Thursday, June 6, 2013

டி.எம்.எஸ் பாட்டும் பாவமும் 2

டி.எம்.எஸ் என்றாலே திரைப்பாடல்களோடு  முருகன் பாடல்களும் நம் நினைவிற்கு வரும். வாலியின் முதல்பாடலான 'கற்பனை என்றாலும்' தொடங்கி 'உள்ளம் உருகுதைய்யா' 'மண்ணானாலும் திருச்செந்தூரின்' போன்ற பாடல்கள் சம்பிரதாயமான மெல்லிசை பக்திப் பாடல்கள் என்றாலும் 'ஓராறு முகமும் ஈராறு கரமும் (ராக மாலிகை) ' 'நினைத்த போது நீ வரவேண்டும் (ஆரபி), கந்தன் திருநீறணிந்தால் (பாகேஸ்ரீ) என்று ராகங்களைக் காட்டியிருப்பார்.அந்த முருகனுக்குப் பிடித்த ஷண்முகப்ரியா என்றால் டி.எம்.எஸ் விடுவாரா? மிகவும் பிரபலமான இந்த ராகத்தில் ஏராளமான பாடல்கள் உள்ளன. 'மாமா' மஹாதேவன் என்னும் மாமேதை போட்ட 'மறைந்திருந்தே பார்க்கும் மர்மமென்ன' விற்கு (தில்லானா மோகனாம்பாள்)  ஈடாக இனி ஒரு ஷண்முகப்ரியா அமையாது. எனையாளும் ஷண்முகா வா என்ற இடத்தில் பி.சுசீலா பாடியிருப்பது பாற்கடலைக் கடைந்தெடுத்த அமுதம். 'தம்தன தம்தன தாளம் வரும்' (புதிய வார்ப்புகள்), 'தகிட தகமி' (சலங்கை ஒலி) , 'சொல்லாயோ வாய்திறந்து' (மோகமுள்- அபாரமான பாடல்) ,'கண்ணுக்குள் நூறு நிலவா' (வேதம் புதிது-இசை தேவேந்திரன்) என்று ஏராளமான முத்துக்கள் உள்ளன.

ஷண்முகப்ரியாவில் டி.எம்.எஸ் பாடிய இரு பாடல்கள் உடனடியாக நினைவிற்கு வருகின்றன. 'அருணகிரி நாதரில் வரும் 'முத்தைத் தரு பத்தி' என்ற திருப்புகழ் அதி வேகமான பாடல். 'அணுகுண்டா' என்ற வார்த்தையை 'அனகோண்டா' என்றும் 'பிரியமா பொண்ணைக் கட்டு' என்பதை 'பெரியம்மா பொண்ணைக் கட்டு' என்றும் இப்போதுள்ள உஸ்தாதுகள் பாடி வருகின்றனர். இந்நிலையில்
 "பத்துத் தலை தத்தக் கணை தொடு
ஒற்றைக் கிரி மத்தைப் பொருதொரு
பட்டப் பகல் வட்டத் திகிரியில் இரவாக
பத்தற்கிர தத்தைக் கடவிய
பச்சைப் புயல் மெச்சத் தகுபொருள்
பட்சத்தொடு ரட்சித் தருள்வதும் ஒரு நாளே'
என்றெல்லாம் வரும் வரிகளைச் சந்தம் மாறாமல் உச்சரிக்கும் டி.எம்.எஸ் ஷண்முகப்ரியாவில் செய்துள்ளது அசுர சாதனை.என்ன ஒரு குறையென்றால் இப்பாடலில் நடிகர் டி.எம்.எஸ்ஸுக்குப் பாடகர் டி.எம்.எஸ்ஸின் குரல் பொருந்தவில்லை.இப்பாடலுக்குச் சிவாஜி நடித்து இருப்பதாகத் தான் வெகுகாலம் நினைத்திருந்தேன்.


எஸ்.வி .வெங்கட்ராமன் குறைவாகவே இசையமைத்தாலும் மறக்கமுடியாத இசையமைப்பாளர். 'காற்றினிலே வரும் கீதம்' போன்ற அருமையான பாடல்களைத் தந்திருக்கிறார்.அவரது இசையில் 'இரும்புத்திரை' திரைப்படத்தில் ஒரு அருமையான ஷண்முகப்ரியாவை அமைத்திருக்கிறார். 'நெஞ்சில் குடியிருக்கும் அன்பருக்கு நான் எழுதும்' என்ற அந்தப் பாடலில் 'கண்ணில் குடியிருக்கும் காதலிக்கு நான் எழுதும்' என்று உச்சஸ்தாயியில் எடுப்பார் டி.எம்.எஸ். மிகவும் நேர்த்தியாகவும் நளினமாகவும் இந்த ராகத்தைப் பாடியிருப்பார் ..உடன் பாடியவர் பி.லீலா.ஆரபி ஒரு கம்பீரமான விறுவிறுப்பான ராகம். ஆனால் பெரும்பாலும் கேலி,கிண்டல் போன்ற சூழலுக்கு இந்த ராகத்தைத் திரையில் அமைத்திருக்கின்றனர். 'தம்பிக்கு எந்த ஊரு' திரைப்படத்தில் 'ஆசைக் கிளியே அரைக் கிலோ புளியே' என்று இளையராஜா இசையமைத்த ஆரபியை மலேசியா வாசுதேவன் அருமையாகப் பாடியிருப்பார். தியாகய்யரின் பஞ்சரத்ன கீர்த்தனைகளில் ஒன்றான 'சாதிஞ்சனே மனஸா' இந்த ராகத்தில்தான் அமைந்துள்ளது.இப்பாடல் கூட கண்ணனின் லீலைகளைக் கேலி செய்யும் தொனியில் தான் அமைந்துள்ளது. சோபானம் என்ற மலையாளத் திரைப்படத்தில் கே.ஜே.யேசுதாஸ் ,டி.என்.சேஷகோபாலனுடன் இணைந்து இப்பாடலைப் பிரமாதமாகப் பாடியிருப்பார்.

அப்படிப்பட்ட ஆரபியில் அமைந்த ஒரு கிராமத்து மெட்டைக் கே.வி.மஹாதேவன் தனது இசையில் அருமையாகக் கொடுத்திருப்பார். படம் முதலாளி. 'ஏரிக்கரையின் மேலே போறவளே பெண்மயிலே' என்று உச்சத்தில் ஆரம்பிக்கும் டி.எம்.எஸ் அப்பாடல் முழுதும் கிண்டல் கலந்த பாவத்துடன் மேல்ஸ்தாயிக்கும் கீழ்ஸ்தாயியிற்கும் இராட்டினம் மாதிரி பயணிப்பார். 'அன்னம் போல நடை ந டந்து 'என்று கீழே இறங்குபவர் 'ஆசைதீர நின்னு கொஞ்சம்' என்று உத்தரவிடுவது போல் மேலே ஏறுவது ஆரபியில் ஆடும் சர்க்கஸ்.எல்லா ராகங்களையும் சொல்லிவிட்டு ராகங்களின் தலைவியான கல்யாணியை விட்டுவிட முடியுமா?. கல்யாணி ராகத்தின் மாஸ்டர் பீஸான 'மன்னவன் வந்தானடி' (திருவருட்செல்வர்-கே.வி,மகாதேவன்)  பாடலுக்குத் தனிக் கட்டுரையே எழுத வேண்டும். 'ஜனனி ஜனனி (தாய் மீகாம்பிகை), வந்தாள் மகாலக்ஷ்மியே (உயர்ந்த உள்ளம்), நதியில் ஆடும் பூவனம் (காதல் ஓவியம்- வாவ் கிளாசிக்), மஞ்சள் வெய்யில் (நண்டு) என்று இளையராஜாங்கமே நடத்தியிருக்கிறார் இந்த ராகத்தில்.

அப்படிப்பட்ட கல்யாணியில் டி.எம்.எஸ் நினைவில் நீங்காத பல பாடல்களைப் பாடியிருக்கிறார். 'முகத்தில் முகம் பார்க்கலாம்' தங்கப்பதுமை படத்தில் வரும் ஒரு மறக்க முடியாத பாடல்.டி,எம்.எஸ் பாணியிலான உச்சஸ்தாயி எடுப்பு, பிசிறற்ற சுருதி, அற்புதமான உச்சரிப்புடன் அமைந்த இப்பாடலுக்கு இசை விஸ்வநாதன் -ராமமூர்த்தி .பாடலை இயற்றியவர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம். 'விரல் நகத்தில் பவழத்தில் நிறம் பார்க்கலாம்' போன்ற வரிகளைக் கொண்ட இப்பாடலைக் காணக் கீழே லிங்க் உள்ளது. யூ ட்யூபில் இப்பாடல் இல்லை என்று நினைக்கிறேன்.
http://www.dailymotion.com/video/xj3dvt_mugathil-mugam-paarkalaam_auto#.UbCPvdJHJfU

அதே கல்யாணியில் 'சிந்தனை செய் மனமே' என்று ஒரு அற்புதமான பாடலைப் பாடியிருப்பார் டி.எம்.எஸ். 'அம்பிகாபதி' திரைப்படத்தில்- இசை ஜி.ராமநாதன். ஆனாலும் கல்யாணி ராகத்தில் டி.எம்.எஸ் முத்திரை பதித்த பாடல் என்றால் அது 'தவப்புதல்வன் 'திரைப்படத்தில் வரும் 'இசை கேட்டால் புவி அசைந்தாடும்' பாடல் தான். தான்சேனாக அப்பாடலில் வரும் சிவாஜி பாடுவது போல் லேசான ஹிந்துஸ்தானி ஜாடையில் அமைந்திருக்கும் இப்பாடல்.(கல்யாணி-மங்களகரமான பெயர் ;ஆனால் விந்திய மலைக்கு வடக்கே  இந்த ராகத்தின் பெயர் 'யமன்'. என்ன கொடுமை சார் இது?). எம்.எஸ்.விஸ்வநாதனின் அருமையான இசையமைப்பில் இந்தப் பாடலில் கல்யாணி ராகத்தின் சோகம், கருணை, கோபம்,கம்பீரம் என்று எல்லா உணர்ச்சிகளையும் டி.எம்.எஸ். வெளிப்படுத்தியிருக்கிறார் .

அபாரமான குரல்வளம், நல்ல இசை ஞானம் ,அப்பழுக்கற்ற உச்சரிப்பு இவைகளைக் கொண்டிருந்தாலும் டி.எம்.எஸ் பாடும் முறையில் ஒரு சிறு குறையாக நான் ஒன்றைக் கருதுவேன். எல்லாப் பாடலிலும் அந்தப் பாடலுக்கேற்ற உணர்ச்சியைக் கொடுத்தாலும் அதையும் மீறி ஒரு மூலையில் அந்தப் பாடலில் டி.எம்.எஸ் ஒளிந்து கொண்டு 'இந்தப்பாடலை எப்படிப் பாடுகிறேன் பார்த்தாயா?' என்று பெருமிதத்துடன் கேட்பது போல் பாடுவார்-அது சோகப் பாடல் என்றாலும் கூட. சீர்காழி, பி.சுசீலா போன்றவர்கள் தனது பெர்ஃபார்மன்ஸ்ஸை (இதற்குப் பொருத்தமான தமிழ்ச் சொல் கிடைக்கவில்லை) விட அப்பாடலின் உணர்வில் கரைந்து தன்னையே மறந்து பாடியிருப்பார்கள். டி.எம்.எஸ் எப்பொழுதும் தன்னுடைய பெர்ஃபார்மன்ஸ் பற்றிய விழிப்புணர்வுடன் இருப்பது பாடலின் மூல உணர்ச்சியை லேசாகக் குறைத்து விடும். இந்தச் சிறு குறை தவிர்த்துப் பார்த்தால் அவர் மகா கலைஞன் என்பதில் சந்தேகமில்லை. தங்கத்திலே ஒரு குறையிருந்தாலும் தரத்தினில் குறைவதுண்டோ?.

பி.கு: இன்னும் மத்யமாவதி, சாருகேசி ,கீரவாணியெல்லாம் இருக்கிறதே? ஒருவேளை இன்னொரு பாகம் வருமோ?

1 comment:

 1. அன்பின் ராமானுஜம் அவர்களுக்கு


  எளியேன் (அல்லது நாயேன்) ராகங்களின் பெயர் எல்லாம் அறியாதவன்...ஆனால் ஒரே மாதிரியான ராகத்தில் அமைந்த பாடல்களை வகைப்படுத்தி ரசித்துப் பார்ப்பது உண்டு....இந்த உங்களது பதிவு பொது அறிவை மேம்படுத்திக் கொடுத்து, இன்னும் பாடலின் அருகே கொண்டு நிறுத்தி அதன் உள்ளழகை, அலங்காரத்தை, பிசிறற்ற அதன் கம்பீரத்தை அடையாள படுத்திக் கொடுக்கிறது....

  மூன்றாவது பாகத்திற்கான உங்களது சொற்கள் வேட்கையைக் கூட்டுகிறது...

  ரசனையின் ஒய்யாரக் கட்டுமானமாய்த் திகழ்கிறது டி எம் எஸ் அவர்களுக்கு நீங்கள் எழுப்பிக் கொண்டிருக்கும் வலைப்பூ மண்டபம்....

  எஸ் வி வேணுகோபாலன்

  ReplyDelete