Tuesday, February 14, 2012

கடன் தந்தார் நெஞ்சம் போல்.

புதிய ஆசிரியன் பிப்ரவரி இதழில் வந்த என் கட்டுரை. (பாவம் அந்த இதழ்)

கடன் தந்தார் நெஞ்சம் போல்..

முன் குறிப்பு: இந்தக் கட்டுரை உங்களைக் குறிப்பது போல் தோன்றினால் அதற்கு நிர்வாகம் பொறுப்பாகாது.

டிசம்பர் மாதம் வந்தால் சென்னையைத் தாக்கும் காய்ச்சல்களில் புத்தகக் காய்ச்சலும் ஒன்று.தொலைபேசி டைரக்டரியைத் தவிர வேறு புத்தகத்தை விரல் நகத்தால் கூடத் தொட்டிருக்காதவர்கள் கூட புத்தகக் கண்காட்சிக்குச் செல்வதையும் முடிந்தால் புத்தகம்
வாங்குவதையும் ஒரு கடமையாகக் கைக்கொள்வர்.

காதல் என்பது கல்யாணம் ஆகும் வரை என்பது போல் ஒரு புத்தகத்தைப் படிக்கவேண்டும் என்ற ஆர்வம் பெரும்பாலும் அதை வாங்கியவுடன் வடிந்து விடுகிறது.அடித்துப் பிடித்து வாங்கிய புத்தகங்கள் சர்க்கரை நோயாளியிடம் இருக்கும் சாக்லெட் போல் யாருக்கும் பலனின்றி இருக்கும்.

பலர் பின்னட்டையை மட்டும் படித்துவிட்டுப் ‘பின்னிட்டான்’ என்பார்கள். இப்படித்தான் ஒரு நண்பர் தான் வாங்கிய ஒரு நாவலைப் “பிரமாதம் நானே இரண்டு முறை படித்துவிட்டேன்” என்று கூறி என் கையில் தந்தார்.ஒரு சுபமுகூர்த்த வேளையில் அதைப் படிக்கும் போதுதான் தெரிந்தது அந்தப் புத்தகத்தில் சுமார் நாற்பது பக்கங்கள் ஒட்டிக் கொண்டு பிரிக்கப்படாமலே இருந்தன.படிக்கும் சுவாரஸ்யத்தில் அவர் அதைக் கவனிக்கவில்லை போலும்.

புத்தகத்தைப் படிக்காவிட்டாலும் கூட விலை கொடுத்து வாங்கினால் குறைந்தபட்சம் ஒரு படைப்பாளிக்குக் கொஞ்சம் ராயல்டியாவது கிடைக்கிறது என்று ஆறுதல் பட்டுக்கொள்ளலாம்.
ஆனால் புத்தகத்தை இரவல் பெறுவது வேறு ஒரு வகை. ‘இரவல் தந்தவன் கேட்கின்றான்.அதை இல்லையென்றால் அவன் விடுவானா?” என்ற கண்ணதாசனின் வரிகளை கண்டு கொள்ளாமலே இருப்பது நம் பழக்கம்.

ஒருவருக்குத் தந்த புத்தகத்தில் “இதைப் படித்தவுடன் தயவு செய்து டாக்டர்.ராமானுஜத்திடம் திரும்பிக் கொடுக்கவும்” என்று எழுதியிருந்தேன் அதை வாங்கிப் போன நண்பர் அதைத் தருவதைப் பற்றியே பேசக்காணோம். ஒரு நாள் அவர் வீட்டுக்குச் சென்ற போது அவர் அறியாமல் அந்த புத்தகத்தை எடுத்துப் பார்த்தேன் .அதில் நான் எழுதியதற்குக் கீழே “சரி! கொடுத்துவிடுகிறேன்” என்று எழுதியிருந்தது.

அதே போல் முன்பு ஒருமுறை சாண்டில்யன் எழுதிய ‘கடல் ராணி’ புத்தகத்தைப் பக்கத்து வீட்டில் வாங்கிச் சென்றனர். சில மாதங்கள் கழித்து அவர்கள் வீட்டில் நவராத்திரி கொலுவில் சுண்டல் வாங்கிய எனக்குப் பேரதிர்ச்சி சுண்டல் தாளில் ‘கடல் ராணி’ பயணித்துக் கொண்டிருந்தாள். அடுத்த சில நாட்கள் கழித்து பொன்னியின் செல்வன் இருக்கிறதா என்று கேட்டார்களே பார்க்கலாம்.ஒரு வேளை பத்து வருடங்களுக்குச் சுண்டல் மடிக்க ஏற்பாடு செய்தார்களோ என்னவோ.

‘புத்தகம் வனிதா வித்தம் பரஹஸ்தம் கதம்’ –என்று ஒரு சம்ஸ்கிருதப் பழமொழி உண்டு. புத்தகம்,பெண், பணம் மூன்றும் கைமாறினால் மீண்டும் கிடைக்காது என்று பொருள்.பெண்களை இப்பழமொழி இழிவுபடுத்தினாலும் புத்தக விஷயத்தில் அது முழு உண்மையே.


ஒரு நோயைக் குணப்படுத்த எதுவும் செய்ய முடியாது என்றால் மருத்துவ உலகம் குறைந்த பட்சம் அதற்கு ஒரு அழகான பெயராவது வைத்து அழைத்து மகிழும்.

புத்தகங்களைத் திருடுவதற்குப் BIBLIO KLEPTOMANIA (BIBLIO –புத்தகம் KLEPTO திருட்டு) என்று பெயர்.புத்தகங்களைத் திருப்பித்தராத குணத்தை BIBLIODEBTOMANIA என்று அழைக்கலாமா? வேறென்ன செய்யமுடியும்?

பின் குறிப்பு: எனக்கு இரவல் தந்தவர்களுக்கு இக்கட்டுரை சமர்ப்பணம்.

No comments:

Post a Comment