Friday, October 21, 2011

சிவரஞ்சனி--சொன்னாலே சோகம் வரும்

24x7மணி நேரத்  தொலைக்காட்சிகளில்லாத காலம் அது.பரபரப்பான காலை நேரம். தூர்தர்ஷன் முக்கியத் தலைவர் ஒருவர் இறந்த செய்தியை அலறிக் கொண்டிருக்கிறது.வீட்டில் இருக்கும் யாரும் அந்த செய்தியைக் கண்டு கொண்டதாகவே தெரியவில்லை. திடீரென்று ஒரு வடநாட்டு உஸ்தாத் வந்து நிலையத்தில் அமர்கிறார்.தலைவர் இழுத்துக் கொண்டிருக்கும் போதே அவரது லீவைக் கான்சல் செய்துவிட்டு அழைப்பு விடுத்து விட்டனர். இது மாதிரி சமயங்களுக்கே உரிய மங்கலான ஆடைகளையும் முகபாவனைகளையும் அணிந்த அவர் தனது சாரங்கியை எடுத்துச் சிவரஞ்சனியை இரண்டு இழுப்பு இழுத்தார். அவ்வளவு தான் மொத்தக் குடும்பமும் திரும்பித் தொலைக்காட்சியைப் பார்த்தது."அய்யய்யோ! போய்ட்டாரா?" என்று .அப்போது தான் அந்தச் சாவு அவர்களுக்கு உறைத்தது. அவ்வளவு மகிமை சிவரஞ்சனிக்கு உண்டு.அண்ணாமலையை நினைத்தாலே புண்ணியம் போல் சிவரஞ்சனியைச் சொன்னாலே சோகம் வரும். ஹிந்துஸ்தானியிலும் பிரபலமான ராகம் இது. புல்லாங்குழலில் சிவரஞ்சனியைக் கேளுங்கள்.மனதை உருக்கும் இசை.உங்களுக்கு என்னென்ன பாடல்களை நினைவு படுத்துகிறது என்பதைக் குறித்துக் கொள்ளுங்கள்


மனதில் இனம்புரியாத ஒரு அழுத்தம் ஏறுகிறதா?அந்தச் சோகத்திலும் ஒரு சுவை இருக்கிறதல்லவா? அந்த நிறைவுணர்வை வெளிப்படுத்த இசையரசி எம் எஸ்ஸின் குரலில் அமைந்த அமரத்துவம் வாய்ந்த பாடல் "குறைஒன்றும் இல்லை ". பாடலின் துவக்கமும் முதல் சரணமும் சிவரஞ்சனியில் அமைந்திருக்கிறது.


சிவரஞ்சனி கர்னாடக இசையில் பிரபலமாகாத ராகம். கீர்த்தனைகள் பெரிதாக இல்லாவிட்டாலும் தற்காலத்தில் மிகவும் பரவலாகப் பாடப்படுகிறது.'தருணம் இதைய்யா' என்ற பாபனாசம் சிவனின் கீர்த்தனை இருக்கிறது .மகாராஜபுரம் சந்தானம் அவர்களின் அருமையான தில்லானா ஒன்று உண்டு. நாகூர் ஹனிஃபாவின் உருக்கும் குரலில் ,சிவரஞ்சனியில் ஒரு அருமையான இஸ்லாமியப் பாடலைக் கேளுங்கள் .(தகவல் உபயம் எழுத்தாளர் திரு.சுப்பாராவ்)






பெரும்பாலும் ராகமாலிகை எனப்படும் பல்வேறு ராகக்கலவைகளில் சேர்ந்து வருகிறது. இளையராஜாவால் பெரிதும் சிலாகிக்கப்படும் 'சின்னஞ்சிறு கிளியே 'என்ற பாரதியின் பாடலில் 'உன் கண்ணில் நீர் வடிந்தால் என்ற வரிகளுக்குப் பொருத்தமாகச் சிவரஞ்சனியை அமைத்திருப்பார் இசை அமைப்பாளர் சி.ஆர்.சுப்புராமன்.(சிலர் சிவரஞ்சனிக்கு நெருங்கின ராகமான நீலமணிஎன்றும் சொல்வர்)


பழைய திரைப்படங்களில் அவ்வளவாகப் பயன்படுத்தப்படவில்லை என்றாலும் அழியாப் புகழ் கொண்ட இந்தப் பாடல் சிவரஞ்சனியில் அமைந்திருக்கிறது.கடைசிச் சரணத்தில் வேறு ராகத்துக்குப் போய்விட்டாலும் பிரிவின் துயரை ,சொல்லமுடியாத தவிப்பை வெளிப்படுத்த சிவரஞ்சனியே சிறந்தது என்று அமைத்திருக்கிறார் திரை இசைத்திலகம் கே.வி .மகாதேவன்.செவ்வாய் கிரகத்தில் வசிப்பவர்களுக்கு மட்டுமே இந்தப் பாடலைப்  பற்றி மேலும் விவரங்கள் தேவைப்படும். கீழே உள்ள சுட்டியைச் சொடுக்கவும்.


சிவரஞ்சனி என்றாலே என்றென்றும் நம் நினைவிற்கு வருவது ஒரு ஹிந்திப் பாடல்தான்.மென்மையான சோகம் கலந்த காதல் பாடலாக நிரந்தர நினைவுகள் எழுப்பும் பாடல்.லக்ஷ்மிகாந்த் -பியாரிலால் இசையில் .ஏக்துஜேகேலியே. மிக எளிமையான ,ஆனால் அழகும் இனிமையும் கூடிவரும் மெட்டு.




'Pentatonic' என்று அழைக்கப்படும் ஐந்து ஸ்வரங்களை (ஸ,ரி2,க1, ப,த2) உடைய வகையைச் சேர்ந்த சிவரஞ்சனி மெல்லிசைக்கு மிகவும் ஏற்றது. இளையராஜா வழக்கம் போல் ஏராளமான பாடல்களில் பயன்படுத்தி இருக்கிறார்.பொன்மானே கோபம் ஏனோ( ஒரு கைதியின் டைரி),குயில்பாட்டு ஓ வந்ததென்ன (என் ராசாவின் மனசிலே),அடி ஆத்தாடி (கடலோரக்கவிதைகள்) என்று பல பாடல்களில் சந்தோஷமான சூழ்நிலையில் பயன்படுத்தி இருக்கிறார்.நல்லவனுக்கு நல்லவன் படத்தில் வந்த உன்னைத்தானே ஒரு மாஸ்டர்பீஸ்.ஆனாலும் அவரது டாப் சிவரஞ்சனி வரும் பாடல் 'வா வா அன்பே அன்பே' படம் அக்னி நட்சத்திரம்.ஒரு ஹிந்துஸ்தானி சாடையிலான ராகத்தை மேல்நாட்டு பாணியில் அற்புதமான சேர்ந்திசையாகத் தந்திருப்பார்.







சோகமான சூழலுக்கும் ராஜா பயன்படுத்தியிருக்கிறார்.சோலைப் புஷ்பங்களே (இங்கேயும் ஒரு கங்கை) ,குடகுமலைக் காற்றில் ஒரு (கரகாட்டக்காரன்),ஓ ப்ரியா ப்ரியா(இதயதைத் திருடாதே) என்று பல பாடல்கள். ஆனாலும் இரவா? பிரிவா? துயரமா? "கூப்பிடுடா சிவரஞ்சனியை! "என்று இளையராஜா அழைக்கும் போது உருக்குவதற்காகவே வந்துவிடுவாள். வைதேகி காத்திருந்தாள் என்னும் இசையால் நிரம்பி வழியும் திரைப்படத்தில் ஒரு சிவரஞ்சனி.




சிவரஞ்சனி என்று சொல்லிவிட்டு அந்தப் பாடலைச் சொல்லாமல் எப்படி? மூங்கில் இலைக் காடுகளே மாதிரி நல்ல சிவரஞ்சனியைத் தந்திருக்கும் சங்கர் கணேஷ் இசையில் எஸ்.பி.பி பாடும் "அவள் ஒரு மேனகை" பாடலில் முதல் சில வரிகள் சிவரஞ்சனியில் அமைந்திருக்கும்.மூல மெட்டு தெலுங்குப் படத்திலிருந்து சுடப்பட்டது என்றாலும் அருமையான பாடல்.படம்-நட்சத்திரம்அவள் ஒரு மேனகை- இங்கே க்ளிக்கவும்

மலையாளத் திரை இசையுலகில் கொடிகட்டிப் பறந்தவர் ரவீந்திரன். கர்னாடக இசையின் பின்னணியில் அமைந்த ஏராளமான வெற்றிப் பாடல்களைப் படைத்திருக்கிறார். ஹிஸ் ஹைனஸ் அப்துல்லா, பரதம்,கமலதளம் மாதிரி.அவரது இசையில் ஒரு அருமையான சிவரஞ்சனி

விஜய் ஆனந்த என்ற கன்னட இசை அமைப்பாளரைப் பற்றி நமக்குப் பெரிதாக (ஏன் சிறியதாகக் கூட) ஒன்றும் தெரியாது.ஆனால் அவர் 'நான் அடிமை இல்லை' திரைப்படத்தில் ஒரு அருமையான சிவரஞ்சனியைத் தந்திருக்கிறார். கமலுக்கு ஒரு 'தேரே மேரே 'என்றால் ரஜினிக்கு ஒரு 'ஒரு ஜீவன் தான்' 

சமீபகாலமாய்த்  திரைப்படங்களின் உலோகத்தன்மை அதிகரித்து மென்மையான உணர்வுகள் மழுங்கடிக்கப்பட்டு வருவதால் சிவரஞ்சனி மாதிரி  மென்மையான ராகங்கள் அருகி வருகின்றன. எனினும் அபூர்வமாக நல்ல சிவ்ரஞ்சனியைச் சமீபத்தில் கேட்க முடிந்தது.'காதல்' திரைப்படத்தில் 'உனக்கென இருப்பேன்". இசையமைப்பாளர் ஜோஷுவா ஸ்ரீதர் (இவரை எங்கே காணவில்லை?)

 

சோகத்தையும் கலையாக்கும் கலையில் சிவரஞ்சனிக்கும் ஒரு முக்கிய இடம் உண்டு.




Thursday, October 6, 2011

நோயர் விருப்பம்.


(அக்டோபர் மாத 'புதிய ஆசிரியன்' இதழில் வந்தது)

வெகுகாலத்துக்கு முன் நடந்த சம்பவம் ஒன்று .ஒரு வயதான அம்மையார் மருத்துவரிடம் முட்டு வலி என்று சென்றார் ஒருவர். மருத்துவர் ஸ்டெத்தஸ்கோப்பை எடுத்தார். அப்போது அந்த நோயாளி கூறினார் “ நானும் எத்தனையோ டாக்டர்களிடம் காட்டிவிட்டேன் . யாருமே இந்தக் குழாயை முட்டில் வைத்துப் பார்க்கவே இல்லையே ராசா”. . உஷாரான அந்த மருத்துவர் ஸ்டெத்தஸ்கோப்பை முட்டில் வைத்துப் பார்த்தார். பாட்டிக்குப் பரம திருப்தி.அதில் வேடிக்கை என்னவென்றால் முட்டில் வைத்து விட்டுப் பழக்க தோஷத்தில் “ மூச்சை நல்லா இழுத்து விடுங்க “ என்றதுதான்.

ஒரு துணி எடுக்கச் செல்லும் போது நம் மனதில் ஒரு எதிர்பார்ப்பு இருப்பது போல் மருத்துவரிடம் செல்லும் போதும் நோயுற்றவர்களுக்கு ஒரு எதிர்ப்பார்ப்பு இருக்கும். இன்ன வியாதிதான் நமக்கு, அதற்கு இதுதான் காரணம் , இதுதான் வைத்தியம் என்று ஒரு எதிர்ப்பார்ப்போடுதான் வருவார்கள். திறமையை விட இந்த நோயர் விருப்பத்தைப் பூர்த்தி செய்வதே ஒரு மருத்துவரைப் புகழ்பெற்றவராக்குகிறது.

எல்லா நோய்களுக்கும் ஊசி போட்டால் தான் சரியாகும் என்பது பெரும்பாலான நோயர் விருப்பமாக உள்ளது.அதிலும் சிலர் வலதுகை வலி என்று போனேன் இடதுகையில் ஊசி போட்டுவிட்டார்கள் என்று நுகர்வோர் நிதிமன்றம் வரை போவதுண்டு. நெல்லை டவுணில் ஒரு புகழ் பெற்ற மருத்துவர் இருந்தார். அவரது கிளினிக் திஹார் ஜெயில் போல் நிரம்பி வழியும் .காரணம் அவரது தனித்தன்மையே.  நாம் எந்தப் பகுதியில் வலி என்கிறோமோ அந்தப் பகுதியிலேயே ஊசி போடுவார். சற்றும் மிகைப்படுத்தலற்ற உண்மை இது. இது தெரியாமல் வரிசையில் காத்திருந்த ஒருவர் இந்த விஷயத்தைக் கேள்விப்பட்டதும் தலைதெறிக்க வெளியே ஓடிவிட்டார். வேறு ஒன்றுமில்லை அவர் மூலவியாதிக்காகச் சிகிச்சை வந்திருந்தார்.

இப்பொழுதெல்லாம் குழந்தை பெறுவது கூட இயற்கையாக அன்றி நாள் நட்சத்திரம் பார்த்துப் பெரியவர்களின் விருப்பப்படி தான் நடைபெறுகிறது. “ரோகிணி நட்சத்திரம் வேண்டாம். மாமாவுக்கு ஆகாது. அதனால இன்னும் இரண்டு நாள் கழித்துச் சிசேரியன் வைத்துக் கொள்ளலாமா டாக்டர்?” என்று கேட்பது சாதாரணமாகி விட்டது. எதிர்காலத்தில் மகப்பேறு மருத்துவமனைகளில் ட்யூட்டி டாக்டர் போல் ட்யூட்டி ஜோதிடர்களும் இருக்கலாம்.

நோயுற்றவரின் எதிர்பார்ப்பும், உடன் இருப்பவரின் விருப்பமும் வேறு வேறாக இருக்கும். மேலைநாட்டில் பத்து வருடங்களாக மூக்கடைப்பால் அவதிப்பட்டிருந்த ஒரு பெண் மூக்கடைப்பு சரியானதும் கணவர் மீது துர்நாற்றம் அடிக்கிறது என்று விவாகரத்து செய்துவிட்டார்.சில சமயம் நோய் குணமாகக் கூடாது என்று நோயாளியே நினைக்கலாம். திங்கட்கிழமை காலை வயிற்றுவலியால் பாதிக்கப்படும் குழந்தை போல். காது கேளாமையால் பாதிக்கப்பட்ட ஒருவர் மருத்துவரிடம் கூறினார் “தயவு செய்து எனக்குச் சரி செய்துவிடாதீர்கள் .என் மனைவியின் பேச்சைக் கேட்க முடியாது” .

எதற்காகச் சிகிச்சைக்கு வருகிறார் என்பதைத் தெளிவு படுத்திக் கொள்வது அவசியம். குடிப்பழக்கத்தினால் பாதிக்கப்பட்ட ஒருவர் என்னிடம் வந்தார். “ குடிச்சுக் குடிச்சுக் கையெல்லாம் ரொம்ப நடுங்குது டாக்டர்.எப்படியாவது நீங்கதான் இதை நிறுத்தணும்” என்றார். “கவலைப் படாதீர்கள் ! உங்கள் குடிப்பழக்கத்தை நான் நிறுத்திவிடுகிறேன்” என்றேன். திடுக்கிட்ட அவர் “ அதெல்லாம் வேண்டாம் டாக்டர். இந்த கை நடுக்கத்தை மட்டும் நிறுத்துங்க! சரக்கெல்லாம் கொட்டி நிறைய வீணாகுது “ என்றாரே பார்க்கலாம்.
   
ஒரே வியாதியால் இருவர் பாதிக்கப்படலாம்.ஆனால் இருவரும் ஒன்றல்ல.நேயர் விருப்பம் போல் நோயர் விருப்பமும் தனித்தன்மையுடையதே.