Friday, August 19, 2011

சாருகேசி- ராமநாதனை வென்றார் உண்டோ?

முன்பெல்லாம் கர்நாடக இசையில் ஒரு ராகத்தை அறிய வேண்டுமென்றால் அந்த ராகத்தின் முன்மாதிரியான பாடல் ஒன்றைப் பயிலவேண்டும்.அது பெரும்பாலும் மிகப் பெரிய சங்கீத மேதையின் கீர்த்தனையாக இருக்கும். உதாரணத்திற்குக் கானடா என்றால் 'அலைபாயுதே',ஸ்ரீ ராகம் என்றால் 'எந்தரோ மஹானுபாவுலு' இது போல். திரைப்பாடல்களும் இந்த கீர்த்தனைகளின் மெட்டிலேயே இருக்கும். உதாரணம் 'நாததனுமனிசம்' என்ற தியாகய்யைர் கீர்த்தனை 'காதல் கனி ரசமே' என்று பி.யு.சின்னப்பாவால் பாடப்படும்.ஆனால் முதல்முறையாக ஒரு திரைப்பாடல் ஒரு ராகத்தின் முன்மாதிரியாக அமைந்தது வரலாறு படைத்த  ஒரு படத்தில்  அமைந்த பாடல். அந்தப் பாடலைக் கேட்டுவிட்டு சங்கீதப் பிதாமகர் செம்மங்குடி சீனிவாசய்யரே அந்த இசை அமைப்பாளரின் வீடு தேடி வந்து பாராட்டினார். கர்நாடக சங்கீத ராகங்களை எளிமையாகவும் அதே நேரம் அழகாகவும் மெட்டுக்களாக்கிய ஒரு புது பாணி உருவாகிப் பின் கே.வி மகாதேவன்,இளையராஜா என்று தொடர்ந்து வந்தது. அந்த இசையமைப்பாளர் --ஜி.ராமநாதன். பாடல்: மன்மத லீலையை வென்றார் உண்டோ? படம்: ஹரிதாஸ் (1944). ராகம் __சாருகேசி



சாரு கேசி என்றால் அழகான கூந்தல் உடையவள் (வன்) என்று பொருள். ஏழு ஸ்வரங்களும் வரும் சம்பூர்ண ராகம். கம்பீரமாகவும் தோன்றும். மென்மையான சோகம் வெளிப்படுமாறும் விளங்கும். ஆடமோடி கலதே என்று தியாகைய்யரின் பாடல் ஒன்று உண்டு. ஆனால் கச்சேரிகளில் பரவலாகப் பாடத் தொடங்கியது ஹரிதாஸுக்குப் பின்னால்தான் என்றால் மிகையாகாது. 'இன்னும் என் மனம்' என்று லால்குடி ஜெயராமன் இயற்றிய ஒரு புகழ்பெற்ற வர்ணம் உண்டு. ஸ்வாதித் திருநாள் ஒரு பாடலை இயற்றி இருந்தார். செம்மங்குடி அந்தப் பாடலைப் பிரபலப் படுத்தினார். ஏசுதாஸின் குரலில் இந்தச் சாருகேசியை கேளுங்கள்

   
சாருகேசி ஜி.ராமாநாதனின் பிரியத்துக்குரிய ராகமாகவே இருந்து வந்தது.திருவிளையாடல் என்றால் சிவாஜிதான் நினைவுக்கு வருவார், ஆனால் எம். ஜி. ஆரின் ஒரு பாடலும் திருவிளையாடல்களைப் பற்றி அமைந்து புகழ்பெற்றது. 'மதுரை வீரன்' படத்தில் அமைந்த 'ஆடல் காணீரோ' என்ற பாடல் சாருகேசியில்  நாட்டியப் பேரொளியின் நடனத்துடன் அமைந்திருக்கும். பாடலின் தொடக்கத்தைக் கேட்டாலே ஜி.ராமநாதனின் மேதமை நமக்குப் புரியும்.



பின்னர் 'சாரங்கதாரா;என்ற படத்தில் அமைந்த 'வசந்த முல்லை போலே வந்து" என்ற பாடலும் சாருகேசியின் அழகைக் காட்டிகிறது. முழுத்தொண்டையில் கம்பீரமாகப் பாடும் டி.எம்.எஸ்ஸுக்குப் பல வாய்ப்புகள் அளித்துப் பிரபலப் படுத்தியவர் ராமநாதன்.இந்தப் பாடலைச் சமீபத்தில் ரீமிக்ஸ் என்ற பேரில் சின்னாபின்னமாக்கியுள்ளனர்

         
நாட்டியம் போன்ற பாடல்களுக்கே பெரும்பாலும் சாருகேசி பயன்படுத்தப்பட்டு வந்தது.இந்த பாணியை மாற்றினார் திரை இசைத்திலகம் கே.வி.மகாதேவன். திருவிளையாடல் முதல் சங்கராபரணம் வரைச் சாதனைகள் பல புரிந்துள்ள அவர்  ஒரு மெல்லிய சோகம் கலந்த ஒரு அற்புத இரவுப் பாடலாக அமைத்திருக்கிறார் .டி.எம்.எஸ்ஸும் சுசீலாவும் இணைந்து ஆரவாரமில்லாமல் பாடியுருப்பார்கள். படம் குங்குமம். சில இடங்களில் வயலினிலிருந்து வரும் சாருகேசி நம் வயிற்றையும் என்னவோ செய்யும்.

    
பின்னர் வெகு காலம் சாருகேசி பயன்படுத்தப் படாமல் இருந்தது. இளையராஜா வந்தபின் மீண்டும் ஒரு சுற்று வரத் தொடங்கியது. பெரும்பாலும் சோகமான சூழலுக்குப் பொருந்துமாறு ராஜா இசை அமைத்திருப்பார். 'அன்னை ஓர் ஆலயம்' படத்தில் டி.எம்.எஸ் பாடிய 'அம்மா ! நீ சுமந்த பிள்ளை" என்ற பாடல் சாருகேசியில் அமைந்தது. வெகுகாலம் இதைச் சிவாஜி கணேசன் படப் பாடல் என்று நினைத்துக் கொண்டிருந்தேன்.
'தூங்காத கண்ணென்று பாடல்' பாணியில் அமைந்த பாடல்




நெருக்கடியான சூழலையும் ரசிக்க வைத்து ஒரு அனுபவமாக்குவதே படைப்பு. சாருகேசி துயரத்தையும் கவிதையாக வெளிப்படுத்தும் ராகம். 'முந்தானை முடிச்சு' படத்தில் வரும் 'சின்னஞ்ச்சிறு கிளியே' பாடல் அந்தவகையைச் சேர்ந்தது. பின் தம்பிக்கு எந்த ஊரு படத்தில் மிகவும் மெல்லிசை பாணியில் 'காதலின் தீபம் ஒன்று' என்ற பாடலை அளித்திருப்பார். எஸ்.பி.பியின் குழைவுடன் சாருகேசிக்கே உரிய பிரிவின் ஏக்கத்தை உணர்த்தும் பாவம் மிக அழகாக வெளிவந்திருக்கும்.



ஏராளமான பாடல்களைச் சாருகேசியில் தந்திருக்கிறார் இளைய ராஜா. 'நானே ராஜா நானே மந்திரி' படத்தில் வரும் 'மயங்கினேன் சொல்லத் தயங்கினேன்' என்ற பாடல் அருமையான பாடல்.அதே போல் 'என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு' படத்தில் வரும் 'உயிரே உயிரின் ஒளியே' என்ற பாடலும் ஏசுதாஸின் கந்தர்வக் குரலில் மெல்லிய துயரத்தை வெளிப்படுத்துகிறது.

  

'வாத்தியார் வீட்டுப் பிள்ளை' சத்யராஜின் நூறாவது படம் .சிவாஜியை(நவராத்திரி)த்  தவிர மற்ற நடிகர்களின் நூறாவது படம் போலவே (கமல்-ராஜபார்வை,ரஜினி-ராகவேந்திரா) இந்தப் படமும் தோல்விப் படம்.ஆனால் அந்தப் படத்தில் ஒரு அற்புதமான சாருகேசி அமைத்திருப்பார். வழக்கமான பாணியில் தங்கையை வாழ்த்திப் பாடினாலும் ஒரு பிரிவின் சோகம் அதில் இழையோடும் .அதுதான் ராஜா!.அதுதான் ராகம்!.



அதேமாதிரி இயக்குனர்.தயாரிப்பாளர் என்று யாருமே சிரத்தை இன்றி மேலோட்டமாக எடுத்த படம் சிங்கார வேலன்.ஆனால் ராஜா அப்படி விடுவாரா? 'தூது செல்வதாரடி?' என்று ஒரு பாடல்.சின்னப் பாடல் தான் ஆனால் ஜானகி தூ......து என்று ஆரம்பித்துச் சாருகேசியைக் கோடிகாட்டிப் கொடிகட்டிருப்பார்.தன் வேலையை மிகவும் ரசிக்கும் ஒருவரால் நுனிப்புல் மேய்ந்து கொண்டே இருக்க முடியாது .



நாட்டியப் பாடல்களுக்காக ஜி.ராமநாதன் காட்டிய பாதையிலிருந்து மெல்லிசைக்குத் தாவியது சாருகேசி. வெகுகாலம் கழித்துச் சாருகேசியில் ஒரு செவ்வியல் பாணியிலான நாட்டியத்திற்கேற்ற பாடல் இளையராஜா இசையில் அமைந்தது. 'ஸ்ரீ ராகவேந்திரா' திரைப்படத்தில் (வழக்கம் போல் நூறாவது படம், படம் தோல்வி; பாடல்கள் பிரமாதம்)  வரும் 'ஆடல் கலையே தேவன் தந்தது' பாடல்தான் அது. 'மல்லிகையை வெண்சங்காய் வண்டினங்கள் ஊதும் மெல்லிசையின் ஓசை போல் மெல்ல சிரித்தாள்' என்ற வாலியின் வரிகளும் வீணை,மிருதங்கம்,குரல் என்று கலவையாய் இன்பம் அளிக்கும் பாடல் அது.


எதிர்பாராமல் ஒரு ராகத்தைச் சிறப்பாகத் திரையில் அவ்வப்போது வழங்குபவர் தேவா. தன் திறமையை அவரே அறியவில்லை என்று நினைக்கிறேன். சாருகேசியில் இனிமையான இரண்டு பாடல்களைத் தந்திருக்கிறார். 'அவ்வை சண்முகி'யில் வரும் 'காதலா காதலா' என்ற பாடல் மிகவும் உச்சஸ்தாயியில் சாருகேசியில் புக முடியாத இடங்களுக்கெல்லம் போயிருக்கும் . ஆனால் தேவா இசையமைத்த எல்லாப் பாடல்களிலும் மிகச் சிறந்ததாக நான் கருதுவது ஒரு சாருகேசிப் பாடல் தான். 'நேருக்கு நேர் ' படத்தில் வரும் 'எங்கெங்கே எங்கெங்கே ' என்ற பாடல் மிகவும் நேர்த்தியாக இசையமைக்கப் பட்டிருக்கும்.



மிக இனிமையான ராகம் சாருகேசி. ஒரு சிறு அலைவரிசை மாறினாலும் அந்த இசை வேறு ராகமாக மாறி வேறொரு உணர்வைக் கொடுத்துவிடும். ஒலியில் புதைந்துள்ள உணர்வுகளை மீட்டெடுப்பவனே நல்ல கலைஞன். ராமாநாதன் தொடங்கி ராஜா வரை நமக்குக் கிடைத்த கொடைகள் பல.





15 comments:

  1. நன்றி

    சின்னத்தாயவள் தந்த ராசாவே
    உதயா உதயா உளறுகிறேன் - சாருகேசி

    காதலின் தீபம் ஒன்று - கீரவாணி என்று நினைக்கிறேன்.

    ReplyDelete
  2. அன்பு சமுத்ரா

    மிக்க நன்றி

    காதலின் தீபம் ஒன்று சந்தேகமில்லமல் சாருகேசிதான்

    அன்புடன்
    ராமானுஜம்

    ReplyDelete
  3. மணமாலையும் மஞ்சளும், மயங்கினேன் சொல்ல தயங்கினேன் இரண்டும் எனக்கு ரொம்ப பிடித்தவை. ஆனால் சாருகேசி என்று தெரியாது. காலை எழுந்ததும் நல்ல தகவல் தெரிந்துகொண்டு நல்ல பாடல்கள் கேட்டேன். மிக்க நன்றி.

    ReplyDelete
  4. ஓ! என்ன இது! இயற்கையிலேயே மணம் குடிகொண்டிருக்கும் சாரு'கேசி'! மன்மத லீலையை...' என்று தொடங்கி வைத்தவனும் கூட அழகிய சாரு'கேசனே'! அள்ளி அள்ளி பருக கொடுத்திருக்கும் கொடை வள்ளலே! நீங்கள் வாழ்க! முன்பு நான் சொன்ன தகவல் இப்போதும்... சென்னை விவித்பாரதியில் காலை எட்டு மணிக்கு கோபி, குமார் என இரண்டு நண்பர்கள் ராகங்களையும் ஆரோகண அவரோகணமும் சொல்லி அவற்றின் மீது அமைந்த இரண்டு திரைப்பாடல்களையும் ஒலிபரப்புகின்றார்கள்! நேரம் கிடைத்த பாக்கியவான்கள் அனுபவிக்க!... இக்பால்.

    ReplyDelete
  5. சிங்காரவேலன் நகைச்சுவை படம். அதில் என்ன சிரத்தை இன்றி எடுக்கப்பட்டதை கண்டீர்கள். மேலும் இளையராஜாவின் சொந்தப் படம் கூட.

    ReplyDelete
  6. Thanks for the posting... inda paataellam inda charukesi raagam nu ipothan theriyum.. interesting psot.. great nanba.. thanks to Charu

    ReplyDelete
  7. நன்றி பாஸ்! சாருகேசி பற்றி எனக்கு சொன்னதற்கு!

    //சமுத்ரா said...
    சின்னத்தாயவள் தந்த ராசாவே
    உதயா உதயா உளறுகிறேன் - சாருகேசி//
    அப்படியா? நன்றி!

    ReplyDelete
  8. thanks for this post . very interesting to music novice like me. interesting to see romance mkt style...'kantha'...i dont know why folks were obsessed with this theme in those days..

    ReplyDelete
  9. நல்ல பதிவு சார்.. ஆனா ஆச்சரியமாவும் இருக்கு.. ஏன்னு இந்த லிங்க்ல போய் பாருங்க..

    http://sa-pa-sa.blogspot.com/2010/12/1.html


    ஆனா உங்க வர்ணனை சூப்பர்...

    ReplyDelete
  10. சூப்பர் சார்... அப்படியே நம்ம தர்மவதி பத்தி கொஞ்சம் எழுதுங்களேன்...

    ReplyDelete
  11. >>தேவா. தன் திறமையை அவரே அறியவில்லை என்று நினைக்கிறேன்.

    ஸார், எங்கள வச்சு காமெடி கீமடி பண்ணலியே :-)

    சொந்தச் சரக்கு சிறிதும் இல்லாமல் மற்றவர்களைக் காப்பியடித்தே தனது காலத்தை ஒட்டிய தேவா மாதிரி ஒரு ஆளைப் பார்க்கவே முடியாது. அவரது எந்தப் பாடலைக் கேட்டாலும் ஏதோ ஒரு பழைய பாடல் அல்லது பாடல்களை ஞாபகப் படுத்தும்.

    ReplyDelete
  12. பாடலை கேட்டு விட்டு இது என்ன ராகம் போன்ற விபரங்களை அறியவைத்த பாடல் " இசையில் தொடங்குதும்மா .,விரக ..." ( ஹே ராம் ) ஹம்சநாதம்!

    தற்போதுதான் ராகங்கள் குறித்து அறிந்து கொள்ள நண்பர் ஒருவர் கிடைத்து இருக்கிறார்! நிறைய பேச வேண்டிய அவளை இந்த இடுகை தூண்டிவிட்டது! நன்றி !

    ReplyDelete
  13. நல்ல பதிவு.. உங்கள் கட்டுரை வழியாக சாருகேசியின் வடிவத்தை பிடிக்க முயன்று கொண்டிருக்கிறேன்

    ReplyDelete
  14. மிக அருமை சார் உங்கள் கட்டுரை
    நானும் நெல்லை சீமையை சேர்ந்தவன் .
    நேற்று தான் உங்கள் கட்டுரை படித்தேன். நல்ல விஷயங்கள் எல்லாமே சற்று தமாதமாகதான் தெரிய வரும் போல் உள்ளது .
    உங்கள் கருத்துகளை பிற வலை பூக்களில் உபயோகித்து கொள்ளலாமா
    உங்கள் அனுமதியுடன்

    ReplyDelete