Tuesday, January 10, 2012

தொலை நோக்கியா             தொலை நோக்கியா!
     புதிய ஆசிரியன் இதழில் வந்த கட்டுரை
    தொலைபேசி என்று பெயரிட்டவர் என்னைப் பொருத்தவரை ஒரு தொலைநோக்கி. அதாவது தீர்க்கதரிசி. தொலைப்பதற்காகவே வாங்கும் பொருட்களில் செல்போனுக்கே முதலிடம். (செல்வதனால் நாமதனைச் செல்போன் என்போம்-என்றும் ஒரு பாடபேதம் உண்டு).அடிக்கடி தொலைத்துத் தொலைத்து இப்பொழுதெல்லாம் நான் வேறு ஏதாவது எண்ணிலிருந்து வீட்டிற்குப் பேசினாலே எதிர்முனையில் ஹலோவிற்குப் பதிலாக ‘எப்ப தொலைத்தீர்கள்?” என்ற கேள்விதான் எழுகிறது.

‘ஒவ்வொருமுறை செல்போனைத் தொலைக்கும் போதும் நம்முடைய வாழ்விலிருந்து சிலர் நீங்குகிறார்கள்-நிரந்தரமாக’ –இது கேட்பதற்குக் கவிதை மாதிரி இருந்தாலும் நடைமுறையில் பல பிரச்சனைகள். குடல்நோய் நிபுணரிலிருந்து குழாய் ரிப்பேர் செய்பவர் வரைப் பலதரப்பட்ட மனிதர்களின் தொடர்பையும் ஒரே நொடியில் இழந்து விடுகிறோம்.

   தொலைபேசி நிறுவனத்திடம் அதே எண்ணுடைய ‘சிம் கார்டை’ வாங்குவது ‘சிம்’மசொப்பனம்தான். அப்படியே வாங்கியதும் நம்மை அழைக்கும் பலரையும் அடையாளம் தெரியாமல் அசடு வழிய வேண்டும். யாரிந்தப் பெண் நம்மை அழைக்கிறாளே? குரல் வேறு இனிமையாக இருக்கிறதே என்று நினைத்துக் கொண்டிருப்போம். திடீரென்று திட்ட ஆரம்பித்த பின்புதான் அழைப்பது மனைவி என்று தெரியவரும்.

  ‘தில்லு முல்லு’ என்ற திரைப்படத்தில் தேங்காய் சீனிவாசன் கூறுவார் “கேவலம் ரெண்டு இரண்டு இஞ்ச் நீளமுள்ள ஒரு மீசை இவ்வளவு பெரிய மனிதனையே ஏமாற்றி விட்டதே” என்று. அதே போல் மனித மூளையின் திறன் மகத்தானது .அது கேவலம் ஒரு அரை அங்குல அளவுள்ள ஒரு சிம்மில் சிறைபட்டுக் கிடப்பதா ? என்று எண்களை நினைவில் வைத்துக் கொள்ள முயற்சி செய்தால் ஒன்பதிற்குப் பின்னால் உள்ள ஒன்பது எண்களும் நினைவுக்கு வராமல் நவக்கிரகங்கள் போல் திசைக்கு ஒன்றாய்த் திரும்பிக் கொள்கிறது.
  ஆகவே ஒவ்வொரு முறை தொலைபேசி தொலைந்தபின்னும் அகர வரிசைப் படி எல்லாப் பெயர்களையும் எழுதி வைத்துக் கொள்ள வேண்டும்  என்று முடிவெடுத்து எழுத ஆரம்பிப்பேன். அகரத்துக்குப் பின் நகரவே நகராது. மீண்டும் ஒரு தொலைபேசி!  புனரபி தொலைத்தல்! புனரபி தொடங்குதல்!!

   செல்பேசியைத் தொலைத்த மறு நிமிடமே அறிவுரை மழைகள் பொழியத் துவங்கும். நீங்கள் சாட்டிலைட் மூலமாகத் தொலைத்த போன் எங்கிருக்கிறது என்று பார்க்கலாம் என்று ஆயிரம் ருபாய் மதிப்புள்ள தொலைபேசிக்கு ஸ்ரீ ஹரிகோட்டா வரைச் செல்லச் சொல்பவர்கள் உண்டு. ஜாதகத்தில் ‘தூர சம்பாஷண’ (தொலை பேசிதான்) தோஷம் இருக்கிறது என்று சொல்லிப் பரிகாரம் செய்ய வலியுறுத்துபவர்களும் உண்டு
சரி மன நிம்மதிக்காக மகாங்களிடமாவது போகலாம் என்றால் அவர்கள் ‘நீங்கள் தொலைபேசியைத் தொலைக்கவில்லை.தொலைபேசிதான் உங்களைத் தொலைக்கிறது ‘ என்று அத்வைதத்தின் ஆறாவது விதியை மேற்கோள் காட்டுகிறார்கள். நம்முடைய தொலைபேசி தொலைந்தால் ஆத்மார்த்தமாகப் பதட்டப்படும் ஜீவராசிகள் நமக்குக் கடன் கொடுத்தவர்கள்தான்.

ஒருமுறை நண்பர் ஒருவர் மிகவும் வருத்தத்துடன் அமர்ந்திருந்தார். என்னவென்று கேட்டதற்கு ‘தொலைபேசியைத் தொலைத்துவிட்டேன்’ என்றார். ‘இதெல்லாம் பெரிய விஷயமா? நான் கூடப் பலமுறை தொலைத்திருக்கிறேன்!’ என்று கூறினேன். அதற்கு அவர் “ சார்! நீங்களாவது செல்போனைத் தொலைத்தீங்க.நான் தொலைத்தது ‘லாண்ட்லைன்’ தொலை பேசியை’ என்றாரே பார்க்கலாம்.

“உனக்கும் கீழே உள்ளவர் கோடி. (செல்)போனால் போகட்டும் போடா!”

3 comments:

 1. அருமையான, நகைச்சுவையான பதிவு.
  நிஜம் தான். தொலைத்தபின் மிகவும் சிரமம்.
  முன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சபதம் செய்வோம். அதோடு சரி.
  இனிய பொங்கல் வாழ்த்துகள்.
  நன்றி ஐயா.

  ReplyDelete
 2. அன்பு டாக்டர்,
  இது எல்லோருக்கும் நடப்பது தான். ஆனால் இவ்வளவு நகைச்சுவையாக் எல்லோராலும் பார்க்க முடிவதில்லை. அடிக்கடி தொலைப்பதால் நான் ஒரு திட்டம் தீட்டினேன். ஒரு கடையில் தொடர்பு எண்கள் அனைத்தையும் மெமரி கார்டில் பதிவு செய்து மின்னஞ்சலுக்கு அனுப்பி அதை கணினியிலும் பதிவு செய்து வைத்துக் கொண்டேன். குடல்நோய் நிபுணரிலிருந்து குழாய் ரிப்பேர் செய்பவர் வரைப் பலதரப்பட்ட மனிதர்களின் தொடர்பையும் ஒரே நொடியில் இழந்து விடும் அபாயத்திலிருந்து தப்பி விட்டேன். நீங்களும் முயற்சி செய்யலாம்.

  ReplyDelete