Saturday, January 28, 2012

ரதவீதிகளில் உலவும் தேர்


          ரதவீதிகளில் உலவும் தேர்
 
 சென்ற வருடம் ஜனவரி மாதம் நெல்லையில் சாகித்ய அகாடமி விருது பெற்ற திரு நாஞ்சில்நாடன் அவர்களுக்குப் பாராட்டு விழா நடந்தது. அங்கு வண்ணதாசன், நாறும்பூநாதன் என்று பல இலக்கியப் பிரமுகர்களைக் கண்டேன். இவர்கள் அனைவரும் வங்கியில் பணியாற்றுபவர்கள்/ ஆற்றியவர்கள் என்ற தகவல் அறிந்து வங்கிப் பணிக்கும் இலக்கியத்துக்கும் உள்ள தொடர்பை எண்ணிக் கொண்டிருந்தேன். நண்பர் எஸ்.வி.வேணுகோபாலனின் தொடர்பு  மின்னஞ்சல்கள் மூலம் அப்போதுதான் கிடைத்த சமயம்.
  சமீபத்தில் ஒரு கட்டுரைத் தொகுப்பைப் படிக்கும் போது இன்னொரு பிரபலமும் வங்கியில் பணியாற்றியவர் என்ற தகவல் அறிந்து வியந்தேன்.அவர் கவிஞர் கலாப்ரியா. உருள் பெருந்தேர் என்ற அவரது சுயசரிதைத் தன்மையுடைய கட்டுரைகள் பெரிதும் வெளிப்படையாகவும் நேர்மையாகவும் அமைந்திருக்கின்றன

Add caption

     ஒரு கோவில்.அதைச் சுற்றி நான்கு ரதவீதிகள். இவ்வளவுதான் நெல்லை டவுண். ஆனால் அவற்றில்தான் எத்தனை இலக்கியவாதிகளின் காலடிகள் .எத்தனை எத்தனை கதைகள்.கதைமாந்தர்கள்..
 சிறந்த கவிஞர் என்றாலும் கூட  பூடகமான,தத்துவார்த்தமான மொழிநடையில் இல்லாமல் மிகவும் இயல்பான மொழியில் அந்தக்காலக் கட்டத்தில் வாழ்ந்த ஒரு மனிதர் நேரில் பேசுவது போல் எழுதியிருக்கிறார்.கவித்துவம் என்பது அவர் எழுத்துக்களில் பதிவு செய்யும் கணங்களிலும் மனித உணர்வுகளிலும்தான் வெளிப்படுகிறது. செயற்கையான மிகையான வர்ணனைகளோ நாடகத்தன்மையோ துளியும் இல்லை.

  அறுபது எழுபதுகளில் உள்ள தலைமுறையினரின் வாழ்க்கையின் கல்வி,பள்ளி, கல்லூரி, கொண்டாட்டங்கள், வேலையில்லா திண்டாட்டம், அக்காலத்தில் புழங்கிய கலைச்சொற்கள் விவா (மேலதிக விவரத்திற்குப் புத்தகத்தைப்ப் பார்க்கவும்) , காதல், முக்கியமாக சினிமா போன்றவை கட்டுரைகளின் பின்னோட்டமாக வந்து போகின்றன.அந்தக் காலகட்டத்தின் ஆவணமாகவுமாகின்றன.

இக்கட்டுரைகளில் வரும் கதைமாந்தர்களை வேறு பெயர்களில் நாம் அடிக்கடி சந்தித்திருக்கிறோம்.  பெரும்பாலும் மனிதர்களின் வீழ்ச்சி அடையும் தருணங்களைப் பதிவுசெய்கின்றன.வாழ்ந்து கெட்ட மைனர்கள், ஜமீந்தார்கள், அவர்களது அதிகாரபூர்வமற்ற வாரிசுகள், ஊரைவிட்டு ஓடிப் போனவர்கள், ஒரு டிரங்க்பெட்டியோடு போகும் திசை தெரியாமல் ரயிலேறும் குடும்பம், திடீரென்று தற்கொலை செய்து கொள்பவர்கள், தொலைந்த வாட்ச்சைத் தேடிக் குறிசொல்பவரைத் தேடுபவர்கள் என்று பலவிதமான மாந்தர்கள்.

 தோசைக்கல்லில் விழுந்து நெஞ்சில் சூடு கண்ட சமையல்காரருக்கும் மனைவிக்குமான பிணக்கு, சொத்திற்காக ஒரு முறையில் தங்கை உறவுள்ளவளையே ஜமீந்தார் மணப்பது, கண்டக்டர்கள் தொப்பிக்காசு வாங்குவது போன்ற சில அபூர்வமான கணங்களும் வந்து போகின்றன 

பல இடங்களில் வாழ்வின் தரிசனங்களும் கவித்துவக் கணங்களும் பாலச்சந்திரன் சுள்ளிக்காடின் சிதம்பர நினைவுகளை நினைவு படுத்துகின்றன. தனது காதல் முயற்சிகள், நண்பனின் வருங்கால மனைவிக்கேக் காதல் கடிதம் கொடுத்தது, லாகிரி வஸ்துக்களுடனான தொடர்புகள், தற்கொலை  முயற்சிகள் என்று அபூர்வமான நேர்மையுடன் அமைந்திருக்கின்றது இந்நூல்.

   
 நதிக்கரை(BANK) களில் தான் நாகரிகமும் இலக்கியமும் தோன்றின என்பது வரலாறு. நதிக்கரைகளில் அமர்ந்து பணத்தைக் கடன் கொடுப்பவர்களால் தான் வங்கிகளுக்கே BANK  என்ற பெயர் வந்தது என்றுகூடக் கூறுவர். ஒரு வேளை அதுதான் வங்கிகளுக்கும் இலக்கியத்துக்கும் உள்ள தொடர்புக்குக் காரணமாக இருக்கலாம் . தாமிரபரணி நதிக்கரையும் ஒரு கதைவங்கிதான். நானும் கலாப்ரியாவின் அந்த BANK ஐச் சேர்ந்தவன் என்பதில் ஒரு சிறு பெருமை.

(உருள்பெருந்தேர் சந்தியா பதிப்பகம் 232 பக்கங்கள் விலை ரூ.150/)    

Friday, January 13, 2012

காட்டப் படும் மறுகன்னம்

காட்டப்படும் மறு கன்னம் 
(Bank Worker's Unity January இதழில் வந்தது)

கிறிஸ்துமஸுக்கு முந்தினம் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனின் ஐந்து நூல்கள் வெளியீட்டு விழாவில் அவரது எழுத்தில் வெளிவந்த சிறுகதையான ‘ஆம் புருனோ அவர்கள் குற்றவாளிகளே!” என்ற சிறுகதையை ஜெயராம் குழுவினர் அருமையான நாடக வடிவமாக்கி இருந்தனர். மனிதன் தோன்றிய காலம் முதலே அவனது தேடல்கள் துவங்கி விட்டன. புதிதாக ஒன்றைக் கண்டறியும் போது அவனது பழைய நம்பிக்கைகள் மாறுகின்றன. மாற்றங்கள் சிலரது இருப்பை அதிகாரத்தைக் கேள்விக்குள்ளாக்குகின்றன.
மதநம்பிக்கைகள் இறுக்கமாகி மாற்றங்களுக்கு உடன்படமுடியாத போது எதிர்ப்பவர்களை நம்பிக்கைக்கு எதிரானவனாகக் குற்றம் சாட்டுகின்றன. வானவியல் சம்பந்தமான புதிய உண்மைகளைச் சொன்னதால் புருனோவை மதத்துரோகி என்று தீர்ப்பளித்து அவரை உயிரோடு எரிக்கிறது ரோமன் நியாயசபை.
“தண்டிப்பதற்கான காரணத்தைத் தேடுவது நியாயவாதிகளுக்கு எளிதானது. தண்டனையை முடிவு செய்துவிட்டு அதை நிறைவேற்றுவதுதானே அதிகாரம்”என்று எஸ்.ரா கூறுகிறார். நம்பிக்கை உள்ளவர்களுக்கு எல்லாமே எளிமையானவை.ஆனால் படித்தவன் தன்னை மட்டுமன்றி உலகேயே குழப்புகிறான்”
இது போன்ற அருமையான வரிகளுடன் அமைந்திருக்கிறது இச்சிறுகதை.இது போல் உலக இலக்கியங்களிலும் உண்மையான கிறிஸ்துவைப் பற்றிய விசாரணைகள் பல இடம் பெற்றுள்ளன. உடனடியாக நினைவுக்கு வருவது தாஸ்தாயவஸ்கியின் கரமசாவ் சகோதரர்களில் வரும் ‘The Grand Inquisitor” என்ற அற்புதமான பகுதி.

கிறிஸ்துவின் பிறந்தநாளன்று டால்ஸ்டாயையும் தாஸ்தாயவ்ஸ்கியையும் நினைக்காமல் இருக்கமுடியாது .இருவருமே மதத்தின் தேவைகளையும் போதாமைகளையும் பற்றித் தங்கள் படைப்புகளில் சலிக்காமல் பேசியவர்கள். தாஸ்தாயவஸ்கியின் கிறிஸ்து டால்ஸ்டாயினுடையவரை விட அதிக நெகிழ்ச்சித் தன்மை உடையவர். இறுக்கமான மத நிறுவனங்களுக்கு அப்பாற்பட்டவர். குற்றமும் தண்டனையும் நாவலில் வரும் நாயகனும் கிறிஸ்துவிடம்தான் சரணடைகிறான்.

அதிலும் கரமசாவ் சகோதரர்களில் வரும்' The Grand Inquisitor' பகுதி மதமும் அதிகாரமும் இணைந்து செயல்படுகின்றன என்பதைப் பற்றிய ஒரு விசாரணையாக இருக்கிறது. மதத்துரோகம் செய்யும் நபர்களை விசாரித்துத் தீர்ப்பளிக்கும் நபருக்கு Inquisitor என்று பெயர். நாவலில் இவான் என்ற கதாபாத்திரம் இது பற்றி ஒரு நெடுங்கவிதை எழுதியிருப்பதாகத் தன் சகோதரன் அல்யுஷாவிடம் கூறுவதாக அமைந்திருக்கிறது இப்பகுதி.

கிறிஸ்து தாம் இறந்த 1500 (நாவலின் காலம் 1880) வருடங்களுக்குப் பிறகு மீண்டும் உயிர்த்தெழுந்துவருவதாக ஒரு சம்பவத்தைக் கற்பனை செய்கிறார் ஆசிரியர். மதத்தின் பெயரால் மக்களின் மீது தமது அதிகாரத்தை நிறுவியிருப்பவர்கள் கிறிஸ்துவையே மதத்துக்கு எதிரானவர் என்று கூறிச் சிறைப்படுத்துவதாகக் காட்டுகிறது அப்பகுதி. இதே போன்ற ஒரு புனைவை நாம் ஜெயமோகனின் ‘பின் தொடரும் நிழலின் குரல்’ நாவலில் காணலாம்.

முக்கியமாக டால்ஸ்டாய் உலகில் எந்த எழுத்தாளர்களும் செய்யாத வகையில் கசாக் ராணுவத்தால் பாதிக்கப்பட்ட Dukhobars என்ற இனத்துக்காகப் புத்துயிர்ப்பு என்ற நாவலை எழுதி அதில் வந்த வருமானத்தை அவர்களுக்குக் கொடுத்தார். ‘டுகோபார்ஸ்’ இனம் தம்மை ஆன்மீகக் கிறிஸ்துவர்கள் என்று அழைத்தனர். கொல்லாமை , சுய ஒழுக்கம்,தன்னிறைவு அஹிம்சை, ராணுவத்திற்கு எதிர்ப்பு போன்ற பல கொள்கைகளைக் கொண்டிருந்தனர். இக்கொள்கைகளை டால்ஸ்டாயிடமிருந்து அறிந்து கொண்ட காந்தி அவற்றைத் தம்வாழ்விலும் கடைப்பிடிக்க ஆரம்பித்தார். உண்மையிலேயே அவர்கள் தான் மறுகன்னத்தையும் காட்டும் தூய கிறிஸ்துவர்களாக இருந்தனர்.
அதிகாரம், வன்முறை போன்றவற்றுக்கு எதிராகவும் எளியவர்களுக்குப் பரிவாக உள்ள பெருங்கருணையே கிறிஸ்து. அதையே மாபெரும் இலக்கியங்களும் காண்பிக்கின்றன.

உதவிய நூல்
1.எனதருமை டால்ஸ்டாய்- எஸ்.ராமகிருஷ்ணன். உயிர்மை பதிப்பகம்

Tuesday, January 10, 2012

தொலை நோக்கியா



             தொலை நோக்கியா!
     புதிய ஆசிரியன் இதழில் வந்த கட்டுரை
    தொலைபேசி என்று பெயரிட்டவர் என்னைப் பொருத்தவரை ஒரு தொலைநோக்கி. அதாவது தீர்க்கதரிசி. தொலைப்பதற்காகவே வாங்கும் பொருட்களில் செல்போனுக்கே முதலிடம். (செல்வதனால் நாமதனைச் செல்போன் என்போம்-என்றும் ஒரு பாடபேதம் உண்டு).அடிக்கடி தொலைத்துத் தொலைத்து இப்பொழுதெல்லாம் நான் வேறு ஏதாவது எண்ணிலிருந்து வீட்டிற்குப் பேசினாலே எதிர்முனையில் ஹலோவிற்குப் பதிலாக ‘எப்ப தொலைத்தீர்கள்?” என்ற கேள்விதான் எழுகிறது.

‘ஒவ்வொருமுறை செல்போனைத் தொலைக்கும் போதும் நம்முடைய வாழ்விலிருந்து சிலர் நீங்குகிறார்கள்-நிரந்தரமாக’ –இது கேட்பதற்குக் கவிதை மாதிரி இருந்தாலும் நடைமுறையில் பல பிரச்சனைகள். குடல்நோய் நிபுணரிலிருந்து குழாய் ரிப்பேர் செய்பவர் வரைப் பலதரப்பட்ட மனிதர்களின் தொடர்பையும் ஒரே நொடியில் இழந்து விடுகிறோம்.

   தொலைபேசி நிறுவனத்திடம் அதே எண்ணுடைய ‘சிம் கார்டை’ வாங்குவது ‘சிம்’மசொப்பனம்தான். அப்படியே வாங்கியதும் நம்மை அழைக்கும் பலரையும் அடையாளம் தெரியாமல் அசடு வழிய வேண்டும். யாரிந்தப் பெண் நம்மை அழைக்கிறாளே? குரல் வேறு இனிமையாக இருக்கிறதே என்று நினைத்துக் கொண்டிருப்போம். திடீரென்று திட்ட ஆரம்பித்த பின்புதான் அழைப்பது மனைவி என்று தெரியவரும்.

  ‘தில்லு முல்லு’ என்ற திரைப்படத்தில் தேங்காய் சீனிவாசன் கூறுவார் “கேவலம் ரெண்டு இரண்டு இஞ்ச் நீளமுள்ள ஒரு மீசை இவ்வளவு பெரிய மனிதனையே ஏமாற்றி விட்டதே” என்று. அதே போல் மனித மூளையின் திறன் மகத்தானது .அது கேவலம் ஒரு அரை அங்குல அளவுள்ள ஒரு சிம்மில் சிறைபட்டுக் கிடப்பதா ? என்று எண்களை நினைவில் வைத்துக் கொள்ள முயற்சி செய்தால் ஒன்பதிற்குப் பின்னால் உள்ள ஒன்பது எண்களும் நினைவுக்கு வராமல் நவக்கிரகங்கள் போல் திசைக்கு ஒன்றாய்த் திரும்பிக் கொள்கிறது.
  ஆகவே ஒவ்வொரு முறை தொலைபேசி தொலைந்தபின்னும் அகர வரிசைப் படி எல்லாப் பெயர்களையும் எழுதி வைத்துக் கொள்ள வேண்டும்  என்று முடிவெடுத்து எழுத ஆரம்பிப்பேன். அகரத்துக்குப் பின் நகரவே நகராது. மீண்டும் ஒரு தொலைபேசி!  புனரபி தொலைத்தல்! புனரபி தொடங்குதல்!!

   செல்பேசியைத் தொலைத்த மறு நிமிடமே அறிவுரை மழைகள் பொழியத் துவங்கும். நீங்கள் சாட்டிலைட் மூலமாகத் தொலைத்த போன் எங்கிருக்கிறது என்று பார்க்கலாம் என்று ஆயிரம் ருபாய் மதிப்புள்ள தொலைபேசிக்கு ஸ்ரீ ஹரிகோட்டா வரைச் செல்லச் சொல்பவர்கள் உண்டு. ஜாதகத்தில் ‘தூர சம்பாஷண’ (தொலை பேசிதான்) தோஷம் இருக்கிறது என்று சொல்லிப் பரிகாரம் செய்ய வலியுறுத்துபவர்களும் உண்டு
சரி மன நிம்மதிக்காக மகாங்களிடமாவது போகலாம் என்றால் அவர்கள் ‘நீங்கள் தொலைபேசியைத் தொலைக்கவில்லை.தொலைபேசிதான் உங்களைத் தொலைக்கிறது ‘ என்று அத்வைதத்தின் ஆறாவது விதியை மேற்கோள் காட்டுகிறார்கள். நம்முடைய தொலைபேசி தொலைந்தால் ஆத்மார்த்தமாகப் பதட்டப்படும் ஜீவராசிகள் நமக்குக் கடன் கொடுத்தவர்கள்தான்.

ஒருமுறை நண்பர் ஒருவர் மிகவும் வருத்தத்துடன் அமர்ந்திருந்தார். என்னவென்று கேட்டதற்கு ‘தொலைபேசியைத் தொலைத்துவிட்டேன்’ என்றார். ‘இதெல்லாம் பெரிய விஷயமா? நான் கூடப் பலமுறை தொலைத்திருக்கிறேன்!’ என்று கூறினேன். அதற்கு அவர் “ சார்! நீங்களாவது செல்போனைத் தொலைத்தீங்க.நான் தொலைத்தது ‘லாண்ட்லைன்’ தொலை பேசியை’ என்றாரே பார்க்கலாம்.

“உனக்கும் கீழே உள்ளவர் கோடி. (செல்)போனால் போகட்டும் போடா!”