Sunday, December 26, 2010

மன்மதன் அம்பு

 பாக்ஸிங் தினத்தன்று மன்மதன் அம்பு பார்த்தேன்.மன்(னார்),மதன(கோபால்),அம்பு(ஜாக்க்ஷி) ஆகிய மூவரைப் பற்றிய கதை.தலைப்பிலேயே வெளிப்படும் புத்திசாலித்தனம் படம் முழுதும் வெளிப்படுகிறது.முதலில் பாராட்டிவிடுவோம்.கமலின் அறிமுகக் காட்சியில் இருந்த கைகலப்பைத்தவிர வேறு சண்டை இல்லை,ஹீரோயிசம் இல்லை.கமல் மிகவும் அடக்கி வாசித்துள்ளார்.முக்கால்வாசி படம் கவிதை போல் செல்கிறது.
            நடிகை நிஷா @அம்புஜாக்‌ஷியை வேவு பார்க்க அவரது காதலன் மாதவன் ,கமலை அனுப்புகிறார்.பணத்தேவைக்காக கமல் சொல்லும் பொய்யால் ஏற்படும் குழப்பமே கதை.
          படத்தின் மிகச் சிறப்பான விஷயமான வசனங்கள்(கமல்) மிகவும் நேர்த்தியாக உள்ளன.நகைச்சுவை இயற்கையாக வரும் வசனங்கள் ரசிக்க வைக்கின்றன. “ஒருத்தரை பற்றி நல்லாத் தெரிஞ்சாத்தான் சந்தேகப்படமுடியும்” .ஆனால் ஆங்கில வாடை அதிகம். “முகத்துக்கு மேக்கப் நாக்குக்கு இங்க்லீஷ்” என்று த்ரிஷா பேசும் வசனம் இதே படத்தில் இருக்கிறது. மலையாளம் ,ஹிந்தி ஏன் ஃப்ரெஞ்சு வசனம் கூட இருக்கிறது
          த்ரிஷாவின் பாத்திரப் படைப்பும் நன்றாக உள்ளது.படத்தில் கமலே சொல்வது போல் த்ரிஷாவின் பாத்திரப் படைப்புதான் இயல்பாக,உண்மையாக,பாசாங்கின்றி இருக்கிறது.கமலின் திரைப்படங்களில் இவ்வளவு வலுவான,சுயமாகச் சிந்திக்கும் பெண் கதாபாத்திரங்கள் வருவது அரிது.(மகளிர் மட்டும் ரேவதி போல்).படத்தில் த்ரிஷாவே மனதில் பெருமளவு நிற்கிறார்.
          திரைக்கதையும் புத்திசாலித்தனமாக அமைக்கப் பட்டிருக்கிறது.காட்சிகளின் சம்பவங்களின் கோர்வை விறுவிறுப்பாக அமைந்துள்ளது.விருமாண்டி போல் ஃப்ளாஷ்பேக் முறையில் படம் முன்னும் பின்னும் நகர்கிறது.
          எனினும் சில குறைகள் தெரிகின்றன.
            கடைசி சில நிமிடங்கள் மிகவும் அமெச்சூர்த்தனமாக இருக்கின்றன.கிரேஸி மோஹன் சுந்தர் சி போன்றோர்கள் கையாளும் ஆள் மாறாட்டக் குழப்பம் வெகு செயற்கை.மாதவன் பெரும்பாலும் குடித்துக் கொண்டே உளறுவது ரொம்பவே ஓவர்.நல்ல நடிகரைச்  சார்லி ரேஞ்சுக்குக் காமெடியனாக்கி இருக்கிறார்கள்.மாதவன் குடும்பத்திற்கு எதற்குத் தேவையில்லாத பிராமண அடையாளம் என்று தெரிய வில்லை.ஆச்சாரமான குடும்பம் என்று காட்டவா என்றால் அதுவும் இல்லை.நடு வீட்டிலேயே அம்மாவின் ஆசியுடன் ,முறைப்பெண் செய்து தரும் பஜ்ஜியின் துணையோடு தண்ணி அடித்துக் கொண்டிருக்கிறார் மாதவன்.மலையாளிகள் மீது என்ன கோபமோ கமலுக்கு?.(கேரள அரசு விழாவை நடிகர்கள் புறக்கணித்ததாலோ).கோமாளியாக ஒரு மலையாள தம்பதியினர் வருகின்றனர்.கதைக்குத் தேவையில்லாத இது போன்ற அடையாளங்கள் வீண் சர்ச்சைகளையே உண்டாக்கும்(பஞ்ச தந்திரத்தில் வரும் மொழி அடையாளங்கள் ரசிக்கும் படி இருந்ததே)
               முக்கால்வாசி கெளதம் மேனன் படம் மாதிரியும் கடைசிக் கால்வாசி  சுந்தர். சியின் படம் மாதிரியும் இருக்கிறது.(அப்ப ரவிக்குமார்?)
            எனினும் ஒரு முறை தாராளமாகப் பார்க்கலாம்.
              

No comments:

Post a Comment