Friday, May 6, 2011

எண்ணும் எழுத்தும்


              
(குறிப்பு: மார்ச் 27 ஹிந்துவில் வெளிவந்த எனது கட்டுரையைச் சற்றுத் தமிழ்ப்படுத்தித் தந்திருக்கிறேன்.புதிய ஆசிரியன் மே இதழில் வந்துள்ளது) 
   டான் பிரவுன் என்ற புகழ்பெற்ற நாவலாசிரியரின்( டாவின்சி கோட் என்ற நாவலை எழுதியவர்)  கதைகளில் ராபர்ட் லாங்க்டன் என்ற ஹார்வர்ட் பல்கலைக்கழகப் பேராசிரியர் வருவார்.அவர் தலைசிறந்த சங்கேத,குறியீட்டு மொழியில் நிபுணர்.(SYMBOLOGIST).அக்கதைகளில் மையமாக ஒரு குறியீடு சங்கேத மொழியில் இருக்கும்.அதனை எப்படிக் கண்டுபிடிக்கிறார் என்பதே கதை.ஆனால் ராபர்ட் லாங்க்டனே வந்தாலும் சில மருத்துவர்களின் கையெழுத்தை விளக்க முடியாமல் வெட்கித் தலை குனிவார்.
   ஏன் சில மருத்துவர்கள் கையெழுத்து பிராமி எழுத்துக்களை விடக் குழப்பமாக உள்ளது?கையால் எழுதுவதே அழிந்துவரும் ஒரு கலையாகி வருகிறது.எனினும் பெரும்பாலான மருந்துச் சீட்டுகள் கையால் கிறுக்க …மன்னிக்கவும் எழுதப் படுகின்றன.
    ஒரு மருந்துச் சீட்டில் இரு அம்சங்கள் உள்ளன,முதலாவது அந்த நோயாளியைப் பற்றியும் நோயைப் பற்றியும் குறிப்புகள்.இரண்டாவது மருந்தின் பெயர்கள்.மருத்துவர்கள் நோயாளியைப் பற்றியச் சில விவரங்களை ரகசியமாக வைத்துக் கொள்ள விரும்புவர்.ஆனால் நோயாளியோ அதைத் தெரிந்து கொள்ள ஆசைப் படுவார்.மருத்துவர்,நோயாளி இருவருமே ஒருவருக்கொருவர் முழு உண்மையையும் சொல்வதில்லை.
   நான் ஒரு சீனியர் மருத்துவரிடம் பணியாற்றிய போது மருந்துச் சீட்டில் AOO,EO என்று எழுதி விடுவார்.நானும் மருத்துவத் தலையணைகளை(புத்தகங்கள் தான்)யெல்லாம் புரட்டியும் என்னால் அது என்ன என்று கண்டுபிடிக்க முடியவில்லை.கடைசியில் அந்த மருத்துவரிடமே கேட்ட போது சிரித்துக் கொண்டே அது அவருடைய ஃபீஸைக் குறிக்கிறது என்றார். A,B,C முறையே 1,2,3 ஐக் குறிக்கிறது O-பூஜ்யம்.எனவே AOO என்றால் நூறு ரூபாய்,EO என்றால் ஐம்பது ரூபாய்.நல்ல வேளை 140 ரூபாய் ஃபீஸ் வாங்கவில்லை .சீட்டில் NO என்று எழுதி விடுவார்.உதவியாளர் ஃபீஸ் வாங்காமலே அனுப்பி விடுவார்.  
     மருந்துகளைப் பொறுத்த மட்டில் அவை பெரிய எழுத்துக்களில் (விக்கிரமாதித்தன் கதைபோல் அல்ல –CAPITAL LETTERS) தெளிவாக எழுதப்பட வேண்டும்.ஒரு முறை மருந்துச்சீட்டில் முதலில் எழுதிய மருந்து மருந்துக் கடைகளில் கிடைக்கவில்லை என்று ஒருவர் மருத்துவரிடம் போய்க் கேட்டார்.அதற்கு மருத்துவர் சொன்ன பதில்”சார்!அது மருந்துடைய பெயர் இல்லை.உங்களுடைய பெயர்!”
    மருத்துவர்களுக்கு நேரமில்லாமல் இருப்பதும் ஒரு காரணம்.நான் தெளிவாக எழுதிக் கொடுப்பதைப் பார்த்து நான் ஒரு போலி டாக்டரோ என்று கூடச் சிலர் ஐயுறுவர்.சிலரது கையெழுத்தே மோசமானதாக இருக்கும்.ஆனால் இவற்றை எல்லாம் காரணமாக ஏற்றுக்கொள்ள முடியாது.இது போன்ரவர்கள் வேறு நபர்களை விட்டு எழுதுவதோ அல்லது டைப் அடிப்பதோதான் சிறந்த வழி.
    சில சமயம் நள்ளிரவில் எழுப்பப்பட்டு தூக்கக் கலக்கத்தில் எதையோ கிறுக்கிய அனுபவம் எல்லா மருத்துவர்களுக்கும் ஏற்பட்டிருக்கும்.மருத்துவரின் தூக்கக்கலக்கம் நோயாளியை மீளாத் துயிலில் ஆழ்த்திவிடக் கூடாது.
      இங்கிலாந்தில் உள்ள ராயல் காலேஜின் ஆய்வு மருத்துவர்களின் சீட்டுக்களில் மூன்று சதவிகம் தவறுகள் இருப்பதாகக் கூறுகிறது.பெரும்பாலும் சிறுதவறுகள் எனினும் சில பெரும் பிழைகளும் இருக்கின்றன.
      ஒரு மருத்துவர் தனது காதலிக்கு ஒரு கடிதம் எழுதி அனுப்பினார்.ஆனால் அந்தப் பெண்ணுக்கு ஒரு வார்த்தை கூடப் புரியவில்லை.எனினும் அவள் புத்திசாலி.அருகிலிருந்த மருந்துக் கடைக்குச் சென்று கடைகாரர் மூலம் படித்துவிட்டாள்,
     நல்லவேளை இந்தக் கட்டுரையைக் கையால் எழுதவில்லை.புதிய ஆசிரியன் ஆசிரியர் பிழைத்தார்!!!

No comments:

Post a Comment