு)
அருள்கொடு மா தேவா (பெரும் தேவன்)
அருகினில் மாதே வா (பெண்ணே வா)
அந்திமாகலையில் இந்த மேனகைகள் அசையும் அசைவிலே இசைவிலே இடை ஒடிய ஒடிய நடனம் பயிலும் மயிலிதுதானோ - போன்ற வேகமான வரிகளுடன் அமைந்த பாடல்
வழக்கம்போல் விரகதாபத்தைக் குரலில் அருமையாக வெளிப்படுத்த ஜானகி, பாவனைகளில் லட்சுமி.