Saturday, May 7, 2011

ஆபேரி -- கொஞ்சும் சலங்கை ஒலிநாதஸ்வரத்தில் வாசிக்கப் பட்டிருந்த அந்தப் பாடலைப் பாடப் பலரையும் அணுகினார் இசையமைப்பாளர் எஸ் எம் சுப்பையா நாயுடு.வருடம் 1962.ஒருவரும் சரிப்படவில்லை.அந்தப் பாடலை நாகஸ்வரத்தில் வாசித்திருந்தவர் திருநெல்வேலியிலிருந்து இருபது கிலோ மீட்டர் தொலைவில் உள்ள காருகுறிச்சி என்ற கிராமம் உலகப் புகழ் பெறுவதற்குக் காரணமாயிருந்த நாகஸ்வர மேதை அருணாசலம்.கடைசியில் அப்போது அவ்வளவு பிரபலமாயிராத எஸ்.ஜானகியைப் பாட வைத்தார்.கொஞ்சும் சலங்கை படத்தில் வந்த இன்றும் அழியாப் புகழுடன் விளங்கும் 'சிங்கார வேலனே தேவா ' என்ற பாடல் அது. இத்தனைக்கும் அந்தப் பாடலுக்கு முன் வரும் 'ஏன் சாந்தா பாட்டை நிறுத்திவிட்டாய் ?' என்ற வசனத்தைக் கேலி செய்யாதவர்களே இருந்திருக்க மாட்டார்கள்.'ஆபேரி' ராகத்தில் அமைந்திருந்த அந்தப் பாடல் அந்த ராகத்தில் அமைந்துள்ள எல்லாப் பாடல்களுக்கும் சிகரம் வைத்தாற்போல் அமைந்துள்ளது.இப்பாடலை எழுதியவர் கு.மா.பாலசுப்பிரமணியம்

ஆபேரி ராகம் நிறுத்தி நிதானமாகவும் வாசிக்கப் படும்.விறுவிறுப்பாகவும் வாசிக்கப்படும்..கர்னாடக சங்கீதத்தில் தியாக ராஜரின் 'நகுமோமு' என்ற கீர்த்தனை புகழ் பெற்றது.ஹிந்துஸ்தானி சங்கீதத்தில் இதற்குப் பைஜாமா அணிவித்துப் பீம்ப்ளாஸ் என்று அழைப்பர்.துதிப்போர்க்கு வல்வினை போம் என்று ஆரம்பிக்கும் கந்தர் சஷ்டி கவசத்தின் (சூலமங்கலம் சகோதரிகள்கள் பாடியது) முதல் சில நிமிடங்கள் ஆபேரி ராகத்தில் தான் இருக்கும்.சஷ்டியை நோக்கச் சரவண பவனார் என்றஅந்த மெட்டு பலரது உள்ளத்தில் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.பக்திக்காக இல்லாவிட்டாலும் இசைக்காக.

இருபத்தியோரு தந்திகளைக் கொண்டக் கொண்ட பேரியாழ் (ஆயிரம் தந்தி உடைய பேரியாழும் இருந்தது என்கிறார் ஆபிரகாம் பண்டிதர்)  என்னும் யாழில் பண்டைய பாணர்கள் இசைத்த பண்ணே ஆபேரி .தமிழர்தம் இசைக் கருவியான நாகஸ்வரத்தில் வாசிக்க ஏற்ற ராகம்.தில்லானா மோகனாம்பாள் படத்தில் வாசிக்கப் படும் ஆபேரியைக் கேளுங்கள்.ராஜ கம்பீரம் என்றால் இது தான்.


திரை இசைத் திலகம் கே.வி மஹாதேவன் தில்லானா மோகனாம்பாள் மட்டுமின்றிப் பல பக்திப் படங்களிலும் ஆபேரியைக் கையாண்டிருப்பார் .திருவிளையாடலில் இசைத்தமிழ் நீ செய்த அருஞ்சாதனை என்று டி.ஆர்.மகாலிங்கம் பாடியிருப்பது ஆபேரியில் .பாண பத்திரரின் பாட்டாக வரும் அப்பாடலில் வரும் உச்சஸ்தாயி நம்மைத் திகைக்க வைக்கும்
சரஸ்வதி சபதத்தில் வரும் கோமாதா எங்கள் குல மாதா பாடல் கூட ஆபேரி தான். இசை ஞானி இது போன்ற ராகத்தைப் பெரும்பாலும் மென்மையான காதல் பாடலுக்குப் பயன்படுத்தியுள்ளார்.நல்லதொரு குடும்பம் படத்தில் வந்த இப்பாடல் ஆபேரியின் மென்மையைக் காட்டுகிறது.வாணிஸ்ரீயைப் போன்றே இசையும் அழகாய் இருக்கிறது.கமல் ஸ்ரீதேவியைப் பெண்பார்க்க வருகிறார்.வீணையை வைத்துக் கொண்டு அவர் பாடுகிறார்.பாதியில் பாடல் மறந்து விடுவது,சொந்தக்காரக் குழந்தை மடியில் உச்சா போவது என்று கலக்கலான பாடல் ஆபேரி ராகத்தில்.படம் மீண்டும் கோகிலா.(1981) வெள்ளிப் பனி உருகி மடியில் வீழ்வது போன்ற      பாடல்.எஸ்.பி ஷைலஜா, கே ஜெ யேசுதாஸ் பாடியது

சுத்தமான கர்நாடக ராகத்தை நாட்டுப்புற இசையோடு கலப்பதில் ராஜா ராஜாதான். ஆனந்த ராகம் படத்தில் வரும் பாட்டைக் கவனியுங்கள்.மீனவர்களுக்கான இசையும் ஆபேரி ராகத்தையும் இணைத்திருப்பது ஆனந்தம் தருவது.ஏதோ நெஞ்சில் ஆசை வந்து என்னென்னவோ ஆகிப் போச்சு என்ற இடத்தில் ஜானகி ஏசுதாசும் பாடும் போது நமக்கு ஏதோ ஆகிப்போகிறது.

                                     

பல பாடல்களை ஆபேரியில்  அமைத்திருக்கிறார் ராஜா.என் பாட்டு என் பாட்டு(பூ மணி) ,உம் மனசுல பாட்டுதான் படிக்குது (பாண்டி நாட்டுத் தங்கம்) வெள்ளிக் கொலுசு மணி (பொங்கி வரும் காவேரி) என்று ஏராளமான ஆபேரியை ராஜா போட்டிருந்தாலும் இரண்டு சோகம் கலந்த பாடல்கள் மிகுந்த இனிமையானவை.இரண்டுமே ஃபாஸிலின் படங்கள் தாம்.ஒன்று தமிழ் சினிமாவில் மிக அபூர்வமாகப் பாட்டி- பேத்தி உறவைப் பற்றிய படம், பாட்டும் பூவே பூச்சூடவா தான். இரண்டாவது கற்பூர முல்லை படத்தில் வரும் பூங்காவியம் என்ற பாடல். இடையில் வரும் வயலின் இசை  மனதை உருக்கும்.தாய் மகள் உறவை அற்புதமாகச் சித்தரித்த படம்.இன்று நெல்லையில் அந்தப் படங்கள் ஓடிய செல்வம் தியேட்டர் கார் ஷோ ரூமாக இருக்கிறது


ஏ ஆர் ரகுமானும் ஆபேரியில் ஒரு நல்ல துள்ளல் பாடலைப் போட்டிருப்பார்.இடையில் திசை மாறிப் போனாலும் ஜீன்ஸ் படத்துப் பாடல் நித்யஸ்ரீ யின் குரலில் அற்புதமாக ஒலிக்கிறது.

ஆபேரி ராகம்  கம்பீரமாகச் சில சமயம் மென்மையாக ,இனிமையாகச் சில சமயம் சோகமாகவும் இசைக்கப்படும் ராகம்.சிங்கார வேலனுக்கு ஈடும் உள்ளதோ?

பின் குறிப்பு : சம்சாரம் அது மின்சாரம் படத்தில் வரும் ஜானகி தேவி என்ற பாடலை மறந்து விட்டேன்.நண்பர் இசை அறிஞர் சுப்பாராவ் நினைவூட்டினார்-நன்றி .பாடலுக்கு இசை சங்கர்-கணேஷ்.


                       
                   

7 comments:

 1. எனக்கு ரொம்பப் பிடித்த ஜானகி தேவி ராமனை தேடி படலை மறந்து விட்டீர்களே டாக்டர் !

  ReplyDelete
 2. முப்பத்து ஐந்து வயதாகிறது உங்களுக்கு என்ற உங்களைப் பற்றிய அறிமுகத்தைத் தவிர நீங்கள் சொல்வது எல்லாமே, எழுதுவது எல்லாமே நம்பத் தகுந்த அற்புத விஷயங்களாக இருக்கின்றன..
  இசைக் கடந்த காலம் எல்லோருக்கும் இருக்க, கடந்த காலத்தின் இசையை எப்போதும் கடந்து கொண்டிருக்க விரும்பும் உங்களது வேட்கை இந்தப் பதிவிலும் நிறைந்திருக்கிறது.

  ராகங்களுக்கு உயிருண்டு, குரலுண்டு, உருவங்கள அவரவரது கற்பனையில் உண்டு, இருந்தாலும் மானிட இலட்சணங்கள் இருந்தால், (இந்த வாக்கியத்தில் பொய் தொனிக்க எல்லா சாத்தியங்களும் உண்டு..) உங்களை நேரில் வந்து சந்தித்து நன்றி பாராட்டக் கூடும்..

  ராகங்களின் பெயர்களை அந்தந்தப் பாடலோடு பொருத்தத் தெரியாதவன் என்றாலும் அவற்றின் அடையாளங்களை ஒரே மாதிரியான ராகங்களில் இழைத்துச் செல்லும் பாடல்களை இதயம் கொஞ்ச ரசித்துத் தள்ளுபவன் என்ற முறையில் நான் நன்றியும், பாராட்டுகளும் பொழிந்து மகிழ்கிறேன்....

  சுரம் அடிப்பவரின் கரம் பற்றி நலம் வினவும் மருத்துவர் இப்படி தரம் தரமான சுரங்களை இதம் பதமாய்ப் பரப்பும் வரம் பெற்று வந்திருப்பது எப்படி அய்யா...

  எஸ் வி வேணுகோபாலன்

  ReplyDelete
 3. I enjoyed your all collections and songs Dr...Got peaceful...Life has many happiness---vimalavidya@gmail.com

  ReplyDelete
 4. nice.....go ahead

  ReplyDelete
 5. Hello Dr. Ramanujam Govindan,
  Excellent articles on Tamil movie songs & their Raghas with illustrations! Really appreciate your knowledge & contribution to this field.
  Please write more...
  Thank you & Best Regards,
  Jegan
  Ottawa,Canada

  ReplyDelete
 6. கர்நாடக இசைக்கு வந்த மாற்றங்கள் மிக நுண்ணியதாக இருந்தாலும், அதன் பாதிப்பு வரலாற்றில் பதியப்பட்டதனாலேயே முக்கியமாகிறது....1950களில் திரைப்பட பாடலகளில் மெல்லிசை வகைகள் வெளிவரத்தொடங்கின. மிகக் கறாரான கர்நாடக ராக இயல்புகளையும், இலக்கணத்தையும் விட்டு விலகத்தொடங்கியது திரைப்பட இசை. ராகங்களினால் உருவான திரைப்பட பாடல்களில், மெட்டுக்களுக்கு முக்கியத்துவம் அதிகமாகக் கொடுக்கப்பட்டது. அடிப்படையில் ராகங்கள் இருந்தாலும் , இசை கேட்கும் அனைவருக்கும் பிடித்தமானதாகவும், உடனடியாக பாடக்கூடிய வகையில் சுலபமாகவும் இருக்கத்தொடங்கியது....நம் காலகட்டத்தில் இந்த மாற்றங்களை ஒருசேரப் பார்க்கமுடியாதபடி கர்நாடக இசை வடிவங்கள் ஊடுருவியுள்ளது. அடிப்படையில் இது நம் கலாசார சொத்து. வெளிநாட்டு இசை ஆர்வலர்கள் மத்தியில் இன்றும், உலக இசை மரபுகளுக்கு, கர்நாடக இசை ஓர் கொடை என்றே மதிக்கப்படுகிறது.

  ReplyDelete
 7. எல்லாப்பாடல்களுமே வெவ்வேறு மெட்டுகளில் உள்ளதே எப்படி ஒரே ராகத்தில் உள்ளன என்று கூறுகிறீர்கள்

  ReplyDelete