Sunday, April 24, 2011

ரீதி கௌளை- மடை திறந்த ராஜா

ஒரு பாடல் பதிவிற்காகக் கர்நாடக சங்கீத மேதை பாலமுரளிகிருஷ்ணா சென்றார்.இசையமைப்பாளர் இசைஞானி அவரை வரவேற்றுப் பதிவுக் கூடத்திற்குள் அழைத்துச் சென்றார். பாடலைப் பாடிக் காட்டவா என்று இளையராஜா கேட்டு விட்டுப் பாட ஆரம்பிக்கிறார். சினிமாப் பாடல் என்றால் ஒரு மோகனம், ஒரு சிந்துபைரவி இல்லை கல்யாணி ராகத்தில் ஒரு பாடல் போட்டிருப்பார்.அதுவும் இளையராஜா அப்போது முழுதாய் பத்துப் படங்கள் கூட பண்ணியிருக்கவில்லை.இவ்வாறு எண்ணிக் கொண்டிருந்திருந்த பாலமுரளிகிருஷ்ணா மெட்டைக் கேட்டதும்  திகைத்துப் போய் ஒருகணம் வாயடைத்துப் போனார்.
    





  'ஸகரிகமநிநிஸா சின்னக் கண்ணன் அழைக்கிறான்' என்று ராஜா போட்ட மெட்டு அதுவரை திரையில் யாருமே போட்டிராத ராகம்.ரீதிகௌளை என்று பெயர்.அந்த ராகத்தின் ஆரோகணத்தை அப்படியே பாடலின் முதல் அடியாக அமைத்தது அவரது மேதமையைக் காட்டுகிறது.பாடல் கவிக்குயில் படத்தில் இடம் பெற்றது.(1976).ஆரம்பத்தில் வரும் குழலிசையும் சந்தூரிலிருந்து வரும் கிண்கிணி ஒலியையும் கவனியுங்கள் .இரண்டும் சுத்தமான ரீதிகௌளைதான். குழலில் ஒருவகையாகவும் கம்பியிலிருந்து வேறுவகையும் சுவை தருகிறது.

            
    ரீதிகௌளை இனிமையான கருணைச் சுவை பொங்கும் ராகம்.கர்னாடக சங்கீதத்தில் ஓஹோ என்றில்லாவிட்டாலும் ஓரளவு பிரபலமான ராகம்.எம்.டி ராமநாதன் என்ற இசைமேதை பரிப்பாலய என்ற தியாகராஜஸ்வாமிகளின் பாடலைப் பாடிப் பிரபலப் படுத்தினார்.'ஜனனி நின்னுவினா' என்ற சுப்பராய சாஸ்திரியின் (மும்மூர்த்திகளில் ஒருவரான ஸ்யாமா சாஸ்திரியின் மகன்) கீர்த்தனை புகழ்பெற்றது.தமிழில் 'குருவாயுரப்பனே அப்பன்' என்ற அம்புஜம் கிருஷ்ணாவின் பாடலும் கேட்க இனிமையாக இருக்கும்.பாபனாசம் சிவனின தத்வமறிய தரமா? என்ற பாடலும் ரீதிகௌளையில் சோபிக்கும்.இப்பாடல்களை எல்லம் தொடர்ந்து கேட்டு வந்தாலே நாம் ரீதிகௌளையை எங்கே சந்தித்தாலும் கண்டுபிடித்து 'ஹாய்' சொல்லலாம்.


ரீதிகௌளையை மடைதிறந்து விட்டவர் இளையராஜா.ஆனால் அபூர்வமாகவே அந்த ராகம் பயன்படுத்தப்பட்டது. ஆனால் துருப்புச்சீட்டு மாதிரி ஒவ்வொரு முறையும் நல்ல பாடலாகவே அமைகிறது.
ஒரு ஓடை நதியாகிறது என்று ஒரு படம்.1983 இல் வெளிவந்தது.அதில் எஸ் பி பியும் ராஜேஸ்வரியும் பாடிருக்கும் பாடல் 'தலையைக் குனியும் தாமரையே'.இசை ஞானியின் கைவண்ணத்தில் விறுவிறுப்பான தாளங்களுடன் வேகமாக அமைந்த பாடல்.ஆரம்பத்தில் வரும் வயலினும். பாட்டின் நடுவில் பாற்கடலின் ஓரம் என்று இழுக்கும் இடத்தையும் கவனியுங்கள்.இசை அறிந்தால் இரட்டை இன்பத்துடன் ரசிக்கலாம்

கே விஸ்வநாத் தெலுங்கில் நல்ல இசையம்சமுள்ள படங்களைத் தந்தவர்.1985 இல் அவர் இயக்கத்தில் வந்த சிப்பிக்குள் முத்து (தெலுங்கில் ஸ்வாதி முத்யம்)  படத்தில் ரீதிகௌளையில் ஞானியும் எஸ் பி பியும் விளையாடியிருப்பார்கள்
'சீதையின் சுயம்வரம் நிச்சயிக்கப் பட்ட நாளிலே, ஜனகனின் மண்டபத்திலே மாலை ஏந்தி வந்த ஜானகியை வெண்ணிலா மண்ணிலா வந்ததென்று மன்னவரெல்லாம் பார்க்க ஸ்ரீ ரா....மச்சந்த்ர முர்த்தி ,கண்ணெடுத்துப் பார்க்க மாட்டாரோ என்று கவலை கொண்டார்களாம் சீதா தேவியின் செல்லத்தோழிகள்.' என்று தொகையறாவாகப் (வசனத்தை ராகத்துடன் பாடுதல்)  பாடியிருக்கும் இடத்தில் ராகமும் குரலும் இணைந்து கலக்கும்.
                    

இசைப்புயல் ரீதி கௌளையை விட்டு விடுமா? ஏ ஆர் ரகுமான் கர்னாடக இசையைப் பெரும்பாலும் இந்த தலைமுறைக்கு ஏற்றவாறு மாற்றிக் கொடுப்பவர்.மேற்கத்திய மற்றும் ஹிந்துஸ்தானி இசைக் கூறுகள் அதிகம் தென்படும் இவர் பாடல்களிலும் அவ்வப்போது சுத்தமான கர்னாடக இசையைக் காணலாம்.முதல்வன் படத்தில் ரீதி கௌளையில் ஒரு நல்ல பாடல் தந்திருப்பார்.அழகான ராட்சசியே (நிச்சயமாக மனிஷா கொய்ராலா அல்ல. அவர் வயதான ராட்சசி) என்ற அந்தப் பாடலில் 'குயிலே ஆலங்குயிலே ' என்று இழுக்கும் இடம் தான் ரீதி கௌளையை ரிஃப்ளெக்ட் செய்கிறது.

                            
ரீதிகௌளை லேசாக ஒலித்தாலும் கண்டுபிடித்து விடலாம்.தாழம்பூ வாசம் மாதிரி. வித்யாசாகர் நல்ல கர்னாடக இசை நுணுக்கம் அறிந்தவர்.தூய கர்னாடக இசையைத் தருபவர் (கொஞ்ச நேரம் கொஞ்ச நேரம்- சந்திரமுகியில் ஆபோகி ராகத்தை அற்புதமாய் வெளிப்படுத்தி இருப்பார்).'தம்பி' என்ற படத்தில் ஒரு மெல்லிய ஹிந்துஸ்தானி ஜாடையில் ரீதிகௌளையைப் பயன்படுத்தி இருப்பார். டிப்பிக்கல் வித்யாசாகர் பாணி.'காதலித்துப் பார்' என்ற இடத்தில் ராகமுத்திரை இருக்கிறது

        
        
சமீபத்தில் இன்னொரு  ஒரு நல்ல ரீதிகௌளையைக் கேட்க முடிந்தது. சுப்பிரமணிய புரத்தில் வரும் 'கண்கள் இரண்டால் பாடல்'. ஜேம்ஸ் வசந்தனின் நல்ல முயற்சி.ஓரிரு முறை கேட்டாலே அழகான ராட்சசியேவும் இதுவும் ஒரே ராகம் என்று சட்டென்று புலப்படும்.

                      
                                
ராகம் என்பது ஒரு சமையல் குறிப்பைப் போன்றது.என்னென்ன பொருட்களைச் சேர்க்கலாம் என்று கூறும். சமையல் குறிப்பைப் பின்பற்றி நூறு பேர் உப்புமா செய்தாலும் ஒவ்வொன்றும் ஒவ்வொரு சுவையாய் இருக்கும். அது போலவே மெட்டுக்களும்.




      
  
               

7 comments:

  1. நல்ல கட்டுரை சார்.எனக்கு கர்நாடக சங்கீதத்தில் வெறும் கேள்வி ஞானம் மட்டும்தான். அது கூட பாடலை ரசிப்பதோடு சரி.அதன் கணக்கு வழக்குகள் பற்றி எதுவும் தெரியாது

    ReplyDelete
  2. "வயதான ராட்சசி" ஆமோதிக்கிறேன்....
    ரீதிகெளலை குறித்த என் பதிவு...
    http://modumutti.blogspot.com/2010/08/blog-post_18.html

    ReplyDelete
  3. Sorry it should be ரீதிகெளளை..

    ReplyDelete
  4. அன்புள்ள நண்பர் ராமானுஜம் கோவிந்தன்,

    ஆழ் கடலில் மூழ்கி முத்தெடுப்பதுபோல் அற்புதமான ராகங்களையும், அவற்றில் அமைந்த இனிய திரை இசைப்பாடல்களையும் தேடிக்கொண்டு வந்து ரசிக்கத் தந்த உங்களுக்கு எனது இதயம் கனிந்த நன்றி! மேலும் தொடருங்கள்...
    ஜெகன் -கனடா

    ReplyDelete
  5. சார் அருமை
    தொடர் எப்பவோ வந்திருக்கணும் போல
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. ரசிக்க மட்டுமே தெரிந்த எனக்கு, ராக விபரங்களும் அறியும்போது சிலிர்ப்பாக இருக்கிறது.

    ReplyDelete
  7. அருமையான ஆய்வு. நல்ல பகிர்வு .

    ReplyDelete