Monday, April 16, 2012

எழுத்து வைத்தியன் ஆண்டன் செகாவ்


Bank worker's unity ஏப்ரல் மாத இதழில் வெளிவந்த என் கட்டுரை.    
 எழுத்து வைத்தியன் ஆண்டன் செகாவ்
இலக்கிய உலகில் முதன்முதலில் சிறுகதை வடிவத்தை மிகச்சிறந்த கலைவடிவமாக்கியவர் யாரென்று கேட்டால் தயங்காமல் ஆன்டன் செகாவ் என்று கூறலாம்.வெறும் தனிமனித வரலாற்று அனுபவங்களாக இருந்த நாவல் வடிவத்தை மனிதநேயமும் கருணையும் தத்துவ விவாதங்களும் கொண்ட பெரும் படைப்புக்களாக ஆக்கியதில் தாஸ்தாயவஸ்கி மற்றும் தால்ஸ்தாய் ஆற்றிய பங்கிற்குச் சற்றும் குறைந்ததில்லை செகாவின் இடம். 


ஏற்கனவே ஓரிரு கதைகலைப் படித்திருந்தாலும்செகாவ் மீது பனி பொழிகிறது என்ற எஸ்.ராமகிருஷ்ணனின் கட்டுரையைப் படித்தபின்புதான் செகாவின் கதைகளைத் தேடிப் பிடித்து வாசிக்கத் தொடங்கினேன்.
சிறுகதை என்ற வடிவத்தின் சிறப்பம்சமே படிப்படியாக வளர்ந்து ஒரு குறிப்பிட்ட தருணத்தில் உச்சகட்டத்தை அடைவது.அந்தக் கணங்களே சாதாரணமாகத் தொடங்கும் கதைகளை மிகச்சிறந்த கதைகளாக உருவாக்குகின்றன. இந்த பாணியை மிகச்சிறப்பாகக் கையாண்டிருப்பவர் செகாவ்.அவரது 'பந்தயம்' என்ற சிறுகதையில் இரண்டு லட்சம் ரூபிள் பந்தயத் தொகைக்காகப் பதினைந்து வருடங்கள் தனிமையில் ஒரு அறையில் இருக்கச் சம்மதிப்பவன் பந்தயம் முடிய ஐந்து மணிநேரம் இருக்கும் போது பணம் மற்றும் செல்வங்களை வெறுத்து வெளியேறும் தருணம் அப்படிப்பட்டதே.
கையாலாகாதவர் மீது பெரும்கருணை  வெளிப்படுத்துகிறார்.அவரது 'துக்கம்' என்ற கதையில் மகனைப் பறிகொடுத்த குதிரைவண்டிக்காரன், யாரும் தன் துக்கத்தைக் காது கொடுத்துக் கேட்காத நிலையில் தனது குதிரையிடம் சொல்லி ஆறுதல் அடைகிறான்.
வான்கா என்ற சிறுவன்   தான் வேலை பார்க்கும் வீட்டு முதலாளியின் கொடுமை தாங்காமல் தன்னை வந்து கூட்டிச் செல்லுமாறு தன் தாத்தாவிற்கு எழுதும் கடிதம் நம்மை நெகிழச் செய்கிறது  என்றால் அதைக் கிராமத்திலிருக்கும் தாத்தாவுக்கு என்று மட்டும் முகவரி எழுதி அனுப்பும் இடம் தமது சிக்கல்கள் தீர்ந்திடும் என்ற நம்பிக்கையில் வாழும் கோடான கோடி மக்களின் குறியீடாகிறது.
செகாவிற்குப் பிடிக்காத ஒரு விஷயம் போலித்தனம்.தயவு தாட்சண்யம் பார்க்காமல் கிண்டலடிப்பார்.ரஷ்யாவின் செல்வந்தர் வர்க்கத்தின் வீண் படோடோபங்களையும், வெற்று அரட்டைகளையும் பகடியாக்குகிறார்.அதே நேரம் 
தாஸ்தாய்வ்ஸ்கி ,டால்ஸ்டாய் இருவரிடமும் இல்லாத ஒரு அம்சம் செகாவிடம் உள்ளது.அதுதான் நகைச்சுவை.அவரது சிறுகதைகளின் ஒரு குறிப்பிடத்தக்க அம்சம் பாத்திரங்களின் மிகையற்ற இயல்பான  வெளிப்பாடு.மெல்லிய நகைச்சுவை இழையோடி ஊடுபாவாக வரும்.பல இடங்களில் ஊசி ஏற்றினாற்போல் நகைச்சுவை மூலம் ஒரு மிகப்பெரிய கருத்தை வெளியிட்டிருப்பார். அவரது 'ஒரு அரசாங்கக் குமாஸ்தாவின் மரணம் என்ற கதையில் ஒரு குமாஸ்தா   ஒருவன் தான் தும்மியது தவறுதலாக உயரதிகாரி மீது பட்டிருக்குமோ என்று அஞ்சி உயிரையே விடுகிறான்.  எதிர்க்க முடியாத பிராணி என்ற கதையில் விவாகரத்து விண்ணப்பத்தை மருந்துக் கடையில் கொடுப்பது போல் (உவமை-செகாவ்) தவறுதலாக வேறு ஒரு அலுவலகத்திற்கு வந்து விடாப்பிடியாக விவரம் கேட்கும் பெண்ணைப் போல் பலரை நாம் தினமும் பார்க்கின்றோம்.  
அவரது பச்சோந்தி என்ற கதை மிகப் பிரபலமானது. ஒரு காவலாளி தெருவில் ரோந்து செல்லும் போது ஒருவனை நாய் கடித்துவிட்டதாக அறிந்து அந்த நாயின் உரிமையாளரைச்  சும்மா விடக்கூடாது என்று சீறுகிறார். பின்னர் உடனிருப்பவர் அது உயரதிகாரியின் நாயாக இருக்குமோ என்று ஐயுற்றதும் கடிபட்டவன் மேல் கோபப்படுகிறார்.இப்படி அதிகார வர்க்கத்தின் பச்சோந்தி வண்ணத்தை வரைந்து காட்டுகிறார்.
ஒரு இடத்தில் கூட செகாவ் போதிப்பதில்லை. டால்ஸ்டாயின் மகத்தான நாவலான 'அன்னா கரீனினா ' போன்றே  காதல்,திருமணம் ஒழுக்கம் போன்றவற்றின் மீதான பாரபட்சமில்லா விவாதமாக செகாவின் ' நாயுடன் வந்த சீமாட்டிகுறுநாவல் விளங்குகிறது.

செகாவைப் படிக்கும் யாருக்கும் புதுமைப்பித்தன் நினைவுக்கு வருவார்.சுரீரென்று தைக்கும் கிண்டல்கள், மாயத்திரைகளைக் கிழித்தெறியும் மனப்பான்மை , அபூர்வமான தருணங்கள் என்பன மட்டுமன்றி சொற்சிக்கனமும் இருவரின் பொதுவான பண்பு. மிகச் சரியாக ஒரு சிறுகதை முடியும் இடத்தில் முடித்திருப்பர். சில கதைகளைப் படிக்கும் போது இருவருமே முழுதும் முடிக்கப் பொறுமையின்றி, எழுதும் உற்சாகம் வடிந்து திடீரென்று முடித்தது போல் முடித்திருப்பார்கள்.
தமிழில் செகாவின் சிறுகதைகள் எம்.எஸ்ஸின் மொழிபெயர்ப்பில்  'பாதரசம்' வெளீயீடாகவும் அவரது குறுநாவல்கள் மற்றும் சில சிறுகதைகள் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் வெளியீடாகவும் வந்துள்ளன.ஆங்கிலத்தில் அவருடைய எல்லாப் படைப்புக்களும்  online-literature.com என்ற தளத்தில் வாசிக்கக் கிடைக்கிறது
ஆன்டன் செகாவ் ஒரு மருத்துவர்.எளியவர் பலரின் உடல் உபாதைகளை மருந்துகள் முலம் குணப்படுத்தியவர்.உள்ள உபாதைகளுக்குப் பேனாவின் மையையே மருந்தாக்கிய எழுத்து வைத்தியன் செகாவ்.

No comments:

Post a Comment