Sunday, May 15, 2011

மாயாமாளவ கௌளை -ராஜ ராகம்

மீண்டும் எழுத்தாளர் சுஜாதாவுக்கே வருவோம்.அவருடைய எழுத்துக்கள் பலதரப்பட்டவை. தாத்தா ஈஸிச்சேரில் சாய்ந்து கொண்டு சுஜாதா ஆழ்வார்களைப் பற்றி எழுதியதைப் படித்துக் கொண்டிருப்பார்.பேரன் மெக்ஸிகோ சலவைக்காரி ஜோக்கைப் படித்து ரசித்துக் கொண்டிருப்பான்.அவரா இது என்று வியக்கவைக்கும்.அதுபோல் சில ராகங்களையும் இசை அமைப்பாளர்கள் வேறு வேறு இடங்களில் பயன்படுத்தி இருப்பார்கள்.ஒரே ராகத்தில் அமைந்த இரண்டு பாடல்களைக் கேட்கும் போது அதுவா இது என்று வியக்கவைப்பதே ஒரு இசையமைப்பாளரின் படைப்புத்திறனின் வெளிப்பாடு.

படைப்பாளியின் கற்பனையோடு ராகமும் வளைந்து கொடுக்கும் தன்மையுடையதாய் இருந்தால் நமக்குக் கிடைப்பது விதவிதமான விருந்துகள் தான்.அப்படி ஒரு ராகம் தான் மாயா மாளவ கௌளை.இந்த இடத்தில் ஒரு சிறு தகவல்.கர்நாடக சங்கீதத்தில் ரி,க,ம,த,நி ஆகிய ஸ்வரங்கள் இரண்டிரண்டு இருக்கும் உ-ம் சின்ன ரி(ரி1) பெரிய ரி (ரி2). 'ஸ' வும் 'ப' வும் ஆதார ஸ்ருதிகள் ஆகவே ஒன்றுதான்.கீ போர்டில் ஒரு வெள்ளைக் கட்டைக்கு முன் மேலே இருக்கும் கருப்புக் கட்டை சின்ன ஸ்வரம்.('ம' மட்டும் விதிவிலக்கு). ஒரு ராகத்தில் ஏதாவது ஒரு ஸ்வரம்( சின்னதோ பெரியதோ) மட்டுமே வரும்.(இதிலும் சில விதிவிலக்குகள் உள்ளன).இவ்வாறு ஸ்வரங்களின் விதவிதமானச சேர்க்கையில் (உ-ம் ஸ ரி1க2 ம1 ப த1நி2ஸ் -மாயா மாளவ கௌளை.ஸ ரி2க2ம2ப த2 நி2 ஸ்-கல்யாணி) 72 வகையான ராகங்கள் கிடைக்கின்றன.இவை மேளகர்த்தா ராகங்கள் என அழைக்கப் படுகின்றன.ஏழு சுரங்களும் வருவதால் சம்பூர்ண ராகம் என்றும் அழைக்கப்படும்.இவற்றில் 15 ஆவது மேளகர்த்தா ராகம் மாயாமாளவ கௌளை.ராகங்கள் உருவாகும் விதம் பற்றி இன்னொரு முறை விரிவாக விவாதிக்கலாம்.

கர்நாடக சங்கீதம் படிப்பவர்களுக்கான பால பாடங்கள் மாயா மாளவ கௌளை ராகத்தில்தான் சொல்லிக்கொடுக்கப்படிகின்றன.உடல் பொருள் ஆனந்தி என்றொரு நாவலில் ஜாவர் சீதாராமன் இந்த ராகம் வீணையில் வாசிக்கப்படுவது  எப்படி உள்ளத்தை உருக்கும் விதம் உள்ளது  என்று விலாவாரியாக விவரித்திருப்பார்.சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துஸ்வாமி தீட்சிதர் 'ஸ்ரீ நாதாதி குரு குஹோ 'என்று இந்த ராகத்தில் தான் தன் முதல்பாடலை இயற்றினார்.தியாகய்யர் 'துளசி தளமுலசே' என்று ஒரு இனிமையான கீர்த்தனை அமைத்திருக்கிறார்.முத்துத்தாண்டவர் இயற்றிய 'ஆடிக்கொண்டார் ' என்ற தமிழ்பாடலும் மிகப் புகழ்பெற்றதுதுளசிதளமுல மெட்டிலேயே  பட்டினத்தார் (1962)படத்தில் 'நிலவே நீ இந்த சேதி சொல்லாயோ 'என்று ஜி.ராமனாதன் அற்புதமான பாடல் ஒன்றை அமைத்திருப்பார்.'கோடிச் செல்வம் நிறைந்தாலும் என்ன
அதைக் குலவிக் கொஞ்ச மனம் குளிர்ந்திடுமோ
ஓடி வந்து விளையாட இங்கு ஒரு
பாலன் வேண்டுமென வேலன் தந்தையிடம்
(நிலவே) என்று மருதகாசி உருக்கமாய் எழுதியிருப்பார்....பழைய படங்களில் அபூர்வமாகவே இந்த ராகம் பயன்பட்டது.எனினும் 'ஆலய மணி'(1962) யில் வந்த இப்பாடல் மிகப் புகழ்பெற்றது.இடையில் வரும் ஹம்மிங்கில் ராக ஆலாபனை இனிமையாக இருக்கும்


திரை இசையில் மாயாமாளவ  கௌள ராகத்தை மிகமிக அதிகமாகப் பயன்படுத்தியது இளையராஜா தான்.எனக்குத் தெரிந்தே ஐம்பது பாடல்கள் வரை இந்த ராகத்தில் போட்டிருக்கிறார்.                            
இந்த ராகத்தைப் பெரும்பாலும் உருக்கத்தையும் சோகத்தையும் வெளிப்படுத்தப் பயன்படுத்தி இருந்தாலும் வித்யாசமான களங்களிலும் பயன்படுத்தி இருப்பார்.. ஆரம்பகாலத்தில் தீபம் (1977) படத்தில் வரும் 'அந்தப்புரத்தில் ஒரு மகராணி ' என்று இந்த ராகத்தில் அமைத்திருப்பார்.கவரிமான் (1979) படத்தில் 'பூப்போல உன் புன்னகையில்' என்ற பாடலும்     வட்டத்துக்குள் சதுரம் (1978) படத்தில் வரும் 'இதோ இதோ என்னெஞ்சிலே' என்ற பாடலும் உருக்கமானவை என்றால் முதல் இரவு படத்தில் வரும் 'மஞ்சள் நிலாவுக்கு இங்கு ஒரே சுகம் ' என்ற பாடல் மிக அருமையாக ரயிலின் ஒலி,தாளலயத்துடன் அமைந்துள்ளதுஇசை என்பது ஒழுங்கு படுத்தப்பட்ட ஓசை .அவ்வளவே.அதில் கர்நாடக இசை, மேற்கத்திய இசை என்ற பிரிவினையெல்லாம் மேதைகளுக்கில்லை.நாட்டுப்புற இசையில் இந்த ராகத்தைப் பிரமாதமாகப் பயன்படுத்தியிருப்பார் ராஜா. 'எங்க ஊரு பாட்டுக்காரன் ' படத்தின் 'மதுர மரிகொழுந்து வாசம்'; கிளிப்பேச்சுக் கேட்கவா வில் 'சிவகாமி நினைப்பினிலே'  ;கரகாட்டக்காரனில் 'மாரியம்மா மாரியம்மா'; சின்னத்தம்பியில் 'குயிலைப் பிடிச்சி' என்று ஏராளமான பாடல்கள் இருந்தாலும் நாட்டுப்புற இசையில் இந்த ராகத்தைக் குழைத்தெடுத்த பாடல்களில் சிறந்தது 'சின்னத்தாயி' படத்தின் இப்பாடல் தான்.ராஜாவின் மேதமைக்கு இப்பாடல் ஒரு சாட்சி.


பலநாள் பட்டினி கிடந்தவன் ஐந்து நட்சத்திர விடுதியில் நடக்கும் விருந்துக்கு வந்தது போல் எதை எடுப்பது எதை விடுவது என்று குழப்பமாய் இருக்கிறது.எனினும் ஓரிரு பாடல்களைக் குறிப்பிடாமல் இருக்க முடியாது.
இரண்டு 'பூ' பாடல்கள். ஒன்று 'அம்மன் கோவில் கிழக்காலே' படத்தில் வரும் 'பூவை எடுத்து ஒரு மாலை' என்ற பாடல்.இடையில் வரும் 'காத்துல சூடன் போலக் கரையுதே' என்று ஜானகி பாடுவதைக் கேட்டால் நாமும் கரைவோம்.


இரண்டாவது பூ பாடல் இளையராஜா இசையமைத்த சிறந்த பத்துப் பாடல்கள் என்ற பட்டியலை யார் போட்டாலும் இடம் பெறும்.இந்தப் பாடலின் ஆரம்பம் மிகச் சிறந்த இசைக் கோர்வையாக(ஆர்கெஸ்ட்ரா) அமைந்திருக்கும்.வயலினும் குழலும் இணைந்து இசை மழை பொழிந்திருக்கும்.படம் 'நிழல்கள்' பாடல் ' பூங்கதவே தாழ்திறவாய்'


'ஆறடிச் சுவருதான் ஆசையைப் பிரிக்குமா' (இது நம்ம பூமி) ,உயிரே உயிரே உருகாதே (ஒருவர் வாழும் ஆலயம்),என்று சோகத்தை வெளிப்படுத்தவும் பயன்படுத்தியுள்ளார்.
சுத்தமான மேற்கத்திய பாணியிலும் இந்த ராகத்தைப் பயன் படுத்தியிருக்கிறார்.இளையராஜா என்றால் வயலின் தான்.இந்தப் பாடலில் வரும் வயலின் இசை மிக அற்புதமான ஒன்று. 'காதல் கவிதைகள் படித்திடும் நேரம்' படம் -கோபுர வாசலிலேஒன்றரை அடி நீளமேயுள்ள ஒரு ஆர்மோனியப் பெட்டியையும் ஏழு ஸ்வரங்களையும் வைத்துக் கொண்டு நூற்றுக் கணக்கான மெட்டுக்கள் அமைப்பது மனித மூளையின் கட்டற்ற ஆற்றலின் வெளிப்பாடே.மாயா மாளவ கௌளையில்,சுத்தமான கர்னாடக சங்கீதத்தில் அமைந்த இளையராஜாவின் பாடலோடு முடிப்போம்.இங்கே இடம்பெற்றவை கொஞ்சமே.

      படம் ஸ்ரீ ராகவேந்திரர். யேசுதாஸின் கந்தர்வக் குரலில் 'ராம நாமம் ஒரு'9 comments:

 1. //அந்தப்புரத்தில் ஒரு மகராணி //

  இதை வாசித்தவுடன் அழகிய லைலா பாடல் ஞாபகம் வருவது என் தவறு தானா ??

  ReplyDelete
 2. ராக அமானுஷ்ய ரசனை ராமானுஜம் அவர்களுக்கு

  மாய மாளவ கௌளை ஜாபிதாவைத் தயாரித்து வழங்கியமைக்கு நன்றி..

  இசையின் சாத்தியங்கள் பற்றிய சிந்தனை அபார படிகளில் ஏற வைத்து கிறுகிறுக்க வைக்கிறது...

  இன்று வந்திருக்கும் ஃபிரண்ட் லைன் இதழில், சதீஷ் குஜ்ரால் என்ற அசாத்திய கலைஞன் பற்றிய கட்டுரை தெருக் கலைஞர்களின் இசை ஆட்ட சிற்ப்பத்தை முன் வைத்து, அவருக்குக் காது கேட்காது என்ற முரண்பாடான உண்மையை கவித்துவத்தோடு பேசுகிறது...

  இசை என்பது கேட்பது அல்ல, உணர்வது என்றாகிறது...
  உணர்வது அல்ல அதில் தோய்வது, கரைவது, அதுவே தானாக தானே அதுவாக பாவிப்பது என்றும் எல்லைகள் உண்டு...

  உங்களது பன்முகத் திறன்கள் சமூகத்திற்குக் கொடை..

  எஸ் வி வேணுகோபாலன்

  ReplyDelete
 3. neengal ethanai arputhamaga ezhuthinaalum manam vittuppona padalaiththaan thaedukirathu. naan violinil muthanmuthalil katrukkonda keerthanai Swathi thirunalin Deva Deva kalayamithae. Semmangudi Padiyathai saerthirunthal innum sirappaga irukkum.

  ReplyDelete
 4. ராமானுஜம் அவர்களுக்கு! ராக லட்சணங்களை தேர்ந்த ஒவியத்திற்கு ஒப்பிடுவார்கள். அண்ணல்காந்தியடிகளின் ஒவியத்தை அற்புதமாக வரைபவர்களுண்டு. கைராட்டினம்,மூக்குக் கண்ணாடி, செருப்பு மூன்றை வரைந்து juxtapose செய்து காந்தியை உணரச்செய்பவர்களும் உண்டு.ராகங்களின் ஸ்வரங்கள் சரியான் இடத்தில் சரியான கணத்தில் ஒலித்தால் இதயம் விம்மும்.ராஜாவின் nothing but wind, how to name it .பற்றி எழுதுங்களென்."ராக்கம்மா கயைத்தட்டு" folkல் ஆரம்பித்து, கர்நாடக இசைக்கு வந்து,westernல் கலக்குமே எழுதுங்கள் ராமானுஜம்.!வாழ்த்துக்களுடன்---காஸ்யபன்

  ReplyDelete
 5. அன்புள்ள நண்பர் ராமானுஜம் கோவிந்தன்,

  ஆழ் கடலில் மூழ்கி முத்தெடுப்பதுபோல் அற்புதமான ராகங்களையும், அவற்றில் அமைந்த இனிய திரை இசைப்பாடல்களையும் தேடிக்
  கொண்டு வந்து ரசிக்கத் தந்த உங்களுக்கு எனது இதயம் கனிந்த நன்றி! மேலும் தொடருங்கள்...
  ஜெகன் -கனடா

  ReplyDelete
 6. நல்ல தமிழ்ப் பணி !
  (‘தமிழில் கீர்த்தனை இலக்கியம்’ என்ற நூலின் ஆசிரியர் நான் !)

  ReplyDelete
 7. நல்ல தமிழ்ப் பணி !
  (‘தமிழில் கீர்த்தனை இலக்கியம்’ என்ற நூலின் ஆசிரியர் நான் !)

  ReplyDelete
 8. அருமை, இன்னும் நிறைய எதிர்பார்க்கிறோம்

  ReplyDelete
 9. ஏழு சுவரங்களுக்குள் எத்தனை ராகம்......

  ReplyDelete