Friday, January 21, 2011

அரங்கம் நிறைய ஆட்கள்

அரங்கம் நிறைய ஆட்கள்

                   -ஜி. ராமானுஜம்

    ஒரு திருமணத்திற்குச் செல்லாமல் இருப்பதற்குப் பல காரணங்கள் இருக்கும்.
    பலர் மணப்பெண் தன் காதலியாய் இருப்பதால் போகாமல் இருப்பார்கள்.முறையாக அழைக்கவில்லை என்றும் மொய் செய்ய வேண்டுமே என்றும் சிலர் இருந்து விடுவார்கள்.ஆனால் பாஸ்கர் அந்தத் திருமணத்திற்குச் செல்லலாமா வேண்டாமா என்று யோசிப்பதன்  காரணம் அந்தத் திருமண மண்டபம்.
      அழைப்பிதழில் அந்த மண்டபத்தின் பேரைப் பார்த்ததுமே நெஞ்சில் ஒரு சொல்லத் தெரியாத சங்கடம்.
      உஷாவிடம் சொன்னால் சிரிப்பாள்.”இது ஒரு விஷயமா?.ரெண்டு நாள் வெளியூர் போயிட்டு வந்து பார்த்தா ஊரே மாறி இருக்கு.பிராக்டிக்கலா இருப்பா!”
       பாஸ்கரோ புது பைக் வாங்கியதும் சைக்கிளைப் பார்க்க சங்கடப்பட்டுப் பார்வையை திசை திருப்பிக்கொள்பவன்.
      நிசப்தத்தைக் கலைத்தது “நீ தானே எந்தன் பொன்வசந்தம்!”என்ற எஸ்.பி.பியின் குரல். எடுத்துக் காதில் வைத்தான்.மறுமுனையில் உஷாவின் “இன்னுமா போகலை?”
    பாஸ்கர் பெரிய லீவு முடிந்து பள்ளி செல்லும் பிள்ளையின் மனதோடு கிளம்பினான்.சிவா, மணி எல்லாரும்  வந்துவிட்டதாகக் குறுஞ்செய்தி அனுப்பியிருக்கின்றனர். தான் மட்டும் ஏன் இப்படி என்று நினைத்தபடியே காரை எடுத்தான்.
    பல முறை வந்த இடம்தான்.ஐம்பது அறுபது தடவை கூட வந்திருப்பான் என்றாலும் ஒரு திருமணத்திற்காக அங்கு வருவது இதுவே முதல் முறை. பெரும்பாலும் அங்கு நடந்துதான் வந்திருக்கிறான். பிரிட்டிஷ் காலத்து ஆர்ச்சைப் பார்த்துக் கொண்டே உள்ளே நுழைந்தான். எப்பவும் சைக்கிள்களால் நிறைந்திருக்கும் இடத்தில் கார்,ஆட்டோ மற்றும் பைக்குகளின் நெரிசல்.
       பல நாள் மணிக்கணக்கில் அவனைக் காக்க வைத்த ராட்சச இரும்பு கேட் ஓய்வு பெற்ற காவல்டதுறை அதிகாரி போல் களையிழந்து சுவரோடு ஒட்டிக் கொண்டிருந்தது.
            போர்டிகோவின் முனையை அண்ணாந்து பார்த்தான்.அதே தாமரைப் பூ விளக்குதான் .ஆனால் எஸ்.வி.வி மஹால் என்று வேறு பெயர் பொறிக்கப் பட்டிருந்தது
       முகப்பில் இருந்த சிவன் பார்வதி சிலை அப்படியேதான் இருந்தது.திரிசூலத்தையும் பார்வதியின் ஒரு கையையும் காணவில்லை.கட்டிடத்திற்குப் பளீரென்று பஞ்சு மிட்டாய் கலர் அடித்திருந்தனர்.வாசலில் பெரிதாக மணமகன் மணமகள் படம் போட்ட  ஃப்ளெக்ஸ் போர்ட் வைக்கப்பட்டிருந்தது...
         பல வருடங்களுக்கு முன்பு அங்கு  கமல்ஹாசனின் கட் அவுட் இருந்தது நேற்றுப் பார்த்தது போல்  நினைவுக்கு வந்தது.கமல் அணிந்திருந்த சட்டை டிசைன்,மற்றும் ’உயர்ந்த உள்ளம்’ என்று படத்தின் எழுத்துக்கள் எழுதியிருந்த விதம் கூட ஞாபகத்திற்கு வந்தது
         முதல் முறையாக இங்கு தன்னைப் பட்டுப் பாவாடைச் சிறுமிகளும் தாவணி யுவதிகளும் பன்னீர்,சந்தனத்துடன் வரவேற்பதைக் கண்டு ஏதோ வித்தியாசமாய் உணர்ந்தான்.
      வாசல் பழைய நண்பர் குழாம்.’ஆல் ரவுண்டர்ஸ் கிரிக்கெட் கிளப்’ மற்றும் ‘காக்கிச் சட்டை கமல் ரசிகர் மன்ற’ முன்னாள் நிர்வாகிகள்.
       “ஹே பாஸ்கி! நம்ம பழைய சிவ பார்வதி தியேட்டராடா இது?”என்றபடியே வரவேற்றான் வெங்கட். கலிஃபோர்னியா வாழ் கல்லிடைக்குறிச்சியன்..”குட் ஐடியா மேன்!ரியல்லி குட்!” என்றான்.
        “ஆமா! எவ்வளவு நாளைக்குத்தான் காலிச் சேர்களுக்கு படம் காட்டறது?அதான் கல்யாண மண்டபம் ஆச்சு.”இது ரவி.
         “மாப்ள!சிட்டி டெவலப் ஆகுதுல்ல?வயக்காடெல்லாம் ஃப்ளாட்டா  மாறிட்டு வருது.முந்தில்லாம் தியேட்டர் ,மேம்பாலம் இப்பிடி எங்கேந்து பாத்தாலும் வயக்காடுதான் தெரியும்.இப்பம் பெரிய பெரிய பில்டிங்காத் தெரியுதுல்ல!.”என்றான்  சிவா.ரியல் எஸ்டேட் புரோக்கர் .”ஆனா ஒண்ணு வெங்கிட்டு!பை பாஸ் ரோட்டுல பத்து சென்ட் வாங்கிப்போட்டாம்னாய்க்கி ரெண்டு வருஷத்துல நீ கோடீஸ்வரம்ல!”என்று தன் வாழ்நாள் லட்சியத்தை விளக்கினான்.
      “ஆமா!இவரு காந்திமதி அம்மன் சன்னதிக்குப் போனாக்கூட ஸ்கொயர் ஃபீட் எவ்வளவு இருக்கும்னு கணக்குப் போடறவர்ல”என்றான் மணி.”நீ வேணா பாரு கோயில் இருக்கற எடத்துல நெல்லையப்பா அப்பார்ட்மென்ட் வருதா இல்லையான்னு பாக்கத்தான போற”
  “முந்தி ஹரிதாஸ் படம் ஒரு வருஷத்துக்கு மேல் ஓடிச்சாம்.எங்கப்பா சொன்னாரு.அந்தத் தியேட்டர் இன்னிக்கி ஜவுளிக்கடை ஆயிடுச்சு.. மக்களுக்கு சினிமா மோகம் கொறைஞ்சிடுச்சு. அதான்”.”சிவா சொன்னான்
     “சினிமா மோகம் கொறையல.முந்தி சினிமா தியேட்டர்கள்ல ஓடிட்டிருந்சிச்சு.இப்ப நம்ம வீடுகள்ல.”என்றான் பாஸ்கர்.
       பேசிக்கொண்டே உள்ளே நுழைந்தார்கள்.முன்பு வெள்ளித்திரை இருந்த இடத்தில் அலங்காரமாய் ‘சுரேஷ் வெட்ஸ் வளர்மதி’என்ற தெர்மாக்கோல் எழுத்துக்கள்.இருக்கைகள் புது உடை அணிந்திருந்தன.நீள இரும்புக் குழாய்களில் தொங்கும் பழைய மின்விசிறிகளைக் காணவில்லை.அரங்கம் முற்றிலும் குளிரூட்டப்பட்டிருந்தது.
    பழக்கப்பட்ட பழைய சிவ பார்வதி தியேட்டரின் நெடிக்குப் பதில் ஏதோ ஒரு நறுமண ஸ்ப்ரேயின் மணம் அரங்கைச் சுற்றிக் கொண்டிருந்தது. இரு பாலினங்களைப் பிரிக்கும் கம்பிகள்,சோபா, தரை டிக்கெட், ஆகிய வர்க்க பேதங்கள் மறைந்து முழு அரங்கிலும் சமத்துவமாய்  ஒரே மாதிரி இருக்கைகள்.
   ஆபரேட்டர் ரூம் அலுவலகமாக ஆகியிருந்தது.அங்கிருந்து ஒளி வெளி வரும் சுவற்றில் இருந்த இரண்டு சதுர ஓட்டைகள் அடைக்கப்பட்டு அந்த இடம் மட்டும் சற்று மேடாக இருந்தது.
        தீ என்று எழுதியருந்த சிகப்பு வாளியைப் பார்த்தபடியே மேடையில் ஏறினான்.சம்பிரதாய அறிமுகம்,பரிசு வழங்கல்,புகைப்படம்,வீடியோவிற்குப்பின் கீழிறங்கினான்.”கட்டாயம் சாப்பிட்டுத்தான் போகணும்”ஒரு வெள்ளை வேட்டி சட்டை வழிமறித்தது.
        முன்பு இடைவேளையில் கோன் ஐஸ் ,முறுக்கு விற்கும் இடத்தில் பந்தி. “இப்பல்லாம் எவம்லே சொதி சாப்பாடு போடுதாம்.எல்லாம் வெஜிடபிள் பிரியாணிதாம்.எல்லா வீட்டுக் கல்யாணத்துலயம் இதே வெள்ளைச் சொக்காப் பசங்கதாம் பரிமாறுதானுவ ”என்று ஒரு பெருசு சலம்பிக் கொண்டிருந்தது.
      சாப்பிட்டுக் கழிவறை நோக்கி நடந்தான். ஓரிரு முறை திருட்டு தம் அடித்த கழிவறை சுவரில் அதே ஆண் படம்.கூடுதலாய் நிறைய சுத்தம்.கழிவறை ஓரத்தில் மங்கிப்போன எழுத்துக்களில் அரங்கம் நிறைந்தது என்றும் தினசரி நான்கு காட்சிகள் என்று எழுதப்பட்ட இரண்டு துருப்பிடித்த போர்டுகள் சாத்தி வைக்கப்பட்டிருந்தன.
      மண்டபத்தின் பக்கவாட்டில் சூழலுக்குப் பொருந்தாமல் ஒரு டிக்கட் கௌன்டர்.நெற்றியை அனிச்சையாகத் தடவிப் பார்த்துக் கொண்டான்.படிக்காதவன் படம்
டிக்கட் வாங்கும் போது கம்பி குத்தி ஏற்பட்ட தழும்பு.
 அடுத்த ஷோவிற்குக் காத்திருப்பவர்களை வெற்றிப் பெருமிதத்துடன் பார்த்தபடி வெளியேறுவதை நினைத்தபடியே
காரைக் கிளப்பினான்.சுவாமி நெல்லையப்பர் ஹைரோடில் கார் விரைந்தது.

No comments:

Post a Comment